Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 9 மே, 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி016

கலிய நாயனார் !!

அனைத்து வளங்களும் ஓங்கப்பெற்று கீர்த்தியும், செல்வாக்கும் சிறந்து விளங்கும் தொண்டை நாட்டில் உள்ள திருத்தலம் திருவொற்றியூர். திருவொற்றியூரில் உள்ள சக்கரப்பாடியில் எண்ணெய் வாணிபம் புரியும் செக்கார் குலத்தில் பிறந்தவர்தான் கலியனார். பொருட்செல்வம் யாவும் நிறையப் பெற்ற செல்வந்தராக விளங்கிய இவர், எம்பெருமானின் மீது மிகுந்த பக்தியும், அன்பும் கொண்டிருந்தார்.

அதன் காரணமாக திருவொற்றியூர் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள படம்பக்கநாதருடைய திருக்கோவிலில் அகம், புறம் என ஆயிரக்கணக்கில் விளக்கேற்றும் பணியையும், சிவ தொண்டினையும் செய்து வந்தார். ஓங்கிய புகழுடைய நன்நாட்டில், எல்லா வளங்களையும் தன்னகத்தே கொண்டு சிறப்புற்று விளங்குகின்ற இங்குள்ள சக்கரப்பாடித் தெருவில் சைவ சமயத்தில் சிறப்புற்று விளங்கிய இச்செம்மல் சிவபெருமானுக்குத் திருத்தொண்டுகள் பல புரியும் அருள் நெறியில் நின்றார்.

இவரின் பக்தியில் மெய்மறந்த எம்பெருமான் அவருடைய பக்தியின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு உமைபங்கர் தன்னுடைய திருவிளையாடலை அரங்கேற்றினார். அதாவது, எதிர்பாராத விதமாக அவருடைய பொருட்செல்வம் யாவும் குன்றத் துவங்கியது. ஆயினும் எம்பெருமானுக்கு விளக்கேற்றும் பணியினை மட்டும் இவர் விடுவதாக இல்லை. வறுமை நிலையிலும் மனம் தளராமல் தமது குலத்தவரிடம் எண்ணெய் வாங்கி விற்று பொருள் ஈட்டி வந்தார். அதில் கிடைக்கும் வருவாய் போதுமானதாக இல்லாமையால் எண்ணெய் செக்கு ஓட்டி தினமும் கூலி வாங்கும் தொழிலில் ஈடுபட்டார்.

இவற்றில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு எம்பெருமானின் திருத்தலத்தில் விளக்கேற்றி மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்தார். சில நாட்களில் அந்த கூலி வேலையும் கிடைக்காமல் போகவே அதாவது, குறைந்த வருவாயில் ஆட்கள் அதிகம் கிடைத்தமையால் இவரை யாரும் வேலைக்கு அமர்த்தவில்லை. மனம் தளராத கலியனார் தன்னுடைய இல்லத்தில் இருக்கும் பண்ட பாத்திரம் என ஒவ்வொன்றையும் விற்று பொருள் ஈட்ட துவங்கினார்.

வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் விற்று போக என்ன செய்வதென்று புரியாமல் தவித்த கலியனார் தான் தங்கி இருந்த வீட்டையும் விற்று அதன் மூலம் கிடைத்த வருவாயை கொண்டு திருத்தலத்தில் விளக்கேற்றும் பணியை தொடர்ந்து செய்து வந்தார். ஒரு நிலையில் தன்னிடம் இருந்து வந்த சொத்துக்கள் யாவையும் விற்றார். இப்போது விற்பதற்கு தன்னிடம் எந்த பொருளும் இல்லையே... விளக்கேற்ற எண்ணெய் வாங்கவும் பொருள் ஏதும் இல்லையே... என தவித்துப்போன கலியனார் மாண்புடைய மனைவியையும் விற்க முன்வந்தார்.

கலியனார் மனைவியாரை பெற்றுக் கொண்டு பொருள் கொடுக்க யாவரும் இல்லாமையால் என்ன செய்வது என்று அறியாது திகைத்து நின்றார். மனமும், அறிவும் ஒரு நிலையில் இல்லாமல் கலங்கி நின்றார். அந்த நிலையில் அவர் அடைந்த மனவேதனை என்பது சொல்வதற்கு வார்த்தைகள் இல்லாத அளவில் இருந்தது. பின்பு அவர் தனது மனைவியை அழைத்துக் கொண்டு படம்பக்கநாதர் திருக்கோவிலை அடைந்தார். எம்பெருமானின் சன்னதியை அடைந்ததும் எம்பெருமானை பணிந்து மனதார வணங்கி எம்பெருமானே... நான் உனக்காக செய்யும் இந்த திருப்பணியான விளக்கேற்றும் பணி எந்த விதத்திலாவது தடைபட்டால் நான் எனது உயிரையே மாய்த்து கொள்ளவும் தயாராக இருக்கிறேன் என்று மகிழ்ச்சி பொங்க மொழிந்தார்.

உரைத்ததோடு மட்டுமல்லாமல் அடியேன் ஏற்றும் அகல் விளக்குகளில் எண்ணெய் குறைந்து விளக்குகள் அணையும் நிலை ஏற்படுமாயின் நான் என் குருதியை கொண்டும் விளக்கேற்ற தயங்க மாட்டேன் என்று இன்முகத்தோடு கூறினார். திருவிளக்குகளை திருத்தலத்தில் எப்போதும் வைக்கும் முறையோடு வரிசையாக அமைத்தார். பின்பு அதில் எண்ணெய்க்குப் பதிலாக தனது உதிரத்தைக் கொடுக்க உறுதி பூண்டிருந்த கலியநாயனார் வாள் எடுத்து வந்து தமது கழுத்தை அறுக்கத் தொடங்கினார்.

அவ்விடத்தில் பலகாலம் தவம் கொண்டு காணவேண்டிய எம்பெருமான் தன்னுடைய அடியார் செய்யும் செயலை கண்டதும் மனமிறங்கி அவருடைய செயலை தடுக்கும் வகையில் அங்கு எழுந்தருளி, தனது கரத்தினால் கலியனார் கரத்தை பிடித்து ஆட்கொண்டார். திருத்தலத்தில் இதுவரை காணாத பேரொளி எழுந்தது. திருவிளக்குகள் அனைத்தும் எண்ணெய் வழியப் பிரகாசமாக ஒளியை எட்டு திக்கிலும் பரப்பின. எங்கும் பிறைமுடிப் பெருமானின் அருள் ஒளி நிறைந்து காணப்பட்டது. கலியனார் கழுத்தில் அறுத்த இடம் சிறு வடு கூட இல்லாமல் அகன்று முற்றிலும் மாறியது.

பிறைமுடி சூடிய சடைமுடிப் பெருமானார் தாயுடன் அலங்கார விடை மீது எழுந்தருளி அன்புத் தொண்டருக்கு காட்சி அளித்தார். அந்த அரும்பெரும் காட்சியை கண்டதும் கலியனாரும், அவரது மனைவியாரும் மெய் மறந்து உள்ளம் உருகி நின்றனர். பின்பு கலியனார் தன் மனைவியோடு சேர்ந்து இரு கரங்களையும் தன் தலையின் மீது குவித்து நிலமதில் வீழ்ந்து பலமுறை சிவபெருமானை வணங்கினார். சிவபெருமான் அவருக்கு பேரின்ப பெருவாழ்வு அளித்ததோடு மட்டுமின்றி இறுதியில் தன்னுடைய திருவடியில் சேர்த்து சிறப்புற்றிருக்கும் அருளையும் வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக