Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 8 ஜூன், 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 037

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் !!

பல வளங்கள் யாவும் நிரம்பப்பெற்ற புலியூர் என்னும் நகரில் பாணர் மரபில் பிறந்தவர்தான் திருநீலகண்ட யாழ்ப்பாணர். திருநீலகண்ட யாழ்ப்பாணர் எம்பெருமானின் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். யாழ்ப்பாணருக்கு யாழ் இயற்றுதல் என்பது தனிச்சிறப்பு வாய்ந்த கலையாகும். யாழ் இயற்றுதலில் திருநீலகண்ட யாழ்ப்பாணர் மிகவும் திறமை வாய்ந்தவராக விளங்கி வந்தார். இறைவனது புகழை யாழில் அமைத்துப் பாடுவதே புண்ணியம் என்று எண்ணி அதை மிகவும் விரும்பி செய்து வந்தார்.

இவரது மனைவி மதங்க சூளாமணி ஆவார். இசையே உருவெடுத்தாற்போல் யாழ்ப்பாணரும், அவரது வாழ்க்கைத் துணைவியாரும் நீலகண்டேசுவரர் புகழை யாழில் இனிமையுடன் உள்ளம் உருக இசைத்து எல்லையில்லா இன்பம் அடைந்து கொண்டிருந்தனர். தம்பதிகளாக இருவரும் இணைந்து பல சிவத்தலங்களுக்கு சென்று... யாழ் இசைத்து... எம்பெருமானை பலவாறாக போற்றி... புகழ்ந்து... பாடி... அருள் பெற்றனர். சோழவள நாட்டில் எம்பெருமான் எழுந்தருளியுள்ள அனைத்து திருத்தலங்களையும் கண்டு களித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

பின்பு மதுரையம்பதியில் எழுந்தருளியுள்ள எம்பெருமானை காண சென்றனர். மதுரையம்பதிக்கு சென்ற யாழ்ப்பாணர் தம் துணைவியோடு எம்பெருமான் வீற்றிருக்கும் தலத்தின் புறத்தே நின்று திரு ஆலவாய் அண்ணலாரது புகழை யாழில் சுருதிகூட்டி பண்ணமைத்து பாடிக் கொண்டிருந்தார். பண்டைய நாட்களில் பாணர் மரபினை சேர்ந்தவர்கள் திருத்தலத்தின் உள்ளே சென்று இறைவனை வழிபடுவது என்பது கிடையாது. திருத்தலத்தின் புறத்தே நின்று வழிபடுவதையே நியதியாகக் கொண்டிருந்தார்கள். யாழ்ப்பாணர் உள்ளம் உருகி பண் எடுத்து பாடியதில் மனம் மகிழ்ந்த சோமசுந்தரர் தமது பக்தனைக் காக்க திருவுள்ளம் கொண்டார்.

அன்று இரவே மதுரையம்பதி தலத்தில் இருக்கும் சிவத்தொண்டர்கள் கனவில் எழுந்தருளி யாழ்ப்பாணரையும், அவரது மனைவியாரையும் தலத்தின் உள்ளே அழைத்து வந்து எம்மை தரிசனம் செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி ஆணையிட்டார். எம்பெருமான் யாழ்ப்பாணரின் கனவிலும் எழுந்தருளி யாழ்ப்பாணரே...!! உம்மை திருத்தலத்தின் உள்ளே அழைத்து வந்து தரிசனம் செய்து வைக்க தகுந்த ஏற்பாடுகள் யாவும் செய்யப்பட்டு உள்ளன என்று உரைத்து மறைந்தருளினார். நித்திரையில் இருந்து விழித்து எழுந்த யாழ்ப்பாணர், எம்பெருமானின் கருணையை எண்ணி ஆதவன் வரும் காலத்திற்காக காத்துக் கொண்டிருந்தார்.

எம்பெருமானின் ஆணைக்கு ஏற்றவாறு சிவத்தொண்டர்கள் அனைவரும் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளத் துவங்கினர். மறுநாள் வழக்கம் போல் திருநீலகண்ட யாழ்ப்பாணர், மனைவியாருடன் கோவிலின் புறத்தே அமர்ந்து யாழ் இசைத்து தம்மை மறந்த நிலையில் பாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது சிவத்தொண்டர்கள் திருநீலகண்ட யாழ்ப்பாணரையும், அவரது மனைவியாரையும் கண்டு வணங்கி சொப்பனத்தில் எம்பெருமான் எழுந்தருளி கூறிய கட்டளையை எடுத்துக் கூறி அவர்களை திருத்தலத்தின் உள்ளே எழுந்தருளுமாறு பணிவோடு கேட்டுக் கொண்டனர்.

எம்பெருமானின் கருணையையும், அருளையும் எண்ணி மகிழ்ந்த வண்ணம் தம்மை அழைத்து செல்ல வந்த சிவனடியார்களுடன் கோவிலுக்குள் சென்று மண்டபத்தில் அமர்ந்தனர் நாயனாரும், அவரது மனைவியாரும். திருத்தலத்தின் உள்ளே சென்றதும் எம்பெருமானின் மீது கொண்ட பக்தி வெள்ளத்தில் மூழ்கிய அன்பர்கள் இருவரும் தாம் அமர்ந்து இருக்கும் தரை தளம் ஈரமாக இருப்பதனை கூட பொருட்படுத்தாமல் ஈரத்தரையில் அமர்ந்து தங்களை மறந்த நிலையில் யாழை மீட்டி பாடத் தொடங்கினர். இவர்களுடைய இன்ப இசையில் மயங்கிய வண்ணம் மதுரையம்பதி எம்பெருமான் தரையின் குளிர்ச்சி பட்டு யாழின் சுருதி கெட்டுவிடுமே என்று திருவுள்ளம் பற்றினார்.

அசரீரி வாயிலாக எம்பெருமான் தரை தளத்தில் இருந்து பாடினால் ஈரத்தால் யாழ் கெட்டுவிடும். எனவே அவர்களுக்கு அமர்ந்து பாட பலகை ஒன்று அமைத்துக்கொடுங்கள் என்று திருவாய் மலர்ந்து அருளினார். எம்பெருமானின் ஆணைக்கு தகுந்தாற்போல் அழகிய பீடம் ஒன்றை எடுத்து வந்து அதன் மீது அமர்ந்து பாடுமாறு செய்தனர். அவர்களுக்காக அமைக்கப்பட்ட பீடத்தில் அமர்ந்த யாழ்ப்பாணரும், மதங்க சூளாமணியும் அழகிய இனிய தெய்வ சக்திமிக்க பக்தி பாடல்கள் பலவற்றைப் பாடி அனைவரையும் மெய்மறக்கச் செய்தனர். அதன் பிறகு இருவரும் மதுரையம்பதியில் நெடுநாள் தங்கியிருந்து தங்கள் யாத்திரையைத் தொடர்ந்தனர்.

மதுரையம்பதிக்கு அடுத்துள்ள பல சிவத்தலங்களையும் தரிசித்தவாறு திருவாரூரை அடைந்தனர். யாழ்ப்பாணரும் அவருடைய துணைவியாரும் எப்போதும் போல் எம்பெருமானின் கீர்த்திகளை யாழ் இசைத்து, பண் எடுத்து பாட துவங்கினர். திருவாரூர் தியாகேசப்பெருமானும், பிராட்டியாரும் யாழ்ப்பாணருடைய இசையில் மயங்கினார்கள். அன்றிரவே ஈசன் திருவாரூர் சிவனடியார்களின் சொப்பனத்தில் எழுந்தருளி எமது அன்பன் யாழ்ப்பாணனுக்கு திருக்கோவிலுள் வந்து வழிபாடு செய்ய வேறு வாயில் அமைத்து அதன் வழியாகக் திருத்தலத்தில் அழைத்து வந்து இசை பாடத் துணைபுரிவீர்களாக என்று ஆணை பிறப்பித்தார்.

எம்பெருமானின் கட்டளைக்கு ஏற்றாற்போல் மறுநாளே சிவனடியார்கள் திருநீலகண்ட யாழ்ப்பாணர் எம்பெருமானை தரிசித்து வழிபடும் பொருட்டு திருத்தலத்தின் வடதிசையில் வாயில் ஒன்றை அமைத்தனர். அதன் வழியாக திருநீலகண்ட யாழ்ப்பாணரும், அவரது மனைவியாரும் முன் சென்று எம்பெருமானை வழிபாடு செய்தனர். அவ்வித வழிபாட்டின்போது யாழ்ப்பாணர் 'வீதிவிடங்கப் பெருமானைக் கண்குளிரக் கண்டு மகிழ்ந்து" என பக்திப் பாடல்கள் பாடினார்.

கருவறையில் வீற்றிருக்கும் பரம்பொருளான எம்பெருமானை வணங்கி சில காலம் அவ்விடத்தில் தங்கியிருந்து இறைவனின் திருவருள் குறிப்பைப் பெற்றுச் சிவனடியார்கள் எங்கும் செல்ல விருப்பம் இல்லாமல் அங்கிருந்து புறப்பட்டனர். அங்கிருந்து புறப்பட்டு திருமூலட்டானேசுவரம் சென்று வான்மீகநாதரை யாழிசை மீட்டு வணங்கினார்கள். தேவர்கள், அசுரர்கள் என வேறுபாடு பிரித்து பார்க்காமல் அனைவரின் நலத்தினை மட்டும் கருத்தில் கொண்டு கொடிய ஆலகால நஞ்சுண்ட கழுத்தையுடைய இறைவன் வீற்றிருக்கும் பல தலங்களுக்கு சென்று பதிகம் பலவற்றை பாடி எம்பெருமானை தரிசித்துக் கொண்டே சீர்காழியை வந்தடைந்தனர்.

திருநீலகண்ட யாழ்ப்பாணரும், அவருடைய மனைவியாரும் சீர்காழி வந்துள்ள செய்தியை கேள்விப்பட்ட திருஞானசம்பந்தர் அவர்களுக்கு உரிய சிறப்புகள் யாவும் செய்து அவர்களை வரவேற்றார். பின்பு அவர்களிடம் ஒரு வேண்டுகோளையும் விடுத்தார். இனிவருகின்ற காலம் யாவும் தம்முடனேயே இருந்து எம்பெருமானை வழிபட்டு எம்பெருமானின் மீது பாடப்படும் தேவாரப் பதிகங்களை யாழில் இட்டு இசைத்து பாட வேண்டும் என்று வேண்டினார்.

இதை சற்றும் எதிர்பாராத திருநீலகண்ட யாழ்ப்பாணரும், அவருடைய மனைவியாரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இது எங்களுக்கு கிடைத்த வரம் என்று இருவரும் திருஞானசம்பந்தரை விட்டு பிரியாது அவர் இயற்றும் தேவாரப் பதிகங்களை யாழில் இட்டு இசைத்து மகிழ்ச்சி கொண்டனர். இறுதியில் நீல மலர் போலும் கழுத்தினையுடைய இறைவனின் திருநல்லூர் பெருமணத்தில் திருஞானசம்பந்தர் திருமணத்தில் தோன்றிய சிவஜோதியில் பாணரும், அவர்தம் மனைவியாரும் கலந்து அவருடனே இறைவனின் திருவடிகளை அடைந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக