Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 14 மே, 2020

பதினான்காம் நாள்.! இரவில் போர் முடிவு..!

துரியோதனனின், உடன் பிறந்தவர்களில் நற்பண்புகளை கொண்ட விகர்ணன் பீமனோடு போருக்கு வந்தான். விகர்ணனின் உள்ளத்தையும், நற்பண்புகளையும் பீமன் ஏற்கெனவே அறிந்ததால் அவனோடு போர் செய்வதற்கு தயங்கினான். 

ஆனால் விகர்ணன் பீமனை போர் புரிய வற்புறுத்தி அழைத்தான். என் அண்ணனும் அவனைச் சேர்ந்தவர்களும் தீயவர்களாக இருக்கலாம். ஆனால் நான் உண்ட சோற்றுக்கு கடன் கழித்தாக வேண்டும். அதற்காகத்தான் உங்களுடன் போர்செய்கிறேன் என்று விகர்ணன் கூறினான். 

பிறகு பீமனுக்கும், விகர்ணனுக்கும் நடந்த போரில் விகர்ணன் உயிர் இழந்தான். விகர்ணனை தன் கையாலேயே கொல்ல நேர்ந்ததற்காக பீமன் வருந்தினான். இப்பொழுது அர்ஜூனன், சாத்தகி, பீமன் ஆகியோர் ஒன்று சேர்ந்து கொண்டனர். இவர்கள் ஜெயத்திரதனை நெருங்குவதைப் பார்த்த கௌரவர்கள் திகைத்தனர்.

துரியோதனன், ஜெயத்திரதனை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தரையில் சுரங்கம் மாதிரி ஒரு பள்ளம் உண்டாக்கி ஜெயத்திரதனை அங்கு இறங்கச் சொல்லி மறைத்து வைத்தான். 

பிறகு ஜெயத்திரதன் இருந்த இடத்தை நெருங்கிய அர்ஜூனன் அவன் அங்கு இல்லாததை பார்த்தவுடன் ஏமாற்றம் அடைந்தான். கிருஷ்ணர், இங்கு நடக்கும் சூழ்ச்சியை அறிந்து யோசித்தார். அருகிலுள்ள ஏதோ ஓர் இடத்தில் ஜெயத்திரதனை எதிரிகள் மறைத்து வைத்திருக்கிறார்கள் என்ற உண்மை கிருஷ்ணருக்கு புரிந்துவிட்டது. 

கிருஷ்ணர் தன் வலது கையிலிருந்த சக்கராயுதத்தை வானத்தில் செலுத்தி கதிரவன் மறையும்படி ஒரு மாயம் செய்தார். கௌரவர்கள் இதைக் கண்டு உண்மையாகவே சூரியன் மறைந்து விட்டது என்று எண்ணி கொண்டு அர்ஜூனன் இனிமேல் போர் செய்யமாட்டான் என்று நினைத்தார்கள்.

இருட்டுவதற்குள் ஜெயத்திரதனை கொல்வதாகத்தானே சபதம் செய்தான்! இப்போது நன்றாக இருட்டி விட்டது! இனி அர்ஜூனன் தன் சபதம் நிறைவேற்றாததால் தீயில் விழுந்து உயிர்விட வேண்டியது தான்! என்று மகிழ்ச்சியாக இருந்தார்கள். 

பின்பு கௌரவர்கள் சுரங்கப்பள்ளத்திற்குள் மறைந்திருந்த ஜெயத்திரனை வெளியே கொண்டு வந்தனர். அவன் வெளியே வந்ததை பார்த்தவுடன் அர்ஜூனன் வில்லை வளைத்து ஜெயத்திரதன் கழுத்துக்கு குறிவைத்து அம்புகளை எய்தான். மறுகணம் ஜெயத்திரதன் தலை தனியாக அறுந்து கீழே விழுந்தது. 

கௌரவர்கள் கோபத்தோடு நிபந்தனையை மீறி இருட்டிய பிறகு ஜெயத்திரதனை எப்படி கொல்லலாம் என்று கத்திக் கொண்டே கிருஷ்ணருடைய தேரை நெருங்கினார்கள்.

கிருஷ்ணர், உடனே தன் சக்கரத்தை திருப்பி எடுத்து கையில் வைத்து கொண்டார். அதன்பின் வானில் சூரியன் பிரகாசித்தது. அதைக் கண்டு கௌரவர்கள் திகைத்து நின்றார்கள். ஜெயத்திரதனை கொல்வதற்காகவே, பாண்டவர்கள் கிருஷ்ணரின் உதவியோடு இந்த சூழ்ச்சியை செய்திருக்க வேண்டுமென்று துரியோதனன் அறிந்து கொண்டான். அதனால் துரியோதனன் பாண்டவர்களிடம், உங்கள் குலத்தையே பூண்டோடு அழித்துவிடுகிறேன். 

இதை என்னால் செய்ய முடியவில்லை என்றால் நானே இறந்து விடுகிறேன் என்று கோபமாக கூறிக்கொண்டே தன் படைகளை ஒன்று சேர்த்தான். பிறகு கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் போர் தொடங்கியது.

ஆயுதமில்லாமல் பீமனும் யுத்தம் செய்ய ஆரம்பித்தான். அர்ஜூனனுக்கும், கர்ணனுக்கும் நடந்த போரில் கர்ணன் தோற்றான். அந்தச் சமயத்தில் உண்மையாகவே சூரியன் அஸ்தமம் ஆனது. எனவே இருசாராரும் போரை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. 

ஆனால் துரியோதனனுக்கு இருட்டிய பின்பும் போர் வெறி தணியவில்லை. அதனால் கிருஷ்ணரிடம் சென்று, சற்று நேரத்துக்கு முன்பு நீங்கள் பகலை இரவாக மாற்றிச் சூழ்ச்சி செய்தீர்கள். இப்போது நான் இரவைப் பகலாக மாற்றி தொடர்ந்து நிறுத்தாமல் போர் செய்யப் போகிறேன் என்று கூறிக்கொண்டே துரியோதனன் நூற்றுக்கணக்கான தீப்பந்தங்களை ஏற்றிக் கொண்டு வருமாறு தன் வீரர்களுக்கு கட்டளையிட்டான். 

துரியோதனனின் கட்டளைப்படி அவன் படைகள் தீப்பந்தங்களை கொளுத்தி ஒளி உண்டாக்கின.

கௌரவ படைகள் தொடர்ந்து போரிடத் தயாராக நின்றனர். எதிரிகள் தீப்பந்தங்களின் உதவியால் இரவிலும் போரிட முற்படுவதை தர்மர் கண்டார். உடனே, தர்மரும் தன் படைகளுக்கு தீப்பந்தங்களை கொளுத்திக் கொண்டு தொடர்ந்து போரிடத் தயாராகுங்கள் என்று கட்டளையிட்டார். 

போர் வழக்கத்துக்கு முற்றிலும் மாறாக, இரவிலும் அன்று போர் நடந்தது. அர்ஜூனனுக்கும், கர்ணனுக்கும் தொடர்ந்து நடந்த போரில் கர்ணன் இருமுறை தோற்றான். கிருதவன்மனுக்கும், தர்மருக்கும் நடந்த போரில் தர்மர் வென்றார். 

வெற்றிகள் எல்லாம் பாண்டவர்கள் பக்கமே நிகழ்ந்ததை கண்டு துரியோதனன் மனம் வருந்தினான். துரியோதனனுக்கு உதவி செய்வதற்காக வந்திருந்த அலாயுதன் என்னும் அரக்கன் பீமனை எதிர்ப்பதற்காக தனது படைகளோடு புறப்பட்டான்.

பீமன் போர் புரிந்த வேகத்தில் அலாயுதனுடைய தேரும், வில்லும் ஒடிந்தது. சினம் கொண்ட அந்த அரக்கன் கீழே கிடந்த பெரிய பெரிய கற்களை எடுத்து பீமன் மேல் எறிந்தான். 

ஆனால் பீமன் தன் கையிலிருந்த பெரிய கதாயுதத்தால் அந்தக் கற்களை தடுத்து கீழே தள்ளினான். கடுமையாக நிகழ்ந்த இந்தப் போரில் பாண்டவர்கள் பக்கத்தைச் சேர்ந்த துருபத மன்னனையும், விராட நாட்டு அரசரையும் துரோணர் கொன்றார். 

துருபத மன்னனின் புதல்வனும், மகாவீரனுமாகிய துஷ்டத்துய்மன் துரோணரைப் பழிவாங்க வேண்டும் என்று எண்ணினான். நாளையப் போரில் துரோணரை கொல்லாமல் விடமாட்டேன் என்று துஷ்டத்துய்மன் சபதம் செய்தான். பொழுது விடியும் நேரம் வருவதை உணர்ந்து இருபடைகளும் இரவு யுத்தத்தை நிறுத்தினர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக