Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 5 மே, 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 012

ஏயர்கோன் கலிக்காம நாயனார்!!


காவிரியால் வளம் கொழிக்கும் சோழ மண்டலத்தில் பெருமங்கலம் என்னும் ஒரு நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் பல குலத்தினர் வாழ்ந்து வந்தனர். அதில் ஏயர் குலமும் ஒன்றாகும். ஏயர் குலத்தினர் போர் கலையில் சிறந்து விளங்கியமையால் சோழருடைய படைகளுக்கு தலைமை வகிக்கும் பெருமை பெற்றவர்களாக சிறந்து விளங்கினார்கள். அந்த குலத்தில் வாழ்ந்து வந்தவர்களில் ஒருவர்தான் கலிக்காம நாயனார். ஏயர்கோன் என்பது அரசன் சேனைத் தலைவனுக்கு கொடுக்கும் பட்டம் ஆகும்.

இவர் சிவபக்தியிலும், அடியார் பக்தியிலும் இளம் வயதிலேயே சிறந்து விளங்கினார். மேலும் சிவத்தொண்டராகவும் இருந்தார். கலிக்காமனார் மானக்கஞ்சாற நாயனாரது மகளைத் திருமணம் செய்து இனிதே இல்லறத்தை நடத்தி வந்தார். சிவபெருமானுக்குரிய திருநீற்றையும், அடியார்களுக்கு செய்யும் தொண்டை பெரும் செல்வமாக கருதி வாழ்ந்து வந்து கொண்டிருந்தார். தமது எண்ணங்களிலும் ஐந்தெழுத்து மந்திரத்தை இடையுறாது எந்நேரத்திலும் உச்சரித்துக் கொண்டே இருந்தார்.

எம்பெருமானின் நினைவாகவே தம்முடைய காலத்தை கடத்தி கொண்டிருந்தார். அக்காலங்களில் எம்பெருமானின் அடியார்கள் செய்த செயல்களையும், எம்பெருமான் மீதுள்ள பக்தியையும் கேள்வியுற்று அதில் மெய்மறந்து மகிழ்ச்சி கொண்டிருந்தார். அவ்விதம் கேட்டு கொண்டு இருந்த அடியார்களின் செயல்களில், சுந்தரர் தாம் விருப்பம் கொண்ட பரவையாரிடம் தூது போக எம்பெருமானே சென்றதை கேள்வியுற்றார்.

அதை கேள்விப்பட்டது முதல் மிகவும் மனம் வருந்தினார். தேவர்களுக்கும், பிரம்மனுக்கும் மற்றும் திருமாலுக்கும் காணக்கிடைக்காத திருவடிகளை உடைய எம்பெருமானை தனது விருப்பத்திற்கு இணங்கி தூது செல்ல அவர் இசைந்தாலும், அடியாராகிய இவர் அவரை தூது அனுப்புதல் என்பது முறையாகுமா? இத்தகைய முறையற்ற செயலை செய்த பின்னரும் இவர் அடியார் என்று கூறிக்கொள்வதில் எவ்வித கூச்சமும், அச்சமும் இல்லாமல் இருக்கின்றாரே? இவர் இதற்கு வெட்கப்பட வேண்டியது இல்லையா? இது எவ்வளவு பெரிய பாவச் செயலாகும்.

இத்தகைய பாவச் செயல்களைப் புரிந்த அடியார்களைப் பற்றி கேள்வியுற்றதும் ஏன் என் உடலில் என் உயிர் இன்னும் நீங்காமல் இருக்கின்றது? என்று தன் மீது மிகுந்த சினம் கொண்டார் கலிக்காமர். அதைக் கேள்வியுற்றது முதல் மிகுந்த கவலையில் மூழ்கினார். செவிவழி செய்தி போல கலிக்காமர், தன் மீது கொண்ட கோபத்தை பற்றி கேள்வியுற்ற சுந்தரர் மிகவும் மனம் கலங்கினார்.

மருத்துவரின் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்த கலிக்காமரின் மனைவியானவர் வீட்டிற்கு வரும் பொழுது ரத்த வெள்ளத்தில் மரணம் அடைந்த தன் கணவரைக் கண்டு என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தார். பின்பு தனது கணவன் அடைந்த இடத்தை தானும் அடைய வேண்டும் என்று எண்ணி தன்னைத்தானே மாய்த்துக் கொள்ள தயாராகிக் கொண்டிருந்தார்.

அந்த வேளையில் சுந்தர மூர்த்தி நாயனார் தனது வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தியை ஏவலர்கள் மூலம் அறிந்து கொண்ட கலிக்காமரின் துணைவியார் நிகழ்ந்த நிகழ்வுகளை மறைத்து சுந்தர மூர்த்தி நாயனார் சென்ற பின்பு தனது எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று எண்ணி அங்கு நிகழ்ந்தவற்றை எதுவும் உரைக்காமல் சுந்தர மூர்த்தி நாயனாரை வரவேற்க தயாராகி கொண்டு இருந்தார். மனைவியார் தனது இல்லத்தில் இருக்கும் யாவரையும் அழ வேண்டாம் என்று உரைத்து, பின்பு தம்முடைய பதியின் உடலை மறைத்து, சுந்தர மூர்த்தி நாயனாரை எதிர்கொண்டு வரவேற்கும் பொருட்டுத் தங்கள் சுற்றத்தார்களை அனுப்பி வைத்தார்.

அவர்கள் சென்று சுந்தர மூர்த்தி நாயனாரை எதிர்கொண்டு வணங்கினார்கள். தனது எண்ணத்தின் படியே தான் இழந்த தனது கணவனின் உடலை யாரும் காணாத வகையில் மறைத்து வைத்தார். பின்பு இல்லத்தை பூக்களாலும் வாசனைப் பொடிகளால் அலங்காரம் செய்வதில் ஈடுபடத் தொடங்கினார். சுந்தரமூர்த்தி நாயனாரின் வருகையை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த கலிக்காமாரின் துணைவியார் முன்னிலையில் சுந்தர மூர்த்தியும் தனது அடியார்களுடன் வந்தருளினார். சுந்தர மூர்த்தி நாயனாரை மலர்கள் தூவி வரவேற்றனர். அவர்களின் வரவேற்பை கலிக்காமநாயனார் வீட்டிற்குள் நுழைந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் அமரச் செய்து விதிமுறைப்படி அவரது திருப்பாதங்களைத் தூய நீரால் சுத்தம் செய்து மலர் தூவி வழிபட்டு மகிழ்ந்தார்.

சுந்தரரும் அம்மையாரின் அன்பிற்குக் கட்டுப்பட்டவராய் அம்மையாருக்கு அருள் செய்தார். சுந்தரர் கலிக்காமாரின் துணைவியாரை நோக்கி, அம்மையே... என் தோழர் கலிக்காமர் எங்கு இருக்கின்றார்? அவருக்கு இப்பொழுது துன்பம் ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் சூலை நோயினைக் குணப்படுத்த பரம்பொருளான எம்பெருமான் ஆணை பிறப்பித்தார்.

கலிக்காம நாயனாருக்கு ஏற்பட்டுள்ள சூலை நோயை நீக்கவே தாம் இங்கு வந்துள்ளோம் என்றும், மேலும் அவருடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை நீக்கி அவருடன் நட்புறவு கொள்ளவே என் மனமானது ஆவல் கொண்டு இருப்பதாகவும் காலம் தாழ்த்தாமல் அவர் இருக்கும் இடத்தை கூற வேண்டுமென்று உரைத்துக் கொண்டிருந்தார் சுந்தரனார். அவ்வேளையில் கலிக்காம நாயனாருடைய மனைவியார் சுந்தரரை வணங்கி எவ்விதமான நோயும் அவருக்கு ஏற்படவில்லை என்றும், அவர் தற்போது உறங்கிக் கொண்டு இருப்பதாகவும் கூறினார். அம்மையாரின் ஏவுதலின்படி அங்கிருந்த அனைவரும் கலிக்காமருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று கூறினார்கள்.

ஆயினும் சுந்தரனார் அவர்களின் கூற்றுகளிலிருந்து மனத்தெளிவு என்பது ஏற்படவே இல்லை. ஏனெனில் பரமனே வந்து தம்மிடம் உரைத்து சென்றுள்ளார் எனில் இங்கு ஏதோ நடந்து உள்ளது என்று தனது மனதில் எண்ணினார். பின்பு சுந்தர மூர்த்தி நாயனாருக்கு உடல் நலம் பாதிப்பு எதுவும் ஏற்படாமல் இருப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும். ஆனாலும் யாம் அவரை நேரில் கண்டால் எனக்கு மனத்தெளிவும், நிம்மதியும் உண்டாகும் என்று உரைத்து அவர் எங்கே உள்ளார் என்று வினாவினார். அங்கிருந்த அனைவரும் பலவாறு உரைத்தும் சுந்தரனார் கேட்காமல் அவரை நேரில் நான் கண்டே ஆக வேண்டும் என்று திடமாக நின்றமையால் அவருடைய எண்ணத்திற்கும் முன்பு எதுவும் செய்ய இயலாத அன்பர்கள் வேறு வழி இன்றி கலிக்காமர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று குருதி வெள்ளத்தில் மடிந்து கிடக்கும் கலிக்காமரைக் காண்பித்தனர்.

குருதியின் மடியில் வீழ்ந்து இருந்த கலிக்காமரைக் கண்டதும் சுந்தர மூர்த்தி நாயனார் மிகுந்த அதிர்ச்சியில் உரைந்தார். இரத்த சோரக் குடலானது வெளிப்பட்டு உயிர் இன்றிக் கிடந்தவரைக் கண்டதும் உள்ளம் பதறிப்போன சுந்தரர் வேதனை தாளாமல் கண்களில் நீர்பெருக எம்பெருமானைத் தியானித்தார். இது என்ன விபரீத செயல்... இவருடைய செயலைக் கண்ட பின்பு நான் மட்டும் ஏன் இன்னும் உயிருடன் வாழ்கின்றேன். இனியும் இந்த உடலில் இந்த உயிர் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உரைத்து கலிக்காமருக்கு அருகிலிருந்த வாலினை எடுத்து தனது உயிரைப் போக்கிக்கொள்ள ஆயத்தமானார் சுந்தரர்.

சுந்தரமூர்த்திநாயனார் தன் உயிரை போக்கிக்கொள்ள ஆயத்தமான வேளையில் யாரும் எதிர்பாராத ஒரு அற்புதச் செயலானது நடைபெறத் துவங்கியது. அதாவது, எம்பெருமானின் கருணை என்பது கடலை போன்றதாகும். அதில் அளவிட முடியாத முத்துக்களும், பவளங்களும் இருப்பது போல அவருடைய அருளால் உயிரிழந்த கலிக்காமர் உயிர்பெற்று எழுந்தார். உயிர்பெற்று எழுந்த அந்த நொடியில் நிகழ்ந்த யாவற்றையும் எம்பெருமானின் கருணையால் அறிந்து கொண்டார். பின்பு தனது உயிரை மாய்த்துக் கொள்ளப் போகும் சுந்தரரை கண்டதும் என்ன ஒரு அபத்தமான செயல் என்று உரைத்து அவரது கரங்களில் உள்ள வாளைப் பிடித்த வண்ணம் எழுந்து நின்றார்.

அடியாரே... இது என்ன ஒரு அபத்தமான முடிவுகள், நான்தான் தங்களுடைய நட்பினை பற்றி அறிந்து கொள்ளாமல் உங்களின் மீது பகை கொண்டு என்னை நானே அழித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கும், உங்களுடைய வாழ்க்கைக்கும் பெரிய இன்னலை உருவாக்கிவிட்டேன். எம்பெருமானின் அன்பிற்கு பாத்திரமான தங்களின் மீது பயனற்ற வகையினால் நெறித்தவறி நடந்த என்னை மன்னித்தருள வேண்டும் என்று வேண்டினார். சுந்தரர் எம்பெருமானின் திருவருளை எண்ணி மனமும் முகமும் மலர்ந்திட... கலிக்காம நாயனாரை தழுவி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். கலிக்காமரும் சுந்தரரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். கலிக்காமர் உயிர் பெற்று எழுந்ததை கண்டதும் தேவியாரும் எண்ணில் அடங்கா மகிழ்ச்சி கொண்டார்.

சுந்தரர் கலிக்காமரின் துணைவியார் கொண்டுள்ள பக்தியைப் பெரிதும் போற்றினார். மானக்கஞ்சாரர் மகள் அல்லவா? என்றும் பாராட்டி கூறினார். எம்பெருமானின் திருவருளால் கலிக்காமரும், சுந்தரரும் நண்பர்களாகித் திருப்புன்கூருக்குச் சென்று சுவாமிதரிசனம் செய்து கொண்டு, சிலநாட்கள் சென்ற பின்பு, திருவாரூரை அடைந்தார்கள். கலிக்காமநாயனார் சிலநாள் அங்கே சுவாமிதரிசனம் செய்து கொண்டிருந்து, பின்பு சுந்தரமூர்த்திநாயனாரிடத்தில் இருந்து விடைபெற்று, தம்முடைய ஊருக்குத் திரும்பி வந்து பல திருத்தொண்டுகள் செய்து தனது துணைவியாருடன் மகிழ்ச்சியாக இல்வாழ்க்கையில் ஈடுபட்டு இறுதியில் சிவபாதம் அடைந்தார் கலிக்காமநாயனார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக