Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 28 மே, 2020

உளவுத்துறை ரகசிய ரிப்போர்ட்; மீண்டும் ஒரு புல்வாமா? பதறவைத்த 40 கிலோ வெடிபொருள்!

 புல்வாமா தாக்குதல்

உளவுத்துறை அளித்த தகவலின்படி கடந்த ஆண்டு புல்வாமாவில் நடந்த மிகப்பெரிய வெடிகுண்டு தாக்குதல் போன்ற சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் வெள்ளை நிற ஹூண்டாய் சாண்ட்ரோ காரில் போலி பதிவெண்ணுடன் வெடிபொருட்கள் கொண்டு வரப்படுவதாக உளவுத்துறை தகவல் தெரிவித்தது. இதன்மூலம் மிகப்பெரிய கார் வெடிகுண்டு தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பது தெரியவந்தது. உளவுத்துறை தகவலால் உஷாரான பாதுகாப்பு படையினர் நேற்று இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது புல்வாமா பகுதியில் சந்தேகத்திற்குரிய கார் ஒன்று வந்துள்ளது.

அதனை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் சென்றுள்ளது. உடனே பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் காரை நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். சம்பந்தப்பட்ட காரில் சுமார் 40 கிலோ வெடிபொருட்கள் இருந்துள்ளன.

உடனே வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அனைத்து வெடிகுண்டுகளும் செயலிழக்க செய்யப்பட்டன. முன்னதாக அந்தப் பகுதியை சுற்றியிருந்த வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து இரவு முழுவதும் கார் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வெடிகுண்டுகள் அழிக்கப்பட்டன.

சரியான சமயத்தில் வெடிகுண்டுகள் பிடிபடாமல் இருந்திருந்தால் மிகப்பெரிய விபரீதம் நிகழ்ந்திருக்கும் என்று டிஜிபி தில்பக் சிங் தெரிவித்துள்ளார். இந்த ஆபரேஷனில் ராணுவம், காவல்துறை, துணை ராணுவம் உள்ளிட்டோர் கூட்டாக ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி அதே புல்வாமா பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தினர். இதில் 40க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து பாகிஸ்தானிற்குள் நுழைந்து இந்திய ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.

ஆனால் அதன்பிறகும் பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் குறையவில்லை. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 30 பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்தனர். அதேசமயம் 38 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குறிப்பாக நடப்பு மாதத்தின் தொடக்கத்தில் புல்வாமாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த கமாண்டர் ரியாஸ் நைகூ என்ற பயங்கரவாதி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக