வெள்ளி, 29 மே, 2020

துரியோதனனுக்கும், பீமனுக்கும் நடக்கும் பதினெட்டாம் நாள் போர்..!

கிருஷ்ணர், பாண்டவர்களிடம் துரியோதனனின் தவம் வெற்றி பெற்றால் உங்களை வென்று விடுவான் என்று கூறியதும் பாண்டவர்கள் திகைத்து நின்றனர். உடனே பீமன், நாங்கள் துரியோதனனின் தவத்தை நிறைவேற்ற முடியாமல் தடுத்துவிடுவோம். 

அவன் தவம் முடிவதற்குள் அவனுடைய வாழ்வையே முடித்து விடுவோம் என்று கூறினான். துரியோதனன் தவம் செய்து கொண்டிருக்கும் இடத்திற்குப் பாண்டவர்கள் செல்ல நினைத்தனர். அதற்காக கிருஷ்ணர், பாண்டவர்களை துரியோதனன் தவம் செய்து கொண்டிருந்த ஆலமரத்தடிக் குளத்திற்கு அழைத்துச் சென்றார். அனைவரும் கரையோரத்தில் நின்று கொண்டனர். ஆனால் பீமன் மட்டும் நீருக்குள் இறங்கி துரியோதனனை வம்புக்கு இழுத்தான்.

பீமன், துரியோதனனிடம்! பீஷ்மர், துரோணர், கர்ணன் முதலிய வீரர்களை எல்லாம் போரில் பறிகொடுத்துவிட்டு நீ மட்டும் உயிரோடு தவம் செய்வதற்கு வந்துவிட்டாயோ? வாளேந்திப் போர் செய்யத் தெரியாத நீ தவம் செய்து எங்களை வீழ்த்தப் போகிறாயா? வீரமில்லாத நீ முனிவர்களைப் போலத் தவம் செய்வதாகப் பாசாங்கு செய்கிறாய். 

அன்று அரசர்கள் கூடிய பேரவையில் எங்கள் திரௌபதியை நீ அவமானப்படுத்திய போது நான் ஒரு சபதம் செய்தேன். அந்தச் சபதத்தை நிறைவேற்றுவதற்குரிய நேரம் இப்பொழுது நெருங்கிவிட்டது. உன்னோடு போர் செய்து உன்னை கொல்வதற்கே இப்போது இங்கே வந்து நிற்கிறேன். எழுந்திரு, கரையேறி வந்து என்னுடன் போருக்கு வா! என்று பீமன் அழைத்தான்.

பீமனின் பேச்சு துரியோதனனுடைய பொறுமையைச் சோதித்து விட்டது. முன்பு அசுவத்தாமன் முதலியோர் வந்து அழைத்த போது தவத்தை கைவிடாமல் இருந்தவன், இப்போது பீமன் கூறியதைக் கேட்டு கோபம் கொண்டு அவனை எதிர்ப்பதற்காக தவத்தை கைவிட்டு கரையேறினான். பீமன்மேல் துரியோதனனுக்கு ஏற்பட்டிருந்த கோபம் அவனுடைய தவத்தை கலைத்து விட்டது. 

பாண்டவர்களை சினத்தோடு பார்த்து, இங்கு தனியாக ஆயுதமின்றி தவகோலத்தில் நிற்கும் என்னைப் போருக்கு அழைப்பது நியாயமா? நீங்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஆயுதங்களோடு வந்துள்ளீர்கள். ஆனால் நான் ஆயுதமின்றி தனியாளாய் நிற்கிறேன். அதனால் உங்களில் யாராவது ஒருவர் மட்டும் என்னோடு யுத்தம் செய்ய வாருங்கள்! என்று துரியோதனன் அழைத்தான்.

உடனே கிருஷ்ணர் துரியோதனனிடம்! உன்னை எதிர்ப்பதற்கும், அழிப்பதற்கும் பிறந்தவன் பீமன் ஒருவனே. பீமன் உன்னை கொல்வதாகச் சபதம் செய்திருப்பதை நீ மறந்திருக்க மாட்டாய். நீயும் பீமனும் இப்போது போர் புரியுங்கள். உங்களில் யாருக்கு வெற்றி கிடைக்கிறதோ! அவர்களுக்கு இந்தப் பரந்த தேசமும், ஆட்சி உரிமையும் சொந்தமாகும் என்று கூறினார். 

கிருஷ்ணர் கூறிய நிபந்தனைக்கு துரியோதனன் இணங்கினான். பீமன், துரியோதனன் இருவரும் கதாயுதத்தால் போர் புரிவதற்கு தீர்மானித்தனர். ஆனால் போரை எந்த இடத்தில் நடத்துவது என்ற பிரச்சனை ஏற்பட்டது. அப்போது பல நாட்களாக யாத்திரை சென்றுவிட்டு வந்திருந்த விதுரரும், பலராமனும் அந்தப் பாதையில் வந்தார்கள். பாண்டவர்களுக்கு, விதுரரின் எதிர்பாராத சந்திப்பால் ஏற்பட்ட மகிழ்ச்சியோடு, ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக்கொண்டனர்.

தீர்த்த யாத்திரை சென்ற இடங்களில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைப் பற்றி விதுரரும், பலராமரும் விரிவாகக் கூறினார்கள். போர்க்களத்தில் பதினேழு நாட்களாக நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றிப் பாண்டவர்கள் விதுரருக்கும், பலராமருக்கும் கூறினார்கள். பிறகு பாண்டவர்கள் சார்பாக பீமனும், கௌரவர்கள் சார்பாகத் துரியோதனனும் கதாயுதங்களால் போர் செய்வார்கள். போரில் யாருக்கு வெற்றியோ அவர்கள் அரசாளலாம் என்று தீர்மானித்திருக்கிறோம். தீர்மானப்படி போரை எந்த இடத்தில் நடத்துவதென்பது தான் தெரியவில்லை என்று கூறினார்கள். கிருஷ்ணர், பலராமரிடம் போரை எந்த இடத்தில் நடத்தலாம் என்பதை நீங்களே சொல்லுங்கள் என்று கேட்டார். அதற்கு பலராமர் கிருஷ்ணரிடம் நீங்களே! பொதுவாக இருவருக்கும் போர் நடத்தும் இடத்தை நிர்ணயித்துக் கூறுங்கள் என்றார்.

கிருஷ்ணர், போர் புரிவதற்கு போர்க்களத்திற்கு அருகிலிருக்கும் சமந்த பஞ்சகம் என்னும் இடத்தை கூறினார். உடனே விதுரர், பலராமர் உட்பட யாவரும் அருகிலிருந்த சமந்த பஞ்சகம் என்னும் மலைக்குப் புறப்பட்டுச் சென்றனர். பீமனுக்கும், துரியோதனனுக்கும் போர் நிகழ்வதற்குரிய ஏற்பாடுகள் அங்கே நடந்தன. ஆனால் துரியோதனனுக்கு மனதில் குழப்பமும், கலக்கமும் நிறைந்திருந்தன. தர்மருக்கு நான்கு தம்பிமார்கள். எனக்கு நூறு தம்பிமார்கள். தர்மருடைய நான்கு சகோதரர்களும் அவன் அருகிலேயே நிற்கின்றனர். ஆனால் என்னுடைய நூறு சகோதரர்களில் இப்போது ஒருவன்கூட உயிருடன் இல்லை என்று துரியோதனன் மனம் கலங்கி நின்றான்.

அதைக் கண்ட தர்மர், துரியோதனனிடம் இந்த உலகத்தில் உண்மையான அன்பும் நேசமும் கொண்டு சகோதரனாக வாழ்வதைப் போல் சிறந்த பாக்கியம் வேறு எதுவும் இல்லை. இப்போது இந்த கடைசி விநாடியில் நீ விரும்பினால் போரை நிறுத்திச் சமாதானமடைந்து எங்கள் அன்புச் சகோதரனாக உன்னை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்று தர்மர் கூறினார். ஆனால் துரியோதனன் அதற்குச் சம்மதிக்கவில்லை. என் உற்றார் உறவினர், உடன் பிறந்தவர்களையெல்லாம் போரில் கொன்று விட்டீர்கள். வெற்றியோ தோல்வியோ, வாழ்வோ மரணமோ, முடிவு எதுவானாலும் அதைப் போர் செய்தே தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்! என்று பாண்டவர்களிடம் கோபத்தோடு கூறினான். சமந்த பஞ்சகத்திலுள்ள ஒரு பெரிய பூஞ்சோலையில் பீமனுக்கும், துரியோதனனுக்கும் போர் ஆரம்பமாயிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்