Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 8 மே, 2020

பனிரெண்டாம் நாள் போர் முடிவு!


அர்ஜூனனுக்கும், பகதத்தனுக்கும் நடந்த போரில் அர்ஜூனன் பகதத்தன் மார்பில் அம்புகளை துளைத்தான். அதனால் சினங்கொண்ட பகதத்தன் தன்னிடம் எஞ்சியிருந்த ஒரே ஒரு வேலை எடுத்துக் குறி பார்த்து அர்ஜூனன் மேல் தொடுத்தான். 

ஆனால் அதையும் அர்ஜூனன் முறியடித்துவிட்டான். பகதத்தனுக்கு ஏமாற்றம் தாங்க முடியாமல், எப்படியாவது! அர்ஜூனனைக் கொன்று தீர்த்து விட வேண்டும் என்று கோபம் கொண்டான். 

அதற்காக பகதத்தன் திருமாலை நோக்கி பல்லாயிரம் ஆண்டுகள் தவம் இருந்து பெற்ற வேலை அர்ஜூனன் மீது எய்தால் அவன் உயிர் இழப்பான் என்று முடிவெடுத்தான். உடனே, பகதத்தன் திருமால் தனக்கு அளித்த அந்தக் கூரிய வேலாயுதத்தை எடுத்து அர்ஜூனனை நோக்கி வீசினான்.

ஆனால் பகதத்தன் தனக்கு வேலாயுதத்தை அளித்த திருமாலே எதிர்ப்புறம் கிருஷ்ணர் என்ற பெயரில் மறைந்து தேரோட்டிக் கொண்டிருப்பதை அறியாதவன். அவன் வேலாயுதத்தை எறிந்த நேரம் அர்ஜூனனுடைய தேரில் கிருஷ்ணர் மகாவிஷ்ணுவாக தோன்றி, பகதத்தன் ஏவிய வேல் அர்ஜூனனை அடையவிடாமல் தடுத்து திருமாலின் கைகளில் போய் விழுந்தது. 

அவருடைய கையில் விழுந்த அந்த வேல் ஓர் அழகிய மணி மாலையாக மாறியது. பின்பு அந்த மணிமாலையை திருமால் அணிந்து கொண்டு மீண்டும் கிருஷ்ணராக மாறினார். கிருஷ்ணர் நடத்திய மாயம் பகதத்தனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் திகைத்துப் போய் அர்ஜூனனைப் பார்த்தவாறே நின்றான். 

இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு அர்ஜூனன் மனம், மொழி, மெய்களால் கிருஷ்ணரை தியானம் செய்து கொண்டே ஓர் அக்னி அஸ்திரத்தை எடுத்து வில்லில் வைத்துப் பகதத்தன் மேல் தொடுத்தான்.

அந்த அஸ்திரம் பகதத்தன் மேல் பட்டதும் அவன் உடல் தீப்பற்றி எரிந்தது. மறுகணம் பகதத்தன் நின்ற இடத்தில் சாம்பலாகிவிட்டான். அவன் ஏறிப் போர் செய்த யானையும் கீழே விழுந்து மாண்டது. பகதத்தன் அழிந்த மகிழ்ச்சியில் பாண்டவர்கள் படை வெற்றி முழக்கம் செய்தனர். 

ஆனால் பகதத்தனின் மரணம் துரியோதனனுக்குப் பெரிய அதிர்ச்சியாகவும், ஏமாற்றமாகவும் இருந்தது. கோபம் அடைந்த துரியோதனன் சகுனியின் தலைமையில் காந்தார மன்னர்களையும், அவர்களைச் சேர்ந்த வீரர்களையும் திரட்டி அர்ஜூனனை எதிர்ப்பதற்கு அனுப்பினான். 

கடல் பொங்கி வருவது போலக் காந்தாரப் படை சகுனியைத் தலைவனாகக் கொண்டு அர்ஜூனனை நோக்கித் திரண்டு ஓடி வந்தனர்.

அவர்கள் வருவதை அறிந்த அர்ஜூனன் அவர்கள் மீது அம்புகளைத் தொடுக்க ஆரம்பித்தான். பின்னர் அர்ஜூனன் திருதிராஷ்டிர மன்னனின் மைத்துனர்களான அசலன், விகுஷன் ஆகியோரைக் கொன்றான். 

சகோதரர்களின் மரணத்தை அறிந்த சகுனி மாயையால் இருள் பரவச் செய்தான். ஆனால் அர்ஜூனன் ஒளிமய கணையை ஏவி அந்த இருளைப் போக்கினான். 

சகுனி பயந்து வேறிடத்திற்கு நகர்ந்தான். தர்மரை பிடித்துவிடலாம் என்ற துரோணரின் கனவும் தகர்ந்தது. சகுனியோடு வந்த காந்தார நாட்டு மன்னர்கள் பலருக்கும் இது அபசகுனமாகப்பட்டது. 

போரில் கலந்து கொள்ளாமலே சகுனிக்கு தெரியாமல் களத்திலிருந்து நழுவிவிட்டார்கள்.

சகுனியின் கோபம் தர்மர் மேல் அதிகரித்தது. அருகில் இருந்தவர்களை ஒன்று சேர்த்துக் கொண்டு தர்மரிடம் போருக்கு சென்றான். 

தருமருக்கும், சகுனிக்கும் போர் நடைப்பெற்றது. போர் நுணுக்கங்களையும், எதிர்ப்பைச் சமாளிக்கும் ஆற்றலையும் பெறாத சகுனி, தர்மரின் தாக்குதலை தடுக்க முடியாமல் திணறினான். சகுனியும் அவன் படைகளும் தனித்தனியாக சிதறி ஓடினர்.

மற்றொரு புறத்தில் துரோணர், அசுவத்தாமன், கர்ணன், துரியோதனன் ஆகிய பல பெரிய வீரர்களை பீமன் எதிர்த்து போர் செய்து கொண்டிருந்தான். 

உண்மையாகவே பனிரெண்டாம் நாளில் நடந்த போரில் பீமன் மேற்கொண்ட போர் புகழின் எல்லைக்கு அப்பாற்பட்டது. இந்நிலையில் கதிரவன் மறைந்து இருள் படரத் தொடங்கியதனால் பனிரெண்டாம் நாள் போர் முடிவடைந்தன. 

போர் செய்த களைப்புடன் இரு படைகளும் படைத்தலைவர்களும் பாசறைகளை அடைந்தனர். பாண்டவர்கள் பாசறைக்குச் சென்றதும் அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டனர்.

கௌரவர்கள் பாசறையில் போர்க்களத்தில் பீமனும், தர்மரும் காட்டிய வீரத்தைப் பற்றியே எங்கும் பேச்சாக இருந்தது. முதல் நாள் தர்மருக்கு எதிராகத் தாங்கள் செய்த சபதம் வீணாகப் போய் விட்டதே என்ற ஆத்திரமும் அவர்களுக்கு இருந்தது. துரோணர், துரியோதனனிடம் அர்ஜூனன், பீமன் கூட நம்மைப்போல சரீரபலம் மட்டும் உள்ளவர்கள்தான். 

அதனால் அவர்களை அரிய முயற்சி செய்து வென்றுவிடலாம். ஆனால் தர்மரை யாராலும் வெல்ல முடியாது. அவருடைய வலிமை சத்தியத்தின் வலிமை, இணைக்கூற முடியாத வலிமை, அதை வெல்வதற்கு இவ்வுலகில் யாரும் பிறக்கவில்லை.

உங்களில் யாருக்காவது சந்தேகம் இருந்தாலும், அவநம்பிக்கை ஏற்பட்டாலும் அவர்கள் நாளைக்கே தர்மரோடு போர் செய்து வெற்றி பெறுங்கள். கர்ணா! உன்னால் முடியுமானால் நான் நிறைவேற்ற முடியாத சபதத்தை நாளையே நீ நிறைவேற்று பார்க்கலாம் என்று துரோணர் கர்ணனிடம் கேட்டார். 

இதைக் கேட்ட கர்ணன் வாயடைத்து நின்றான். கர்ணனால் பதிலளிக்க முடியவில்லை. துரோணரும் யாரிடமும் விடைபெற்றுக் கொள்ளாமல் அங்கிருந்து வேகமாக வெளியேறினார். பின்பு துரியோதனன் முதலிய மற்ற அரசர்களும் தத்தம் பாசறைக்கு சென்று உறங்கலாயினர். 

துரோணர் தொடர்ந்து தர்மரை சிறை பிடிக்க முயன்றும் முடியாமல் போனது மட்டுமின்றி, பாண்டவ படைகள் மிகத் தீவிரமாக போரிட்டு கௌரவ படைகளில் பலத்த சேதத்தினை ஏற்படுத்தினர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக