Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 27 மே, 2020

சல்லியனுக்கும், பீமனுக்கும் நடந்த பதினெட்டாம் நாள் போர்..!

சல்லியனுக்கும், பீமனுக்கும் கடுமையாக போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் நகுலனை எதிர்த்து கர்ணனின் புதல்வர்கள் தாக்குதல் நடத்தினர். நகுலனுடைய அனுபவம் மிகுந்த வீரத்துக்கு முன்னால் இவர்களால் அதிக நேரம் போர் புரிய முடியவில்லை. 

கால் நாழிகைப் போரிலேயே இவர்கள் மூவரையும் நகுலன் வீழ்த்தினான். இதைக்கண்ட சகுனி, உலூகன், சைந்தவன் என்ற தன் மகன்களை புடைசூழச் நகுலனை எதிர்ப்பதற்கு ஓடிவந்தான். ஆனால் நகுலன் செய்த சண்டமாருதப் போரை எதிர்த்து நிற்க முடியாமல் உடனே புறமுதுகு காட்டி ஓடிவிட்டனர். 

மீண்டும் போர் தொடர்ந்து நிகழ்ந்தபோது சல்லியன் பீமனை எதிர்த்தான். பீமனுக்கு உதவியாக இருந்த சுமித்திரன் என்ற வீரனை சல்லியன் கொன்று வீழ்த்தினான். சுமித்திரன் இறந்தபின்பு சல்லியன் தனது முழுப்பலத்தையும் பீமனைத் தாக்குவதில் காட்டினான்.

பீமன் தடுமாறுவதை கண்ட நகுலன், சகாதேவன், சாத்தகி ஆகியோர் பீமனுக்கு உதவுவதற்காக ஓடிவந்தார்கள். ஆனால் அவர்கள் நான்கு பேரும் சேர்ந்தும்கூட சல்லியனை எதிர்க்க முடியவில்லை. இதனால் கோபம் கொண்ட பீமன் ஆவோசத்தோடு தன் கையில் இருந்த கதாயுதத்தால் சல்லியனுடைய தேரையும், தேர்க் குதிரைகளையும், தேரோட்டியையும் தாக்கினான். 

அந்த தாக்குதலால் சல்லியனின் தேர்ப்பாகன் இறந்தான். இதனால் சல்லியனின் படைகள் சிதறி ஓடியது. போர்க்களத்தின் மற்றொரு பகுதியில் அர்ஜூனனும் அசுவத்தாமனும் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போர் செய்து கொண்டிருந்தார்கள். அசுவத்தாமன் அர்த்த சந்திர வடிவாக வளைந்த கத்தி போலிருந்த பல அம்புகளை அர்ஜூனன் மேல் செலுத்தினான். அதனால் அர்ஜூனன் உடலில் பல இடங்களில் இரத்தக் காயங்கள் ஏற்பட்டது.

அர்ஜூனனும், அசுவத்தாமனுடைய உடலில் பல காயங்களை உண்டாக்கினான். இருவருடைய தேர்க்குதிரைகளும் அழிந்தன. பிறகு இருவரும் கீழே இறங்கிப் போர் செய்துகொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் அசுவத்தாமன் புறங்காட்டி ஓடுவது போல நடித்து ஏமாற்றினான். 

அசுவத்தாமன் ஓடுவதாக எண்ணிக் கொண்டிருந்த அர்ஜூனன் அஜாக்கிரதையாக இருந்தான். அப்போது அசுவத்தாமன் மீண்டும் திரும்பி இரும்பு உலக்கையை எடுத்து அர்ஜூனன் மேல் எறிந்தான். அர்ஜூனன் அதை தன் அம்புகளால் தடுத்து முறித்தான். மீண்டும் அசுவத்தாமன் பெரிய கதாயுதத்தை எடுத்து அர்ஜூனன் மேல் எறிந்தான். 

அதையும் அர்ஜூனன் தன் அம்புகளால் வீழ்த்தினான். இறுதியில் வேறு வழி இல்லாமல் அசுவத்தாமன் புறங்காட்டி ஓடினான். பிறகு அர்ஜூனன் பீமனுக்கு உதவியாக நின்றான். அடுத்து சல்லியனுக்கு உதவியாகத் துரியோதனன் வந்து சேர்ந்தான்.

துரியோதனன் சல்லியனுக்கு உதவியாக வந்த பிறகு, சல்லியனோடு போர் செய்துகொண்டிருந்த சாத்தகியும், நகுலனும், சகாதேவனும் தோற்றனர். சல்லியனின் வீரமும், ஆற்றலும் பெருகிக் கொண்டே வந்தன. பீமன், தர்மர், அர்ஜூனன் ஆகிய மூன்று பேரும் எதிர்க்கும்போது, சல்லியன் தான் ஒருவனாகவே நின்று அவர்களைச் சமாளித்தான். 

சல்லியனுடைய அம்புகள் தர்மரின் உடலைத் துளைத்தன. சல்லியன்மேல் சினங்கொண்ட பீமன் கதாயுதத்தால் அவன் தலையில் தரித்திருந்த கிரீடம் கீழே விழுமாறு ஓங்கி அடித்தான். பீமன் இவ்வாறு செய்வதைக் கண்ட துரியோதனன் கோபத்தோடு தாக்குவதற்கு ஓடி வந்தான். 

துரியோதனன் தன்னைத் தாக்க வருவதை கண்ட பீமன் சல்லியனை விட்டுத் துரியோதனன் மேல் பாய்ந்தான்.

துரியோதனனுக்கும், பீமனுக்கும் போர் ஏற்பட்டது. துரியோதனன் பீமனை எதிர்த்து போர் புரிய முடியாமல் விரைவிலேயே தோற்று ஓடினான். பிறகு சல்லியன் பாண்டவர்களோடு தனியாக நின்று போர் புரிந்தான். தர்மர், பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் என பல பேர் ஒன்று திரண்டு சல்லியனை எதிர்த்தார்கள். 

போர் கடுமையாக நடந்தது. சல்லியனைக் கொன்றுவிட வேண்டுமென்ற ஆவேசத்தோடு தர்மரும், தர்மரைக் கொன்றுவிட வேண்டும் என்ற ஆவேசத்தோடு சல்லியனும் போரிட்டனர். சல்லியன் தர்மருடைய தேர், குதிரைகள், படைகள் ஆகிய எல்லாவற்றையும் அழித்தான். கோபம் கொண்ட தர்மர் வேறோரு தேரில் ஏறிக் கொண்டு சல்லியனை எதிர்த்தார். 

சல்லியனைக் கொல்வேன் அல்லது நான் இறப்பேன் என்று தர்மர் மனதைத் திடப்படுத்திக் கொண்டு மீண்டும் போரை தொடங்கினார்.

தர்மர், தன் மனதிலிருந்த கோபத்தை எல்லாம் ஒன்று திரட்டி ஒரு கூரிய வேலை எடுத்து சல்லியன் மார்பைக் குறிவைத்து வீசி எறிந்தார். அந்த வேல் சல்லியன் மார்பில் பாய்ந்து முதுகை ஊடுருவிச் சென்றது. சல்லியன், போர்க்களம் முழுவதும் எதிரொலிக்கும்படி அலறிக் கொண்டு தேரின்மேல் சாய்ந்தான். 

சில மணி நேரத்தில் சல்லியன் இறந்துவிட்டான். சல்லியனின் நூற்றுக்கணக்கான வீரர்கள் தர்மருடைய தேரைச் சுற்றி வளைத்து நின்று கொண்டார்கள். துரியோதனன், சகுனி மற்றும் பல படைவீரர்கள் முதலியவர்களை அழைத்துக் கொண்டு தர்மரை எதிர்க்க வந்தான். 

தர்மருக்கு உதவியாக பீமன், துஷ்டத்துய்ம்மன் முதலியவர்கள் உதவிக்கு வந்து சேர்ந்தனர். கௌரவர்கள், படைத்தலைவனாகிய சல்லியனைப் பறிகொடுத்த பின்னும் தயங்காமல் பாண்டவர்களை எதிர்த்தனர். ஆனால் அதிகமான சேதம் துரியோதனன் பக்கமே ஏற்பட்டது.

துரியோதனனுடைய சகோதரர்களில் எஞ்சியிருந்தவர்களும் பீமன் கையால் மாண்டனர். துரியோதனன் வருத்தத்துடன் ஒன்றும் செய்யத் தோன்றாமல் உட்கார்ந்தான். அந்த நிலையில் சகுனி வந்து துரியோதனனைத் தேற்றி ஊக்கப்படுத்தினான். சகுனி, துரியோதனனிடம் உன் சார்பாக நான் பீமனுடன் போருக்கு செல்கிறேன் என்று கூறி தன் படைகளைத் திரட்டிக்கொண்டு பீமனை எதிர்க்க கிளம்பினான். 

பீமனுக்கும் சகுனிக்கும் போர் தொடங்கியது. பீமன், உனக்கும் முடிவு காலம் நெருங்கி விட்டது என்று கூறி சிரித்துக்கொண்டே சகுனியை வரவேற்றான். சகாதேவன் பீமனுக்கு உதவியாகப் போரிட்டான். சகுனிக்கு உதவுவதற்காக வந்த துரியோதனன் ஒரு வேலாயுதத்தை எடுத்து சகாதேவன் மேல் எறிந்தான். அது சகாதேவனை நன்றாகத் தாக்கியதால் கீழே நிலைகுலைந்து வீழ்ந்தான்.
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக