புதன், 6 மே, 2020

பதினொன்றாம் நாள் போர்...! கர்ணன் வருகை!

பாண்டவர்களும், கௌரவர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதினோராவது நாள் போர் தொடங்கியது. பாண்டவ படைகளும், கௌரவ படைகளும் யுத்தத்திற்கு மகிழ்ச்சியோடு தயாராயினர். 

பத்தாம் நாள் போர் கௌரவர்களுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. பீஷ்மர் வீழ்ச்சிக்குப் பின்பு யார் தலைமை ஏற்று போர் தொடர்வது என்ற சிந்தனை எழுந்தது. துரியோதனன், துரோணரை தளபதியாக நியமித்தான். 

துரோணர் தன் படைகளை சகட வியூகத்தில் அணிவகுத்து நிறுத்தினார். பாண்டவ படைகளை துஷ்டத்துய்மன் அன்றில் பறவை போன்ற வியூகத்தில் வகுத்து நிறுத்தினான். 

இருத்தரப்பு படைகளும் நேர் எதிரெதிரே போருக்குத் தயாராக நின்றன. பீஷ்மர் தலைமை வகிக்காத கௌரவர்களின் சேனை களையிழந்து காணப்பட்டது.

படைத்தலைவர்கள் ஆணையும், அனுமதியும் பிறப்பித்து போரை தொடங்கி வைத்தனர். சகாதேவன், சகுனியை வளைத்துக் கொண்டு போர் புரிந்தான். இருவரும் போட்டி போட்டுக்கொண்டு போர் புரிந்தார்கள். சகாதேவன் சகுனியின் தேர்ப்பாகனை வீழ்த்தினான். 

பின்பு சகுனியின் தேர்க்கொடிகள் அறுந்து வீழ்ந்தன. அடுத்து, சகுனியின் தேர் குதிரைகள் வீழ்ந்தது. இறுதியில் சகாதேவன் சகுனியின் மார்பின் மேல் அம்புகளை துளைத்தான். சகுனி வலி பொறுக்க முடியாமல் தேரிலிருந்து கீழே குதித்து விட்டான். 

சகுனி கையில் ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு சகாதேவனை எதிர்த்தான். சகாதேவனும் தன் கையில் ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு சகுனியை எதிர்த்தான். சகுனியால் சகாதேவனை எதிர்த்து சமாளிக்க முடியவில்லை. அதனால் கதாயுதத்தைக் கீழே போட்டுவிட்டு ஓடினான்.

போர்க்களத்தின் மற்றோர் புறத்தில் பீமனுக்கும், துரியோதனனுக்கும் பயங்கரமாக போர் நடந்து கொண்டிருந்தது. துரியோதனனும் அவனைச் சேர்ந்த துணையரசர்கள் பலரும் ஒன்று சேர்ந்து பீமனை எதிர்த்தார்கள். 

பீமனும் தனியாக நின்று அவர்களை எதிர்த்து போரிட்டான். ஆனால் பீமனை கௌரவ படைகளால் எதிர்த்து போரிட முடியவில்லை. அவர்களுக்கு உதவுவதற்காக சல்லியன், பீமனை எதிர்த்து போர் புரிந்தான். 

பீமன் போர் செய்து கொண்டிருந்த போது நகுலன் உதவிக்கு வந்தான். பீமனும், நகுலனும் சேர்ந்து தாக்கியதால் சல்லியனால் சமாளிக்க முடியவில்லை. 

துருபதனும், பகதத்தனும் ஒருவருக்கொருவர் யானைப்படைகளைக் கொண்டு போரிட்டனர். அப்போரில் அபிமன்யுவின் கை ஓங்கியது. அவனுக்குத் துணையாக கடோத்கஜன் இறங்கினான்.

துரியோதனனின் லட்சியத்தை நிறைவேற்ற துரோணர் தர்மர் மீது மட்டும் குறியாக இருந்தார். இதை உணர்ந்து அர்ஜூனன் தர்மர் அருகே அவருக்கு துணையாக வந்தான். பீமனும் தர்மரை பாதுகாத்து நின்றான். 

துரோணருக்கு துணையாக துச்சாதனன் மற்றும் ஆறு தம்பிகள் இருந்தனர். தர்மரை சுற்றி வளைத்து போர் செய்தனர். அர்ஜுனனின் அஸ்திரங்கள் தர்மருக்கு கேடயமாக இருந்து அவரை பாதுகாத்தது. 

பீஷ்மர் போர் செய்வதை நிறுத்திய பின்புதான் வில்லை எடுப்பேன் என்று சபதம் செய்த கர்ணன் பதினோராவது நாள் போரில் வில்லை எடுத்து போர் செய்வதற்கு முன் வந்தான்.

கர்ணன் வருகை :

கர்ணன், தன் தந்தையாகிய சூரியனை வணங்கிவிட்டு, தன் ரதத்தில் ஏறினான். போர்க்களம் நோக்கி புறப்பட்டான். ஆயிரம் சூரியனின் பிரகாசம் கொண்டவனாய் காட்சியளித்தான். மொத்த பூமியின் வலிமையுடன் போரிட்டான். 

நெருப்பை போல் தன்னை எதிர்த்தவர்கள் அனைவரையும் அழித்தான். அர்ஜுனனை விட தான் சிறந்தவன் என்பதை இந்த உலகிற்கு காட்ட வேண்டும் என்ற நெருப்பு அவனுள் எப்போதும் எரிந்து கொண்டே இருந்தது. 

கர்ணனைக் கண்டு பாண்டவர்கள் திகைத்தனர். கர்ணன் திரும்பிய திசையெங்கும் பிணங்கள் குவிந்தன. கர்ணனின் அம்புகள் எதிரணியை சல்லடையாக துளைத்தது. கர்ணனின் வருகையால் கௌரவ படை சற்று ஓங்கியது.

மற்றொரு புறம் அர்ஜுனனின் மகனான அபிமன்யு போர்க்களத்தில் போர்புரிந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினான். துரியோதனனின் தம்பிகள் ஆறு பேரை கொன்றான். இதனால் துரோணரின் வியூகம் உடைக்கப்பட்டது. 

ஐந்து யானை படைகளை அம்பெய்து கொன்றான். கடோத்கஜனும், அபிமன்யுவிற்கு உதவினான். அபிமன்யு துரியோதனனின் மகன் லட்சுமணனைத் தாக்கி அவனைப் பிடித்து தேர்ச் சக்கரத்தில் கட்டிக் கொண்டு மீண்டும் சக்கர வியூகத்தின் உள்ளே திரும்பினான். 

இதனை அறிந்த சல்லியன் அபிமன்யுவைத் தடுத்து நிறுத்திப் போரிட்டான். ஆனால் சல்லியனின் வில்லையும், தேரையும் சுலபமாக அபிமன்யு முறித்தான்.

அர்ஜூனனின் தாக்குதலை துரோணரால் சமாளிக்க முடியவில்லை. பீமனும், கடோத்கஜனும் சேர்ந்து கர்ணனை தாக்கினர். கர்ணன் அவர்களுடன் போரிட்டு கொண்டிருந்தான். அபிமன்யு, அர்ஜுனன், பீமன் மற்றும் கடோத்கஜனின் போர் ஆற்றலை கண்ட கெளரவர்கள் நடுங்க ஆரம்பித்தனர். இந்நிலையில் சூரியன் மறையும் பொழுது அன்றைய போர் முடிந்தது.

தன் மகன் லட்சுமணனை அபிமன்யுவால் சிறைப்பிடித்ததை அறிந்த துரியோதனன் மனம் வருந்தினான். வருத்தம் தாங்க முடியாமல், துரோணரிடம் நாளைய போரில் நாம் பழிவாங்கியே தீரவேண்டும். இன்று என் மகனைச் சிறைப்பிடித்ததற்கு பதிலாக நாளைக்குப் படைத்தலைவர்களுள் முதல்வனாகிய தர்மனை நாம் சிறைசெய்ய வேண்டும். 

அப்படிச் செய்தால்தான் என் மனத்திலுள்ள கோபம் தீரும் என்று துரியோதனன் கூறினான். ஆனால் துரோணர் சிறிது தயக்கத்துடன் அர்ஜூனனும், பீமனும் தர்மனுக்கு துணையாக இருக்கும் போது நம்மால் தர்மனை எதுவும் செய்ய முடியாது என்று கூறினார். இதனைக் கேட்ட துரியோதனனுக்கு இன்னும் கோபம் அதிகமானது.

ஆனால் உடன் இருந்த சிற்றரசர்கள், துரோணர் கூறுகிறபடியே அர்ஜூனனும், பீமனும் தர்மனை காவல் புரிகிறார்கள் என்பது உண்மையானால் நாளைய பன்னிரண்டாம் நாள் போர் முழுவதும் பீமனையும், அர்ஜூனனையும் தர்மன் அருகில் செல்ல முடியாதவாறு நாங்கள் தடுத்து நிறுத்தி வைக்கிறோம். 

அப்போது தர்மன் தனியாகத்தான் நிற்பார். துரோணர் தர்மரின் தனிமையைப் பயன்படுத்திக் கொண்டு அவரைக் கைது செய்து சிறைப்பிடிக்கட்டும் என்று பல சிற்றரசர்கள் துரியோதனனுக்கு ஆதரவாக பேசினார்கள்.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்