Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 23 மே, 2020

கர்ணனை இழந்த பாண்டவர்கள், கௌரவர்களின் துயரம்.!

பதினேழாம் நாள் போரில் கர்ணனை இழந்த துயரத்தில் பாண்டவ படைகளுக்கும், கௌரவ படைகளுக்கும் உறக்கம் இல்லாமல் அன்றை பொழுது முடிந்தது. அடுத்த நாள் பொழுது புலர்ந்தது. அனைவரும் பதினெட்டாம் நாள் போருக்கு தயாராகினர். 

துரியோதனன் போருக்கு வேண்டிய ஏற்பாடுகளை வேண்டா வெறுப்பாகச் செய்தான். சல்லியனை அழைத்து, என்னுடைய படைகளை உன்னை நம்பி ஒப்படைக்கிறேன். இனி என்னுடைய உயிர், உடல், வாழ்வு, துணிவு, வெற்றி, நம்பிக்கை எல்லாம் உன் கையில்தான் இருக்கின்றன. 

யானை, தேர், குதிரை, காலாள் ஆகிய நான்கு வகைப் படைகளுக்கும் இப்பொழுது நீதான் தலைவன். உன்னை படைத்தலைவனாக நியமிக்கிறேன். அதற்குரிய அடையாள மரியாதைப் பொற்பட்டத்தை உனக்கு அணிவிக்கிறேன் என்று சல்லியனிடம் உருக்கமாகக் கூறித் தளபதிப் பதவியை அளித்தான்.

சல்லியன், கர்ணன் போர்க்களத்தில் இறந்ததால், தானே போர்க்களம் சென்று கிருஷ்ணரையும், அர்ஜூனனையும் கொல்வதாக துரியோதனனிடம் கூறிய உறுதிமொழியை மனதில் கொண்டான். பிறகு, மகிழ்ச்சியோடும் பயபக்தியோடும் சேனாதிபதிப் பதவியை ஏற்றுக் கொண்டான். 

பிறகு துரியோதனனுடைய படைகளுக்கு நடுவே கம்பீரமாக யானை மேல் ஏறி உட்கார்ந்து அணிவகுப்புக்காக வீரர்களை ஒழுங்குபடுத்தினான். துரியோதனனின் படைவீரர்கள் சல்லியனுடைய தலைமையை மகிழ்ச்சியோடு ஆரவாரம் செய்து வரவேற்றனர். 

சல்லியன் அன்றைய போருக்கு வீரர்களைத் தனித்தனிப் பிரிவாக அணிவகுத்து நிறுத்தினான். கௌரவர்கள் பக்கம் மீதம் இருந்தது சில வீரர்களே. கர்ணனை இழந்த துயரத்தில் துரியோதனனுக்குப் போர்க்களத்திற்கு வரவேண்டுமென்ற ஆசையோ, ஆர்வமோ இல்லாவிட்டாலும் கடமைக்காக வந்தான்.

கௌரவர் சேனை சல்லியன் தலைமையில் பதினெட்டாம் நாள் போருக்குத் தயாராக அணிவகுத்துக் களத்தில் வந்து நின்றனர். ஆனால் பாண்டவ படைவீரர்கள் யாவரும் இன்னும் போர்க்களத்திற்கு வரவில்லை. உண்மையில், கர்ணனுடைய மரணத்தினால் கௌரவர்களைவிட பாண்டவர்கள்தான் அதிகத் துயரம் அடைந்தனர். 

கர்ணன் தங்களுடைய மூத்த சகோதரன் என்ற உண்மை அவர்களுக்குத் தெரிந்ததால் அவர்களுடைய சோகமும் வேதனையும் அதிகமாகவே இருந்தது. அர்ஜூனன், கர்ணனுடைய மார்பில் அம்பு எய்து கொன்றதை நினைத்து மனம் வருந்தினான். 

தர்மருக்கும் இனிமேல் போர் செய்ய வேண்டுமென்ற ஆசையே இல்லாமல் போனது. பீமன், நகுலன், சகாதேவன் முதலிய யாவருமே கர்ணனை இழந்த துன்பத்தில் மூழ்கிப் பதினெட்டாம் நாள் போரை மறந்திருந்தனர்.

அந்த நிலையில் கிருஷ்ணர், பாண்டவர்களிடம் கடமையைவிட வேறு ஏதும் பெரியது இல்லை. துன்பத்தை மறந்து போருக்கு புறப்படுங்கள் என்று அறிவுரை கூறியபின்பு தான் பாண்டவர்கள் மனம் தேறித் தங்கள் படைகளுடன் போர்க்களத்திற்குப் புறப்பட்டு வந்தனர். துஷ்டத்துய்மன் பாண்டவ படைகளை தலைமை தாங்கி போர்க்களத்திற்கு அழைத்து வந்தான். 

போர்க்களத்தில் சல்லியன் முன்னேற்பாடாகத் தன் படைகளைப் பெரிய வியூகங்களில் வரிசை வரிசையாக அணிவகுத்து நிறுத்தி வைத்திருந்தான். அதைப் பார்த்தபோது பாண்டவர்களும் மற்ற வீரர்களும் திகைத்து நின்றனர். பெரிய வியூகங்களில் வரிசையாக நிற்கும் கௌரவ சேனையைக் கண்டு தர்மர் முதலியவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக