Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 19 மே, 2020

பதினேழாம் நாள் போர் தொடக்கம்..!

 கௌரவர்கள், முதல் நாள் போருக்குத் தயாரானார்கள். பாண்டவர்கள் இந்தப் போரிலும் வெற்றியைத் தாங்களே அடைய வேண்டுமென்று ஆர்வத்தோடு புறப்பட்டிருந்தார்கள். 

துரியோதனனுடைய மனதில் போரில் யாருக்கு வெற்றி, யாருக்குத் தோல்வி என்று உடனே தெரிந்து கொள்ளும் ஆர்வம் நிறைந்திருந்தது. தர்மர், பீமன், கிருஷ்ணர், அர்ஜூனன் முதலியவர்களும் போருக்கு வந்து சேர்ந்தார்கள். 

தர்மர், கிருஷ்ணரிடம் இந்தப் போர் எத்தனை நாட்களுக்குதான் நடந்து கொண்டிருக்கும். இருபக்கமும் பதினாறு நாட்களாக எவ்வளவு உயிர்கள் மடிந்திருக்கும். கர்ணனுடைய முடிவு எப்போது? என்று கேட்டார்.

அதற்கு கிருஷ்ணர், தர்மரிடம் உன் ஆசை நிறைவேறும் காலம் நெருங்கிக் கொண்டுதான் இருக்கிறது. நாளைக்கு மறுநாள் அஸ்தினாபுரத்தின் அரியணையில் பாண்டவர்களின் ஏகப் பிரிதிநிதியாக நீ வீற்றிருக்கப் போகிறாய். 

இன்று போர் முடிவதற்குள் கர்ணனின் காலமும் முடிந்து விடும். அர்ஜூனன் கைகளால் கர்ணன் இறக்கப் போகிறான் என்று கூறினார். பிறகு கிருஷ்ணர் துஷ்டத்துய்மன் பக்கம் திரும்பினார். துஷ்டத்துய்மனிடம் படைகளை அணிவகுத்து நிறுத்துமாறு கட்டளையிட்டார். துஷ்டத்துய்மனும் உடனே படைகளை அணிவகுத்து வரிசையாக நிறுத்தினான்.

தர்மர் முதலிய பாண்டவ படைகள் ஆயுதங்களைத் தரித்துக் கொண்டனர். கர்ணன், சல்லியனை தன்னுடைய தேர்ப்பாகனாக அமர்த்தி கொண்டான். சல்லியன் கர்ணனுடைய தேரில் அழகிய உயர்ந்த குதிரைகளைப் பூட்டி தயார் செய்து கொண்டபின் தேரோட்டியின் ஆசனத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டான். 

படைகளும் போருக்கு ஏற்ற முறையில் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்தன. பாண்டவர் பக்கமிருந்து துஷ்டத்துய்மன் தம் படைகளோடு போர் புரிய ஆரம்பித்தான். சோமக வம்சத்தைச் சேர்ந்த பெருவீரர்கள் பலரும் துஷ்டத்துய்மனோடு சேர்ந்து வந்தார்கள்.

கர்ணனும் தன்னுடைய படைகளுடன் துஷ்டத்துய்மனை எதிர்த்துப் போர் புரிந்தான். விரைவில் போர் உச்சநிலையை அடைந்தது. வீரர்கள் பலர் இரு தரப்பிலும் அம்புகள் பட்டு இறந்தனர். திடீரென்று கர்ணனும் அவனுடைய படைகளும் விரைவாக முன்னேறினர். கர்ணன், துஷ்டத்துய்மனை மிக கடுமையாகத் தாக்கினான். 

இந்த தாக்குதலை சமாளிக்க முடியாமல் துஷ்டத்துய்மன் தன்னுடைய தேரை திருப்பிச் செலுத்திக் கொண்டு சென்று விட்டான். இதனைக் கண்ட தர்மர், பீமனிடம் கர்ணனை எதிர்த்துப் போர் செய்யுமாறு கட்டளையிட்டார். தர்மரின் கட்டளையை நிறைவேற்ற பீமன் கோபத்தோடு கர்ணன் இருந்த திசையில் பாய்ந்து சென்றான். பீமனுக்கும், கர்ணனுக்கும் பயங்கரமான போர் நடந்தது. போர்க்களத்தின் வேறு பகுதிகளிலும் போர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது.

சாத்தகிக்கும் விடசேனனுக்கும், சோழனுக்கும் மகதனுக்கும், அர்ஜூனனுக்கும் அசுவத்தாமனுக்கும் போர்கள் நடந்தன. சாத்தகியோடு போர் புரிந்த விடசேனன் தேரையும் ஆயுதங்களையும் இழந்தான். கர்ணன் எய்த சில கணைகள் தர்மருடைய உடலில் தைத்தன. கோபமடைந்த தர்மர் கர்ணனுடைய வில்லை, தேரையும் சிதறிப் போகுமாறு ஒடித்துத் தள்ளினார். 

தேரோட்டியாக இருந்த சல்லியன் உடம்பில் ஆயிரக்கணக்கான அம்புகள் துளைத்தது. தேரின் முன்புறம் கட்டப்பட்டிருந்த குதிரைகள் மீதும் அம்புகள் பாய்ந்து இறந்தனர். அதனால் கர்ணன் போர் புரியாமல் அங்கிருந்து புறப்பட்டு திரும்பினான். பிறகு சிறிது நேரத்தில் கர்ணன் தேரில் நின்று சங்கு முழங்கியவாறே படைகளோடு புறப்பட்டு வந்து கொண்டிருந்தான். தர்மருக்கு அருகில் வந்ததும் வில்லை வளைத்து அம்புகளைத் தொடுக்க ஆரம்பித்தான்.

திடீரென்று ஏற்பட்ட தாக்குதலைத் தர்மர் சமாளிக்க முடியவில்லை. அதனால் அவருடைய மார்பிலும் தோளிலும் சில அம்புகள் ஆழமாகப் பாய்ந்து விட்டன. தர்மருடைய தேரின் பல பகுதிகளிலும் அம்புகள் சடசடவென்று மோதியதால் தேர்ச்சங்கரங்களும் அச்சுகளும் முறிந்தன. 

கர்ணன் தர்மரைப் பழிக்குப் பழிவாங்க வேண்டும் என்பதைப் போல ஆக்ரோஷமாகப் போர் செய்து கொண்டிருந்தான். இதனைக் கண்டதும் பீமன் தன் படைகளோடு தர்மருக்கு துணையாக வந்தான். கர்ணன், பீமனைக் கண்டதும் தர்மரை விட்டுவிட்டு பீமனோடு போர் செய்ய முற்பட்டான். 

இப்போது கர்ணனுக்கும், பீமனுக்கும் கடுமையான போர் ஆரம்பித்தது. கர்ணனின் ஆவேசத்தை கண்டு பீமன் அதிர்ச்சியுற்று போர் புரியாமல் பின்வாங்கினான். கர்ணனின் ஆவேசத்தைக் கண்ட அர்ஜூனன் தன் படைகளோடு கர்ணனை மறித்துக் கொண்டு போர் புரிய ஆரம்பித்தான். இவர்கள் இருவருக்கும் போர் ஆரம்பித்தது.

கர்ணன் படையிலும், அர்ஜூனன் படையிலும், அவர்களுக்குத் துணையாகச் சில சிற்றரசர்களும் வந்திருந்தனர். எல்லோருமே வில்யுத்தத்தில் வல்லவர்களாக இருந்ததனால் இருதரப்புப் படைகளுக்கும் இடையே விற்போர் தொடங்கிற்று. 

இவர்கள் இருவருக்கும் போர் நடந்து கொண்டிருந்தபோது திடீரென்று அசுவத்தாமன் தன் படைகளோடு தானும் வந்து கர்ணன் பக்கத்தில் சேர்ந்து கொண்டான். அர்ஜூனன் பிறைச் சந்திரனைப் போன்ற உருவத்தில் அமைந்த அம்பு ஒன்றை எடுத்து அசுவத்தாமன்மேல் தொடுத்தான். 

அந்த அம்பு அசுவத்தாமனுடைய மார்பில் பாய்ந்து மார்பைப் பிளந்தது. ஆனால் அசுவத்தாமன் சிரஞ்சீவித்துவ வரம் பெற்றவன். எளிய முறையில் மரணம் அவனை அணுக முடியாது. எனவே அம்பு பாய்ந்ததும் இறக்க வில்லை. ஆனால் மெல்லத் தளர்ந்து தேரின் மேல் விழுந்து விட்டான். இதனைக் கண்ட துச்சாதனன் கீழே அசுவத்தாமனை கீழே விழாமல் தாங்கிக் கொண்டு கௌரவர் பாசறைக்குக் கொண்டு சென்றான்.

அசுவத்தாமன் சிறிது நேரத்தில் தெளிவும் வலிமையும் பெற்று இன்னொரு தேரில் ஏறிக்கொண்டு, அர்ஜூனனோடு போரிடுவதற்கு வந்தான். இருவருக்கும் நடந்த கடுமையான போரினால் இருவருடைய தேர்களின் அச்சு முறிந்து நொறுங்கிப் போயின. 

பிறகு பீமனும், துச்சாதனனும் கதாயுதங்களை எடுத்துக் கொண்டு மீண்டும் போரைத் தொடங்கினர். பீமன் துச்சாதனனின் மார்பைப் கதாயுதத்தைக் கொண்டு பிளந்து கொன்று விட்டான். துச்சாதனன், பீமனால் கொல்லப்பட்ட செய்தி கிருஷ்ணர், தர்மர் முதலியவர்களுக்கு தெரிந்ததும் உடனே அவர்கள் பீமன் நின்று கொண்டிருந்த இடத்தை அடைந்தனர். 

துச்சாதனனையும், துரியோதனனுடைய தம்பியர்களில் மொத்தம் பத்துப்பேரையும் பீமன் கொன்று விட்டதை அறிந்த தர்மரும், கிருஷ்ணரும் மகிழ்ச்சியடைந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக