Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 22 மே, 2020

பிளஸ்-1 முடித்த இரட்டை சகோதரிகள் தூக்குப்போட்டு தற்கொலை



காட்பாடியில் பிளஸ்-1 முடித்த இரட்டை சகோதரிகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது சாவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேலூரை அடுத்த காட்பாடி மாருதி நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். கட்டிட என்ஜினீயர். இவரது மனைவி கவுரி. இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். மகன் பத்மகுமார் காட்பாடியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.மகள்கள் பத்மபிரியா, ஹரிப்பிரியா. இரட்டை சகோதரிகளான இருவருக்கும் வயது 17. இருவரும் காட்பாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து விட்டு பிளஸ்-2 வகுப்பு செல்ல இருந்தனர்.
தற்போது பள்ளி சார்பில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகிறது. பிளஸ்-2 வகுப்புக்கு ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க நேற்று இருவரும் வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்றனர். அங்கு இருவரும் ஆன்லைன் வகுப்புகளை கவனித்துக் கொண்டிருந்தனர்.

கீழ்தளத்தில் அவர்களுடைய தாயாரும், மகன் பத்மகுமாரும் இருந்தனர். பிற்பகல் 3 மணி ஆகியும் ஹரிப்பிரியா, பத்மபிரியா ஆகியோர் கீழே இறங்கி வரவில்லை. மதிய சாப்பாட்டிற்கு இருவரும் வராததால், தாயார் கவுரி மேலே சென்று அறைகதவை தட்டியுள்ளார். நீண்டநேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. உள்பக்கமாக தாழ் போடப்பட்டிருந்தது. ஜன்னலையும் திறக்க முடியலை. இதனால் தாயார் பதற்றம் அடைந்தார்.

அதிர்ச்சி அடைந்த பத்மகுமாரும் அக்கம் பக்கத்தினரும் ஜன்னலை உடைத்து பார்த்தபோது இரண்டு சகோதரிகளும் அறையினுள்ளே தனித்தனி மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர். இதை பார்த்த தாயும், மகனும் கதறி அழுதனர்.
இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு துரைபாண்டியன், இன்ஸ்பெக்டர் புகழ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்வையிட்டனர். பின்னர் இருவரின் உடல்களையும் கீழே இறக்கி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து இரட்டை சகோதரிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே வீட்டில் இரட்டைச் சகோதரிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காட்பாடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக