Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 13 மே, 2020

அனுமன் விபீஷணனை பற்றிக் கூறுதல்!

இராமர் அனுமனை நோக்கி, உனது கருத்தை கூறுவாயாக எனக் கேட்டார். அனுமன் இராமரை வணங்கி, எனது கருத்துப்படி விபீஷணனை தீயவன் என நான் கருதவில்லை. 

இங்கு உள்ள அனைவரும் விபீஷணனை நம்ப வேண்டாம் எனக் கூறினார்கள். இராவணன் அழிவது நிச்சயம் என்பதை உணர்ந்து தான் விபீஷணன் தங்களை அடைக்கலம் தேடி வந்துள்ளான். 

நம்மிடம் அடைக்கலம் என்று தேடி வருபவர்கள் நமக்கு தீங்கு செய்வார்களா? நான் இராவணனின் அரசவையில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டபோது, இராவணன் இவனை கொல்லுங்கள் என ஆணையிட்டான். 

அப்போது விபீஷணன், தூதர்களை கொல்வது பாவச் செயலாகும். இது நம் குலத்திற்கு இழிவாகும் எனக் கூறினான். நான் இலங்கையில் இரவு நேரத்தில் சீதையை தேடிக் கொண்டு போகும்போது விபீஷணனின் மாளிகைக்குச் சென்றேன். 

அரக்கர்கள் பலர் மாளிகையில் மதுப்பானங்கள் நிரம்பிக் கிடந்தன. ஆனால் விபீஷணனின் மாளிகையில் பூஜைக்குரிய பொருட்கள் நிரம்பிக் கிடந்தன. விபீஷணன் அரக்கர் குலத்தில் பிறந்திருந்தாலும் அவன் நற்குணத்தில் சிறந்தவன்.

அன்னை சீதை அங்கு பாதுகாப்பாக இருக்கிறார் என்றால் அதற்கு விபீஷணனின் மகள் திரிசடை தான் காரணம். தந்தையை போல திரிசடையும் நற்குணமுடையவள். அதனால் தான் அவள் அன்னைக்கு உறுதுணையாக உள்ளாள். 

இராவணன் தங்களால் அழியக் கூடியவன் என்பதை நன்றாக அறிந்து தான் தங்களை சரணடைய வந்துள்ளான். பகைவனிடம் இருந்து பிரிந்து வந்துள்ள விபீஷணனை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் பிறர் நம்மை ஏளனமாக அல்லவா நினைப்பார்கள். 

விபீஷணனை நாம் ஏற்றுக் கொள்வதன் மூலம் அரக்கர்களின் மாய வேலைகள் பற்றி நாம் தெரிந்துக் கொள்ளலாம். அனுமன் சொன்னதை கேட்ட இராமர், நல்லது சொன்னாய் என அனுமனை பாராட்டினார். பிறகு இராமர் அனைவரையும் பார்த்து, அனுமன் சொல்வது தான் சரி. 

விபீஷணன் நம்மை நோக்கி வந்த காலமும் நமக்கு ஏற்ற காலம் தான். நம்மிடம் அடைக்கலம் தேடி வருபவர்களை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

இந்த தருணத்தில் சில வரலாற்றைக் கூறுகிறேன். சிபிச் சக்ரவர்த்தியின் புகழ் தேவலோகத்தை எட்டியது. தேவேந்திரன் சிபியைச் சோதித்துப் பார்க்க அக்னி பகவானை அழைத்துக்கொண்டு பூமிக்கு வந்தான். இந்திரன் ஒரு கழுகு வடிவத்திலும், அக்னி ஒரு புறா வடிவத்திலும் வந்து சேர்ந்தார்கள். 

புறாவைத் துரத்திக்கொண்டு கழுகு பறந்து வந்து சிபிச் சக்ரவர்த்தியின் அரண்மனையில் விழுந்தது. அந்த புறாவை கவ்வி கொண்டு போக முயன்றது கழுகு. இதைப் பார்த்த சிபி அதைத் தடுத்தான். 

கழுகு, அரசனே! அந்தப் புறா என்னுடைய பசியைத் தீர்க்கவேண்டிய இரையாகும். புறாவைக் கீழே விடு என்றது. அதற்கு சிபி கழுகிடம், உனக்கு என்ன வேண்டுமோ கேள். அதை நான் உனக்குத் தருகிறேன். ஆனால் புறாவை விட்டுவிடு என்று கூறினார்.

அரசே! புறாவின் எடையளவு மாமிசம் எனக்கு வேண்டும். அது மனித மாமிசமாக இருந்தாலும் பரவாயில்லை என்றது கழுகு. அதற்கு ஒப்புக் கொண்ட சிபி, உனக்குத் தேவையானது புறாவின் எடையளவு மாமிசம் தானே! அதை நான் என் உடலிலிருந்தே வெட்டித் தருகிறேன் என்று கழுகிடம் கூறினார். 

ஒரு தராசின் ஒரு தட்டில் சிபி அந்தப் புறாவை வைத்து மறு தட்டில் தன் உடலிலிருந்து சிறு பகுதியைச் செதுக்கி எடுத்து வைத்தான். புறா அமர்ந்த தட்டு இறங்கவில்லை. எவ்வளவு வெட்டி வைத்தாலும் புறாவின் தட்டுக்குச் சமமாக முடியவில்லை. 

கடைசியில் சிபி கழுகைப் பார்த்து, நானே தட்டில் ஏறி அமர்ந்து கொள்கிறேன் என்று கூறிவிட்டுத் தட்டில் ஏறி அமர்ந்தான். உடனே புறா இருந்த தட்டு சமநிலையில் இறங்கிவிட்டது. 

உடனே கழுகு இந்திரனாகவும், புறா அக்னி தேவனாகவும் மாறினார்கள். உன்னுடைய கருணையையும் கொடைத் தன்மையையும் புரிந்துகொண்டோம் என்று வாழ்த்தி மறைந்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக