Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 13 மே, 2020

பதினான்காம் நாள் போர்..! கிருஷ்ணரின் இனிய சங்க நாதம்..!

 குதிரைகளுக்கு தண்ணீர் காட்டிய பின்பு, கிருஷ்ணரும், அர்ஜூனனும் குளத்தில் இறங்கி போர் செய்த களைப்பும் வியர்வையும் தீரும்படியாக கைகால் முகங்கழுவிக் கொண்டு தண்ணீர் பருகினர். அங்கேயே குதிரைகளை விட்டுச் சென்று சிறிது நேரம் களைப்பை போக்கி கொள்ள ஓய்வு எடுத்தார்கள். இவர்கள் ஓய்வெடுப்பதை போர்க்களத்து ஒற்றர்கள் துரியோதனனிடம் சென்று கூறிவிட்டார்கள். இதைக் கேட்ட துரியோதனன், துரோணரிடம் சென்று கோபமாக நானே சென்று அர்ஜூனனிடம் போர் புரிந்து அவனை கொல்லப்போகிறேன் என்று கூறினான். துரோணர், தன்னிடம் இருந்த அருமையான கவசத்தை துரியோதனனுக்கு வழங்கினான். இதை மார்பிலும் உடலிலுமாக அணிந்து கொள்கின்றவர்களுக்கு காயங்கள் ஏற்படாது என்று கூறினார்.

🌟 கவசம் அணிந்து கொண்ட துரியோதனன் அர்ஜூனனை தேடிச் சென்றான். துரியோதனன் களத்தில் வந்து நிற்பதை கண்டு அர்ஜூனனுக்கு வியப்பாக இருந்தது. துரியோதனன் தைரியத்துடன் போர் புரிய வந்திருக்கிறானா! இல்லையா என்ற சந்தேகத்தை கிருஷ்ணரிடம் அர்ஜூனன் கேட்டான். துரோணரால் அளிக்கப்பட்ட தெய்வீக சக்தி வாய்ந்த கவசமொன்று அவன் உடலை மூடியிருக்கிறது. அந்த தைரியத்தினால்தான் அவன் உன்னுடன் போருக்கு வந்திருக்கிறான். நீ முதலில் அந்த கவசத்தைப் பிளந்து விடு! என்று கிருஷ்ணர் கூறினார். துரியோதனனோடு கிருபன், அசுவத்தாமன், சகுனி முதலியவர்கள் அர்ஜூனனை எதிர்த்தார்கள். முதலில் அவர்களை முறியடித்து வீழ்த்திவிட்டு பின்பு துரியோதனனுடைய கவசத்தைப் பிளக்கும் முயற்சியில் அர்ஜூனன் இறங்கினான்.

🌟 ஆனால் கவசத்தில் மோதிய அம்புகள் அனைத்தும் முறிந்து கீழே விழுந்தன. இது அர்ஜுனனுக்கு ஏமாற்றத்தை அளித்தது. எப்படியாவது துரியோதனனுடைய கவசத்தைப் பிளந்துவிட வேண்டும் என்று அர்ஜுனன் ஒரு பெரிய வேலாயுதத்தை எடுத்து குறிவைத்து வீசினான். அர்ஜூனன் துரியோதனன் மேல் வேல் எறிவதைப் பார்த்த அசுவத்தாமன், திடீரென்று குறுக்கே இன்னொரு வேலை எறிந்து அதை தடுத்தான். இதை அறிந்த கிருஷ்ணர், அர்ஜூனனிடம் திரும்பவும் ஒரு வேலை கொடுத்து நான் சைகை காட்டும்போது துரியோதனனுடைய கவசத்தை குறி வைத்து எறிந்துவிடு என்று கூறினார்.

🌟 கிருஷ்ணர், தனது சங்கை எடுத்து யாவரையும் மயக்குகின்ற இனிய ஒலி உண்டாகுமாறு அதை ஊதினார். கிருஷ்ணருடைய அற்புதமான சங்க நாதத்தைக் கேட்டு அனைவரும் தம் நிலையை மறந்து நின்று கொண்டிருந்தனர். துரியோதனனும் அவனைச் சுற்றியிருந்த வீரர்கள் அனைவரும் அந்த இனிய சங்க நாதத்தில் தங்களை மறந்து நின்றனர். இதுதான் சமயமென்று கிருஷ்ணர் அர்ஜூனன் பக்கமாகத் திரும்பி அவனுக்கு சைகை காட்டினார். சைகையை அறிந்த அர்ஜூனன் துரியோதனனின் கவசத்தை குறிவைத்து வேலை எறிந்தான். அர்ஜூனன் எறிந்த வேல் துரியோதனனுடைய உடற்கவசத்தை இரு கூறாகப் பிளந்து கீழே தள்ளிவிட்டது. கவசம் கீழே விழுந்த பின்பு தான் ஏமாந்துவிட்டதை துரியோதனன் உணர்ந்தான்.

🌟 துரியோதனனுக்கு, கவசம் உடைந்து விழுந்தவுடன் மனதில் பயம் உண்டாயிற்று. இனி நாம் இங்கே நின்றால் அர்ஜூனன் தன்னை கொன்று விடுவான் என்று பயந்து அங்கிருந்து ஓடினான். அவனோடு நின்ற மற்ற அரசர்களும் அவனுடன் சென்று விட்டார்கள். போர்க்களத்தின் வேறோர் பகுதியிலிருந்த தர்மர், கிருஷ்ணர் ஊதிய சங்கின் ஒலியைக் கேட்டு பயந்துக்கொண்டார். அர்ஜூனனுக்கு ஆபத்து என்று எண்ணிக்கொண்டு தன் பக்கத்திலிருந்த சாத்தகி என்பவனை அழைத்து அவர்களுக்கு உதவி செய்ய அனுப்பி வைத்தார்.

🌟 அர்ஜூனன் இருக்கும் இடத்தை அடைவதற்குள் பலரை எதிர்த்து போராடினான். கிருதவன்மன், சலசந்தன் முதலியவர்களை வீழ்த்திவிட்டு சாத்தகி சென்றான். துரியோதனனுடைய தம்பிமார்கள் நான்கு பேர் சாத்தகியை எதிர்த்து வழி மறித்துக் கொண்டு போர் செய்தனர். அவர்களையும் சாத்தகி வீழ்த்தினான். பின்பு துரோணர் பெரும் படைகளுடன் சேர்ந்து சாத்தகியை வழிமறித்துக் கொண்டார். துரோணருக்கும் சாத்தகிக்கும் நீண்ட நேரம் போர் நிகழ்ந்தது. வெற்றியுமின்றி தோல்வியுமின்றி இருவருமே களைத்துப் போனார்கள். இருவர் கைகளும் ஓய்ந்துவிட்டன. துரோணர் போரை நிறுத்திச் சாத்தகிக்கு வழி விட்டார். சாத்தகி விரைவாகச் சென்று அர்ஜூனன் இருந்த இடத்தை அடைந்தான்.

🌟 பின்பு, தர்மர் பீமனை அர்ஜூனனுக்கு உதவியாக இருக்க அனுப்பி வைத்தார். துரோணருக்கும் பீமனுக்கும் கடுமையான போர் ஏற்பட்டது. பீமன் தன் தேரை விட்டு கீழே இறங்கி துரோணருடைய தேரை நோக்கிச் சென்று துரோணரது தேரை அப்படியே வாரித் தூக்கி எறிந்தான். துரோணருடைய தேர் தூள் தூளாக ஒடிந்தது. அதில் இருந்த தேரோட்டி கீழே வீழ்ந்து இறந்தான். கீழே விழுந்த துரோணர் தன் சுய நினைவை இழந்து விட்டார். இதனை பார்த்த துரியோதனன் படையைச் சேர்ந்த பூரி, அவந்தி ராஜன் முதலியவர்கள் உடனே ஆயுதமும் கையுமாக பீமனை வளைத்து கொண்டனர். பீமன் அவர்களையும் வென்று வீழ்த்தினான்.

🌟 பிறகு கர்ணனுக்கும், பீமனுக்கும் போர் நடந்தது. பீமன் கர்ணனின் தேரையும் தூக்கி எறிந்து ஒடித்து விட்டான். கர்ணன், பீமனிடம் தோற்றதை கண்ட துரியோதனன் தன்னுடைய தம்பிமார்களில் இரண்டு பேரை அழைத்து கொண்டு பீமனை எதிர்க்க வந்தான். துரியோதனன் சகோதரர்களில் ஒருவனான துன்முகன் பீமனை எதிர்க்க முயன்று மாண்டான். பிறகு துரியோதனனின் தம்பிமார்களில் இன்னும் ஆறுபேர் பீமனுடன் போர் செய்து மாண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக