திருச்சிராப்பள்ளி பெரிய கடை வீதியில் உள்ள ‘அக்க சாலை விநாயகர்’ ஆலயம்.ராணி மங்கம்மாவின் ஆட்சி காலத்தில் பொற்காசுகள் செய்வதற்காக திருச்சிராப்பள்ளியில் ஓரிடத்தை நிர்மாணம் செய்திருந்தார்கள். அங்கு நிறைய பட்டறைகள் அமைத்து பொற்காசுகளை செய்யத் தொடங்கினர். அந்த பட்டறைகள் இருந்த இடம் ‘அக்க சாலை’ என அழைக்கப்பட்டது. அந்த சாலையில் ஓரிடத்தில் ஒரு பிள்ளையார் சிலையை பிரதிஷ்டை செய்து வணங்கத் தொடங்கினர். காலப் போக்கில் அது ஒரு அழகிய ஆலயமாக உருவானது. ஆந்த ஆலயமே தற்போது பெரிய கடை வீதியில் உள்ள ‘அக்க சாலை விநாயகர்’ ஆலயம்.
சுமார் 800 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் நீண்ட மகா மண்டபம் உள்ளது. அடுத்து உள்ள அர்த்த மண்டப நுழைவு வாசலின் இடது புறம் விஸ்வகர்மாவும், வலது புறம் காயத்ரி தேவியும் அருள் பாலிக்கின்றனர். அர்த்த மண்டபத்தில் இடது புறம் சிவபெருமான் திருமேனியும், வலதுபுறம் பார்வதியின் திருமேனியும் உள்ளன.
அடுத்துள்ள கருவறையில் அக்க சாலை விநாயகர் பிரமாண்டமாய் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். இங்கு விநாயகப் பெருமானின் திருமேனி மிகப் பெரியதாக இருக்கிறது. விநாயகரின் துதிக்கை இடது புறம் வளைந்து இருக்க அவர் இடையில் பெரிய நாகத்தை நாகாபரணமாக அணிந்திருக்கிறார். இந்த நாகாபரணத்தை நாம் அபிஷேக நேரத்தில் மட்டுமே காண இயலும். இந்த அக்க சாலை விநாயகரின் சக்தி அபரிதமானது என்கின்றனர் பக்தர்கள்.
ஆண்டு முழுவதும் விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் குறைவின்றி நடந்து வருகிறது. மாதம் தோறும் வளர்பிறை சதுர்த்தியில் காலையில் பல நூறு பக்தர்கள் சூழ கணபதி ஹோமம் நடக்கிறது. மாலையில் விநாயகர் சந்தன காப்பு அலங்காரத்தில் ஜொலிப்பார். அத்துடன் அன்று ஆன்மிகப் பெரியவர்களின் ஆன்மிக சொற்பொழிவும் நடைபெறும். விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து புத்தாடை அணிவித்து, தேங்காய்களை மாலையாகக் கட்டி சாத்தி வேண்டிக்கொண்டால் திருமணத் தடை விலகி, விரைவில் திருமணம் நடைபெறும் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை. நாகாபரணம் அணிந்த இந்த விநாயகருக்கு, பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் நாக தோஷம் விலகும் என்கிறார்கள்.
குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன் இப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை விநாயகர் சன்னிதியில் அமரச் செய்து அரிசி நிரவிய தட்டில் ‘அ’ என்ற எழுத்தை எழுதச் செய்து பின்னரே பள்ளிக்கு அனுப்பும் பழக்கம் இன்னும் உள்ளது. திருமணத்திற்கு தாலி செய்வதற்கு முன் உருக்கிய தங்கத்தை விநாயகர் பாதத்தில் வைத்து ஆராதனை செய்து வணங்கி, பின்னரே தாலி செய்யும் பழக்கம் இன்றும் இப்பகுதி மக்களிடம் காணப்படுகிறது.
இங்கு விநாயகருக்கு குறிப்பிட்ட நட்சத்திரக்காரர்கள் தாங்கள் பிறந்த நட்சத்திரம் அன்று, அபிஷேகம் செய்து வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கிறதாம். அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் சந்தனாதி தைலம் மற்றும் நல்ல எண்ணெயிலும், பரணியில் பிறந்தவர்கள் பச்சரிசி மாவிலும், கார்த்திகைக்காரர்கள் நெல்லி பொடியிலும், ரோகிணிக்காரர்கள் மஞ்சள் பொடியிலும், மிருகசீரிஷக்காரர்கள் திராவியப் பொடியிலும், திருவாதிரையில் பிறந்தவர்கள் பஞ்ச கவ்யம் கொண்டும் அபிஷேகம் செய்ய வேண்டும். புனர்பூசத்தில் பிறந்தவர்கள் கல்கண்டு, திராட்சை, பேரீட்சை, நாட்டு சர்க்கரை, வாழைப்பழம் கலந்த பஞ்சாமிர்தத்திலும், பூசத்தில் பிறந்தவர்கள் மா, பலா, வாழை என்ற முக்கனியிலும், ஆயில்யக்காரர்கள் பாலிலும், மகத்தில் பிறந்தவர்கள் தயிரிலும், பூரத்தில் பிறந்தவர்கள் நெய்யிலும், உத்திரக்காரர்கள் நாட்டு சர்க்கரையிலும், அஸ்தத்தில் பிறந்தவர்கள் தேனிலும், சித்திரைக்காரர்கள் கரும்பு சாற்றிலும் அபிஷேகம் செய்ய வேண்டும்.
சுவாதியில் பிறந்தவர்கள் எலுமிச்சை பழ சாற்றிலும், விசாகத்தில் பிறந்தவர்கள் இளநீரிலும், அனுஷத்தில் பிறந்தவர்கள் அன்னம் கொண்டும், கேட்டை நட்சத்திரக்காரர்கள் விபூதியிலும், மூலத்தில் பிறந்தவர்கள் சந்தனத்திலும், பூராடத்தில் பிறந்தவர்கள் பாலிலும், உத்திராடக்காரர்கள் தயிரிலும், திருவோண நட்சத்திரக்காரர்கள் விளாம் பழத்திலும், அவிட்டத்தில் பிறந்தவர்கள் சந்தனம் மற்றும் பன்னீரிலும், சதயத்தில் பிறந்தவர்கள் பன்னீரிலும், பூரட்டாதியில் பிறந்தவர்கள் சொர்ணத்திலும் (தங்க காசுகள்), உத்திரட்டாதியில் பிறந்தவர்கள் வெள்ளி காசு மற்றும் ஆபரணங்களாலும், ரேவதியில் பிறந்தவர்கள் புனித நீராலும் அக்க சாலை விநாயகரை அபிஷேகம் செய்ய வேண்டும்.
இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 12 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம்
திருச்சி மையப் பகுதியான காந்தி மார்க்கெட்டின் அருகில் உள்ளது அக்கசாலை விநாயகர் ஆலயம். சத்திரம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து நகரப் பேருந்தில் பயணித்து மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் நடந்தே சென்று விடலாம்.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக