Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 19 மே, 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 023

கலிக்கம்ப நாயனார்!!

பழமை வாய்ந்த திருத்தலமான பெண்ணாகடம் என்ற பகுதியில் தோன்றியவர் கலிக்கம்பர். இந்த ஊரானது நல்ல ஒழுக்கத்துடனும், அறநெறியுடனும் வாழ்ந்து வந்த மக்கள் நிறைந்த பகுதியாகும். கருமை மேகத்தில் இருந்து வெளிப்படும் முத்துக்களால் உருவான அழகிய சோலைகள் நிறைந்த வளமான ஊராகும். வணிகத் தொழில் செய்து வந்த கலிக்கம்பர் தர்மநெறியை பின்பற்றி வாழ்ந்து வந்தார்.

சிவனடியார்களுக்கு அமுது படைத்து அளித்தல் மற்றும் தர்ம நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறை மற்றும் நெறிகளை தவறாது பின்பற்றி மனமகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார். சடைமுடி தாங்கி இடப வாகனத்தில் வீற்றிருந்து தன்னை நாடும் பக்தர்களுக்கு இன்பம் அளிக்கும் சிவபெருமானின் திருவடியை மறவாத சிந்தனையாளராக இருந்தார்.

எம்பெருமானின் மீது அளவற்ற அன்பு கொண்ட அவர் திருத்தூங்கானைமாடம் என்னும் திருக்கோவிலில் திருத்தொண்டு புரிந்து வாழ்ந்து வந்தார். சிவனடியாரை சிவனாகவே கண்டு வணங்குதல் அன்றி சிவபெருமானின் அடியார்களை அளவற்ற அன்புடன் தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து வந்து இனிய கனி, கறி, நெய், பால், தயிர், தேன், சர்க்கரை முதலியவைகளுடன் உயர்ந்த உணவுகளைப் படைத்து அமுது செய்யும்படி உபசரிப்பார்.

இது மட்டுமல்லாது அடியார்கள் புரியும் திருத்தொண்டிற்காக அவர்களுக்கு தேவையான பொன், பொருள்களையும் மகிழ்ச்சியாக அவர்களுக்கு அளித்து வழங்குவார். அடியார்கள் விருப்பம் கொண்டு எது கேட்டாலும் அந்த பொருட்களை அவர்களுக்கு கொடுத்து அரிய தொண்டுகள் பலவற்றை செய்து வந்தார் கலிக்கம்பர். ஒருமுறை தன்னுடைய மாளிகையில் அமுது செய்வதற்காக அடியார்கள் பலரையும் அழைத்திருந்தார் கலிக்கம்பர்.

அவரின் அழைப்பை ஏற்றுக் கொண்டு ஏராளமான அடியார்கள் கலிக்கம்பரின் மாளிகைக்கு வருகை தந்தனர். எப்போதும் போல வந்திருந்த அனைத்து அடியார்களின் பாதங்களையும் பணிந்து இன்முகத்துடன் அவர்கள் அனைவரையும் உள்ளே அழைத்துச் சென்றார். கலிக்கம்ப நாயனாரின் மனைவியார் வீட்டை சுத்தம் செய்து, அடியார்கள் உண்பதற்காக இனிய உணவுகளை முன்னதாகவே சமைத்து வைத்திருந்தார்.

கலிக்கம்பர் தாம் அழைத்த அடியார்கள் வீட்டின் மாடக் கூடத்திற்குள் வந்ததும் தன் கரத்தில் நீர் கொண்டு வந்து திருத்தொண்டர்களுக்கு பாதபூஜை செய்தார். அவரது மனைவியார் அவருக்கு தேவையான நீரை அளித்து உபசரித்து கொண்டிருந்தார். அடியார்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தபோதிலும் எவ்விதமான தயக்கமும் இன்றி மனமுவந்து இந்த திருத்தொண்டை கணவனும், மனைவியும் செய்தனர்.

அப்போது ஒரு அடியார் பாதபூஜைக்காக வந்து நின்றபோது அவரை நேர் நோக்கிய கலிக்கம்ப நாயனாரின் மனைவி பாதபூஜை செய்வதற்கு நீரை வார்க்காமல் அப்படியே நின்றார். அந்த அடியார் இதற்கு முன்பு தம் இல்லத்தில் சில நாட்கள் வேலை செய்துவிட்டு ஏவல் செய்யும் பணியை வெறுத்துச் சென்றவர். ஆனால் இன்றோ சிவனடியாராக மாறி அடியார்களுடன் கலந்து திருநீறு மற்றும் கண்டிகை புனைந்து கொண்டார். தற்போது கலிக்கம்ப நாயனார் வீட்டில் அமுது செய்யும் விதமாக அவரும் வந்திருந்தார். அவரைப் பார்த்ததும்தான் கலிக்கம்ப நாயனாரின் மனைவியார் அப்படியே நின்றுவிட்டார்.

இதைக் கண்டும் காணாத கலிக்கம்பர் தமது இல்லத்தில் பணிபுரிந்து வந்த அடியாருக்கு பாதபூஜை செய்வதற்காக அவருடைய பாதங்களை பற்றினார். ஆனால் கலிக்கம்பரின் துணைவியார் தாங்கள் கூறிய ஏவலை செய்து வந்த ஒருவரின் பாதத்திற்கு நீர் சொரிந்து பாத பூஜை செய்வதா? என்ற எண்ணம் அவரது சிந்தனையில் உதித்துவிட்டது. அந்த நிலையில் தனது கணவருக்கு தேவையான நீரை அளிக்காமல் நின்று கொண்டு இருந்தார். தன் மனைவியின் எண்ணத்தை எவ்வித தாமதமும் இன்றி உணர்ந்து கொண்ட கலிக்கம்பர் அடியார்களின் முன்நிலைமை குறித்து எண்ணுவதும் அதன் காரணமாக அவர்களை வழிபடாமல் இருப்பதும் பிழை.

யாவரே யாயினும் அடியார்கள் என்றால் வழிபடத்தக்கவரே ஆவார்கள். அடியார்களின் அடிமலர் மீது நீர்வார்க்க மறுப்பது குற்றமாகும் என்று கூறியவர், தன் மனைவி செய்த அந்த பிழைக்காக தனது வாளினால் அவரது கரங்களை துண்டித்தார். பின்னர் தாமே நீரை இறைத்து அந்த அடியாரின் அடிமலரைப் பூஜித்தார். அவர் அமுது செய்ய தாமே யாவும் படைத்து உபசரித்தார். இவ்வாறு அத்திருத்தொண்டினைத் தொடர்ந்து செய்து, சிவபெருமானது திருவடிக்கீழ் அடியாருடன் கலந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக