Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 25 மே, 2020

பதினெட்டாம் நாள் போர் தொடக்கம்.!

தர்மர், கிருஷ்ணரிடம் இன்றைய போரில் கௌரவர் சேனை அணிவகுக்கப்பட்டிருக்கும் விதத்தையும், சல்லியன் அதற்குத் தலைவனாக நிற்பதையும் பார்த்தால் நாம் தோற்றுவிடுவோமோ என்று பய உணர்வுடன் கிருஷ்ணரைப் பார்த்துக் கேட்டான். 

அர்ஜூனன், பீமன் முதலியவர்களும் அதே சந்தேகம் நிறைந்த முகத்தோடு கிருஷ்ணரைப் பார்த்தார்கள். பாண்டவர்களின் பய உணர்வை அறிந்த கிருஷ்ணர் அவர்களிடம், கவலைப்படாதீர்கள். நான் சொல்கின்ற முறைகளை அனுசரித்து இன்றைய போர் நடந்தால் வெற்றி உங்களுக்குத்தான். 

சல்லியனின் வலிமைக்கு யாரும் இணையில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால் தர்மரும், பீமனும் சேர்ந்து போரிட்டால் சல்லியனைக்கூட வென்றுவிடலாம். அர்ஜூனன் அசுவத்தாமனை எதிர்த்துப் போரிடவேண்டும். சகாதேவன் சகுனியோடு போர் செய்து அவனைத் கொல்ல வேண்டும். நகுலன் கர்ணனுடைய புதல்வர்களை எதிர்த்துப் போரிடவேண்டும்.

இந்த முறை மாறாமல் நீங்கள் கௌரவ சேனையை எதிர்த்துப் போர் புரிந்தால் நிச்சயம் உங்களுக்குத்தான் வெற்றி என்று கூறி தர்மரையும், பீமனையும், சல்லியனை எதிர்ப்பதற்கு அனுப்பிவிட்டு, கிருஷ்ணர் அர்ஜூனனுடைய தேரில் ஏறிக் கொண்டார். 

கிருஷ்ணர் தேரை, அசுவத்தாமன் இருந்த திசையை நோக்கிச் செலுத்தினார். பீமனும் தர்மரும், சல்லியன் இருந்த பக்கமாக அவர்களின் தேர்களைச் செலுத்திக் கொண்டு சென்றனர். சகாதேவன் சகுனியை நோக்கியும், நகுலன் கர்ணனின் புதல்வர்களை நோக்கியும் சென்றனர். 

பெரிய சப்தங்களுடன் பதினெட்டாம் நாள் போர் தொடங்கியது. இறுதிப் போராட்டத்தில் வெற்றி தோல்வியின் இறுதி முடிவை நெருங்கிக் கொண்டிருந்தது. தர்மரும் சல்லியனும் நேருக்கு நேர் எதிர்த்துப் போர் புரிந்தனர்.

சல்லியனுடைய சங்கநாதம் விண்ணதிரச் செய்தது. அதேபோல, தர்மருடைய சங்கநாதம் திசையதிரச் செய்தது. சல்லியன், தர்மருக்கு தேரோட்டிக் கொண்டிருந்த சாரதியின் தலையை அறுத்து வீழ்த்தினான். தேரின் மேலிருந்த குடையின் மேற்பகுதியையும் உடைத்தெறிந்தான். 

இவற்றையெல்லாம் பார்த்து அருகில் போர் செய்து கொண்டிருந்த பீமன் தர்மருக்கு உதவியாக வந்து சல்லியனை எதிர்த்தான். பீமன் வருவதை கண்ட தர்மர், நம்மைக் காட்டிலும் சல்லியனை எதிர்ப்பதற்கு பீமனே தகுதி வாய்ந்தவன் என்று எண்ணிக் கொண்டு ஒதுங்கிக் நின்றான். இவர்களுக்கிடையே நிகழ்ந்த கடும்போரை தர்மர் பார்த்துக் கொண்டிருந்தார்.

பீமன், சல்லியனுடைய தேரை கதாயுதத்தால் அடித்து நொறுக்கினான். சல்லியன், இந்த திடீர் தாக்குதலை எதிர்த்து சமாளிக்க முடியாமல் திணறினான். சல்லியனுடைய தேர்ப்பாகன், குதிரைகள், தேர்ச் சக்கரங்கள் ஆகிய எல்லாவற்றையும் பீமன் கதாயுதத்தால் தாக்கி நொறுங்கினான்.

இதனால் கோபமடைந்த சல்லியன், கதாயுதத்தைவிடப் பெரிய கோமரம் என்னும் ஆயுதத்தை ஓங்கிக்கொண்டு பீமன் மேல் பாய்ந்தான். பீமன் சல்லியனை எதிர்ப்பதற்குள் சல்லியனுடைய கோமரம் பீமன் நெற்றியில் விழுந்தது. அந்த பலமான அடி பீமனை ஒருகணம் பொறிகலங்கச் செய்தது. 

ஆனால், பீமன் மறுகணமே தன்னைச் சமாளித்துக் கொண்டு மேலும் போரில் ஈடுபட்டான். சல்லியனும், பீமனும் போர் செய்தனர். இறுதி நிலையில் இவருக்குத் தான் வெற்றி, இவருக்குத் தான் தோல்வி என்று கூற முடியாதபடி கடுமையாக போர் முற்றியிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக