Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 4 மே, 2020

அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில், அரங்கநாதபுரம்,

மூலவர்–திருவானேஷ்வர்

அம்மன்–காமாட்சி அம்மன்

பழமை–2000 வருடங்களுக்கு முன்

ஊர்–அரங்கநாதபுரம்

மாவட்டம்–தஞ்சாவூர்

மாநிலம்–தமிழ்நாடு

காலபைரவர் பூரட்டாதி நட்சத்திர நாளில் ஏழு கிழமைகளைப் படைத்தார். இவற்றை ஏழு யானைகளின் மீது ஏற்றி பவனி வந்தார். இவ்வாறு, காலச்சக்கரத்தை படைத்தருளிய தலம் இது என தல புராணம் கூறுகிறது. மூலவர் விமானம் கஜ கடாட்ச சக்தி விமானம் எனப்படுகிறது. ஐராவத யானையும், தேவர்களின் தலைவன் இந்திரனும் பூரட்டாதி நாளில் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர்.

காஞ்சிப்பெரியவர் இத்தலத்தில் ஒரு வார காலம் தங்கி தியானம் செய்துள்ளார். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ சென்று வழிபட வேண்டிய தலம்.

ஜாதகத்தில் இரண்டாம் இடம் என்பது மதிகாரனாகிய சந்திரனுக்கும், ஐந்தாம் இடம் வித்யாகாரனாகிய புதனுக்கும் உரியது. சந்திரன் மதியை ஆள்பவர், புதன் அறிவை ஆள்பவர். பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் நல்ல மனம், சிறந்த புத்திகூர்மை கிடைத்து திகழ பூரட்டாதி நட்சத்திர நாளில் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு. ஏழைகளுக்கு ஏழு வகையான வண்ண ஆடைகளை இங்கு வந்து தானம் செய்தால், ஏழேழு ஜென்ம பாவங்கள், தங்களது சந்ததியினரைத் தொடராமல் விலகும் என்பது நம்பிக்கை.

கல்விக்குரிய ஸ்தலம் இது. மகாபாரதத்தில் கிருஷ்ணரே வியக்கும் வகையில் நல்லறிவு கொண்டவனாக பாண்டவர்களில் கடைசி தம்பியான சகாதேவன் விளங்கினான். இவன் ஜோதிட அறிவு கொண்டவன். பாரத யுத்தம் துவங்கும் முன்பு, துரியோதனன் இவனை நாடி வந்து, எந்த நாளில் போரைத் துவங்கினால் வெற்றி கிடைக்குமென இவனிடமே கேட்டான். தன்னை எதிர்த்து போரிட, தன்னிடமே ஆலோசனை கேட்க வந்த துரியோதனனை ஏமாற்ற சகாதேவன் விரும்பவில்லை. அமாவாசை அன்று போர் துவங்கினால் வெற்றி உனக்கே என அவன் நாள் குறித்துக் கொடுத்தான். அவனது கணிப்பு தப்பியதில்லை. ஆனால், கிருஷ்ணர் தான் தன் மாயத்தால் அமாவாசையை முந்தச் செய்து, துரியோதனனைத் தோற்கடித்தார். இவ்வாறு எதிரியை வெறுக்காத குணமும், உண்மையாகவும் நடந்து கொள்ளவும், சகாதேவன் போல் சாஸ்திர ஞானம் பெறவும் இங்கு வழிபடலாம். கோச்செங்கட் சோழன் கட்டிய 70 மாடக் கோயில்களில் இது முதலாவது கோயிலாகும்.

திருவிழா:

மாதம் தோறும் பூரட்டாதி நட்சத்திர நாளில் சிறப்பு அபிஷேகம்.

கோரிக்கைகள்:

பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். ஏழு ஸ்வரங்களுடன் இசையில் சிறந்து விளங்க இத்தலத்து இறைவனை வழிபட சிறந்த பலனைத்தரும்.

முகவரி:

அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில், அரங்கநாதபுரம், திருக்காட்டுப்பள்ளி வழி, திருவையாறு தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செய்கின்றனர்.

காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

இது ஆன்மீக பூமி, சித்தர்களும்,மகான்களும், மகரிஷிகளும், முனிவர்களும்,யோகிகளும், நம்மை நல்வழி நடத்தும் மகா குருமார்களும், இன்னும் பிற தவஷ்ரேஷ்டர்களும், வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மண்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக