Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 7 மே, 2020

பனிரெண்டாம் நாள் போர்

பனிரெண்டாம் நாள் பொழுது விடிந்தது. பாண்டவர்கள் தங்கள் படையை அணிவகுத்து நிறுத்திய விதம் முற்றிலும் புதுவிதமாக இருந்தது. தர்மரை நடுவில் நிறுத்தி அவரைச் சுற்றிலும் வளையம் போன்று படைகளை நிறுத்தினார்கள். தர்மருக்கு முன்புறம் அர்ஜூனனும், அபிமன்யுவும் நின்றார்கள்.

பின்புறம் பீமன் நின்று பாதுகாத்தான். மற்ற இருபக்கங்களிலும் நகுலனும், சகாதேவனும் கையில் ஆயுதம் ஏந்தி நின்றனர். கௌரவர்கள் தர்மரை உயிருடன் சிறைபிடிக்க வேண்டும் என்றால் அர்ஜூனனை வேறு வழியில் திசை திருப்ப வேண்டும் என்று திட்டம் தீட்டினர்.

இந்நிலையில் திகர்த்த தேசத்தை சார்ந்த சுசர்மன் என்பவனும், அவனது 3 சகோதரர்களும், 35 மகன்களும் அர்ஜூனனை அழிப்போம், அல்லது போரிட்டு அழிவோம் என்று சூளுரைத்து அர்ஜூனனை தாக்கச் சென்றனர்.

இதை அறிந்த அர்ஜூனன் பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனின் சகோதரன் சத்யஜித்திடம் தர்மரை பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு திரிகர்த்த மன்னனையும், அவருடைய சகோதரர்களையும் எதிர்த்து போரிடச் சென்றான்.

அர்ஜூனனுக்கும், சுசர்மன் முதலியவர்களுக்கும் போர் கடுமையாக நிகழ்ந்து கொண்டிருக்கும்போது துரோணர், ஜெயத்திரதன், சகுனி மற்றும் பல அரசர்களை அழைத்துக் கொண்டு தர்மரை தாக்குவதற்கு வந்தார். அர்ஜூனன் வாயு அஸ்திரத்தை விடுத்து அனைவரையும் வீழ்த்தினான்.

சுசர்மன் மட்டும் உயிர் தப்பினான். இதனைக் கண்ட பாண்டவர்களின் படைத்தலைவனான துஷ்டத்துய்ம்மன் கடமை உணர்ச்சியோடு துரோணரை எதிர்த்து போரிட்டான். இறுதியில் துஷ்டத்துய்ம்மன், துரோணரின் படை வீரர்களை வீழ்த்தினான்.

தன் படையில் பெரும்பகுதி அழிந்துவிட்டதைக் கண்ட துரோணர் மனம் வருந்தினார். மீண்டும் கோபத்தோடு எதிர்த்துப் போர் புரிந்தார். துருபதன், நகுலன், சகாதேவன் ஆகிய வலிமை வாய்ந்த வீரர்களைத் துரோணர் தோற்கடித்தார்.

பிறகு தர்மரும், துரோணரும் அவர்கள் படைகளுடன் நேரடியாகப் போரில் இறங்கினார்கள். ஆனால் இறுதியில் வில்லையும், தேரையும் இழந்து நிராயுதபாணியாக நிற்கவேண்டிய நிலை துரோணருக்கு ஏற்பட்டு விட்டது. பிறகு தர்மருக்கு துணையாக வேறு சில அரசர்களும் விராடன், துஷ்டத்துய்ம்மன், குந்திபோஜன் முதலியவர்கள் தர்மருக்குப் பக்கபலமாக நின்றார்கள். இதனால் எதிர்ப்பை சமாளிப்பது துரோணருக்குக் கடினமாயிற்று.

துரோணர் தனியாக நிற்பதை அறிந்த துரியோதனன், கர்ணன், சகுனி, சோமதத்தன் முதலிய கௌரவப் படைவீரர்கள் அவருக்கு துணையாக வந்து நின்றார்கள். இருதரப்பு படைகளுக்கும் கடுமையாக போர் நடந்தது.

பாண்டவர்களின் சாமர்த்தியத்தால் கௌரவர்களின் படைகளுக்கு அதிகமாக சேதம் ஏற்பட்டது. இரண்டாவது முறையிலும் துரோணர் தோற்றுப் பின் வாங்கினார். தர்மரை சிறைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் இரண்டு முறையும் தோல்வி அடைந்து விட்டது.

பீமன், கடோத்கஜன், அபிமன்யு ஆகியோர் ஒன்று சேர்ந்து துரோணரைப் போர்க்களத்திலேயே நிற்கமுடியாதபடி செய்தனர். இதனைக் கண்ட துரியோதனன் வெறுப்பினாலும், அவமானத்தினாலும் ஒரு வகை விரக்தி அவன் மனதில் வளர்ந்து கொண்டிருந்தது.

விரக்தியடைந்த துரியோதனன் இந்த உலகமும், ஆட்சி உரிமையும், வெற்றியும், வீரமும் ஆகிய சகலமும் பாண்டவர்களுக்கு தான் சொந்தம் என்று விரக்தியோடு தன்னைச் சுற்றி இருந்தவர்களை நோக்கிக் கூறினான். அதனால் மீண்டும் துரோணர், துரியோதனன் இருவரும் ஒன்று சேர்ந்து ஒரு பெரும் படையைத் தலைமை தாங்கி தர்மர் இருந்த இடத்திற்கு வந்தனர்.

 துரியோதனனும் அவன் படைகளும் தர்மரை நெருங்குவதற்கு முன்பே அபிமன்யு செலுத்திய கூரிய கணைகள் அவர்களைத் தடுத்து நிறுத்தின. தர்மர், கடோத்கஜன், துஷ்டத்துய்மன் முதலியவர்களால் துரியோதனனுடைய இந்த மூன்றாவது முயற்சியும் வலுவிழந்து தோல்வியுற்றது.

பின்பு, பகதத்தன் மட்டும் தன்னிடம் இருந்த கௌரவசேனையை ஒன்று திரட்டிக் கொண்டு மீண்டும் தர்மரை எதிர்த்து போரிட வந்தான். வேகமாகக் களத்திற்குள் நுழைந்த பகதத்தன் சற்றும் எதிர்பாராத விதமாகத் தர்மரை நோக்கி சென்றான். இதை அறிந்த பீமன் தன் கதாயுதத்தை ஓங்கிக் கொண்டு பகதத்தன் மேல் பாய்ந்தான்.

பகதத்தனுக்கும் பீமனுக்கு கடுமையாக போர் நடந்தது. பகதத்தன் யானை மேல் ஏறி நின்று போர் செய்ய முயன்றான். ஆனால் பீமன் அவனை யானையிலிருந்து கீழே தள்ளி மார்பெலும்புகள் நொறுங்கும்படியாக தன் கதாயுதத்தால் ஓங்கி ஓர் அடித்தான்.

அதனால் கோபம் கொண்ட பகதத்தன் பக்கத்திலிருந்த ஒரு தேரின் மேல் ஏறிக் கொண்டு வில்லை வளைத்து பீமன் மேல் அம்புகளைப் பொழிந்தான். தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிய பீமன் தன் கையிலிருந்து கதாயுதத்தை கீழே நழுவவிட்டான்.

பகதத்தன் எய்த அம்புகள் பீமனின் மார்பிலும் தோள் பட்டையிலுமாகத் தைக்கத் தொடங்கின. சினம் கொண்ட பீமன் மற்போரை மேற்கொண்டான். மற்போரிலும் தோல்வியடைந்த பகதத்தன் தளர்ந்த நிலையிலிருந்த தன் யானையின் மேல் ஏறி தப்பி செல்ல முயன்றான்.

ஆனால் பகதத்தனின் யானை ஓடும் போது வழியே இருந்த பாண்டவர் வீரர்கள் நசுங்கி அழிந்தனர். இதனைக் கண்ட தர்மர் முதலில் பகதத்தனை அழிக்க வேண்டும் என்று தீர்மானித்து கிருஷ்ணரை மனதில் நினைத்துக் கொண்டார்.

கிருஷ்ணன் தர்மன் தன்னை நினைப்பதை உணர்ந்து கொண்டார். உடனே கிருஷ்ணர் தேரை தர்மர் நின்று கொண்டிருந்த இடத்திற்கு திருப்பினார். பிறகு அர்ஜூனனுக்கும், பகதத்தனுக்கும் போர் தொடங்கியது. கிருஷ்ணர் மேல் பகதத்தன் அம்புகளை செலுத்த முயன்றான். ஆனால் அதை அர்ஜூனன் தடுத்து பதிலுக்கு பகதத்தன் மார்பில் அம்புகளை துளைத்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக