செவ்வாய், 9 ஜூன், 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 038

திருநீலநக்க நாயனார் !!

காவிரி ஆற்றினால், என்றும் வளம் பெற்று வலிமை மிகுந்த நாடாகிய சோழநாட்டில் சாத்தமங்கை என்னும் ஊர் உள்ளது. பசுமை வளம் நிறைந்த வயல்வெளிகள் நிறைந்த திருநகரில் எம்பெருமான் எழுந்தருளியுள்ள கோவிலுக்கு அயவந்தி என்று பெயர். இக்கோவிலில் எழுந்தருளி தன்னை காண வரும் அடியார்களுக்கு அருள்புரியும் எம்பெருமானுக்கு அயவந்திநாதர் என்றும், எம்பெருமானின் பிராட்டியாருக்கு மலர்க் கண்ணியம்மை என்பதும் திருநாமம்.

இத்திருத்தலத்தில் வாழ்ந்து வரும் வேதியர்கள் அயவந்திநாதரின் திருவடிகளின் மீது மிகுந்த பக்தி கொண்டு, நேரம் காலமின்றி எம்பெருமானுக்கு வேததபாராயணம் ‌‌செய்வார்கள். திருவெண்ணீற்றின் பெருமையை உணர்ந்த இம்மறையவர்கள் மூன்று வகையான வைதீகத் தீயை வளர்ப்பர். இம்மறையவர்களார் மனைத்தக்க மாண்புடைய மாதர்களும் தங்களுக்கே உரித்தான நான்காவது தியாக கற்புத் தீயையும் வளர்ப்பர்.

அவ்விதம் வாழ்ந்து வந்த வேதியர்கள் குலத்தில் பிறந்தவர் திருநீலநக்க நாயனார் ஆவார். இவர் வேதத்தின் உள்ளுறையாவது சிவபெருமானையும், சிவனடியார்களையும் அன்பினால் அர்ச்சித்து வணங்குதலே எனத் தெரிந்து கொண்டார். அதனால் நாள்தோறும் சிவாகம விதிப்படி சிவபெருமானுக்கு சிவபூஜையும் அவரை வழிபடும் அடியார்களுக்கு தேவையான திருப்பணிகளையும் செய்து வந்தார். இவ்விதம் திருநீலநக்கர் ஒழுகிவரும் நாளில் எம்பெருமானுக்கு உகந்த திருவாதிரை நன்னாள் வந்தது.

திருநீலநக்க நாயனார் எப்போதும் போல் தமது மாளிகையில் முறைப்படி இறைவழிபாட்டை முடித்துக் கொண்டு அயவந்திநாதரைத் தரிசித்து வழிபட எண்ணினார். பின்பு தமது மனைவியாரையும் அழைத்து கொண்டு வழிபாட்டிற்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் எவ்விதமான குறைவுமின்றி எடுத்துக் கொண்டு அயவந்தி என்னும் ஆலயத்தில் வீற்றிருக்கின்ற சுவாமியை காண புறப்பட்டார்.

திருத்தலத்தை அடைந்த தம்பதிகள் அயவந்திநாதரையும், மலர்க் கண்ணியம்மையாரையும் வழிபட்டு சிவபூஜையை தொடங்கினர். பூஜைக்கு தேவையான பொருட்களை தமது கணவரின் குறிப்பறிந்து அவ்வப்போது எடுத்துக் கொடுத்தார். திருநீலநக்கர் அயவந்திநாதரின் திருவடித் ‌தாமரைகளை வணங்கி வழிபாட்டினை துவங்கினார். அவ்வேளையில் அயவந்திநாதரின் திருமேனியின் மீது சுதைச் சிலந்தி ஒன்று வழுவி தன் நிலையில் இருந்து தவறி விழுந்தது.

அயவந்திநாதர் திருமேனியின் மீது விழுந்த சிலந்தியை கண்டதும் மனம் துடிதுடித்துப் போன அம்மையார் எம்பெருமானின் திருமேனியில் புண் ஏற்பட்டு விடுமே...!! என்று உள்ளத்தில் அச்சம் கொண்டு அந்த அச்சத்தோடு, சிறுகுழந்தையை தாய் கவனிப்பது போல் சிவலிங்கத் திருமேனியின் அருகில் சென்று, அச்சிலந்தி விலகிப்போகும் வண்ணம் வாயினால் ஊதி, எம்பெருமானின் திருமேனிக்கு பங்கம் வராமல் காத்தார். அச்சமயத்தில் எதிர்பாராமல் வாயினால் ஊதியதால் சற்று உமிழ்நீரும் சிவலிங்கத் திருமேனியில் பட்டுவிட்டது.

இதைக் கண்டதும் சினம் கொண்ட திருநீலநக்கர் சிலந்தி படாமல் அவருடைய திருமேனி காப்பாற்ற பட்டமையை உணராமல், அவர் மீது உமிழ்நீர் உமிழ்ந்ததை மட்டும் கண்டதும் எம்பெருமானுக்கு ஏதோ தீங்கு விளைவித்ததாக எண்ணம் கொண்டு மிகுந்த சினத்தோடு தனது துணைவியாரை நோக்கி மதி இழந்தவளே...!! என் ஐயனுக்கு என்ன தீங்கு இழைத்துள்ளாய்? என்று கடுமொழி மொழிந்தார்.

கணவரின் கடு‌மொழியைக் கேட்டும் அவ்விடத்தில் கோபம் கொள்ளாமல் அவருடைய மனைவியார் எம்பெருமானின் மீது சிலந்தி விழ இருந்தமையால் அதனை தடுக்கும் பொருட்டு ஊதிப் போக்கினேன் என்று கணவரின் கேள்விக்கு விடை அளித்தார். மனைவி மொழிந்ததைக் கேட்டதும் மீண்டும் சினம் கொண்டவராக நீர் உரைப்பது முறையான பதிலா? எம்பெருமான் திருமேனியின் மீது சிலந்தி விழாமல் தடுக்க வேறு வகையை பயன்படுத்துவதை விடுத்து வாயால் ஊதி உமிழ்வதா? இது முறையானதும் அல்ல என்றார்.

அகிலத்தையே தன்னுள் கொண்டிருக்கும் எம் இறைவனுக்கு இவ்வளவு பெரிய தவறை இழைத்துள்ள உன்னோடு இனி வாழ்வேனா? இக்க‌ணமே உன்னைத் துறக்கின்றேன் என்று உரைத்ததோடு மட்டும் அல்லாமல் தாம் மேற்கொண்டிருந்த பூஜை‌யையும் முடிக்காமல் வேக வேகமாக தம்முடைய இல்லத்தை நோக்கி சினத்தோடு விரைந்து சென்று கொண்டிருந்தார். ஆதவனும் மேற்கே சென்று அஸ்தமனத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அஞ்சுகின்ற உள்ளத்தோடும், தமது கணவரின் ஆணையையும் மீற முடியாமல் இவ்வேளையில் யாது செய்வது? என்று அறியாமல் திருத்தலத்திலேயே தங்கிவிட்டார் நாயனாரின் மனைவி.

நாயனாரின் மனைவி, தாம் செய்த பிழையால் எம்பெருமானுக்கு தம் கணவர் செய்ய இருந்த பூஜையும் தடைபட்டதே...!! என்று மனம் கலங்கினார். எம்பெருமானிடம் தாம் செய்த பிழையை மன்னித்தருள வேண்டும் என்று வேண்டி நின்றார் அடியவரின் மனைவியார். அம்மையார் இரவு முழுவதும் துயில் கொள்ளாமல் எம்பெருமானை எண்ணிக் கொண்டு விழித்து இருந்தார். இல்லத்திற்கு சென்ற திருநீலநக்கர் தமது துணைவியார் செய்த செயலை எண்ணியவாறே துயில் கொண்டார்.

திருநீலநக்கர் துணைவியார் செய்த செயலில் இருந்த ஒரு தாயின் அன்பையும், தம்மீது அவள் கொண்ட பக்தியையும் அறிந்த எம்பெருமான் அன்றிரவு தமது திருவிளையாடலை துவங்கினார். அதாவது, திருநீலநக்கரின் சொப்பனத்தில் எம்பெருமான் தோன்றினார். பக்தனே...!! எமது மேனியை பார்ப்பாயாக... என்று கூற அவரும் எம்பெருமானின் திருமேனியை கண்டார். எம்பெருமானின் திருமேனியில் ஒரு இடத்தை தவிர மற்ற இடங்கள் யாவும் கொப்புளங்கள் தோன்றியிருப்பதைக் கண்டார்.

உன் மனைவியார் ஊதிய இடத்தினை தவிர மற்ற இ‌டங்களிலெல்லாம் கொப்புளங்கள் தோன்றியிருப்பதாக திருவாய் மொழிந்து தமது வெண்ணீறு அணிந்த திருமேனியிலே இருக்கும் கொப்புளங்களைக் காண்பித்து மறைந்தார் எம்பெருமான். சொப்பனத்தில் இருந்து திடுக்கிட்டு அச்சத்துடனே எழுந்தார் திருநீலநக்கர். எம்பெருமானின் திருவருளை எண்ணி வியந்து நின்று அழுதார். தாம் செய்த தவறை எண்ணி மனம் வருந்தினார். அந்த இரவு பொழுதினிலே ஆலயத்தை நோக்கி விரைந்து ஓடினார்.

திருத்தலத்தில் இருக்கும் எம்பெருமானின் திருவடிகளில் வீழ்ந்து... வணங்கி... எழுந்து தன் தவறை எண்ணி மனம் வாடினார். திருத்தலத்தின் வெளிப்பிரகாரத்தில் தூணில் சாய்ந்த வண்ணம் துயில் கொள்ளாமல் அமர்ந்திருக்கும் மனைவியைக் கண்டார். மனைவியும் தம்முடைய கணவனைப் பார்த்தார். விரைந்து மனைவியின் அருகில் சென்று சொப்பனத்தில் எம்பெருமான் தோன்றி திருவாய் மலர்ந்ததையும், தான் எம்பெருமானின் புண்பட்ட திருமேனியை தரிசித்ததையும் உரைத்து மனைவியிடம் தாம் செய்த செயலுக்காக மன்னிப்பு கேட்டார். பின்னர் மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார். இல்லறத்தை முன்போல் இனிது நடத்தலாயினார்.

திருநீலநக்கர் தன் மனைவியுடன் பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் இல்வாழ்க்கை நடத்தி வந்தார். அச்சமயத்தில் திருஞானசம்பந்தமூர்த்தி செய்து வரும் அரும் பணிகள் பற்றிய செய்திகளை கேள்வியுற்று அவரை எவ்விதத்திலாவது நேரில் காண வேண்டும் என்று ஆவல் கொண்டார். திருஞானசம்பந்தர் தமது அடியார்களோடு எம்பெருமான் வீற்றிருக்கும் பல திருத்தலங்களை தரிசித்த வண்ணம் அயவந்திநாதரை வணங்கும் பொருட்டுத் திருச்சாந்தமங்கையை நோக்கி தமது பயணத்தை துவங்கினார்.

திருஞானசம்பந்தருடன் யாழ் இசைப்பதில் சிறந்தவருமான திருநீலகண்ட யாழ்ப்பாணரும், அவருடைய மனைவியாரும் வந்து கொண்டிருந்தனர். திருஞானசம்பந்தர் திருச்சாந்தமங்கையை நோக்கி வந்துக்கொண்டு இருக்கின்றார் என்ற செய்தியை கேட்டதும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார் திருநீலநக்கர்.

அவரை வரவேற்கும் பொருட்டு நடை பந்தலிட்டு...

வாழைகளை நட்டு...

தோரணங்கள் அமைத்து...

பூரண பொற்கும்ப கலசங்களோடும், தூபதீபங்களும் வைத்து...

மங்கள மேளதாளத்துடன் அன்பர்கள் புடைசூழ...

தம்முடைய சுற்றத்தார்களோடு இணைந்து...

திருச்சாந்தமங்கையின் எல்லையில் அவரை எதிர்க்கொண்டு வரவேற்று தமது மாளிகைக்கு அழைத்து வந்தார்.

திருஞானசம்பந்தருக்கும், அவருடன் வந்திருக்கும் அடியார்களுக்கும் திருவமுது படைத்து மனம் மகிழ்ந்தார். பின்பு அன்று இரவு தமது மாளிகையிலே‌யே அனைவரும் துயில் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்தார். அப்போது திருஞானசம்பந்தர் திருநீலநக்கரிடம் அடியார்களோடு வந்திருக்கும் திருநீலகண்ட யாழ்ப்பாணரும், அவருடைய மனைவியாரும் அன்றிரவு யான் தங்கிருக்கும் இவ்விடத்திலேயே அவர்களுக்கும் இடம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

திருஞானசம்பந்தரின் விருப்பத்தை அறிந்ததும் அவரிடம் தங்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதே எமக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செயலாகும் என்றார். அவர்களுக்கும் இவ்விடத்திலேயே தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளோம் என்று கூறினார். ஏனெனில் பாணரும், அவருடைய துணைவியாரும் இழி குலத்தோர் என்று கருதாமல் வேள்வி நடத்தும் இடத்திலேயே அவர்கள் துயில் கொள்வதற்கான படுக்கையை அமைத்துக் கொடுத்தார்.

திருஞானசம்பந்தமூர்த்தி பொழுது விடிந்த பின்பு அயவந்திநாதரை தரிசித்து திருப்பாசுரம் பாடினார். அப்பாசுரத்தில் திருநீலநக்கரின் உயர்ந்த குணத்தையும், எம்பெருமானுக்கு அவர் ஆற்றிய திருத்தொண்டையும் கூறியுள்ளார். சில நாட்கள் கடந்த பின்பு அங்கிருந்து புறப்பட எண்ணினார் திருஞானசம்பந்தமூர்த்தி.

திருஞானசம்பந்தமூர்த்தி புறப்பட்டு செல்கிறார் என்ற தகவலை அறிந்ததும் அவரை விட்டு பிரிய மனமில்லாத திருநீலநக்கர் அவரோடு இணைந்து செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். இதைக்கண்ட திருஞானசம்பந்தமூர்த்தி தாங்கள் எம்முடன் வருவது உசிதமானது அல்ல. நீங்கள் இவ்வூரிலேயே தங்கியிருந்து அயவந்திநாதருக்கு தொண்டுகள் பல புரிந்து நன்மை அடைவீர்களாக... என்று அன்பு கட்டளையிட்டார்.

திருஞானசம்பந்தமூர்த்தியின் அன்பு கட்டளையை மீற முடியாமல் திருச்சாந்தமங்கையிலேயே தங்கியிருந்து எம்பெருமானுக்கு தொண்டுகள் பல புரிந்தார். இருப்பினும் திருஞானசம்பந்தமூர்த்தியுடன் இருந்த சில நாட்களில் அவருக்கும், சம்பந்தருக்கும் ஏற்பட்ட பக்தியும், அன்பும் முடிவுகளே இல்லாத எல்லைகளாகவே இருந்தது.

அயவந்திநாதரை வழிபட்ட காலம் தவிர மற்ற நேரங்களில் அவ்வடியார் திருஞானசம்பந்தரின் எண்ணம் கொண்டவராகவே இருந்து வந்தார். பெருமண நல்லூரில் நிகழும் திருஞானசம்பந்தமூர்த்தியின் திருமணத்தினைக் கண்டுகளிக்கச் சென்றார். அங்கு தோன்றிய சிவஜோதியில் திருநீலநக்கர் அவருடைய துணைவியாருடன் கலந்து எம்பெருமானின் திருவடியில் இருக்கும் நிலையை அடைந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்