Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 7 மே, 2020

இனிப்பைத் தின்ற எறும்பு.!

அவலூரில் கிழவன் ஒருவன் இனிப்பு கடை நடத்தி வந்தான். சிறுவர்கள் அந்தக் கடையில் இனிப்பு வாங்கிச் சாப்பிடுவர். அந்தக் கடைக்கார கிழவனுக்கு, சிறுவர்களைப் பிடிக்காது. ஆனால், ஏதேனும் வேலை செய்வதற்கு மட்டும் அழைப்பான்.

 இந்த வேலையை முடியுங்கள் இனிப்பு தருகிறேன் என்று பொய் சொல்லி ஏமாற்றி வேலைவாங்குவார். இதனால், சிறுவர்களுக்கு அவனைக் கண்டாலே பிடிக்காது.

 மதிய நேரத்தில், கடைக்குள் படுத்துத் தூங்குவான். அந்த நேரத்தில் சிறுவனாக இருந்த அவன் மகன், கடையைப் பார்த்துக்கொள்வான்.

 அந்தக் கடைக்காரன் ஒரு நாள் பலகாரங்கள் வைப்பதற்காக மண்பாண்டம் செய்பவர்களிடம் சென்று முப்பது பானைகள் செய்ய வேண்டும். எப்போது செய்து தருவீர்கள்? என்று கேட்டான். ஒரு வாரத்தில் தயாராகி விடும், என்றனர்.

 குறிப்பிட்ட நாள் வந்தது. அந்தப் பானைகளைக் கடைக்குள் எடுத்து வர சிறுவர்களை அழைத்து மண்பாண்டம் செய்பவர்களிடம் முப்பது பானைகள் உள்ளன. அவற்றைக் கவனமாக எடுத்து வாருங்கள். நான் இனிப்பு தருகிறேன் என்றார்.

 அவர் சொன்னதை நம்பி அவர்களும் பானைகளை கடைக்குக் கொண்டு வந்தனர். நிறைய இனிப்பு கிடைக்கப் போகிறது, என்று மகிழ்ச்சியில் இருந்தனர் சிறுவர்கள்.

 எங்களுக்குத் தருவதாகச் சொன்ன இனிப்பைத் தாருங்கள். நாங்கள் சாப்பிட்டுக் கொண்டே செல்கிறோம், என்றனர் சிறுவர்கள். உங்களுக்கு இனிப்பு தரமாட்டேன் என்று சொல்லி விரட்டியடித்தான் கடைக்காரன்.

 தாங்கள் ஏமாந்து விட்டதை எண்ணி அழுது கொண்டே அங்கிருந்து சென்றனர் சிறுவர்கள். அந்த வழியாக வந்த சதீஷ், ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டார்.

 சதீஷ் மாமா! அந்த இனிப்புக் கடைக்காரர் எங்களை ஏமாற்றிவிட்டார், என்று நடந்ததை எல்லாம் சிறுவர்கள் கூறினர். கவலைப்படாதீர்கள்! உங்களுக்குக் கிடைக்க வேண்டிய இனிப்பிற்கு அதிகமாகவே கொண்டு வருகிறேன். நீங்கள் வெளியே நில்லுங்கள், என்று சொல்லிவிட்டு சதீஷ், கடைக்குள் நுழைந்தார்.

 அப்போது கடைக்காரனின் மகன்தான் கடையைக் கவனித்துக் கொண்டிருந்தான். உள்ளே இருந்த அறைக்குள் கடைக்காரன் தூங்கிக் கொண்டிருந்தான்.

 இவனை எளிதாக ஏமாற்றலாம் என்று நினைத்த சதீஷ், இனிப்புகளை எடுத்துச் சாப்பிட்டான். இதைப் பார்த்த சிறுவன், பணம் தராமல் எதையும் தொடக்கூடாது, என்று கத்தினான்.

 தம்பி! உன் தந்தைக்கு என்னை நன்றாகத் தெரியும். என் பெயர் எறும்பு. நீ வேண்டுமானால் அவரிடம் இனிப்பை நான் சாப்பிடுவதாகச் சொல். அவர் ஒன்றும் சொல்ல மாட்டார், என்றான் சதீஷ் அப்பா! கடைக்குள் எறும்பு வந்துள்ளது. நான் சொல்லியும் கேளாமல் இனிப்பை எடுத்துச் சாப்பிடுகிறது, என்றான் சிறுவன்.

 தூக்கம் கலைந்ததால், எரிச்சல் அடைந்த கடைக்காரன், மகனே! எறும்பைச் சமாளிக்க உன்னால் முடியாதா? என்று கத்தினான். இதைக் கேட்ட சதீஷ், உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே இனிப்பு பாத்திரத்தைத் தூக்கிக்கொண்டு சிறுவர்களுக்குக் கொடுக்கச் சென்றார். இதைப் பார்த்த அவன், அப்பா நிறைய இனிப்புகளை எறும்பு எடுத்துச் செல்கிறது. பணம் ஏதும் தர வில்லை, என்று கத்தினான்.

 இதைக் கேட்ட கடைக்காரன் கோபமடைந்தான். என் தூக்கத்தைக் கெடுக்காதே என்று எத்தனை முறை சொல்வது? என்று திட்டினான். பின்பு, இனிப்புகளை சிறுவர்கள் மகிழ்ச்சியாகச் சாப்பிட்டனர். உங்களை ஏமாற்ற முயன்ற கடைக்காரனை நன்றாக ஏமாற்றி விட்டேன், என்று சொல்லி சதீஷ், கிளம்பிவிட்டான்.

 தூக்கம் கலைந்து எழுந்த கிழவன், விஷயம் அறிந்ததும் குய்யோ, முய்யோ என கத்தினான். யார் அந்த எறும்பு என்று தெரியாமல் யோசித்துக்கொண்டே நின்றான்.

நீதி :

பிறரை ஏமாற்றுதல் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக