Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 11 மே, 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 017

கழறிற்றறிவார் நாயனார் !!

பார் போற்றும் பெருமையும், செல்வாக்கும் நிரம்பிய மலைநாடு எனப் போற்றப்பட்ட சேர நாட்டின் ஒப்பற்ற தலைநகரம் கொடுங்கோள%2Bர். சேரமன்னர் குலம் செய்த தவப்பயனாகப் பெருமாக்கோதையார் அவதரித்தார். இக்காரணத்தினாலேயே இந்த நகரத்திற்கு மாகோதை என்ற ஒரு சிறப்பு பெயரும் ஏற்பட்டது. அந்நகர் செய்த நன்மைகளின் பயனாக சேரர் குலம் தழைக்க அவர் மண்ணின் மேல் சைவநெறியை பரப்பியும், அதன் கோட்பாடுகள் அடிப்படையிலும் வாழ்ந்து வந்தார்.

சிவபெருமானின் மீது மிகுந்த அன்பு கொண்டவராகவும், பக்தி உடையவராகவும் திகழ்ந்து வந்தவர் அரசியல் தொழிலை விரும்பாமல் திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோவிலை அடைந்து சிவபெருமானுக்குத் திருத்தொண்டு செய்யவே விரும்பினார். தனது எண்ணத்தை சிவனின் மீது கொண்டு மனம் மகிழ்ந்தார். உலகியல் இன்பமும், அரசியல் சார்ந்த செயல்களும் உறுதியானது அல்ல என்பதை உணர்ந்த பெருமாக்கோதையார் நாள்தோறும் விடியற்காலை நித்திரையில் இருந்து எழுந்து நீராடி திருநீறு பூசி... மலர் கொய்து... மாலை தொடுத்தமைத்து... திருவஞ்சைக்களத் திருக்கோவிலுக்குச் செல்வார்.

அங்கு திருவலகும், திருமெழுகுமிட்டுத் திருமஞ்சனம் கொணர்ந்து இறைவனுக்கு நீராட்டி, முன்னைய அருளாசிரியர் திருவாய் மலர்ந்தருளிய திருப்பாட்டினை ஒருமை மனத்துடன் ஓதி அர்ச்சித்து வழிபாடு புரிந்து வருவார். இங்ஙனம் நிகழும் இதே நாளில் மலை நாட்டை ஆட்சி புரிந்து வந்த செங்கொற்பொறையான் என்ற சேரவேந்தன் தனது அரச பதவியினைத் துறந்து தவம் செய்யும் பொருட்டு வனத்திற்குச் சென்றார். பெருங்கடலைக் கடக்க விருப்பம் கொண்ட மன்னர் தவம் செய்யும் பொருட்டு சென்றமையால் மக்களின் நிலையையும், அரசின் நிலையையும் கருதி மதி கொண்ட அமைச்சர்கள் அரசியல் நூலில் உள்ள கோட்பாடுகளை ஆராய துவங்கினார்கள்.

நாட்கள் கடக்க துவங்கின. அதற்கான தீர்வும் கிடைத்தது. சேர நாட்டின் பழைய முறைப்படி அந்நாட்டின் ஆட்சியுரிமை திருவஞ்சைக்களத்திலே திருத்தொண்டு புரிந்துவரும் சேரர்குலத் தோன்றலாகிய பெருமாக்கோதையாருக்கே உரியதெனக் கண்டனர். பின் திருவஞ்சைக்களத்தை அடைந்து பெருமாக்கோதையாரை வணங்கி இச்சேரநாட்டின் ஆட்சியுரிமை தங்களுக்கு உரியது. ஆதலால் தாங்களே இந்நாட்டினைக் பாதுகாத்து ஆட்சி புரிந்து அருளுதல் வேண்டும் என வேண்டினர்.

அமைச்சர் பெருமக்கள் அரச பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உரைத்ததை கேட்டதும் பெருமாக்கோதையார் சற்று சித்தம் கலங்கினார். அதாவது, அரச பதவியில் அமர்வது எம்பெருமானுக்கு செய்யும் திருத்தொண்டில் இடையூறை ஏற்படுத்தும் வண்ணமாக அமையும். மேலும் அரண்மனை வாழ்வு என்பது எங்கும் நிறைந்திருக்கும் எம்பெருமானை மறக்கச் செய்யும் மாய சக்தி கொண்டதாகும் என்றெல்லாம் பலவாறாக தமக்குள் சிந்தித்து கொண்டிருந்தார்.

அமைச்சர் பெருமக்களை கண்டு என்னை அழைத்து பதவி அளித்தமைக்கு நன்றி... ஆனால், யான் அரசராக பொறுப்பேற்று ஆட்சி புரிவது என்பது யான் செய்து கொண்டு வரும் சிவத்தொண்டிற்கு பாதகமான செயலாகும். எவரேனும் அறிந்தே பிழை இழைக்க செய்யலாமா? மக்களுக்கு தேவையான நன்மைகள் புரியும் வல்லமை கொண்ட செங்கோலை ஏற்க வேண்டுமாயின், எம்பெருமானின் திருவருள் எனக்கு கிடைக்க வேண்டும். பரமன் அருள் கிடைத்தால் மட்டுமே என்னால் பதவியை ஏற்றுக்கொள்ள முடியுமே தவிர வேறு வழிகள் யாதும் கிடையாது.

தம் மனதில் எழுந்த எண்ணங்களை உரைத்துவிட்டு பெருமாக்கோதையார் அமைச்சர்களை அழைத்துக் கொண்டு எம்பெருமான் எழுத்தருளியிருக்கும் கோவிலுக்குச் சென்று எம்பெருமானைப் பணிந்து தமது விண்ணப்பத்தை அளித்தார். அப்பொழுது யாவரும் எதிர்பாராத அதிசயம் ஒன்று நிகழத்துவங்கியது. அதாவது ஆலயத்தில் ஒரு சூரியனிடமிருந்து வெளிவரும் ஒளியை விட பல மடங்கு வெளிச்சம் கொண்ட பேரொளி அவ்விடத்தில் பிறந்தது மட்டுமல்லாமல் எம்பெருமானின் அருள்வாக்கும் எழுந்தது.

எம்பெருமானின் அருள்வாக்கானது நீ அரச பதவியை ஏற்றுக் கொண்டு ஆட்சி புரிவாயாக... என்றும், உலகிலுள்ள உயிர்களுக்கு எப்போதும் போல அவர்களுக்கு தேவையான உதவிகளையும், தொண்டுகளையும் செய்து வருவாயாக... என்றும், விலங்குகள் மற்றும் பறவைகள் போன்ற மற்ற ஐந்தறிவு படைத்த உயிர்களும் பேசக்கூடிய பேச்சை அறியக்கூடிய ஆற்றலையும் உனக்கு அளித்தோம் என்றும்... அரசின் வல்லமையையும், பெரும் கொடையையும், ஆயுதம், வாகனம் முதலிய அரசருக்கு உரியனவற்றையும் உனக்கு அளிக்கின்றோம்... என்றும், எம்பெருமான் திருவாய் மலர்ந்து அருளிய அத்தனைப் பேறுகளையும் பெற்றார் பெருமாக்கோதையார்.

உலக உயிர்களின் கழறியச் சொற்கள் அனைத்தையும் உணரும் ஆற்றல் பெற்ற பெருமாக்கோதையாருக்கு கழறிற்றறிவார் என்பது காரணப்பெயராயிற்று. அதாவது, உயர்திணை மற்றும் கழறிய (மிருகங்களின்) சொற்பொருளை அறிந்து கொள்ளும் நுண்ணறிவினைப் பெற்றவர் என்பதைக் குறிப்பதாகும். பெருமாக்கோதையார் அமைச்சர்களை நோக்கி இறைவனின் அருளும், ஆசியும் கிடைத்தமையால் தாம் அரச பொறுப்பை ஏற்றுக்கொள்கிறோம் என்று உரைத்தார். அங்கு கூடியிருந்த அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

பெருமாக்கோதையார் எம்பெருமானின் திருவருளோடு நாட்டின் தலைநகரான கொடுங்கோள%2Bரை அடைந்து சுபநட்சத்திரம் மற்றும் திதிகள் நிறைந்த ஒரு நன்நாளில் மங்கலச் சடங்குகள் நடைபெற பொன் மணிமுடியினைச் சூடிக் கொண்டார். மலை நாட்டரசராய் மணிமுடி சூடிய சேரமான் திருவஞ்சைக்களத் திருக்கோவிலை வலம் வந்து... நிலத்தில் வீழ்ந்து... எம்பெருமானை தரிசித்து வணங்கினார். பட்டத்து யானையின் மீது அமர்ந்து வெற்றிக்குடையும், வெண்சாமரையும்... பரிசனங்கள் தாங்கிவர... மேளதாளங்களும், வேத கோஷங்களும்... இன்னிசைகளும் முழங்க... திருநகரை வலம் வந்தார்.

அப்பொழுது உவர்மண் நிரம்பிய பொதியைத் தோளிலே சுமந்து கொண்டு வரும் ஒருவரை மன்னர் கண்டார். கருமேகத்தினால் விண்ணுலகில் இருந்து மண்ணுலகம் வந்த மழையில் நனைந்து வந்தமையால் அவரது சரீரம் உவர்மண் படிந்து வெளுத்திருந்தது. உடல் முழுவதும் படிந்து வெளுத்திருந்தமையால் உடல் முழுவதும் திருநீறு பூசிய சிவனடியார் திருவேட திருக்கோலத்தை நேரில் காண்பது போல் நினைத்து மகிழ்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல் சேரமான் விரைந்து யானையில் இருந்து இறங்கிச் சென்று அவரை வணங்கினார்.

தனது முதுகில் பொதியை சுமந்து கொண்டு வந்த வண்ணான், வேந்தன் தன்னை வணங்கியதை கண்டதும் சித்தம் கலங்கி அச்சமுற்று நடுநடுங்கினான். பின்பு தனது கரங்களில் இருந்த உவர்மண் பொதியைக் கீழே போட்டுவிட்டு வேந்தரின் பாதங்களைப் பணிந்து தங்கள் அடியானாகிய நான் அடிமைத் தொழில் புரியும் வண்ணான் என்று கூறினார். அதைக் கேட்டதும் வேந்தர் மகிழ்ச்சி பெருவெள்ளத்தோடு யான் அடிச்சேரன் என்றும், தங்களை கண்டதும் பணிந்து போற்றுதற்குரிய சிவனடியார் திருவேடத்தை யாம் நினைக்கும்படி செய்தீர்கள் என்றும், ஆதலால் தங்கள் மனம் வருந்தாது செல்வீராக... என்று அவரிடம் கூறி வழியனுப்பினார்.

அன்பு நிறைந்த மன்னர் அடியார்கள் இடத்தில் கொண்டுள்ள அளவற்ற அன்பினைக் கண்டதும் அங்கு குழுமி இருந்த அமைச்சர்களும், மெய்யன்பர்களும் அதிசயித்து நின்றனர். பின்பு பலவாறு மன்னரை போற்றினர். சேரமான் மனநிறைவோடு யானை மீதமர்ந்து... நகர்வலஞ் செய்து... மாடவீதியையும், கோபுரத்தையும் கடந்து... தமது அரண்மனை மாளிகையில் எழுந்தருளினார். பின்பு அவர் அமர்வதற்காக செய்யப்பட்ட அழகிய வேலைப்பாடுகள் நிரம்பிய வைரக்கற்கள் பதிக்கப்பட்ட சிம்மாசனத்தின் மீது வெண்கொற்றக்குடை நிழலில் அமர்ந்தார்.

ஆண்களும், பெண்களும், அன்பர்களும், அடியார்களும் வாசனைப் பொடிகளையும், மலர்களையும் தூவி மன்னரை வணங்கினர். முப்படைகள் மற்றும் எண்ணற்ற படைவீரர்களின் அணிவகுப்பையும் மற்றும் அங்கு குழுமி இருந்த மக்கள் அனைவரும் சேரமான் வேந்தர் வாழ்க! என்று எழுப்பிய கோஷமானது மண்ணுலகம் விடுத்து விண்ணையும் முட்டியது.

சேர மன்னர் ஆட்சி புரிந்த காலமானது தங்க எழுத்துக்களால் எழுதப்படவேண்டிய பொற்காலமாக திகழ்ந்தது. அதுமட்டுமல்லாது கீழ்த்திசை மன்னரான சோழ வேந்தரோடும், தென்திசை மன்னரான பாண்டிய வேந்தரோடும் தோழர்களாக விளங்கினார். மூவேந்தரும் தமிழகத்தின் அகத்தும், புறத்தும் உள்ள பகைகளைக் களைந்து திருநீற்றொளியாகிய சிவநெறி வளரவும், வேதநெறி வளரவும் அறநூல் முறையே ஆட்சிபுரிந்தனர். பல தேசத்துச் சிற்றரசர்கள் கப்பங்கட்டி வந்தனர். நாடெங்கும் இறைவனிடம் கொண்ட பக்தி பெருகியது மட்டுமல்லாமல் நாடெங்கும் சுபிட்சமும், மகிழ்ச்சியும் பெருகியது.

தமக்கு கிடைத்த இந்த பதவி, ஆடம்பரமான மாளிகை, நிறைந்த செல்வம் மற்றும் பொருள் மேலும் தமக்கு பெருந்துணையாகவும் ஏன் இவை அனைத்துமாக விளங்குவது தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடல் புரிந்தருளும் அம்பலவாணரின் திருவடிகளால் மட்டுமே என்பதை சிந்தையில் கொண்டார் சேரமான். ஆதலால் தினந்தோறும் எம்பெருமானுக்கு பூஜை செய்வதை தமக்குரிய தலையாய கடமையாக மேற்கொண்டார். மணமிக்க திருமஞ்சனம், சந்தனம், நறும்புகை, தூப தீபம், திருவமுது முதலிய வழிபாட்டுப் பொருட்களுடன் அன்பு நிறைந்த சிவாகம முறைப்படி மன்னர் வழிபட்டு வந்தார்.

மன்னர் செய்து வந்த சிவபூஜையில் மனம் மகிழ்ந்த இறைவன், அடியாருக்கு அளவில்லா இன்பம் பெருக... வழிபாட்டின் முடிவில் தமது அழகிய காற்சிலம்பின் ஒலியினைக் கேட்டு இன்புறுமாறு செய்வதை வழக்கமாகக் கொண்டருளினார். இவ்வாறு சிவபூஜை செய்து மகிழ்ச்சி கொண்ட சேரமான் சிவனடியார்களுக்கு வேண்டுவனவற்றை இல்லை என்று உரைக்காது கொடுத்தும் சிவவேள்விகள் பல செய்தும் அனைத்து உயிர்க்கும் நலம் செய்து வந்தார்.

சிவவேள்விகள் பல செய்து அனைத்து உயிர்களுக்கும் நலம் செய்து வந்த நாட்களில் பாண்டியனது தலைநகராகிய மதுரையம்பதியில் திருவாலவா என்னும் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுளை தம்முடைய இன்னிசையால், அன்போடு வழிபடும் பாணபத்திரன் என்னும் ஒரு புலவன் வாழ்ந்து வந்தான். அவனது இசையில் மனம் மகிழ்ந்த எம்பெருமான் இசைப்பாணரது வறுமையை போக்கி அவருக்கு வேண்டிய பெரும் பொருள் செல்வத்தை அளிக்க திருவுள்ளம் கொண்டு பாணபத்திரன் திருக்கோவிலுக்கு உள்ளே உறங்கி கொண்டு இருந்தபோது எம்பெருமான் அவரின் கனவிலே எழுந்தருளினார்.

திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுள், பாணபத்திரா! அன்பால் என்னை பற்றி பாடிப் பணியும், உன்னிடம் குடி கொண்டுள்ள வறுமையை ஆதவனின் வருகையால் மறையும் பனிபோல் விலகச் செய்ய எப்பொழுதும் உன்னை போன்றே என்னிடத்து அன்பு கொண்ட சேரமானுக்கு ஒரு திருமுகம் எழுதித் தருகின்றோம். நீ அதனைப் பெற்றுக்கொண்டு காலம் கடத்தாமல் மலைநாட்டு காவலனிடம் சென்று கண்டு உனக்கு ஏற்பட்டுள்ள வறுமையை நீக்கி வருவாயாக என்று ஆணையிட்டு திருவோலையைத் தந்தருளினார்.

பாணபத்திரன் உறக்கத்தில் இருந்து கண்விழித்தெழுந்து, எம்பெருமான் தந்தருளிய திருவோலையைக் கண்களில் ஒற்றிக் கொண்டார். அத்திருவோலையைச் சென்னிமீது சுமந்துகொண்டு சேர நாட்டின் தலைநகரான கொடுங்கோள%2Bரை அடைந்து, சேர நாட்டின் வேந்தராகிய சேர மன்னரை கண்டு வணங்கினார். பின்பு சோமசுந்தரக் கடவுள் தந்தருளிய திருமுகப் பாசுரத்தை மன்னரிடம் கொடுத்தார் பாணபத்திரன். அடியவரிடம் திருமுகத்தை வாங்கி கொண்ட சேரமான் தன்னையும் ஒரு பொருளாக நினைத்து எம்பெருமான் தன்னிடம் கொடுக்க தங்களிடம் திருமுகம் கொடுத்தருளினார் என்பதை என்னும்போது எம்பெருமானின் திருவருளை எவ்விதம் உரைப்பது என்று புலப்படவில்லை புலவர் பெருந்தகையே...!!

இறைவன் உரைத்ததினால் எம்மையும் மதித்து வந்த உமது செயல்களை என்னவென்று போற்றுவேன்... என்று மிகுந்த மகிழ்ச்சியுடனும், பூரிப்புடனும் கூறினார். பாணபத்திரன் தந்த திருமுகத்தை வாங்கி அதில் உள்ள மதிமலி புரிசை மாடக்கூடல் எனத் தொடங்கும் திருமுகப் பாசுரத்தைப் படித்தார் சேரர். அப்பாடலின் மூலம் மன்னன் அடைந்த மகிழ்ச்சி என்பது எல்லை இல்லாத ஆனந்தத்தை கொடுத்தது. அந்த மகிழ்ச்சியின் பொருட்டே அப்பாசுரத்தைப் பலமுறை படித்து உள்ளம் உருகினார்.

மன்னர் தனது அமைச்சர் முதலியோரை அழைத்து தமது நிதியறையில் உள்ள பலவகைப் பொருட்களையும் பொதி செய்து கொணரச் செய்து இப்பெரும் பொருட்களையும், யானை, குதிரை முதலிய சேனைகளையும், இம்மலைநாட்டு ஆட்சியுரிமையினையும் தாங்களே ஏற்றருள வேண்டும் எனப் பாணபத்திரரை வேண்டி நின்றார். மன்னரின் கொடைத் திறத்தைக் கண்டு வியந்த பாணபத்திரர் மன்னரின் உயர்ந்த குணத்திற்கு தலை வணங்கினார். பின்பு மன்னரிடம் என் குடும்ப வாழ்விற்குப் போதுமான பொருட்களை மட்டும் அடியேன் தங்கள்பால் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது இறைவனது ஆணை.

ஆதலால் அரசாட்சியும் அதற்கு இன்றியமையாத அரச பதவிகளையும் தாங்களே கைக்கொள்ளுதல் வேண்டும் என்று கூறினார். இறைவனது ஆணையை அறிந்ததும் அதை மீற முடியாத பாணபத்திரர் சேரமான் வேண்டுகோளிற்கு இணங்கினார். பாணரும் தமக்கு வேண்டிய பொருட்களை மட்டும் பெற்றுக்கொண்டு விடைபெற்றார். ஆனால் வேந்தரோ புலவரை ஒரு யானையின் மீது அமரச் செய்து தாம் அளித்த பொருட்செல்வங்கள் அனைத்தையும் யானையின் மீது ஏற்றி அவரை வழி அனுப்பி வைத்தார்.

பாணபத்திரரின் மீது கொண்ட அன்பினால் சேரப் பேரரசர் பாணபத்திரன் எல்லையைத் தாண்டிச் செல்லும்வரை தொடர்ந்து சென்று அன்போடு வழி அனுப்பி வைத்தார். பாணபத்திரனும் மதுரை அடைந்து எல்லையில்லா ஆனந்தத்தோடு தனது மனையாளுடன் இல்வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அதுமட்டுமல்லாமல் சங்கத் தமிழையும் வளர்த்தார்.

இவ்வாறு அடியார் தேவைகளையும் மக்களையும் நன்முறையில் ஆட்சி செய்து வந்த சேரமான் என்றும் போல ஒருநாள் சிவபூஜை செய்து கொண்டிருந்தபொழுது வழிபாடு முடிந்த பின் எப்போதும் கேட்கும் பரமனின் திருச்சிலம்பொலி அன்று கேட்கவில்லை. அதை எண்ணி பெரிதும் மனம் கலங்கினார். கண்களில் நீர் மல்க, கைகள் இரண்டையும் சிரம் மேல் உயர்த்தி அடியேன் இழைத்த பிழை என்னவோ?

எனது மனதிலும், என்னையும் ஆட்சி செய்யும் பரம்பொருளே... தங்களை வழிபடும் ஆசையின் காரணமாக யான் சுமந்துள்ள இவ்வுடம்பினால் அடியேன் பெறுதற்குரிய இன்பம் வேறென்ன இருக்கிறது எனக் கலங்கித் தம் உயிரைப் போக்கிக்கொள்ளும் எண்ணத்துடன் உடைவாளை உருவித் தம் மார்பில் நாட்டப் புகுந்தார்.

சேரமான் தன் உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்ட நிலையில் அருட்கடலாகிய கூத்தப்பெருமான் விரைந்து தனது திருவடிச் சிலம்பொலியைச் சேரமானின் செவிகுளிரக் கேட்டு மகிழும் வண்ணம் முன்னை விடப் பன்மடங்கு ஒலியோடு ஒலிக்கச் செய்தார். சிலம்பொலியைக் கேட்டு மகிழ்ந்த சேரவேந்தர் தமது உடைவாளைக் கீழே எறிந்துவிட்டுத் தலைமேற் கைக்குவித்து நிலமுற வீழ்ந்து வணங்கி எழுந்தார்.

பின்பு எழுந்து அடியார்கள் இடத்து அன்பு கொண்ட கருணைக்கடலே... வழக்கம்போல் ஐயன் சிலம்பொலியை கேட்கச் செய்யாது தவிர்த்ததன் காரணம் யாதோ? என்று வினவினார். அப்பொழுது தோன்றாத் துணையாக மறைந்து நின்றருளிய பரமன் வான் வழியே அசரீரியை உருவாக்கினார். சேரனே! தடுத்தாட் கொள்ளப்பட்ட வன்றொண்டனாகிய சுந்தரன் தில்லையம்பலத்திலே யாம் புரியும் திருக்கூத்தினைக் கண்டு ஐம்புலன்களும் ஒன்றிய உணர்வுடன் நின்று வண்ணத் தமிழால் பதிகம் பாடினான்.

அவனது அருட்பாக்களில் புகழமைந்த திருப்பதிகங்களால் நம்மைப் புகழ்ந்துப் பாடினான். அவன் பாடிய தேனினும் இனிய சுவை கொண்ட பாடலில் யாம் எம்மை மறந்து திளைத்திருந்தமையால் இங்கு உன் வழிபாட்டு முடிவில் சிலம்பொலியைச் சற்று தாமதித்து கேட்குமாறு செய்தோம் எனத் திருவாய் மலர்ந்தருளினார். இவ்வருள் மொழியைச் செவிமடுத்த சேரமான், அடியார்களுக்கு அருள் புரியும் இறைவனது கருணை என்பது எல்லை இல்லை என்பதை வியந்து உள்ளமுருகினார். இறைவனையும் தம் பாடல்களால் மெய் மறக்க செய்த பெருமைமிக்க அந்த தொண்டனைக் காண முடியாத நான் பிறவி எடுத்து என்ன பயன்? இக்கணமே போற்றுதலுக்கு உரிய அந்த அடியாரை நேரில் கண்டு மகிழ்ந்து களிப்பேன்.

திருநடனம் புரிந்து பொன்னம்பலத்தையும், அங்கே எம்பெருமானையும் மதிமயங்க வைத்த ஒப்பற்ற தன்னேரில்லாப் பெரியோராகிய வன்றொண்டரையும் கண்டு வழிபடுதல் வேண்டும் என்று எண்ணினார். நாட்கள் செல்ல செல்ல அரசருக்கு அரண்மனை வாழ்க்கையும், அரசபோகமும் வேம்பாக கசந்தது. திருத்தொண்டர்கள் கூட்டத்தில் ஒருவராய் வாழ்வதிலும் எம்பெருமானின் நினைவுகளில் வாழ்வதையுமே பேரின்பமாகக் கருதினார். இவ்வெண்ணம் மனதில் தோன்றியவுடன் அதற்கு மேல் அவரால் மன்னராக இருந்து அரசாள விரும்பவில்லை.

சேர மன்னர் தனது எண்ணத்தை அமைச்சரிடம் எடுத்துரைத்து ஆட்சி பொறுப்பை அமைச்சர்களிடம் ஒப்படைத்தார். ஒரு சுபமுகூர்த்தம் கூடிய நன்னாளில் வேல் ஏந்திய மலர்களும், வில்லேந்திய வீரர்களும், வாள் ஏந்திய காவலர்களும், அறம் கூறும் அமைச்சர்களும், நால்வகைப் படையினரும் புடை சூழ... அத்தாணி மண்டபத்தில் அரசோச்சிய அருங்காவலன் அரச போகத்தைத் துறந்தார்.

திருவஞ்சைக் களத்தில் அருள்பாளிக்கும் இறைவனை வழிபட்டு கொங்கு நாட்டைக் கடந்து சிவனடியார்கள் எதிர்கொண்டு போற்றச் சோழநாட்டை அடைய தனது பயணத்தை தொடங்கினார். காவிரியில் நீராடி அதனைக் கடந்து தில்லைமூதூரின் எல்லையை அடைந்தார். எல்லையை அடைந்த அந்நிலையில் தில்லை வாழந்தணர்களும், சிவனடியார்களும் எதிர்கொண்ட மங்கல முழக்கங்கள் விண்ணை முட்ட போற்றச் சோழநாட்டிற்கு அழைத்து வந்தனர்.

அடியார்களோடு தில்லைத் திருவீதியை வலம் வந்து... எழுநிலைக் கோபுரத்தை வணங்கி... உட்புகுந்த சேரமான், பெருமை மிக்க தமிழால் ஏற்றி துதித்து நிலத்தில் வீழ்ந்து... பணிந்தெழுந்து உள்ளே சென்று இறைவன் ஆடல் புரியும் திருச்சிற்றம்பலத்தின் முன் அமர்ந்து, அவர் ஆடிக்கொண்டு இருக்கும் திருநடனத்தை கண்டதும் தன்னை மறந்து அவர் அடைந்த மகிழ்ச்சி என்பது எல்லை இல்லாதது.

அளவில்லாப் பெருங்கூத்தராகிய இறைவனது திருக்கூத்தினை கண்டதும் தம் ஐம்புலன்களும், சித்தமும் ஒடுங்கி ஒருமையுணர்வாற் கண்டு உருகிப் போற்றித் திருவருளின் இன்பக்கடலில் மூழ்கியும், திளைத்தும் இன்புற்றார். தாம் பெற்ற இந்த பேரின்பத்தை உலகில் உள்ள அனைவரும் பெற்று மகிழும் வண்ணம் கூத்தப்பெருமானது கீர்த்தியை விரித்துரைக்கும் செந்தமிழில் பொன்வண்ணத் திருவந்தாதியினைப் பாடியருளினார்.

சேரர் பாடிய திருவந்தாதியினைக் கேட்டு மகிழ்ந்த தில்லையம்பலவர் அதற்குப் பரிசாகத் தூக்கிய திருவடியில் அணியப் பெற்ற திருச்சிலம்பொலியை கேட்கும் வண்ணம் நிகழ்த்தினார். ஆடற்சிலம்பொலியினைச் செவியில் கேட்டதும் அளவில்லா மகிழ்ச்சி உற்ற சேரமான் காலந்தோறும் கூத்தப்பெருமானைக் கும்பிட்டுத் தில்லையிலே பல நாட்கள் தங்கியிருந்து அற்புதக் கூத்தாடுகின்ற நாதரின் திருவடியைப் பாடி பரப்பினார்.

பின்னர் சுந்தரரை கண்டு வணங்குவதற்கு விரும்பித் தில்லையிருந்து புறப்பட்டுப் திருவாரூரை அடைய தனது பயணத்தினை தொடங்கினார். அந்த பயணத்தின் வழியில் திருஞான சம்பந்தர் அவதாரம் செய்த சீர்காழியை அடைந்து தோணியப்பரைத் தொழுது புறப்பட்டு திருவாரூரை வந்தடைந்தார்.

சேரமானின் வருகையை உணர்ந்த சுந்தரர் சிவனடியார்களுடன் சென்று அவரை எதிர்கொண்டு அழைத்தார். சுந்தரரை கண்ட சேரவேந்தர் சேவடியைப் பணிந்தெழுந்தார். தம்மை வணங்கிய சேரமானை கண்டதும் தாமும் வணங்கித் தம் இரு கைகளாலும் தூக்கியெடுத்து... தம் இரு கைகளாலும் ஆரத்தழுவி... அகம் மகிழ்ந்தது மட்டுமல்லாமல் பெரும் நட்பினராய்ப் பெருமகிழ்ச்சியுற்றார்கள்.

இங்ஙனம் இருவரும் உயிரும், உடம்பும் ஒன்றாக இருக்கும் அன்பினால் அளவளாவி மகிழும் தோழமைத் திறத்தைக் கண்டு மகிழ்ந்த சிவனடியார்கள் சேரமானையும், சுந்தரரையும் 'சேரமான் தோழர்" என்ற பெயரால் அழைத்து மகிழ்ந்தனர். சேரமான் தோழராகிய சுந்தரர், சேரமான் பெருமானது கையினை பற்றி அழைத்துச் சென்றார். இருவரும் திருவாரூர் திருக்கோவிலை அடைந்து அடியார்கள் வீற்றிருக்கும் தேவாசிரிய மண்டபத்தைப் பணிந்து திருக்கோவிலை வலம் வந்தனர்.

சேரமான், உடைய நம்பியாராகிய சுந்தரரைத் தொடர்ந்து சென்று பூங்கோவிலமர்ந்த பெருமானை நிலமிசைப் பல முறை விழுந்து வணங்கினார். புற்றிடங்கொண்ட பெருமானைப் போற்றிக் கண்களில் அன்பு நீர் பொழியத் திருமும்மணிக் கோவை என்னும் செந்நூல் மாலை பாடினார். தாம் பாடிய செந்தமிழ் நூலைத் தம் தோழராகிய சுந்தரர் முன்பு நன்மை விளங்கக் கேட்பித்தார். ஆரூரிடங்கொண்ட இறைவரும் சேரவேந்தர் பாடிய தெய்வப் பாமலையை விரும்பி ஏற்றுக்கொண்டு அருளினார்.

பின்பு சுந்தரர் சேரமானை அழைத்துக்கொண்டு நங்கை பரவையாரின் திருமாளிகைக்குச் சென்றார். பரவையார் திருவிளக்கு, நிறைகுடம் முதலிய மங்கலப் பொருட்களுடன் சேரமான் பெருமானை வரவேற்று வணங்கிச் சேரர் பெருமானிற்கும், சிவனடியார்களுக்கும், உடன் வந்த பரிசனங்களிற்கும் தக்கவகையில் திருவமுது படைத்து அன்புடன் உபசரித்தார். ஆண்டநம்பியும், சேரமானுடன் இருந்து திருவமுது செய்தருளினார்.

சுந்தரரும் சேரமானின் ஈடு இணையில்லா அன்பிற்கு அடிமையாகி ஆனந்த வெள்ளத்தில் மகிழ்ந்து, மூழ்கி இன்பம் கண்டுகொண்டு இருந்தார். இவ்விரு சிவனடியார்களும் சில நாட்கள் திருவாரூரிலிருந்து தியாகேசப் பெருமானை வழிபட்டு பெருமானின் பேரருளைப் பெற்றுக் களிப்புற்று வந்தனர். இவ்வாறு சேரமானும், சுந்தரரும் திருவாரூரில் தங்கியிருக்கும் பொழுது பாண்டிய நாட்டிலுள்ள திருவாலவாய் முதலிய திருத்தலங்களை வழிபடவேண்டும் என்ற எண்ணம் சுந்தரருக்கு உண்டாகியது. அவர்தம் விருப்பத்தினைச் சேரமானுக்குத் தெரிவித்தார்.

சேரமான், சுந்தரரை பிரிய மனம் இல்லாது தாமும் வருவதாக கூறினார். ஒத்த உள்ளம் கொண்ட அடியார்கள், அடியர் புடைசூழ ஒரு நல்ல நாளில் திருவாரூரிலிருந்து புறப்பட்டு திருக்கீழ்வேள%2Bர், திருநாகைப்பட்டினம், திருமறைக்காடு, திருவகத்தியான்பள்ளி, திருப்புத்தூர் முதலிய சிவத்தலங்களை வணங்கிப் பதிகம்பாடி பரவசமுற்றவாறு தென்தமிழ்ப் பாண்டியநாட்டின் தலைநகராகிய மதுரை மாநகரை வந்தடைந்தனர்.

அவ்வேளையில் நாடாளும் வேந்தனாகிய பாண்டியனும், பாண்டிய மகளை மணந்து மதுரையில் தங்கியிருந்த சோழ மன்னனும் எதிர்சென்று இவ்விரு பெருமக்களையும் வரவேற்றனர். இவ்விதமாக ஒன்றிணைந்த மூன்று வேந்தர்களும் திருவாலவாய்த் திருக்கோவிலுக்கு சென்றனர். நம்பியாருடன் திருவாலவாய்ப் பெருமானைக் கண்டு மகிழ்ந்த சேரமான் அடியேனையும் ஒரு பொருளாக எண்ணித் திருமுகம் அருளிய பேரருளின் எல்லையை அறிந்திலேன் என்று எல்லை இல்லாத மகிழ்ச்சியுடனும், கண்ணீருடனும் ஆலவாய் கடவுளைப் போற்றினார்.

அந்த சமயத்தில் அங்கிருந்த அனைவரும் தன்னை மறந்த நிலையில் நின்று எம்பெருமானை வணங்கினர். சிறிது நேரத்திற்கு பின்பு பாண்டிய வேந்தர் இவ்விரு பெருமக்களையும் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று உபசரித்துப் போற்றினார். சேர, சோழ, பாண்டியர்களாகிய மூன்று தமிழ் வேந்தர்களும், நம்பியாராகிய சுந்தரரும் ஒருவருக்கொருவர் அன்பினால் ஒன்றிணைந்து தங்களுக்குள் பல கருத்துக்களை பரிமாறிக் கொண்டு பாண்டிய நாட்டுத் தலங்களைப் பணிந்து இன்புற்றனர்.

பின்பு சிறிது காலத்திற்கு பின்பு சேரமானும், சுந்தரரும் பாண்டியர் மற்றும் சோழராகிய இரு பெருவேந்தர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு பல திருத்தலங்களைத் தரிசித்துப் பதிகம் பாடி உள்ளம் மகிழ்ந்தவாறு இருவரும் சோழ வளநாட்டை வந்தடைந்தனர். இருவரும் சோழ நாட்டுத் திருத்தலங்கள் பலவற்றை வணங்கியவாறு மீண்டும் திருவாரூரை அடைந்தனர். சேரமான் அங்குச் சில நாட்கள் தங்கியிருந்து தம் தோழராகிய நம்பியாரைத் தங்கள் நாட்டில் எழுந்தருள வேண்டுமென்று அவரிடம் பலமுறை வேண்டிக்கொண்டனர். அவருடைய விண்ணப்பத்தை மறுக்க இயலாத சுந்தரர் பரவையாரிடம் இசைவு பெற்றுச் சேரவேந்தருடன் புறப்பட்டார்.

சுந்தரரும், சேரமானும் காவிரித் தாயின் மடியில் உள்ள சிவதலங்களை வழிபட்டவாறு திருக்கண்டியூர் என்னும் தலத்தை அடைந்து எம்பெருமானை வணங்கி வழிபட்டு வந்தனர். காவிரியாற்றின் மற்றொரு கரையான தென்கரையில் அமைந்திருந்த தெய்வத்தையும் தரிசித்தனர். பின்பு சுந்தரரும், சேரமானும் வடகரையில் எழுந்தருளியிருக்கும் திருவையாற்றில் நிலை கொண்டுள்ள ஐயாற்றுப் பெருமானை வழிபட்டு வர எண்ணினார்.

ஆனால், அவர்கள் செல்வதில் தடைகள் ஏற்பட தொடங்கின. அதாவது, அவர்கள் உள்ளத்தில் எம்பெருமானின் மீது கொண்ட பக்தியானது எவ்விதமான தடைகளுக்கும் அஞ்சாமல் பெருக்கெடுத்து ஓடியதுபோல, காவிரியிலும் வெள்ளமானது வர்ணிக்க இயலாத அளவிற்கு கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத சுந்தரரும், சேரமானும் திகைத்து நின்று கொண்டிருந்தனர். பின்பு சுந்தரமூர்த்தி நாயனார் கண்டியூர் நீலகண்டப் பெருமானைப் பணிந்து பரவும் பரிசு எனத் தொடங்கி திருப்பாட்டுக்கள் ஒவ்வொன்றின் இறுதிதோறும் ஐயாருடைய அடிகளோ... என்று அன்பு மேலிட அழைத்தவராய்த் திருப்பதிகத்தினைப் பாடினார்.

அவரின் பதிக்கத்தால் மனம் மகிழ்ந்த சிவபெருமானின் திருவருளால் காவிரி நதி நீரானது பிரிந்து அருட்செல்வர்களுக்கு வழி காட்டியது. இருவரும் அவ்வழியாக அக்கரை சென்று ஐயாற்றுப் பெருமானைக் கண்டு மகிழ்ந்தனர். மீண்டும் வடகரையை அடைந்து தங்கள் சிவயாத்திரையைத் தொடர்ந்தனர். மேற்குத் திசை நோக்கிப் புறப்பட்ட இருவரும் பல தலங்களைத் தரிசித்தவாறு கொங்கு நாட்டின் வழியாக மலைநாட்டின் எல்லையை அடைந்தனர். தங்கள் நாட்டின் மன்னரும், சுந்தரரும் வருவதை அறிந்த மலைநாட்டு மக்கள் தங்கள் அரசரையும், ஆரூயிர்ப் பெருமானையும் மலர் தூவி வணங்கி வரவேற்றனர்.

மலைநாட்டில் உள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு களித்த ஆரூரர், சேரமான் நாயனாருடன் கொடுங்கோள%2Bரை வந்தடைந்தார். அரசரையும், சுந்தரரையும் வரவேற்க ஆயிரக்கணக்கான அன்பர்களும், அடியார்களும் அவ்விடத்தில் கூடி நின்று கொண்டிருந்தனர். தம்பிரான் தோழரும், அத்தோழருக்குத் தோழரும் உலா வந்த காட்சியைக் கண்டு நகர மக்கள் வாழ்த்திப் பணிந்தனர். மலர் தூவி வணங்கினர். இங்ஙனம் விண்ணவர் வியக்கும் அளவிற்கு திருக்கோலத்தில் வந்த இரு தவச் செம்மல்களும் திருமாளிகையின் மணிவாயில் வழியாக அரண்மனை வந்தனர். சேரர், சுந்தரரை அரண்மனைக்குள் அழைத்துச் சென்று தமது அரியணையில் அமரச் செய்து அவரது பாதகமலங்களைச் சிவாகம முறைப்படி வழிபாடு புரியத் தொடங்கினார்.

சுந்தரர் பாதபூஜை புரிய வந்த சேரரைத் தடுத்தபோது சேரமான், அன்பின் மிகுதியால் செய்யும் வழிபாடுகள் எல்லாவற்றையும் ஏற்று அருளல் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சுந்தரர் அவரது அன்பிற்குக் கட்டுப்பட்டார். அவரோடு திருவமுது செய்து மகிழ்ந்தார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் சேரப்பெருந்தகையுடன் அரண்மனையில் தங்கியிருந்தார். செண்டாடுந் தொழில் மகிழ்வும், சிறுசோற்றுப் பெருவிழாவும், பாடல், ஆடல் இன்னியங்கள் முதலாக பலவகை வாத்தியங்களையும், விளையாடல்களையும் நிகழச்செய்து தம் தோழரை மகிழ்வித்தார். இங்ஙனம் நண்பர் இருவரும் அளவளாவி மகிழும் நாட்களில் நம்பியாரூரர்க்குத் திருவாரூர்ப் பெருமானைக் கண்டு வணங்க வேண்டுமென்ற நினைவு தோன்றியது.

அந்நினைவு பெற்ற சுந்தரர், 'பொன்னும் மெய்ப்பொருளுந் தந்து போகமும் திருவும் புணர்த்தருளும் ஆரூர்ப் பெருமானை மறத்தலும் ஆமே" எனப் பாடித் தமது ஆற்றாமையை தம் தோழராகிய சேரமானுக்கு உணர்த்தி விடைபெற முயன்றார். சுந்தரரின் உள்ளக் குறிப்பை அறிந்த சேரமான் சுந்தரரைப் பிரிய மனமில்லாமல் மனம் உருகிக் கண்ணீர் வடித்தார். இருப்பினும் சுந்தரர் விருப்பத்திற்கு ஏற்ப அவரது பயணத்தைத் தடுக்க விரும்பவில்லை. அவரது விருப்பம்போல் அனைத்து ஏற்பாடுகள் செய்து அவரை வழியனுப்பத் துவங்கினார். சேரமான், சுந்தரருக்குப் பொன்னும், பொருளும், மணியும் என பலவகையான பண்டங்களையும் கொடுத்து அவரது திருவடிப் பணிந்து எல்லைவரைச் சென்று தொண்டர்களுடன் வழி அனுப்பி வைத்தார்.

சுந்தரரும் தம் தோழரைத் தழுவி விடைபெற்றுத் திருவாரூரிற்கு புறப்படத் துவங்கினார். சேரமான் தம் தோழராகிய நம்பியாரூரரை மறவாத சிந்தையுடன் கொடுங்கள%2Bரிலிருந்து மலைநாட்டை ஆட்சி புரிந்திருந்தார். திருவாரூரை நோக்கிச் தனது பயணத்தை தொடங்கினார் சுந்தரர். பல இன்னல்களை கடந்து திருமுருகன் பூண்டி என்னும் இடத்தை அடைந்தார். பயணத்தினால் ஏற்பட்ட களைப்பு மேலிடத் தொண்டர்களுடன் ஓரிடத்தில் ஓய்வெடுத்து கொண்டு இருந்தார்.

எப்பொழுதும் போல் எம்பெருமான் திருவிளையாடல்களை நிகழ்த்த துவங்கினார். தம்முடைய பூத கணங்களை மனித உருவத்தில் அனுப்பி நாயனார் கொண்டு வந்துள்ள அனைத்து பொருட்களையும் கவர்ந்து கொண்டு வரச் செய்தார். களைப்பு நீங்கி தெளிவு பிறந்தவுடன் தாம் கொண்டு வந்த பொருட்கள் யாவும் களவு போயின என்பதை அறிந்த அடியார்கள் சுந்தரரிடம் சென்று நிகழ்ந்தவற்றை கூறினார்கள்.

தம் தோழர் கொடுத்த பொருட்கள் யாவும் களவு போனதை நினைத்த சுந்தரருக்கு வேதனையானது மேலிட திருமுருகன் பூண்டியை அடைந்து அங்கு குடிக்கொண்டிருக்கும் எம்பெருமானிடம் கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடினார். அவரின் பதிகத்தால் மனம் மகிழ்ந்த எம்பெருமான் சிவகணங்கள் மூலம் கவர்ந்து வந்த பொருட்களை எல்லாம் கோவிலின் முன்னே மலைபோல குவிக்கச் செய்தார். சுந்தரரும் மனம் மகிழ்ந்து தொண்டர்களுடன், பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு திருவாரூரை வந்தடைந்தார்.

நெடுநாட்களுக்கு பின்பு சுந்தரர் மீண்டும் கொடுங்கள%2Bருக்கு வந்து தம் தோழராகிய சேரமானுடன் பல நாட்கள் தங்கியிருந்து பல செய்திகளை பகிர்ந்து கொண்டு இருவரும் மகிழ்ந்திருந்தனர். பின்பு அவரிடம் இருந்து விடைபெற்று திருவஞ்சை நோக்கி தனது பயணத்தை தொடங்கினார். ஒருநாள் சேரமான் திருமஞ்சனச்சாலையில் நீராடிக் கொண்டிருந்த வேளையில் சுந்தரர் திருவஞ்சைக்களத்தில் உள்ள திருக்கோவிலை அடைந்து அஞ்சைக்களத்து இறைவனை வழிபட்டுத் 'தலைக்குத் தலைமாலை" என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகத்தைப் பாடிப் போற்றி நின்றார்.

அந்நிலையில் அவரது பாசத்தளையை அகற்றிப் பேரருள் புரிய விரும்பிய சிவபெருமான், சுந்தரரை அழைத்து வருமாறு திருக்கயிலாயத்தில் இருந்து வெள்ளை யானையுடன் தேவர்களை அனுப்பினார். வெள்ளை யானையுடன் திருவஞ்சைக்களத்தில் உள்ள திருக்கோவில் வாயிலை அடைந்தார்கள் தேவர்கள். நம்பியாரூரரைப் கண்ட தேவர்கள் அவரிடம் பணிந்து நின்று தாங்கள் இவ்வெள்ளை யானையின் மீது அமர்ந்து திருக்கயிலைக்கு எங்களுடன் புறப்பட்டு வருதல் வேண்டுமென்பது இறைவரது விருப்பமாகும் என எடுத்துரைத்து அவரை அழைத்தனர். இந்நிலையில் நம்பியாரூரர் செய்வது யாதென்று அறியாது திகைத்து நின்று கொண்டு இருந்தார். அவ்வேளையில் தம் உயிர்த்தோழராகிய சேரமானை தம் மனதில் சிந்தித்துக் கொண்டு வெள்ளை யானையின் மீது ஏறி அமர்ந்து புறப்பட்டு செல்லத் துவங்கினார்.

இவ்வாறு தம் உயிர்த்தோழராகிய சுந்தரர் தம்மை நினைத்துச் செல்லும் பேரன்பின் திறத்தைத் திருவாற்றலால் விரைந்துணர்ந்த கழறிற்றறிவாராகிய சேர வேந்தர் தனது அருகில் நின்று கொண்டு இருந்த குதிரையின் மீது ஏறித் திருவஞ்சைக்களத் திருக்கோவிலுக்கு விரைந்து சென்றார். வெள்ளை யானையின் மீது அமர்ந்து விண்ணில் செல்லும் தம் தோழரைக் கண்டார். தமது குதிரையின் செவியிலே மந்திரவைந்தெழுத்தினை உபதேசித்தார். அவ்வளவில் குதிரை ஆகாயத்தில் பறந்து சென்று வன்றொண்டர் ஏறிச்செல்லும் வெள்ளை யானையை வலம் வந்து அதற்கு முன்னே சென்றது.

சேரமானை பின் தொடர்ந்து சென்ற படைவீரர்கள், குதிரை மீது செல்லும் தம் வேந்தர் பெருமானைக் கண்ணுக்குப் புலப்படும் எல்லை வரையில் கண்டு பின் காணாததை கண்டு மனம் வருத்தமுற்றார்கள். பின்பு தம் வேந்தர் பெருமானைத் தொடர்ந்து செல்ல வேண்டுமென்ற மனத்திட்பமுடையராய் தங்களிடம் இருந்த உடைவாளினால் தம் உடம்பை வெட்டிவீழ்த்தி வீர யாக்கையைப் பெற்று விசும்பின் மீதெழுந்து தம் அரசர் பெருமானைச் சேவித்து சென்றனர்.

சேரமானும், சுந்தரரும் திருக்கையிலாயத்தின் தெற்கு வாயிலை அணுகிக் குதிரையிலிருந்தும், யானையிலிருந்தும் இறங்கி வாயில்கள் பலவற்றையும் கடந்து திருவணுக்கன் திருவாயிலை அடைந்தார்கள். சேரமான் உள்ளே புக அனுமதியின்றி வாயிலில் தடைபட்டு நின்றார். அவருடைய தோழராகிய சுந்தரர் உள்ளே சென்று சிவபெருமான் திருவடி முன்னர் பணிந்தெழுந்தார். கங்கை முடிக்கணிந்த கடவுளே... தங்கள் திருவடிகளை காணும் பொருட்டுச் சேரமான் திருவணுக்கன் திருவாயிலின் புறத்திலே வந்து நிற்கின்றார் என விண்ணப்பம் செய்தார். சிவபெருமான், பெரிய தேவராகிய நந்தியை அழைத்துச் 'சேரமானைக் கொணர்க" எனத் திருவாய் மலர்ந்து அருளினார். அவரும் அவ்வாறே சென்று அழைத்து வந்தார்.

சேரமான் இறைவன் திருமுன்பு பணிந்து போற்றி நின்றார். இறைவன் புன்முறுவல் செய்து சேரமானை நோக்கி இங்கு நாம் அழையாதிருக்க நீ வந்தது எதை கருதி என வினவினார். அதை கேட்ட சேரவேந்தர் எம்பெருமானை பணிந்து அடியேன் இங்கு தெரிவித்தருளும் வேண்டுகோள் ஒன்றுள்ளது. எனது பிறவி துன்பதை போக்கும் பொருட்டு சுந்தரர் தோழமையை அருளிய பெருமானே... மறைகளாலும், முனிவர்களாலும் அளவிடுதற்கரிய பெரியோனாகிய உன்னைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு திருவுலாப்புறம் என்ற செந்தமிழ் நூல் ஒன்றைப் பாடி வந்துள்ளேன். இத்தமிழ் நூலைத் தேவரீர் திருச்செவி சாத்தியருளல் வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும் என்று விண்ணப்பம் செய்தார்.

அப்பொழுது சிவபெருமான் சேரனே... அவ்வுலாவைச் சொல்லுக... எனப் பணிந்தருளினார். சேரமானும் தாம் பாடிய திருக்கயிலாய ஞான உலாவைக் கயிலைப் பெருமான் முன் எடுத்துரைத்து அரங்கேற்றினார். சேரர் பரிவுடன் கேட்பித்த திருவுலாப்புறத்தை ஏற்றுக்கொண்ட இறைவன் அவரை நோக்கி சேரனே நம்பியாரூரனாகிய ஆலாலசுந்தரனுடன் கூடி நீவிர் இருவரும் நம் சிவகணத்தலைவராய் இங்கு நிலைபெற்றிருப்பீராக எனத் திருவருள் செய்ய, சேரமான் சிவகணத் தலைவராகவும் கயிலையில் திருத்தொண்டு புரிந்திருப்பாராயினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக