Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 28 மே, 2020

இராவணனின் படைகள்!...

மந்திர ஆலோசனையில் நடந்தவற்றை விபீஷணனின் மனைவி கேட்டுக் கொண்டு சீதையிடம் சென்று கூறினாள். சீதா! இராமனை வெல்ல இவ்வுலகில் எவரும் இல்லை. இராவணன் உன்னிடம் நாடகமாடி உள்ளான். இலங்கை நகரத்தின் போர் முழக்கங்கள் உனக்கு கேட்கிறதா! இல்லையா!. இராமன் போருக்கு ஆயத்தமாக இலங்கை நகரின் வாயிலில் நின்றுக் கொண்டு இருக்கிறான். அதனால் நீ கவலைக் கொள்ள வேண்டாம் எனக் கூறினாள். இராவணன் மந்திர ஆலோசனையில், இராவணனின் மாமனான மாலி எழுந்து, இராவணா! காம உணர்வு துன்பத்தைத்தான் தரும் என்பதை புரிந்துக் கொள்.

இலங்கைக்குள் புகுந்து நம் அரக்கர்களை அழித்து, நம் நகரை தீ வைத்த அனுமனின் கையில் என்ன ஆயுதம் தான் இருந்தது? சுக்ரீவன் உன்னுடன் போரிட்டு உன் கிரீடத்தில் இருந்த மணிகளைப் பறித்துச் சென்றபோது அவன் கையில் இருந்த ஆயுதம் தான் என்ன? உனக்கு இதிலிருந்து தப்பிக்க ஒரு வழி தான் உள்ளது. நீ சீதையை இராமனிடம் ஒப்படைத்துவிட்டு அவனிடம் சரணடைவது தான் நல்லது என்றான். மாலி சொன்னதை கேட்டு இராவணன் கடுங்கோபம் கொண்டான். இராவணன் மாலியிடம், என் வலிமை என்ன என்பது தெரியாமல் நீ பேசுகிறாய். நீ எனக்கு நல்ல வழியைக் காட்டவில்லை, பெரும் அழிவைத்தான் காட்டுகிறாய். நீ இதுபோன்ற அறிவுரைகள் கூறுவதாக இருந்தால், நீ பேசாமல் இருப்பது தான் நல்லது என்றான் கோபத்துடன்.

பிறகு இராவணன் தன் படைபலம் கொண்ட சேனைக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தான். இலங்கையின் கிழக்குதிசை வாயிலுக்கு படைத்தலைவனுடன் இருநூறு வெள்ளம் ஆயுதம் தாங்கிய அரக்கர் படையை அனுப்பி, அங்கு தயார் நிலையில் நிற்கும் வானரப் படை தளபதி நீலனோடு போரிடுவதற்கு அனுப்பி வைத்தான். இராவணன் தனது மகன் மகோதரனை அழைத்து, இருநூறு வெள்ளம் படையுடன் சென்று, தென் திசை வாயிலில் தயாராக இருக்கும் அங்கதனுடன் போரிடத் தயாராகுமாறு அனுப்பினான்.

பிறகு இராவணன் இந்திரஜித்தை அழைத்து, மகனே! நீ இருநூறு வெள்ளம் சேனையுடன் மேற்கு வாயிலுக்குச் சென்று அங்கு போருக்குத் தயார் நிலையில் நிற்கும், நம் நகருக்கு பேரழிவை செய்த அந்த அனுமனிடம் போர் புரிய தயாராக இரு என்றான். அடுத்து இராவணன் விரூபாட்சா! நீ நம் சேனைகளோடும், அமைச்சர்களோடும், இலங்கை நகரத்தின் காவல் பொறுப்பை ஏற்றுக்கொள் என்றான். நான் யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை என இருநூறு வெள்ளம் படைகளுடன் வடக்கு வாயிலுக்குச் சென்று அந்த இராமனோடும், இலட்சுமணனோடும் போரிடத் தயாராக இருப்பேன் என்று நகரின் பாதுகாப்பையும், படைகளின் அணிவகுப்பையும் நிர்ணயித்தான்.

நான்கு புறங்களில் நிற்கும் இராம இலட்சுமணர் மற்றும் வானர படைகள், இராவணனின் உத்தரவின்படி நிற்கும் அரக்கர் படைகள் பற்றி சிறு தொகுப்பு :

இராம இலட்சுமணர் வானர படைகள் :

மேற்கு திசை - அனுமன் - பதினேழு வெள்ளம் வானர படை

கிழக்கு திசை - நீலன் - பதினேழு வெள்ளம் வானர படை

தெற்கு திசை - அங்கதன் - பதினேழு வெள்ளம் வானர படை

வடக்கு திசை - இராம இலட்சுமணர் - பதினேழு வெள்ளம் வானர படை

விபீஷணன் - அரக்கர்களை கண்காணிக்கும் பணி

இராவணனின் படை :

மேற்கு திசை - இந்திரஜித் - இருநூறு வெள்ளம் அரக்க சேனை

கிழக்கு திசை - படைத்தலைவன் - இருநூறு வெள்ளம் அரக்க சேனை

தெற்கு திசை - மகோதரன் - இருநூறு வெள்ளம் அரக்க சேனை

வடக்கு திசை - இராவணன் - இருநூறு வெள்ளம் அரக்க சேனை

விரூபாட்சன் - நகர காவல் பொறுப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக