கொரோனா நோய்த்தொற்று நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், ஊரடங்கு வருகிற மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வெளி மாநிலத் தொழிலாளர்கள் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ள நிலையில், அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் சில தினங்களுக்கு முன் அனுமதி அளித்தது.
இதைத் தொடா்ந்து, பல்வேறு மாநில அரசுகள், தொழிலாளர்கள் அவரது சொந்த ஊருக்கு அனுப்ப சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வேயிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து, அதற்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனால் மாநில அரசின் ஒப்புதலுடன் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலமாக சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவலில், ‘நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இதுவரை 34 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டு செயல்படுத்தி வருகிறது. ரயிலில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு, ஒவ்வொரு ரயிலிலும் பயணிகளுக்கு இடையே காலியான இருக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த சிறப்பு ரயிலில் பயணிக்கும் தொழிலாளர்களுக்கு இலவச உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்படுகிறது.
ரயில்களில் தொழிலாளர்கள் பயணிப்பதற்கான கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்தளிக்கின்றன. ரயில்வேயின் மொத்த செலவில் 15% மட்டும் மாநில அரசிடம் இருந்து பெறப்படுகிறது. எஞ்சிய 85% கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் ஏற்றுக்கொள்கிறது. தொழிலாளர் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.
மாநிலங்கள் வழங்கிய பட்டியல்களின் அடிப்படையில் ரயில்களில் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக