புதன், 6 மே, 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி013

ஐயடிகள் காடவர்கோன் நாயனார்!!

பார் போற்றும் அரசாட்சி செய்த பல்லவர்களின் தலைநகரமாகிய காஞ்சியில் பல்லவப் பேரரசருள் உள்ள பல்லவர் குலத்தில் ஒருவராக ஐயடிகள் காடவர்கோன் பிறந்தார். காடர் என்பது பல்லவ மன்னர் குலத்தினரைக் குறிக்கும் பொதுப்பெயர். ஐயடிகள் என்பது ஐயனடிகள் என்பதன் மரூவாகும். ஐயடிகள் காடவர்கோன் என்னும் பெயர் ஐயனடிகளாகிய பல்லவ மன்னர் என்ற பொருள் தரும் பெயராகும். இவர் குறுநில மன்னராகக் காஞ்சிபுரத்தில் அரசாட்சி செய்து வந்தார்.

வெண்கொற்றக்குடை நிழலில் அமர்ந்து நீதிபிறழாமல் மக்களை வழிநடத்தியும், சைவ சமயத்தை வளர்த்தும் ஆட்சி புரிந்து வந்தார். இவ்வேந்தர் இளமை பருவத்தில் வீரத்திலும், அதே போன்று வேந்தராக மக்கள் சார்ந்த பணிகளில் முடிவெடுப்பதிலும் விவேகத்துடன் செயல்பட்டு சிறந்து விளங்கினார். இவர் வீரம் மற்றும் வேந்தர் என்ற நிலையில் மட்டுமல்லாமல் பக்தியிலும், இறை வழிபாட்டிலும் மேம்பட்டு விளங்கினார். சிறு வயது முதலே கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கினார். நல்ல தமிழ்ப்புலமை மிக்க இம்மாணவர் வெண்பாவில் பாடல் இயற்றுவதிலும் திறமை பெற்றிருந்தார்.

வண்ணத் தமிழ் வெண்பாவால் வேணிபிரானை வழிபட்டார். ஐயடிகள் காடவர்கோன் மறைமொழி, தமிழ்மொழி இரண்டிலும் புலமை கொண்டு விளங்கியதோடு மட்டுமல்லாமல் இயல், இசை, நாடகம் என அனைத்து கலைகளையும் செழித்தோங்கச் செய்தார். சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோவில்கள்தோறும் சென்று எம்பெருமானை வழிபட எண்ணினார். சிவ வழிபாட்டில் சித்தத்தைப் பதிய வைத்த மன்னருக்கு உலகியல் சார்ந்த செயல்பாடுகளில் மனம் ஈடுபடவில்லை. வேந்தர் அரசாட்சியை ஒரு பெரும் பாரமாக கருதினார்.

பின்பு தமது ஆட்சிப் பொறுப்புகள் என அனைத்தையும் தமது குமாரனான சிவ விஷ்ணுவிடம் ஒப்படைத்தார். சில நாட்களுக்கு பின்பு குமாரனுக்கு அரச முறைப்படி முடிசூட்டி மகிழ்ந்த மாமன்னன், எம்பெருமானின் மீது கொண்ட அன்பாலும், பற்றாலும் ஒருநாள் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு சிவயாத்திரையை மேற்கொள்ள முடிவெடுத்து தனது பயணத்தினை தொடர்ந்தார். எம்பெருமான் எழுந்தருளியுள்ள கோவில்கள்தோறும் சென்று தன்னால் முடிந்த அளவு பல திருப்பணிகளை செய்து உள்ளம் உருக வெண்பா பாடல்பாடி வழிபட்டு வந்தார்.

பூவினால் தொடுத்த மாலைகளை அணிவிப்பதைக் காட்டிலும் பாமாலையால் இறைவனை மகிழ்விப்பதே உயர்ந்தது. ஐயடிகள் காடவர்கோன் இயற்றிய வெண்பாக்கள் யாவற்றிலும் ஞான வாசனையானது கமலத் துவங்கியது. மனதை உருக்கி அதில் இன்பச் சுவை கொண்ட தேனை பெருக்கி நம்மை புதுவிதமான இன்பத்தில் மயக்கும் வண்ணம் அமைந்தன. பல தலங்களுக்குச் சென்று வழிபட்டு தன் உடற்பயணம் யாவற்றையும் முடித்துக் கொண்டு இறுதியாக கயிலை நாதரின் இறையடி அடைந்து இன்புற்றார். இவர் பாடிய 24 பாடல்களும் 11ஆம் திருமுறையில் 'சேத்திரத் திருவெண்பா" எனும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்