Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 29 மே, 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 031

சோமாசிமாற நாயனார் !!

பல வளங்கள் நிரம்பி இருந்த சோழநாட்டில், திருவம்பர் என்னும் ஊரில் வாழ்ந்து வந்த அந்தணர் குலத்தில் தோன்றியவர்தான் மாறநாயனார். இவர் சிறுவயது முதலே சிவபெருமானின் மீது மிகுந்த பக்தியும், அன்பும் கொண்டிருந்தார். சிவபெருமானை அடைய சிறந்ததொரு வழியாக எம்பெருமானை வழிபடும் அடியார்களுக்கு தேவையான பொருள் உதவிகளையும், அவர்களுக்கு வேண்டிய உணவுகளையும் அளிப்பது என்பது தமது தலையாய கடமையாக கொண்டிருந்தார்.

இவர் ஒழுக்க நெறிகளில் பிழை ஏதும் ஏற்படாதவாறு முறையோடு வாழ்ந்து வந்தவர்களில் இவரும் ஒருவர். இவர் மற்றவர்களுக்கு செய்யும் உதவிகளாலும், இவர் வாழ்ந்து வந்த வாழ்க்கை நெறிமுறைகளாலும் அனைவராலும் போற்றப்படும் அளவிற்கு மேம்பட்டு விளங்கினார். இவர்தம் திருமேனியில் எந்தவொரு பொழுதாக இருந்தாலும் திருநீறணிந்த வண்ணமும், நமசிவாய எனும் மந்திரத்தை உச்சரித்த வண்ணமும் இருந்து வந்தார்.

மாறநாயனார் எப்பொழுதும் எம்பெருமான் வீற்றிருக்கும் திருத்தலங்களை அடைந்து, அவரை வணங்கி வந்து கொண்டிருந்தார். எந்தவொரு தினமாக இருந்தாலும் எம்பெருமானை வணங்கும் தினமே சிறந்த தினமாக கருதிக் கொண்டு வாழ்ந்து வந்தார். இறைவனின் திருவடி நிழலையே பற்றி வீடு பேற்றை அடைவதற்கான ஒப்பற்ற வேள்விகள் பல நடத்தி வந்தார்.

உயிர்கள் வாழும் இந்த உலகத்தை மட்டுமல்லாமல் இந்த பிரபஞ்சத்தை எல்லாம் கட்டிக்காக்கும் எம்பெருமானே அனைவருக்கும் முதல்வன் என்று எண்ணி, வேள்விகள் பல செய்து, உலகம் முழுவதும் அறியும்படி செய்தவர் இவர். வேள்விகளில் சிறந்த சோம வேள்வியால் எம்பெருமானை வழிபட்டதால் இவர் சோமாசிமாற நாயனார் என்று அழைக்கப்பட்டார்.

சோமாசிமாற நாயனார் சிவத்தலங்கள்தோறும் சென்று எம்பெருமானை தரிசனம் செய்து வந்தார். இவ்வாறாக பல சிவத்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்து மாறநாயனார் திருவாரூரை அடைந்தார். எம்பெருமானை வழிபட்டுவிட்டு தேவாசிரியத் திருமண்டபத்தைத் தொழுது நின்றார். அவ்வேளையில் எதிர்பாராத விதமாக சுந்தரமூர்த்தி சுவாமிகள் பரவை நாச்சியாரோடு திருவாரூருக்கு எழுந்தருளியிருந்தார்.

அவர்களை அம்மண்டபத்தில் கண்டதும் நாயனாருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி என்பது எல்லை இல்லாத வகையில் இருந்து வந்தது. சிறிதும் தாமதிக்காமல் சோமாசிமாற நாயனார் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருப்பாதம் பணிந்து வழிபட்டார். ஒருநாள் யாகவேள்விகளை செய்து கொண்டு இருக்கும்போது சோமாசிமாற நாயனாருக்கு ஓர் எண்ணமும், ஆசையும் தோன்றியது. அதாவது யாகத்தீயில் தாம் பூஜிக்கும் பழங்கள், வஸ்திரங்கள், நைவேத்ய பொருட்கள் போன்றவற்றை எம்பெருமானே நேரில் வந்து பெற வேண்டும் என்ற ஆசை தோன்றியது.

தனது ஆசையும், எண்ணமும் நிறைவேற எம்பெருமானுக்கு தூது செல்ல ஒரு அன்பர் வேண்டும் என்று எண்ணினார். அப்படியென்றால் சிவபெருமானிடம் தூது செல்ல அவரது அன்புக்கு பாத்திரமான சுந்தரரிடம் நட்பு கொள்ள வேண்டும் என்று நினைத்தார். எம்பெருமானுக்கும், சுந்தரருக்கும் இருக்கும் அன்பு பிணைப்பை முன்னரே அறிந்திருந்தார் சோமாசிமாற நாயனார்.

ஆயினும் அன்று ஒருநாள் திருத்தலத்தில் சந்தித்த ஒரு சந்திப்பு நட்புறவை உண்டாக்காது என்று எண்ணினார். சுந்தரரின் நட்பை பெறுவது எப்படி? என்று எண்ணினார். அவ்வேளையில் அவருடன் இருக்கும் அடியார்களிடம் சுந்தரர் பற்றிய தகவல்களை சேகரிக்க துவங்கினார். அப்போதுதான் சுந்தரருக்கு தூதுவளைக்கீரை பிடிக்கும் என்பதை அறிந்தார்.

சுந்தரருக்கு தூதுவளைக்கீரையைத் தினமும் பறித்து கொடுத்து அதன் மூலம் நட்பை வளர்க்கலாம் என்று தினமும் ஆற்றில் குளிக்கும்போது அடுத்தக் கரைக்கு நீந்திச்சென்று தூதுவளைக்கீரையைப் பறித்துவந்து சுத்தம் செய்து சுந்தரருக்கு கொடுத்து சென்றார் நாயனார். தினமும் தமது உணவில் தமக்கு பிடித்த தூதுவளைக்கீரை இருப்பதை பற்றி அறிந்து கொண்ட சுந்தரர் பரவை நாச்சியாரிடம் இதை பற்றி வினவினார். பரவை நாச்சியாரும் சோமாசிமாற நாயனார் என்ற அடியார் தினமும் தங்களுக்கு பிடித்த இந்த கீரையை கொண்டு வருவதாக கூறினார்.

பின்பு சுந்தரர் சோமாசிமாற நாயனாரை நேரில் கண்டு தனக்கு பிடித்த உணவை அளித்து வந்தமைக்கு நன்றிகள் பல என உரைக்க துவங்கியதும் சோமாசிமாற நாயனார் இது எமக்கு கிடைத்த பாக்கியம் என்று கூறினார். அடியாருக்கு அடியார் பணிந்த வண்ணம் பேசியது சுந்தரருக்கு இவரின் மீது அன்பை அதிகரிக்கச் செய்தது. நாளடைவில் இருவரும் தோழர்களாக பரஸ்பர நம்பிக்கையுடன் பழகினர்.

இவ்விதம் சென்று கொண்டிருந்த வேளையில் ஒருநாள் சுந்தரரிடம் தமது மனதில் உள்ள நீண்ட நாள் ஆசையையும், கனவுகளையும் தெரிவித்தார் சோமாசிமாற நாயனார். இதைக் கேட்டதும் சுந்தரனார் உமது விருப்பம் நிறைவேறும் என்றும், அதற்காக என்னால் முடிந்த அளவுகள் முயற்சி செய்கின்றோம் என்றும் வாக்குறுதி கொடுத்தார் சுந்தரர்.

காலம் கடந்து செல்ல மாறனார் எதிர்பார்த்தது போலவே வாய்ப்புகளும் ஏற்பட துவங்கின. சுந்தரனார் இறைவனிடம் சோமாசிமாற நாயனார் விருப்பங்களை தெரிவித்து அவர் வளர்க்கும் வேள்விகளில் தாங்கள் வந்து வேள்விகளில் தங்களுக்கு அளிக்கப்படும் பழங்களையும், வஸ்திரங்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கு தாங்கள் நேரில் வந்து காட்சி அளிக்க வேண்டும் என்றும் வேண்டி நின்றார்.

அடியாரின் அன்புக்குக் கட்டுப்பட்ட எம்பெருமான் தமது விருப்பமான ஒரு அடியாரின் விருப்பங்களை நிறைவேற்ற கூடியவர் அல்லவா? அவரின் எண்ணம் போலவே யாம் வேள்விக்கு வருவதாக சுந்தரரிடம் கூறினார் எம்பெருமான். ஆனால் ஒரு நிபந்தனையின் அடிப்படையிலேயே என்று தமது திருவிளையாடல்களையும் துவங்கினார். யாம் வேள்விக்கு வருவோம் என்றும், ஆனால் வேள்வியில் எந்த வகையான ரூபத்திலும் வருவேன் என்றும் கூறினார்.

எம்பெருமான் மொழிந்தவற்றை சுந்தரனார் சோமாசிமாற நாயனாரிடம் எடுத்துரைத்தார். நிகழ்ந்தவற்றை அறிந்ததும் சோமாசிமாறனார் அடைந்த மகிழ்ச்சி என்பது எல்லை இல்லாத வகையில் இருந்தது. அதாவது, தான் வளர்க்கும் யாகத்தில் இறைவன் வரப்போகிறார் என்ற மகிழ்ச்சி அவரை மண்ணுலகத்திலும், விண்ணுலகத்திலும் இக்கணத்தில் தன்னை விட மிகுந்த மகிழ்ச்சியில் எவரும் இல்லை என்பதை போல அவரை உணர்த்தியது.

இச்செய்தியானது எங்கும் பரவத்துவங்கியது. அதாவது சோமாசிமாறனார் வளர்க்கப் போகும் வேள்வியில் இறைவன் பங்குகொள்ள போகின்றார் என்ற செய்தியானது மக்களிடையே பரவத்துவங்கியது. மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் சோமாசிமாறனார் வளர்க்க இருக்கும் வேள்விக்காக காத்துக் கொண்டிருந்தனர். வைகாசி மாதத்தில் ஒரு சுபமுகூர்த்த நாளில் சோமாசிமாற நாயனார் வேள்வி நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்தார். சோமாசிமாறனார் வேள்வி நடத்த இருக்கும் செய்தியானது நாட்டு மக்கள் அனைவரிடத்தும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது.

இறைவனே நேரடியாக வருவதால் நாட்டில் பல பகுதியிலிருந்தும் வேத விற்பன்னர்கள், முனிவர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் சூழ யாகம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. அவ்வேளையில் யாகம் நடந்து கொண்டிருந்த இடத்திற்கு நான்கு வேதங்களையும், நான்கு நாய்களாக கையில் பிடித்தபடி மகன்கள் இருவரும், மனைவியானவள் இடையிலே 'கள்" நிறைந்த குடத்தை சுமந்தபடியும், தம்பட்டம் அடித்த வண்ணம், மாட்டு இறைச்சி ஆகியவற்றை சுமந்துகொண்டு பறையன் உருவில் எழுந்தருளினார்.

வேள்வி நடந்து கொண்டிருந்த இடத்தில் பறையன் வந்திருப்பதால் வேள்வியின் புனிதத்தன்மையும், இறைவன் வருவதற்கான சூழலும் இல்லை என்று கூறி அங்கிருந்த அனைவரும் அவ்விடத்தை விட்டு ஓடத் துவங்கினர். ஆனால் சோமாசிமாறனார் எவ்விதமான தயக்கமுமின்றி முதல் தெய்வமான விநாயகரைத் துதித்து யாகம் தடைபடாமல் இருக்க வேண்டினார். விக்னங்களை களைபவர் அல்லவா? விக்னேஸ்வரன். அப்போது கண நாயகன் வந்திருப்பது இறைவனே என்று உணர்த்தி அவரிடம் ஏற்பட்ட அச்சத்தைப் போக்கினார்.

ஆகையால், வந்திருப்பது இறைவன் என்று தெரிந்துகொண்ட சோமாசிமாறனார் மிகுந்த மகிழ்ச்சியுடன், தனது மனைவியுடன் பறையர் தம்பதிகளை எதிர்கொண்டு வரவேற்று அவர்களுக்கு அவிர்பாகம் கொடுத்தார். இறைவனும் தனது பறையன் உருவைக் களைந்து ரிஷப வாகனத்தில் சோமாசிமாறனாருக்கும், அவர் மனைவிக்கும் காட்சி கொடுத்து அருளினார். இவ்விதமாக திருவைந்தெழுத்து மகிமையால் விடையில் எழுந்தருளும் சடைமுடிப் பெருமானின் திருவருளைப் பெற்று வாழும் அருந்தவப் பேற்றினைப் பெற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக