Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 5 மே, 2020

பத்தாம் நாள் போரும்! பீஷ்மரின் வீழ்ச்சியும் !

பத்தாம் நாள் போரில் கௌரவர்கள் அசுர வியூகத்தை அமைத்தனர். பாண்டவர்கள் தேவ வியூகத்தை அமைத்தனர். சிகண்டியை முன் நிறுத்திப் பாண்டவர்களின் படை முன்னேறியது. 

இதுவரை இல்லாத பாதுகாப்பு இன்று பீஷ்மருக்கு இருந்தது. பீஷ்மருக்கும் அர்ஜூனனுக்கும் போர் நடந்து கொண்டிருந்தது. பாண்டவ படை வீரர்கள் வேகமாக பீஷ்மரின் மேல் நிறைய அம்புகளைச் செலுத்தினார்கள். பீஷ்மரின் உடலெங்கும் அம்புகள் தைத்துச் சிலிர்த்து நின்றார். 

திடீரென்று ஆவேசமடைந்த பீஷ்மர் அம்புகள் அனைத்தையும் உதறிவிட்டு பாண்டவ படை வீரர்களை தாக்க தொடங்கினார். இதனைக் கண்ட அர்ஜூனன் பீஷ்மரோடு போர் செய்வதற்கு நேருக்கு நேர் வில்லை வளைத்துக் கொண்டு வந்து நின்றான்.

துரியோதனன் பீஷ்மருக்கு துணையாக அசுவத்தாமன், கிருபாச்சாரியார், துரோணர், சகுனி, ஜெயத்திரதன், பகதத்தன் முதலியவர்களை அனுப்பினான். 

அர்ஜூனன் போர் செய்த போது பீமன் தன் கதாயுதத்தை ஓங்கிக்கொண்டு கௌரவர் படைகளை தாக்கி அவர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தினான். 

அதனால் ஆத்திரம் அடைந்த துரியோதனன் ஓராயிரம் படை வீரர்களை அர்ஜூனனுக்கு எதிராக அனுப்பினான். படை வீரர்களை சமாளிப்பதற்கு அர்ஜூனன் வாயு அஸ்திரத்தைப் பிரயோகித்து அவர்களை வீழ்த்தினான். 

இவ்வாறு பத்தாம் நாள் போர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. விதிகளின் விதியாய், செயல்களின் ஆதி காரணமாய் விளங்கும் கிருஷ்ணர் கலவரம் மிகுந்த அந்தப் போர்க்களத்தின் நடுவே சிந்தித்துக் கொண்டிருந்தார்.

கிருஷ்ணர், அர்ஜூனனிடம் பத்தாவது நாளாகிய இன்றைய போரின் முடிவில் பீஷ்மரின் உலக வாழ்வு முடிந்து விட வேண்டும் என்று கூறினார். இப்போது நீ பீஷ்மரோடு போர் புரிய வேண்டும் மற்றதை நான் கவனித்துக் கொள்கிறேன் என்றார். 

உடனே கிருஷ்ணர், அர்ஜூனனின் தேரை பீஷ்மர் இருந்த இடத்திற்கு விரைவாகச் செலுத்தினார். பீஷ்மர் தேரும், அர்ஜூனன் தேரும் நேருக்கு நேர் போருக்கு தயாராக நின்றது. கிருஷ்ணர் சங்கநாதம் முழங்கியதும் போர் தொடங்கியது. 

அர்ஜூனனுக்கும், பீஷ்மருக்கும் இடையே கடும்போர் நிகழ்ந்து கொண்டிருந்தபோது சிகண்டி போர்க்களத்தில் புகுந்து பீஷ்மருக்கு முன்னால் வந்து நின்றான். பீஷ்மர் செய்திருந்த சபதப்படி சிகண்டியை எதிரே கண்டவுடன் பீஷ்மர் போர் செய்வதை நிறுத்தி விட்டார்.

பீஷ்மர் போர் செய்யாமல் இருப்பதை அறிந்த துச்சாதனன், சிகண்டி மேல் அம்புகளை தொடுக்க ஆரம்பித்தான். அதனால் சிகண்டி உயிர் தப்பினால் போதும் என்று ஓடத் தொடங்கினான். சிகண்டி சென்றதும் பீஷ்மர் மீண்டும் அர்ஜூனனோடு போர் செய்ய ஆரம்பித்தார். 

பீஷ்மர் வேகத்தோடு போர் புரிவதை சமாளிக்க முடியாமல் அர்ஜூனன் மீண்டும் தந்திரமாக சிகண்டியை வரவழைத்தான். சிகண்டியைக் கண்டதும் உடனே பீஷ்மர் போர் புரிவதை நிறுத்தி விட்டார். அர்ஜூனன் உடனே பீஷ்மரை நோக்கி அம்புகளைச் செலுத்தினான். 

பீஷ்மரின் வில் இரண்டாக ஒடிந்து கீழே விழுந்தது. சிகண்டியும், அர்ஜூனனும் மாறி மாறி அம்புகளைத் தொடுத்தனர். சிகண்டியின் அம்புகள் பீஷ்மர் மார்பில் பாய்ந்தன. ஆனால் பீஷ்மர் சிகண்டியைத் தாக்கவில்லை. அர்ஜூனனின் அம்புகள் பீஷ்மரின் உடலெங்கும் சல்லடை போல் தைத்தன. 

இரத்தம் தேர்த்தட்டுகளில் வடிந்து ஓடியது. பீஷ்மர், சிறிதுநேரத்தில் உடல் தளர்ந்து சோர்வோடு கீழே விழுந்தார்.

பாண்டவர்களும் கௌரவர்களும் போரை நிறுத்தி விட்டனர். பீஷ்மர், வலியும், வேதனையும் மிகுந்த நிலைமையிலும் மகிழ்ச்சி அடைந்தார். அர்ஜூனனால் உயிர் பிரிவதை எண்ணி அவர் பெருமிதம் கொண்டார். அப்போது பீஷ்மர் கீழே விழுவதைப் பார்த்த கௌரவர்கள் அவரை தூக்குவதற்காக ஓடி வந்தனர். 

ஆனால் பீஷ்மர் அவர்களை தடுத்து நிறுத்திவிட்டார். அனைவரும் பீஷ்மரை சூழ்ந்து நின்று கொண்டனர். கிருஷ்ணரும், அர்ஜூனனும் தேரிலிருந்து இறங்கி பீஷ்மரின் தலைப்பக்கமாக நின்று கொண்டார்கள். தேரிலிருந்து பீஷ்மர் சாய்ந்த போது தேவர்கள் மலர் மழை பொழிந்தனர்.

பாண்டவர்களும், கௌரவர்களும் பீஷ்மரின் வீழ்ச்சியைக் கண்டு திகைத்தனர். காலத்தைக் கணிக்கும் ஜோதிடரும் அங்கு இருந்தார். பீஷ்மர் தளர்ந்து வீழ்ந்த நேரம் தட்சிணாயன காலம் என்று அறிவித்தார். 

பீஷ்மர், மரணத்தைத் தள்ளிப்போடும் வரத்தை தந்தை சாந்தனுவிடமிருந்து பெற்றிருந்தார். அதனால் தட்சிணாயன காலத்தில் இறப்பதற்கு பீஷ்மர் விரும்பவில்லை. விரைவில் வரப்போகின்ற உத்தராயண காலம் வந்த பின்பு இம்மண்ணுலகிலிருந்து உயிர் விடுவதென்று தீர்மானித்தார். குலத்துக்கே பெருமை அளித்துக் கொண்டிருந்தவரும், இணையற்ற வீர புருஷனும் ஆகிய பீஷ்மர் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்ற செய்தி அனைவரையும் கண்ணீர் விட்டு அழச் செய்தது.

பீஷ்மர், துரியோதனனிடம் இப்போதேனும் நீ சமாதானமாய் போய் விடு. அவர்கள் நாட்டை அவர்களிடம் ஒப்படைத்து விடு. இப்போர் என்னுடன் முடியட்டும் என்றார். ஆனால் அவரின் அறிவுரையை அவன் ஏற்கவில்லை. பிறகு நள்ளிரவில் கர்ணன் ஓடி வந்து அவர் பாதங்களில் வீழ்ந்து அழுதான். ராதையின் மகனான நான் சில சமயங்களில் தங்களுக்கு மரியாதைத் தர தவறிவிட்டேன். 

என்னை மன்னித்து விடுங்கள் என்றான். அதைக் கேட்ட பீஷ்மர், கர்ணனிடம் நீ ராதையின் மகன் அல்ல, குந்தியின் மைந்தன் என்று வியாசர் எனக்கு கூறினார். காரணமின்றி நீ பாண்டவர்களை பகைத்ததால் நானும் உன்னிடம் கோபமாக நடந்துக் கொண்டேன். பாண்டவர்கள் உன் தம்பிமார்கள், நீ அவர்களுடன் சேர்ந்து தர்மத்தைப் போற்று என்று கூறினார்.

ஆனால் கர்ணன், துரியோதனனுக்கு எதிராக நின்று போர் புரிவதை விரும்பவில்லை. அதனால் பீஷ்மர், கர்ணனிடம் அறம் வெல்லும். நீ விரும்பியப்படியே செய் என்று கூறினார். பீஷ்மர், இறப்பதற்கு முன்பு அரச நீதி மற்றும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாண்டவர்களுக்கு அருளினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக