சனி பகவானின் வாத நோய் தீர்த்த புண்ணியஸ்தலம் கை, கால்களை அசைக்க முடியாமல், எழுந்து நடக்க முடியாமல் உள்ளவர்கள், திருமறைநாதர் ஆலயத்திற்கு வந்து, திருமறைநாதரை மனமுருக வேண்டிக் கொள்ள வேண்டும்.
திருவாதவூர் திருமறைநாதர் கோவில்
மூளையில் இருந்து நரம்புகளுக்கு உணர்வோட்டமோ அல்லது ரத்த ஓட்டமோ இல்லாமல் நின்று போனால், அந்தந்த உறுப்புகளின் தசைகள் இயங்காமல் சோர்ந்து போய்விடும். அதனை கை, கால் வாதம் என்றும், பக்கவாதம் என்றும் கூறுகிறோம். அதற்கு மருத்துவம் செய்வதுடன், கை, கால்களுக்கு பிசியோ தெரபி என்னும் உடலியக்க பயிற்சி கொடுத்து நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறார்கள். இத்தகைய மருத்துவத்தோடு இறைவனை வழிபடுபவர்களும் உண்டு. வாத நோய்களுக்கு தீர்வளிக்கும் இடமாக விளங்கும் தலங்களில் ஒன்றுதான் திருவாதவூர் திருத்தலம். ‘எங்கோ கேள்விபட்ட பெயராக இருக்கிறதே!’ என்று யோசிக்கிறீர்களா? ஆம்! திருவாதவூரர் என்னும் பெயர் பெற்ற மாணிக்கவாசகர் அவதரித்த தலம்தான் இது. வாதவூர் என்றதும் வாத நோய் உள்ளவர்கள் உள்ள ஊர் என்பது பொருள் அல்ல.
வேதங்களின் பொருளை வாதம் செய்து (Debate), மெய்ப் பொருளை அறிந்த ஊர் என்று பொருள் கொள்ள வேண்டும். அதனால் தான் இத்தல இறைவன் ‘வேதநாதர்’ என்றும், ‘திருமறை நாதர்’ என்றும் அழைக்கப்படுகிறார். சனி பகவானுக்கு, ஒரு முனிவரின் சாபத்தால் முடக்கு வாதம் ஏற்பட்டது. அவர் இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் திருமறை நாதரை வழிபட்டதன் பயனாக நோய் தீர்ந்தது என்று தல புராணம் கூறுகிறது. இந்த ஆலயத்தில் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார் சனி பகவான். அவர் ஒரு காலை மடக்கி வைத்து, மற்றொரு காலைத் தொங்கவிட்டபடி, காகத்தின் மீது அமர்ந்து அருள்பாலிக் கிறார். சனி பகவானுக்கு வாதநோய் தீர்த்த வாதவூர் பெருமான், தன்னுடைய பக்தர்களை மட்டும் காப்பாற்றாமல் விட்டு விடுவாரா என்ன?.
கை, கால்களை அசைக்க முடியாமல், எழுந்து நடக்க முடியாமல் உள்ளவர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து, திருமறைநாதரை மனமுருக வேண்டிக் கொள்ள வேண்டும். மேலும் மூலவருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, அந்த எண்ணெயை வீட்டிற்கு எடுத்துச் சென்று, கை, கால்களில் தேய்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு முப்பது நாட்கள் அல்லது நாற்பத்து எட்டு நாட்கள் தொடர்ச்சியாக தேய்த்து வந்தால், வாத நோய் குணமாவதாக கூறப்படுகிறது. சித்தா, ஆயுர் வேத மருத்துவத்திலும் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வது ஒரு வைத்திய முறையாகும். வாதநோய் குணமான பிறகு, இந்த ஆலயத்திற்கு வந்து இறைவனுக்கு நைவேத்தியம் படைத்து, அன்னதானம் செய்து வழிபடும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம்.
சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர், அரிமர்த்தனப் பாண்டிய மன்னனிடம் அமைச்சராக இருந்தவர். அவர் சிவன் மீதுள்ள பக்தியின் காரணமாக மன்னன் கொடுத்த பொற்காசுகளைக் கொண்டு ஆவுடையார் கோவில் என்னும் ஊரில் கோவில் அமைக்கும் பணிக்காக செலவிட்டார். அத்தகைய சிறப்புமிக்க அன்பரான மாணிக்கவாசகருக்கு, திருவாதவூரில் தனிக்கோவில் கட்டப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அவரைத் தரிசித்து விட்டு சிறிது தூரம் நடந்து சென்றால், ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட கிழக்கு நோக்கிய சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயம்தான் திருமறைநாதர் வீற்றிருக்கும் கோவிலாகும். இதன் முன்பாக தீர்த்தக்குளம் ஒன்றும் இருக்கிறது. திருமாலுக்கு ‘மறையின் பொருள் நானே’ என்று இத்தல ஈசன் உபதேசித்தார். எனவே அவர் திருமறைநாதர் என்று பெயர் பெற்றுள்ளார். பசுவின் குளம்பு பதிந்த சுயம்புத் திருமேனியுடன் விளங்கும் எம்பெருமானை, திருமால், பிரம்மன், அக்னிபகவான், வாயு, சனீஸ்வரர் ஆகிய தேவர்கள் வழிபட்டு நற்பேறு பெற்றுள்ளனர்.
ஆரணவல்லி அம்பிகை கிழக்கு பார்த்த சன்னிதியில் இருந்து அருள்கிறார். இந்த அம்பாளுக்கு ‘திருமறை நாயகி’ என்ற பெயரும் வழங்கப்படுகிறது. இவர் பிரம்மனின் வேள்வியில் தோன்றியதாகத் தல புராணம் சொல்கிறது. தாமரை தடாகத்தில் உள்ள ஒரு மலருக்கு பசுவொன்று பால் சொரிந்து அபிஷேகம் செய்து வந்தது. இதைப் பார்த்த திருமால் அங்கே சிவலிங்கம் ஒன்று இருப்பதைக் கண்டு, அதற்கு பூஜை செய்தார். இதன் வாயிலாக பிருகு முனிவரிட்ட சாபத்தில் இருந்து விமோசனம் பெற்றார் என்பது புராணக் கதை. இந்த ஆலயத்தின் தல விருட்சமாக மகிழ மரம் உள்ளது. பழமையான கோவில் என்றாலும் இத்தலத்தில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய பதிகங்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் பாண்டிநாட்டு தேவார வைப்புத் தலங்களில் ஒன்றாக இந்த ஆலயம் கருதப்படுகிறது.
இந்த ஆலயத்தில் தான் மாணிக்கவாசகருக்கு, இறைவன் சிலம்பொலி ஓசை கேட்கச் செய்தார். இந்த தகவலை, ‘வாத வூரினில் வந்தினிது அருளிப் பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்’ என்ற திருவாசக வரிகள் எடுத்துரைக்கின்றன. திருமண வரம், குழந்தைப் பேறு, தொழில் வளர்ச்சி போன்றவற்றிற்கும், இத்தல இறைவனை வழிபடும் பக்தர்கள் ஏராளம். பொதுவாக சிவாலயங்களில் நடைபெறும் அனைத்து விழாக்களும் இந்த ஆலயத்திலும் நடைபெறுகின்றன. என்றாலும் 12 நாட்கள் நடைபெறும் ஆவணி மூலத் திருவிழா சிறப்புக்குரியது. இந்த விழா மாணிக்கவாசகருக்காக இறைவன் நரியை பரியாக மாற்றிய கதையை நினைவுபடுத்துகிறது.
தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் திருவாதவூர் திருத்தலம் அமைந்துள்ளது. மேலூரில் இருந்து பஸ் வசதிகள் உள்ளன. மதுரை ஒத்தக்கடையில் இருந்து திருமோகூர் சென்று, அங்கிருந்து சுமார் 8 கிலோமீட்டர் சென்றால் திருவாதவூர் ஆலயத்தை அடையலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக