Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 15 மே, 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 021

குலச்சிறை நாயனார் !!

மனதை மயக்கும் ஓசைகளால் அலைகள் புரண்டு ஓடும் கடலையும், அதில் கிடைக்கும் முத்துக்கள் போன்று முத்தமிழும், சந்தனமும், செழுமையும் உடைய பாண்டி நாடு என்று பழம்பெரும் புலவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட பாண்டிய நாட்டில் அமைந்துள்ள திருத்தலம் மணமேற்குடி என்பதாகும். அவ்வூரில் வாழ்ந்து வந்த அடியார்களில் உயர் குடியில் பிறந்த குலச்சிறையார் என்பவரும் ஒருவராவார்.

இளமை பருவம் முதற்கொண்டே கங்கை சூடிய முக்கண்ணனின் பாத கமலங்களில் தம்முடைய சிந்தனைகள் மற்றும் எண்ணத்தை செலுத்தி சிவனடியார்களுக்குத் தேவையான திருத்தொண்டு புரிவதில் ஆர்வத்துடனும், மிகுந்த ஈடுபாட்டுடனும், உண்மையையும் உடையவராக விளங்கியதோடு மட்டுமல்லாமல் அனைவராலும் போற்றப்பட்டார். அடியார்களுக்கு வேண்டிய உதவிகளை புரிவதால் பிறவா நிலையாகிய பேரின்ப வீடு, பேற்றிற்குப் பாதையும், நன்னெறியும் இதுவே என்பதனை நன்கு உணர்ந்திருந்தார். தம்மை காணவரும் அடியார்கள் எந்த குலத்தினராக இருப்பினும் அவர்களிடம் வேற்றுமை பாராது அவர்களையும் சிவமாகவே கருதி வழிபட்டு வந்தார்.

நாம் அனுபவிக்கும் அனைத்து நலன்களுக்கும் முக்கியமானதாக இருப்பது சமய ஞானமே ஆகும். சமய ஞானம் என்பது நாம் கொண்டுள்ள பக்தியை பெருக்குவதினால் மட்டுமே கிடைப்பதாகும். அந்த பக்தியை பெருக்க நாம் உயிரை வளர்க்க வேண்டும். இதுவே அனைத்திற்கும் ஆணிவேர் என்பதை நன்கு உணர்ந்திருந்தார் குலச்சிறையார். இவர் மதுரையை ஆண்டு வந்த நின்றசீர் நெடுமாறனிடம் தலைமை அமைச்சராய்ப் பணியாற்றி வந்தார்.

இத்தொண்டர் அமைச்சராகப் பணிபுரிந்து வரும் நாளில் பாண்டிய நாட்டில் சமணர்கள் தங்கள் சமயத்தின் கருத்துக்களையும், ஆதிக்கத்தையும் பரப்ப பல வழிகளில் முயன்றார்கள். ஆனால் குலச்சிறையாரோ தாம் பின்பற்றி வருகின்ற சைவ மதக் கொள்கைகளை விடாமல் பற்றிக் கொண்டு ஒழுகினார். அத்தோடு சமணக் கொள்கைகளை பாண்டிய நாட்டில் பரவாமல் அதை தடுப்பதற்கு உறுதுணையாக இருந்தார். பாண்டியமாதேவியாருடைய ஒப்பற்ற சிவத்தொண்டிற்கு தம்மை உட்படுத்தி உண்மைத் தொண்டராக்கி பணியாற்றினார் குலச்சிறையார்.

இவ்வாறு சிவநெறியில் வாழ்ந்து அரச கருமம் செய்து வரும் நாளில் சிவநெறி விளங்கும் திருஞானசம்பந்தர் பாண்டிய நாட்டிற்கு அருகாமையில் உள்ள திருமறைக்காட்டில் எழுந்தருளியிருப்பதான செய்தியை அறிந்தார். இச்செய்தியினை அறிந்த பின்பு அவரை நேரில் கண்டு அடிபணிந்து மிகவும் மகிழ்ச்சி கொண்டார். இந்த செய்தியை பாண்டியமாதேவியாரிடம் எடுத்துரைத்தார். பாண்டிய நாடெங்கும் சைவம் ஓங்கவேண்டுமென்ற எண்ணத்தோடு இருந்த பாண்டிமாதேவியாரோடு ஆலோசித்து திருஞானசம்பந்தரை பாண்டிய நாட்டிற்கு வரவழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டார்.

பாண்டிய நாட்டு தூதுவர்கள் திருஞானசம்பந்தரை சந்தித்து அரச ஓலையை அவரிடம் அளித்தனர். அச்செய்தியை படித்ததும் அவர்களின் நல்ல எண்ணத்தை புரிந்து கொண்ட திருஞானசம்பந்த பெருமானும் பாண்டிய நாட்டிற்கு வருவதாக கூறினார். திருஞானசம்பந்த பெருமான் பாண்டிய நாட்டுக்கு எழுந்தருளும் செய்தி கிடைக்கும் முன்னரே அவரை வரவேற்க பலவிதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பின்பு தூதுவர்கள் திருஞானசம்பந்த பெருமான் வருவதாக கூறிய செய்தியைக் கேட்டதும் அங்கிருந்த அனைவரும் திருஞானசம்பந்த பெருமானின் வருகையை எதிர்க்கொண்டு இருந்தனர்.

இவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக திருஞானசம்பந்தப் பெருமான் பாண்டிய நாட்டுக்கு எழுந்தருளினார். திருஞானசம்பந்த மூர்த்தி வந்து கொண்டு இருக்கின்றார் என்னும் செய்தியை கேட்டதும் குலச்சிறையார் அடைந்த மகிழ்ச்சி என்பது எல்லை இல்லாதது. உள்ளம் நிறைந்த அன்பு வெள்ளத்தாலே கைகள் சிரமிசை ஏறிக்குவிய... அவ்விடத்திலே நிலமிசை வீழ்ந்து வணங்கினார். பின் எழுந்து நெருங்கிச் சென்று வீழ்ந்து வணங்கிக் கிடந்தார்.

ஆளுடைய பிள்ளையாரைச் சூழ்ந்து வந்த தொண்டர் கூட்டம் மற்றும் பாண்டிய முதல் மந்திரி மற்றும் அவருடன் வருகை தந்த அமைச்சர்கள் என அனைவரும் அவரை பணிந்த போதும் நாயனார் எழாததைக் கண்டு ஆளுடைய பிள்ளையாரின் தொண்டர் சிலர் சென்று சிவபுரச் செல்வரிடம் நிகழ்ந்து கொண்டு இருப்பதைக் கூறினர். சிவஞானச் செல்வரும் முத்துச் சிவிகையின்றும் இறங்கி வந்து தம் கைமலர்களால் குலச்சிறையாரை எழுப்பி அவரை அணைத்தெடுத்தார். அவர் தம் அரவணைப்பினால் எழுந்த குலச்சிறையார் சிவஞானச் செல்வரான ஆளுடைய பிள்ளையாரைக் கைதொழுது நின்றார். ஆளுடைய பிள்ளையாரோடு சென்று ஆலவாய் உறையும் அவிர்சடைக் கடவுளை வழிபடும் பாக்கியமும், பேரும் பெற்றார்.

பின்பு அவர்கள் தங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள இடத்திற்கு திருஞானசம்பந்த பெருமானையும், அவருடன் வந்த தொண்டர் கூட்டத்தையும் அழைத்துச் சென்று திருமடத்தில் உறையச் செய்தார். அவர்கள் அனைவருக்கும் வேண்டிய அனைத்து தேவைகள் மற்றும் திருவிருந்தளிக்கும் பேறும் அவருக்கே வாய்த்தது. இவற்றையெல்லாம் மனநிறைவோடு செய்து முடித்தாலும் சமணர்களால் இவருக்கு தீங்கேதும் நேருமோ என அஞ்சினார். அவ்விதம் ஏதேனும் நிகழுமாயின் தனது உயிரை துறப்பதே சரியே என்றும் எண்ணத் துவங்கினார். அவர் அஞ்சிய வண்ணமே சமணத்துறவிகள் மத, பேதத்தால் மதியிழந்து மன்னனின் ஆணையின் பெயரில் ஆளுடைய பிள்ளையார் தங்கிருந்த மடத்திற்குத் தீ வைத்தனர் என்னும் செய்தியானது அவரின் மனதை பதைபதைக்கச் செய்தது.

ஆளுடைய பிள்ளையாரான திருஞானசம்பந்தனார் தங்கியிருந்த மடத்திற்கு தீ வைத்திருந்தாலும் சிவஞானச் செம்மலுக்கு தீங்கேதும் நிகழவில்லை என்பதை அறிந்த பின்னரே அவரது மனம் ஆறுதல் அடைந்தது. செய்யும் பிழைக்கு தண்டனை கிடைப்பது போல அவன் இட்ட தீ அவனையே சென்று மெல்லத் தாக்கட்டும் என்று திருஞானசம்பந்தர் தீயின் தாக்கத்தை பாண்டியனுக்கே திருப்பிவிட்டார்.

மன்னருக்கு வெப்பு நோயானது வருத்த துவங்கியது. இந்த நோயின் தாக்கத்தை குறைக்க சமணர்கள் செய்த எவ்வித மந்திரங்களும், சிகிச்சைகளும் பலனளிக்கவில்லை. இந்த நோய்க்கு திருஞானசம்பந்தரின் மதியுரை தான் சிறந்த மருந்தாக இருக்கும் என்று குலச்சிறையார் கூறினார். மன்னனும் அவர் ஆலோசனைப்படி திருஞானசம்பந்தரை அழைத்து வருமாறு பாண்டியமாதேவியாரையும், அவரையும் பணிந்தான்.

மன்னனின் விருப்பப்படியே பாண்டியமாதேவியாரும், குலச்சிறையாரும் புரவியில் ஏறிச் சென்று திருஞானசம்பந்தப் பிள்ளையார் தங்கி இருக்கும் திருமடத்தை அடைந்தார்கள். அங்கே ஞானத்தின் திருவுருவாய் நின்ற திருஞானஞானசம்பந்தரைக் கண்டார். கண்ட பொழுதே சமணர்களின் கொடுந்தொழிலை நினைத்து கண்களில் நீர் வழிந்தோட தங்களது இருகரங்களை குவித்து திருஞானசம்பந்த பெருமானின் திருவடியில் வீழ்ந்து அழுதார் நாயனார்.

திருவடியைப் பற்றி விடாது புரண்டயரும் அவரைப் புகலிவேந்தரே... ஒன்றுக்கும் கவலை கொள்ள வேண்டாம்.... என்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்பு அபயமளித்த அவரை சிவிகையில் ஏறிவர... அவரை அரச மாளிகைக்கு அழைத்துச் சென்று அரசனது தலைமாட்டின் பொற்பீடத்தில் அமர வைத்தார். பின்பு திருஞானசம்பந்தர் மந்திரம் ஜெபித்து மன்னருக்கு திருநீறு பூசியவுடன் நோயின் தாக்கமானது குறையத் துவங்கி மன்னரை முழுவதுமாக குணமடையச் செய்தார்.மன்னர் குணமான சிறிது நேரத்தில் சமணர்கள் வருகை தரவும் அவர்களுக்கு சைவத்தின் மீதும், சம்பந்தர் மீதும் இருந்த வெறுப்பு மற்றும் விரோதத்தினால் அவர் குணமானதை மந்திர, தந்திர விஷயம் என்று கூறினர். ஆனால் திருஞானசம்பந்தரோ சிகையில் எவ்விதமான சினமும் இன்றி இதில் எவ்விதமான தந்திரமும் இல்லை என்று கூறினார்.

திருஞான சம்பந்தரின் கூற்றுக்கு செவி சாய்க்காத சமணர்கள் தங்களோடு வாதமிட அழைப்பு விடுக்கின்றனர். அனல்வாதம், புனல்வாதம் என்ற இருவாத முறைகளின் முறையே மந்திரம் ஓதப்பட்ட ஏடுகளை தீயிலும், நீரிலும் இட்டாலும் எந்த ஏடு எரியாமலும், மூழ்காமலும் நிற்கிறதோ அவர்கள் வென்றதாக கருதப்படவேண்டும் என்பதே போட்டியின் நிபந்தனை ஆகும். சம்பந்தர் அவர்களுடன் போட்டியில் பங்கு கொண்டு அனைத்திலும் வெற்றியும் பெற்றார்.

வாதத்தில் தோற்ற சமணரையெல்லாம் மற்றும் அவர்களுக்கு உடன்பட்டவர் என அனைவரையும் கழுவிலேற்றி முறை செய்யுமாறு வேந்தர் ஆணையிட, அவ்வாணையின்படியே எண்ணாயிரம் சமணரைக் கழுவில் ஏற்றினார். திருநீறணிந்த பாண்டிய மன்னனுடன் பாண்டியமாதேவியாரையும், சம்பந்தரையும் அழைத்துச் சென்று ஆலவாய் அண்ணலைப் போற்றுதல் செய்தார்.

வேந்தரின் ஆணைப்படி குலச்சிறையார் காழியர்பெருமானைப் பாண்டியநாட்டுத் திருத்தலங்கள் பலவற்றுக்கும் அழைத்துச் சென்று இறுதியாக தம் சொந்த ஊரான மணமேற்குடிக்கும் எழுந்தருளச் செய்தார். அங்கு அருள் புரியும் ஜெகதீஸ்வரர் பெருமானின் ஆசி பெற்றார். சீர்காழி மன்னர் சோழநாட்டிற்குப் புறப்படத் திருவுள்ளம் பற்றியபோது அவரோடு கூடிச்செல்வதே குலச்சிறையாரின் ஆசையாக இருந்தது.

ஆனால் சிவபுரச் செல்வரோ குலச்சிறையாரை நோக்கி தாங்கள் இங்கிருந்து சிவநெறி போற்றியிருங்கள் என்று கூறினார். அவர் கூறிய கருத்தால் பாண்டிய நாட்டில் சிவநெறி விளங்குமாறு அரசகருமம் செய்து ஆலவாய் இறைவனின் திருவடியை சேர்ந்தார் குலச்சிறையார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக