சனி, 9 மே, 2020

பதிமூன்றாம் நாள் போர்..! அபிமன்யுவின் வீர வீழ்ச்சி..!

இரவின் அமைதி நிறைந்த ஓய்வுக்குப் பின்பு பதிமூன்றாம் நாள் பொழுது புலர்ந்தது.

பாண்டவர்கள் எப்போதும் போல வெற்றியின்மேல் நம்பிக்கை வைத்துப் போர்க்களத்திற்கு வந்தார்கள். ஆனால் கௌரவர்கள், தொடர்ந்து கிடைத்த தோல்வியை எண்ணிப் பொறாமை நிறைந்த எண்ணங்களுடன் களத்தில் வந்து நின்றனர்.

துரோணர்  இன்று ஒரு பாண்டவரையேனும் பலியிட வேண்டும் என்று முடிவு செய்து தனது படைக்கு சக்கரவியூகம் அமைத்துப் போரிட கட்டளையிட்டார். சிந்து தேசத்தின் அரசனும் இணையற்ற வீரனுமாகிய ஜெயத்ரதனை கௌரவ படை அமைப்பிற்கு தலைவனாக அமைத்துக் கொண்டனர்.

 துரோணர், துரியோதனன், கர்ணன் ஆகியவர்கள் அன்றையப் போரில் தர்மரைப் பிடிக்க எண்ணியிருப்பதையும், வேறு சில இரகசியத் திட்டங்களையும், ஒற்றர்கள் மூலம் அறிந்து கொண்ட தர்மர், கிருஷ்ணரிடமும், தன் தம்பிகளையும் அழைத்து எச்சரிக்கையாக இருக்குமாறு கூறினார்.

இருப்படைகளுக்கும் போர் தொடங்கியது. துரியோதனன் யானை, குதிரை, காலாட்படை, தேர் படை என்னும் நால்வகைப் பெரும் படைகளோடு சஞ்சத்தகர்கள் என்ற வீரர்களைப் பாண்டவர்கள் மேல் ஏவினான். அர்ஜூனன் அந்த வீரர்களை வளைத்துக் கொண்டு தாக்கத் தொடங்கினான்.

அர்ஜுனன் அவர்களில் பலரை களத்தில் வீழ்த்தினான். வேறொரு புறத்தில் துஷ்டத்துய்மனும், துரோணரும் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். இருவர் வில்லிலிருந்தும் எதிரெதிரே அம்புகள் மோதிக் கொண்டன. துஷ்டத்துய்மன் தளர்ந்து சோர்ந்து விட்டான்.

 ஆனால் துரோணர் நிறுத்தாமல் அம்புகளை ஏவிக் கொண்டிருந்தார். முதல் முதலாகப் பாண்டவர்கள் பக்கம் நேர்ந்த இந்தப் பெரிய தோல்வி போர்க்களம் முழுவதும் பரவியது.

இதை அறிந்த தர்மர், துஷ்டத்துய்மனிடம் படைத்தலைவனாகிய நீதான் நம்முடைய எல்லா வெற்றிகளுக்கும் காரணமாக இருக்க வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக இப்போது இந்த தோல்விக்கு நீயே காரணமாகி விட்டாய் என்று கூறினார்.

இதைக் கேட்ட துஷ்டத்துய்மன் தலைகுனிந்து நின்றான். அதனால் தர்மர், அபிமன்யுவை அழைத்து, கௌரவ படைகள் இப்போது சக்கரவியூகத்தில் நின்று கொண்டிருக்கின்றனர். உள்ளே புகுந்து பேர் செய்து அந்த வியூகத்தை எவ்வாறாவது கலைக்க வேண்டும் என்று கூறினார்.

 தர்மரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்கு அபிமன்யு புறப்பட்டான். ஒரு பெரும் படையின் இடையில் புகுந்து அதன் வியூகத்தைக் கலைப்பது என்பது இதற்குமுன்பு அபிமன்யுவுக்கு அனுபவம் இல்லாத விஷயம். அதனால் வியூகத்தை கலைத்து உள்ளே நுழைவது எப்படி என்பதைப் பற்றி அனுபவம் உள்ள பலரைக் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தான்.

வியூகத்திற்குள் நுழைவதென்றால் முதலில் முன் வரிசையில் நிற்கும் அதிரதத் தலைவர்களோடு போர் புரிந்து அவர்களை வென்றாக வேண்டும். அபிமன்யு தன் தேரைக் கௌரவப் படையின் அதிரதர்களுக்கு முன்னே நிறுத்திக் கொண்டு போரைத் தொடங்கினான்.

துரோணர் போன்ற பெருவீரர்கள்கூட முன் வரிசையில் நின்று அவனை எதிர்த்துப் போரிட்டனர். வட்ட வடிவமாக அமைக்கப்பட்டிருந்த சக்கரவியூகத்தில் குறுக்கும் நெடுக்குமாக ஆரங்கள் போல் வீரர்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். 

வியூகத்தை அழிக்க வேண்டுமானால் அதன் ஒவ்வொரு ஆரங்களையும் கலைக்க வேண்டும். முதல் ஆரத்தின் முதல் வீரராகத் துரோணர் வில்லுடன் நின்று கொண்டிருந்தார்.

அபிமன்யு சிறிதும் தயங்காமல் அவரை எதிர்த்து விற்போர் புரிந்தான். அபிமன்யு, துரோணரை வியூகத்திலிருந்து துரத்தியே ஆகவேண்டும் என்ற உறுதியோடு போர் செய்தான்.

அவனுடைய வில்லின் வேகம் விநாடிக்கு விநாடி அதிகரித்துக் கொண்டே இருந்தது. துரோணருடைய கைகள் ஓய்ந்து விட்டது. முடிவில் அபிமன்யு துரோணரின் வில்லின் நாணலை அறுத்துக் கீழே தள்ளினான். 

பின்பு துரோணர் போர் புரிய முடியாமல் அங்கிருந்து சென்றார். அதனால் முதல் ஆரம் முற்றிலும் கலைந்து விட்டது. முதல் ஆரம் கலைந்தவுடன் இரண்டாவது ஆரத்தைக் கலைப்பதற்காகச் சென்றான் அபிமன்யு. இரண்டாவது ஆரத்தின் முன்னணியில் முதல் வீரனாகத் துரோணருடைய புதல்வன் அசுவத்தாமன் நின்று கொண்டிருந்தான்.

அசுவத்தாமன், தன் தந்தையை அபிமன்யு முறியடித்ததைக் கண்டு அளவு கடந்த கோபத்துடன் நின்று கொண்டிருந்தான். அசுவத்தாமனுக்கும், அபிமன்யுவுக்கும் இரண்டாவது ஆரத்தில் போர் தொடங்கியது.

சக்கர வியூகத்தின் இரண்டாவது ஆரத்தில் அசுவத்தாமனை எதிர்த்து அபிமன்யு செய்த போரில் அசுவத்தாமன் ஓய்ந்துவிட்டான். மேலும் தன்னம்பிக்கையோடு வியூகத்தின் மூன்றாவது ஆரத்தின்மேல் அபிமன்யு சென்றபோது கர்ணன் அவனை எதிர்த்து நின்றான்.

அபிமன்யுவிற்க்கும் கர்ணனுக்கும் விற்போர் ஏற்பட்டது. அபிமன்யு, கர்ணனைக் கடுமையாக எதிர்த்து போர் செய்தான். அபிமன்யு, கர்ணனையும் தோற்கச் செய்து விட்டான்.

அடுத்ததாக அபிமன்யுவை எதிர்ப்பதற்கு தயாராக நின்றவர்கள் கிருதவன்மனும், கிருபாச்சாரியாரும் ஆவர். அபிமன்யு மேல் அவர்கள் இருவருமாகச் சேர்ந்து அம்புகளைச் சரமாரியாகத் தொடுத்தனர்.

 முதலில் அதைச் சமாளிக்க முடியாமல் இருந்த அபிமன்யு, பின்பு மனதை உறுதி செய்து கொண்டு அவர்களை திணறச் செய்தான். கிருதவன்மனும், கிருபாச்சாரியாரும் அபிமன்யுவிடம் போர்புரிய முடியாமல் தோற்றனர்.

அதே சமயத்தில் சகுனியும் அவனுடைய பெரும் படைகளும், அவனது புதல்வனும் அடங்கிய படையும், அபிமன்யுவை ஐந்தாவது ஆரத்தில் எதிர்த்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்