நிதி நெருக்கடியில் தவித்து வரும் தொழில் நிறுவனங்களை மீட்க வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக நீட்டித்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என தொழில் அமைப்பு பிரதிநிதிகள் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முழுக்க கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், உலகம் முழுக்க பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் பெரும் நிதி நெருக்கடியில் தவித்து வருகின்றன.
இந்தியாவிலும் ஊரடங்கு காரணமாக பெரும்பாலான தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் இயங்காமல் இருந்து வந்தன. கடந்த 4ஆம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டன. இதனால் தற்போது தொழில்சாலைகள் குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு இயங்கி வருகின்றன.
மத்திய தொழிலாளா் துறை அமைச்சா் சந்தோஷ் கங்வாா் காணொளி காட்சி மூலம் 12 தொழில்துறை அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
ஊரடங்கு முடிந்த பிறகு தொழிற்சாலைகளை இயக்குவது தொடர்பாகவும், மேலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பாகவும் அந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தொழிலாளா் சட்டத்தில் சற்று விலக்கு அளிக்க வேண்டும் என அந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், தொழிலாளா்களுக்கு கொடுக்கப்படும் குறைந்தபட்ச ஊதியம், போனஸ் தொகை,மற்ற நிலுவைத்தொகை வழங்குவதில் எந்த மாற்றமும் இருக்காது என உறுதியளிக்கப்பட்டது. ஆனால், நிதி நெருக்கடியில் தவித்து வரும் தொழில் நிறுவனங்களை மீட்க வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக நீட்டித்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என தொழில் அமைப்பு பிரதிநிதிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், 33 சதவீதத தொழிலாளர்களுக்கு பதிலாக 50 சதவீத ஊழியா்களுடன் தொழிற்சாலைகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக