Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 25 மே, 2020

சுவாசக் கோளாறு நீக்கும் திருக்கூர் மகாதேவர் கோவில்

ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக் கோளாறு நோய்களை நீக்கியருளும் தலமாக, திருக்கூர் என்ற இடத்தில் அமைந்திருக்கும் மகாதேவர் கோவில் உள்ளது. திருக்கூர் திருத்தலமானது, கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் இருக்கிறது.

தல வரலாறு :

மாடு மேய்க்கும் பணியைச் செய்து கொண்டிருந்த ஒருவன், அந்த ஊரில் இருந்த நம்பூதிரி ஒருவரின் மாடுகளைத் தினமும் காலையில் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வதும், மேய்ச்சலுக்குப் பின்பு மாலையில் அவைகளைத் திரும்பக் கொண்டு வந்து ஒப்படைப்பதுமாக இருந்தான்.

ஒருநாள், அவன் மேய்ச்சலுக்குக் கொண்டு சென்ற மாடுகளில், ஒரு பசு மட்டும் காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தான். அந்தப் பசு அங்கிருந்த மலைப் பகுதிக்கு வழி தவறிச் சென்றிருக்கும் என்று நினைத்த அந்தப் பணியாளன், மலைப்பகுதிக்குச் சென்றான். அந்த மலைப்பகுதியில் ஒரு குகை காணப்பட்டது. அந்த குகைக்குள் சென்ற பணியாளன், அங்கு பசு இருப்பதைக் கண்டு நிம்மதியடைந்தான்.

பசு கிடைத்ததும் மகிழ்ச்சியடைந்த பணியாளன், அந்த பசுவை மலையில் இருந்து கீழே அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக, அதன் அருகே சென்றான். அப்போது பசு மாயமாக மறைந்ததைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தான். அதே சமயம் பசு நின்று கொண்டிருந்த இடத்தில் ஒரு பெரிய சிவலிங்கம் இருந்தது. என்ன ஏதென்று அறியாமல் விழிபிதுங்கிய பணியாளன், ஓட்டமும், நடையுமாக மலையை விட்டு இறங்கினான். பின்னர் தான் மலை அடிவாரத்தில் மேய்ச்சலுக்காக விட்டுச் சென்றிருந்த மற்ற மாடுகளை ஓட்டிக்கொண்டு ஊருக்குள் திரும்பிச் சென்றான்.

அங்கு மாடுகளின் உரிமையாளரான நம்பூதிரியிடம், பசு காணாமல் போனதில் இருந்து, மலையின் மேல் பகுதியில் அது மறைந்து, சிவலிங்கம் தோன்றியவரை சொல்லி முடித்தான். அதைக் கேட்டு ஆச்சரியமடைந்த நம்பூதிரி, தன்னுடன் சிலரை அழைத்துக் கொண்டு, பணியாளன் குறிப்பிட்ட அந்த மலைப் பகுதிக்குச் சென்றார்.

மாடு மேய்ப்பவன் தெரிவித்தபடி, மலைக்குகையில் சிவலிங்கம் இருப்பதைக் கண்டு அனைவரும் மகிழ்ந்தனர். சுயம்பு வடிவில் தோன்றியிருந்த அந்த லிங்கத்திற்கு பூஜை செய்து வணங்கினர். அப்போது நம் பூதிரியின் மனக்கண்ணில், இங்குள்ள சுயம்பு லிங்கம், அக்னி தேவனால் வணங்கப்பட்டது என்பதும், இந்த லிங்கம், பஞ்சபூதங்களில் அக்னி வடிவிலானது என்பதும் தோன்றி மறைந்தது. இதையடுத்து அந்த அக்னி லிங்கத்திற்கு, நம்பூதிரி சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். தொடர்ந்து சில காலங்களில் கோவிலுக்கு தேவையான கட்டுமானப் பணிகளையும் மேற்கொண்டார். திருப்பணிகளுக்குப் பிறகு இந்த ஆலயம் பொதுமக்கள் அனைவரும் வந்து வழிபட்டுச் செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது என்பதாக கோவில் தல வரலாறு சொல்லப்படுகிறது.

ஆலய அமைப்பு :

உயரமான மலைப்பகுதியில், 30 அடி நீளமும் 12 அடி அகலமும் கொண்டு இயற்கையாக அமைந்த குகைப் பகுதியில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. குகையின் தெற்கு திசையில், கடைசிப் பகுதியில் வடக்கு நோக்கிய கருவறையில், கிழக்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்கம் அமைந்திருக்கிறது. இதனால், இக்கோவிலில் வழிபடும் பக்தர்கள், சிவலிங்கத்தின் வலதுபுறத்தை மட்டுமே பார்வையிட்டு வழிபட முடியும். இங்கிருக்கும் இறைவன் ‘திருக்கூர் மகாதேவர்’ என்றழைக்கப் பெறுகிறார்.

இறைவன் சன்னிதிக்கு மேற்குச் சுவரில் கணபதி சிலை செதுக்கப்பட்டிருக்கிறது. ஆலயத்தின் வளாகத்தில் சாஸ்தா, அந்திமகாகாளன், பத்திரகாளி, பகவதி, சாமுண்டி உள்ளிட்ட தெய்வங்களும் வழிபாட்டிற்காக இடம் பெற்றிருக்கின்றன. கிழக்குப் பகுதியில் துவாரபாலகர்கள் இருக்கின்றனர். முகப்பு மண்டபத்தில் வைஷ்ணவ சைதன்ய மரபிலான சாலக்கிராமம் இடம் பெற்றிருக்கிறது.

மலைப்பாறையின் மேல் பசுமையாக இருக்கும் குளம் ஒன்றும் அமைந்திருக்கிறது. 1966-ம் ஆண்டில் இருந்து கேரள மாநிலத் தொல்லியல் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இக்கோவில் இருந்து வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

வழிபாடுகள் :

சிவராத்திரி, நவராத்திரி, திருவாதிரை, பிரதோஷ நாட்கள் மற்றும் சிவபெருமானுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இக்கோவிலில் 16 கற்தூண்களுடன் அமைக்கப்பெற்றிருக்கும் நமஸ்கார மண்டபத்தில் நவராத்திரி விழாவின் போது, சரஸ்வதி வழிபாடு மற்றும் சாக்கியார் கூத்து போன்றவை நடத்தப்பெறுகின்றன.

இக்குகைக் கோவிலில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இங்கு மாலை நேர பூஜையின் போது, சிவலிங்கத்திற்கு 108 வில்வ இலைகள் சமர்ப்பிக்கப்பட்டு அர்ச்சனை செய்யப்படுகிறது.

கயிறு வழிபாடு :

சுவாசக் கோளாறு, ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோய் பாதிப்புடையவர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து, கயிறு வழிபாடு செய்து இறைவனை வழிபட்டு நலம் பெறலாம் என்கின்றனர். சுவாச நோய்ப் பாதிப்புடையவர்கள் சிலர் இங்கிருக்கும் இறைவன் உயரத்துக்குச் சமமாகத் தாம்புக்கயிறு வாங்கிக் கொடுத்து வழிபடுகின்றனர். சிலர், அவர்களது எடைக்குச் சமமான தாம்புக்கயிறைத் துலாபாரம் போன்று எடை போட்டு வழங்கி இறைவனை வழிபட்டுத் தங்கள் சுவாச நோய் நீங்க வேண்டிக் கொள்கின்றனர். கயிறு வழிபாட்டில் பெறப்படும் கயிறுகள் அனைத்தும் கோவில் மண்டபத்தில் தொங்கவிடப் படுகின்றன.

சிறுவர்களுக்குச் சுவாசக் கோளாறுகள் இருப்பின் கருக ஹோமம் அல்லது இறைவனுக்குப் பின்னால் எண்ணெய் விளக்கு இடுதல் போன்ற சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

அமைவிடம் :

கேரள மாநிலம், திருச்சூர் நகரில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் திருக்கூர் எனுமிடத்தில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல திருச்சூர் நகரில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக