திங்கள், 6 ஏப்ரல், 2020

சிவபுராணம்..!பகுதி 192

சுந்தரபாண்டியனார் மதுரையின் அரசுப் பொறுப்பை ஏற்று அறவழி தவறாது ஆட்சி புரிந்துகொண்டு இருந்தார். எம்பெருமான் ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில் அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின் பொருளை பற்றி உலக மக்கள் எந்த காலத்திலும் அறிந்து கொள்ளும்விதமாக முனிவர்களும், தவப்பெரியோர்களும் எம்பெருமானை சந்தித்து கொண்டு இருந்தனர்.

அவ்விதமாக சந்திக்கும் காலத்தில் கௌதம முனிவர் மதுரைக்கு வந்து சுந்தரபாண்டியனாரைச் சந்தித்தார். தன்னிடம் எழுந்த அனைத்து சந்தேகங்களையும் கேட்டு அறிந்து கொண்டு சிவபெருமானிடம் விடை பெற்ற பிறகு தனது இருப்பிடம் நோக்கி செல்ல முற்படுகையில் மரியாதை நிமிர்த்தமாக பிராட்டியாரின் தாயாரான காஞ்சனமாலை அம்மையாரையும் சந்தித்து விடை பெற்றுக் கொள்ள வந்தார்.

தன்னை காண வந்திருப்பவர் யார்? என்று அறிந்ததும் அவரை அரண்மனைக்குள் அழைத்து வந்து அவருக்கு தகுந்த மரியாதை அளிக்க துவங்கினார். அதாவது, அவரை உயர்ந்த வேலைப்பாடுகள் நிறைந்த பொன் ஆசனத்தில் அமர வைத்துவிட்டு, தான் ஒரு சிறிய ஆசனம் ஒன்றில் அமர்ந்து கொண்டார். ஞானம் மற்றும் வயோதிகத்தில் உயர்ந்த பெரியோர்களுக்கு தரப்படும் மரியாதை மிகப்பெரிய புண்ணியத்தையும், ஆசியையும் அளிக்கும் வல்லமை உடையது என்பதை நன்கு உணர்ந்திருந்தார் காஞ்சனமாலை அம்மையார்.

பின்பு காஞ்சனமாலை முனிவரை வணங்கி, என் மகளான மீனாட்சியின் திருமணம் இனிதே நிறைவுற்றது. சர்வ லோகங்களை ஆளும் அந்த பரமேஸ்வரனே எனது மருமகனாக இருக்கின்றார். இனி மதுரையின் வாழ்வும், காலமும் பொற்காலங்களாகவே இருக்கும். எனது கடமையும் நன்முறையில் நிறைவுப்பெற்றது. எனவே இனி நான் அவர்களின் வாழ்க்கையில் எவ்விதமான இடையூறுகளையும் ஏற்படுத்தாமல் இனி பிறவி பிணியை ஒழித்து என்றும் பிறவாநிலை அடையும் மார்க்கத்தை தாங்கள்தான் உபதேசிக்க வேண்டும் என்று தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார்.

அதற்கு கௌதம முனிவரும், காஞ்சன மாலையே... நீர் இப்பிறவியில் செய்த தவத்தின் பயனாக உலகிற்கே தாயாக விளங்கக்கூடிய உமையவளான மீனாட்சியை மகளாகவும், பரம்பொருளான சிவபெருமானை மருமகனாகவும் அடைந்து எவருக்கும் கிடைக்காத புண்ணியத்தை பெற்றுள்ளாய். உமக்கு வழிகாட்டும் தகுதி என்பது எனக்கு இல்லை. இருப்பினும் ஒருவர் ஞானத்தை பற்றி யாசிக்கும் பொழுது அதை எடுத்துரைப்பது என்பதே ஒருவரின் கடமையாகும். நீர் கேட்ட வீடுபேற்றினை அடைய மூன்று வழிகள் உள்ளன. அவை மானதம், வாசிகம், காயகம். இந்த மூன்று வழிகளில் வீடுபேற்றினை அடையலாம்.

தர்மம், தானம் செய்தல், பிற உயிர்களுக்கு இரங்கல், பொறுமை காத்தல், உண்மை கூறல், ஐம்பொறிகளையும் அடக்கி ஆளல், இறைவனை தியானம் செய்தல் ஆகியவைகளான மானதம் என்னும் முதல்வழி ஆகும். நமசிவாய என்னும் திருவைந்தெழுத்தை கூறுதல், இறைவனின் துதிப்பாடல்களைப் பாடுதல், வேதநூல்களைப் படித்தல், யாகங்கள் செய்தல், திருக்கோவிலை வலம் வருதல் ஆகியவைகளான வாசிகம் என்னும் இரண்டாவது வழி ஆகும். சிவபெருமானின் ஆலயங்களுக்கு சென்று வணங்குதல், ஆலயத்திருப்பணி செய்தல், தலயாத்திரை செல்லல், தீர்த்தங்களில் நீராடுவது ஆகியவைகள் காயகம் என்னும் மூன்றாவது வகையாகும். தீர்த்தங்களில் நீராடுவது என்பதில் கடலில் நீராடுவது மிகவும் நல்லது என்று கூறிச் சென்றார்.

கௌதம முனிவர் சென்ற பிறகு காஞ்சனமாலை கௌதம முனிவரின் வழிகாட்டுதலில் இறுதியாக உபதேசித்த கடலில் நீராடுவதில் விருப்பம் கொண்டார். தனது விருப்பத்தை தன்னுடைய ஆசை மகளான மீனாட்சியிடம் எடுத்துரைத்தார். தனது மகளின் அருகில் சென்று தன்னுடைய ஆசையான பிறப்பற்ற நிலையை அடைய விரும்புவதாகவும், கௌதம மகரிஷியின் அறிவுரைப்படி பார்த்தால் தீர்த்தமாடுவதே முக்திநிலைக்கு முதல் பாதையாக இருக்குமென கருதுகிறேன். ஆறும், கடலும் இருக்குமிடத்தில் நீராடுவது மிகப்புண்ணியமானதென்று முனிவர் எடுத்துரைத்தார். நமது மதுரை மாநகரிலே உமது கணவரின் திருவருளால் வைகை எனும் நதி பாய்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், இவ்விடத்தில் கடல் இல்லையே... கடல் இங்கிருந்தால் நான் அதில் நீராடி பிறப்பற்ற நிலையை அடைவதற்கான பாதையை அறிவேன் என்று எடுத்துக்கூறினார்.

தனது தாயின் விருப்பத்தை அறிந்து கொண்ட மீனாட்சியும் தனது பதியான சுந்தரபாண்டியனாரிடம் சென்று பிறவா நிலையாகிய வீடுபேற்றினை அடைய என் தாயான காஞ்சனமாலை கடலில் சென்று நீராட விரும்புகிறார். ஆனால், நாம் வசிக்கும் மதுரையிலோ கடல் என்பது இல்லை. அவர்களின் விருப்பத்தை தாங்கள்தான் நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று கூறினார். மீனாட்சியின் உரையாடல்களை கேட்ட சுந்தரபாண்டியனார், மீனாட்சி... நீ எதற்கும் கவலை கொள்ள வேண்டாம். உனது அன்னையின் விருப்பமானது நிறைவேற்றி வைக்கப்படும் என்று கூறினார். தாயாரின் விருப்பத்தை நிறைவேற்ற ஒரு கடல் என்ன ஏழுகடல்களையும் மதுரையில் எழுந்தருளச் செய்கிறேன் என்றுரைத்து ஏழுகடல்களையும் மதுரையில் எழுந்தருளச் செய்தார். எம்பெருமானின் விருப்பத்தை அறிந்ததும் ஏழுகடல்களும் ஆர்ப்பாரித்து மதுரையில் எழுந்தருளின. கடலின் எழுச்சியால் உண்டான பேரிரைச்சலினை மட்டும் மக்கள் கேட்டனர்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்