Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 28 மே, 2020

பதினெட்டாம் நாள் போர்.! துரியோதனனின் தவம்..!

சகாதேவனை, துரியோதனன் தாக்கிவிட்டதை கண்டு மனம் கொதித்த பீமன் தன் கோபத்தை எல்லாம் சகுனி மேல் காட்டினான். பீமனுக்கு உதவியாக வந்த சோழ மன்னர்கள் அசுவத்தாமன் மேல் அம்புகள் எய்து வீழ்த்தினர். இதை கண்ட கிருபாச்சாரியார் எஞ்சியிருந்த கௌரவப் படைகளை அழைத்துக் கொண்டு சோழனை எதிர்த்தார். பிறகு மீண்டும் சகாதேவனுக்கும், சகுனிக்கும் போர் தொடங்கியது. சகாதேவன் கையில் வேலை எடுத்து, சகுனியின் மார்பை குறிவைத்து எறிந்தான். அந்த வேல் குறி தவறாமல் சகுனியின் மார்பை இரண்டாகப் பிளந்து வீழ்த்தியது. சகுனி கீழே விழுந்து இறந்தான். எல்லாச் சூழ்ச்சிகளுக்கும், எல்லா வஞ்சகங்களுக்கும் காரணமாக இருந்த அவனுடைய மரணம் பாண்டவர்களுக்குள் மகிழ்ச்சியை உண்டாக்கியது.

தம்பிகளை இழந்த துயரத்தில் மூழ்கியிருந்த துரியோதனன் சகுனி இறந்துவிட்ட செய்தி கேட்டு மீண்டும் அதிர்ச்சியடைந்தான். தொடர்ந்து தோல்விகளையும், மரணங்களையுமே கண்ட அவன் மனம் கலக்கத்தின் சிகரத்தை அடைந்தது. என்ன செய்வது? எப்படி சமாளிப்பது? என்று அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. தோல்வி தன்னை நெருங்கிக் கொண்டிருந்ததை துரியோதனன் உணர்ந்தான். அப்பொழுது ஒரு முனிவர் அவனுக்கு உபதேசித்திருந்த மந்திரம் ஒன்று நினைவில் வந்தது. அந்த மந்திரத்தைத் திரும்பத் திரும்ப ஜபித்துத் தவம் செய்தால் போரில் இறந்து போனவர்களை மீண்டும் உயிர் பெறச் செய்து பாண்டவர்களை எதிர்க்கலாமென்று எண்ணினான்.

உண்மையில் அந்த மந்திரம் வலிமை வாய்ந்ததுதான். பிரம்மாவிடம் கற்ற அந்த மந்திரத்தைச் சுக்கிராச்சாரி சகமுனிவனுக்கு கூறினார். சகமுனி வியாழபகவானுக்கு கற்பித்திருந்தார். வியாழபகவானிடம் சீடனாயிருந்து அவன் கருணைக்குப் பாத்திரமான ஒருவர் மூலம் துரியோதனன் அதைக் கற்றுக்கொண்டான். போர்க்களத்தில் நின்று அந்த தவத்தை செய்ய இயலாததால் துரியோதனன் போர்க்களத்திலிருந்து சிறிது தொலைவு சென்றான். போர்க்களத்தின் தொலைவில் ஒரு குளமும் அதன் கரையில் பெரிய ஆலமரமும் இருந்தது. துரியோதனன் அந்த குளத்தில் இறங்கி நீராடி ஆலமரத்தின் நிழல் படும்படியாகத் தண்ணீரிலேயே நின்றுகொண்டு தவத்தை ஆரம்பித்தான்.

தவத்தில் ஈடுபட்டவுடன் தன்னையே மறந்து மந்திரத்தை ஜபித்துக் கொண்டு இரண்டறக் கலந்து ஒன்றிவிட்டான். இந்த நேரத்தில் போர்க்களத்தில் அசுவத்தாமன் முதலியோர் துரியோதனனைக் காணாமல் திகைத்தனர். போர்க்களத்தைச் சுற்றியுள்ள பல இடங்களில் அலைந்து துரியோதனனை தேடினார்கள். அவர்கள் துரியோதனனை தேடிக் கொண்டிருந்தபோது சஞ்சய முனிவர் எதிரே வந்தார். அசுவத்தாமன் முதலியவர்கள் தங்கள் கலக்கத்தை அவரிடம் கூறி துரியோதனனுக்கு என்ன நேர்ந்தது? அவன் எங்கு இருக்கிறான் என்று கேட்டார்கள். முக்காலமும் அறிந்த சஞ்சய முனிவர் துரியோதனன் இருக்கும் இடத்தையும் அவன் நிலையையும் உணர்ந்து அவர்களுக்கு கூறினார்.

சஞ்சய முனிவர், துரியோதனனுடைய உயிருக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. இங்கிருந்து இன்னும் சிறிது தொலைவு சென்றால் ஒரு குளமும் ஆலமரமும் இருக்கும். அக்குளத்தில் துரியோதனன் போரில் இறந்தவர்களையெல்லாம் உயிர் பிழைக்கச் செய்வதற்காக தவம் செய்து கொண்டிருக்கிறான் என்று கூறினார். பிறகு அசுவத்தாமன் முனிவரிடம்! தாங்கள் இப்போது எங்கிருந்து வருகிறீர்கள்? என்ன காரியமாகச் செல்கிறீர்கள்? என்று கேட்டான். துருபதேயனைப் போன்ற கொடியவர்கள் சிலர் என்னைக் கொல்வதற்கு வந்தனர். ஆனால் கருணை வடிவமான கிருஷ்ணர் என் உயிரைக் காப்பாற்றி அருள் புரிந்தார். இப்போது திருதராஷ்டிர மன்னனையும் அவர் மனைவி காந்தாரியையும் சந்திப்பதற்காகச் செல்கிறேன் என்று கூறினார்.

பிறகு முனிவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு அசுவத்தாமன், கிருபன், கிருதவர்மன் முதலியவர்கள் விரைந்து துரியோதனன் இருந்த இடத்திற்குச் சென்றனர். அங்கு துரியோதனன் தண்ணீரின் நடுவே நின்று கொண்டு ஆடாமல் அசையாமல் தவம் செய்து கொண்டிருந்தான். அவர்கள் துரியோதனனை அழைத்தார்கள். ஆலமரத்து விழுதுகளை அசைத்து ஓசை உண்டாக்கினார்கள். ஆனால் துரியோதனனின் தவத்தை கலைக்க முடியவில்லை. அசுவத்தாமன் துரியோதனனுக்கு கேட்கும்படி, இந்தப் பாண்டவர்களை அழிப்பதற்கு தவம் செய்ய வேண்டுமா? நான் மனம் வைத்தால் இன்னும் சில நாழிகைப் பொழுதில் அவர்களை இருந்த இடம் தெரியாமல் அழித்துவிடுவேன். நீ இந்த தவத்தை விட்டுவிடு! எங்களோடு புறப்பட்டு வா. இன்று சூரியன் அஸ்தமிப்பதற்குள் பாண்டவர்களின் வாழ்வை முடித்துவிடுகிறேன். பின்பு இந்த உலகம் முழுவதற்கும் ஏகசக்ராதிபதி நீதான்! என்றான். அசுவத்தாமனின் இந்த நீண்ட சொற்பொழிவுக்கு பின்பும் துரியோதனன் கண்களைத் திறக்கவே இல்லை.

இனிமேல் வானமே இடிந்து விழுந்தாலும், துரியோதனனின் தவத்தை கலைக்க முடியாது என்றெண்ணிக் கொண்டு அசுவத்தாமன் முதலியோர் வந்தவழியே திரும்பிச் சென்றார்கள். இந்த நிலையில் பாண்டவர்கள் போர்க்களத்தில் எதிரிகள் யாரும் இல்லாமல் இருப்பதை கண்டு வியந்தனர். இவர்கள் வேறு இடத்தில் மறைந்து சூழ்ச்சி செய்கிறார்களா என்று பாண்டவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அதனால் அவர்கள் கிருஷ்ணரிடம்! துரியோதனன் எங்கே சென்றான்? என்ன செய்கிறான்! என்று கேட்டார்கள். கிருஷ்ணர் தன் ஞானதிருஷ்டியால் துரியோதனன் தவம் செய்து கொண்டிருக்கும் இடத்தை உணர்ந்தார். அவன் எதற்காக தவம் செய்கிறான் என்பதை உணர்ந்ததும் வியப்படைந்தார். கிருஷ்ணர் பாண்டவர்களிடம், துரியோதனன் போரில் இறந்துபோனவர்களை எல்லாம் மீண்டும் உயிர்பெறச் செய்து உங்களோடு போரிடுவதற்காக தவம் செய்கிறான். அவனுடைய தவம் வெற்றி பெற்று விடுமானால் நிச்சயம் அவன் உங்களை வென்று விடுவான் என்று கிருஷ்ணர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக