Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 25 மே, 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 028

சிறப்புலி நாயனார் !!

அழகிய நெல்மணிகளும், பொன்மணிகளும் பூத்துக் குழுங்கிய பொன்னி நன்னாட்டில் திருவாக்கூர் என்னும் ஊர் அமைந்துள்ளது. அவ்வூரில் அழகிய பூக்களால் நிறைந்த சோலைகளும், வான்நெடுகிலும் தொடக்கூடிய மேகங்கள் மோதுவதால் உருவாகும் இடியை போன்று மாபெரும் ஓசையுடன் கூடிய மறையொலி முழக்கம் ஊரெங்கும் இருந்த வண்ணம் இருந்தது. வேள்வியினால் உருவான புகையானது தேவர்கள் வாழும் தேவலோகம் என்னும் விண்ணுலகிலும், மானுடர்கள் வாழும் மண்ணுலகிலும் பரவி எம்பெருமானின் திருநாமத்தை எந்நேரமும் ஒலித்த வண்ணமாக இருக்கக்கூடிய திருவாக்கூர் தலத்தில் அந்தணர் பலர் வாழும் குலத்தில் தோன்றியவர் சிறப்புலி.

இவர் இளமை பருவம் முதலே திருவாக்கூர் தலத்தில் வீற்றிருக்கும் ஆடல் மன்னனான திருவெண்ணீற்றன்பர்களிடத்தும் எல்லையில்லா பேரன்பு கொண்டிருந்தார். சிவனடியார்கள் மேல் பேரன்புடையவராக விளங்கினார். அடியார்களை எதிர்கொண்டு வணங்கி இன்சொல் கூறித் திருவமுது அளிப்பார். அவர்கள் விரும்புவதை குறைவறக் கொடுத்து மகிழ்வார். ஒரு நாளைக்கு எத்தனை சிவனடியார்கள் வந்தாலும் அவர்கள் அனைவரையும் சந்தித்து அவர்கள் மனம் கோணாதவாறு அமுது படைத்து வந்தார் சிறப்புலியார். சிறப்புலியாருக்கு தனது வாழ்நாளில் ஒரு நாளில் ஆயிரம் பேருக்கு அறுசுவை உணவு அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

அதற்கான ஏற்பாடுகளையும் முன்னின்று நடத்தி அறுசுவை உணவையும் தயார் செய்து அதற்காக அனைத்து அடியார்களையும் அழைத்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த அடியார் கூட்டம் வந்த போதிலும் ஒரு அடியார் குறையவே சிறப்புலியார் மிகுந்த மனவேதனை அடைந்தார். பின்பு உள்ளம் உருக இத்தலத்து இறைவனை எண்ணிக் கொண்டு இருந்தார். அன்பிற்கு கட்டுப்பட்ட எம்பெருமான் அடியாரின் மன வேதனையை உணர்ந்து கொண்டார். உடனே எம்பெருமான் தானே சிவனடியார் வேடம் கொண்டு சிறப்புலியார் இல்லத்திற்கு வருகை தந்தார். அந்த அடியாரை கண்டதும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த சிறப்புலியார் ஆயிரம் பேருக்கும் அமுது படைத்து மகிழ்ச்சி கொண்டார்.

பின் சிறப்புலியாருக்கு இறைவன் காட்சி தந்தார். அக்கணத்தில் இறைவரின் திருவுருவத்தை கண்டதும் சிறப்புலியார் இருகரம் குப்பி எம்பெருமானை வணங்கினார். எம்பெருமான் சிறப்புலியாரை நோக்கி இவ்வுலகில் வாழ்ந்து பின் திருவடியை வந்தடைவாயாக என்று அருள் மொழிந்து அவ்விடம் விட்டு மறைந்து சென்றார். எம்பெருமான் கூறிய அருள் மொழியை போன்று கொன்றை வேணியர்க்குத் திருத்தொண்டுகள் பல புரிந்து வந்த இச்சிவனருட் செல்வர், நீண்ட காலம் நிலவுலகில் வாழ்ந்தார். தனது கர்மா பலன்கள் யாவும் முடித்த பின்பு எம்பெருமானின் திருவடி நிழலை அடைந்து வாழும் நிலையான பேரருளினைப் பெற்றுப் புகழுற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக