Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 13 மே, 2020

உழைப்பின் பயன்

 ஒரு விவசாயிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். விவசாயிக்கு வயது அதிகமானதால் இறந்து போகும் நிலையில் இருந்தபோது, தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளுக்கு தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக்கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களில் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார்.

பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேண்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் சொல்லிய புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள். முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை.

எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது. இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும் என்று கடைசி மகனின் நிலத்தையும் தோண்டினார்கள்.

மறுபடியும் ஏமாற்றமே! மூவரும் சேர்ந்து தோண்டியது வீணாக வேண்டாம் என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்து நீர் பாய்ச்சி உரம் போட்டார்கள். ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம். இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள்.

நீதி :

உழைப்பினால் வரும் பணம் அதிஷ்டம் தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக