வியாழன், 11 ஜூன், 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 040

நமிநந்தியடிகள் நாயனார்...!!

பசுமை வளம் சூழ்ந்த சோழமண்டலத்தில் இருந்துவந்த பல ஊர்களில் ஏமப்பேறூர் என்னும் ஊர் உள்ளது. அங்கு வாழ்ந்து வந்த அந்தணர் குலத்தில் தோன்றியவர் நமிநந்தியடிகள். இவர் எம்பெருமானின் திருவடிகளை மிகுந்த அன்போடு இரவு பகல் பாராது வழிபட்டு வந்தார். இதுவே இவ்வுலகில் கிடைக்கும் அதீத இன்பமாகும் என எண்ணி சிவபெருமானை பூஜித்து மனமகிழ்ச்சி கொண்டார்.

நாள்தோறும் ஏமப்பேறூருக்கு அடுத்துள்ள திருவாரூர் சென்று புற்றிடங்கொண்ட எம்பெருமானை வணங்கி வழிபட்டு வந்தார். அங்கு எம்பெருமானை கண்டு மகிழ்ச்சியும், ஆனந்தமும் கொண்ட அன்பினாலே பல கோவில்களுக்கு சென்று தொண்டுகள் பலவும் செய்து கொண்டிருந்தார். அவ்விதமாக திருவாரூருக்கு அருகே உள்ள திருக்கோவிலின் திருமதிலுக்கு அருகாமையில் அறநெறி என்று ஓர் தனிக்கோவில் உண்டு.

அங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு அறநெறியப்பர் என்று பெயர். நமிநந்தியடிகளார் அறநெறிச் சன்ன‌‌pதியை அடைந்து அங்கே எழுந்தருளி அருள்பாலிக்கும் அறநெறியப்பரையும், அம்மையையும் பக்திப் பெருக்கோடு வழிபாடு செய்து வந்தார். ஒருநாள் மாலைப்பொழுதில் அடிகளார் அறநெறியப்பரை தரிசிக்க அறநெறிச் சன்னிதிக்கு சென்றார். அச்சன்னிதியில் விளக்கேற்றாமல் இருந்ததால் சன்னிதியில் உள்ள அனைத்து இடங்களிலும் இருள் படர்ந்திருந்தது. மேலும் எம்பெருமான் வீற்றிருக்கும் மூலவர் சன்னிதியில் ஒரே ஒரு விளக்கு மட்டும் ஏற்றப்பட்டு இருந்தது.

அந்த விளக்கும் எண்ணெய் தீர்ந்து போகும் நிலையில் சற்று மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. பேரொளியாக திகழும் எம்பெருமான் வீற்றிருக்கும் தலத்தில் ஒளி இல்லாது இருள் சூழ இருப்பதைக் கண்டு மனம் வருந்தினார். இதை தவிர்க்க உடனே விளக்கு ஏற்ற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. விளக்கு ஏற்றுவதற்காக தொலைவிலுள்ள தமது ஊருக்குச் சென்று நெய் வாங்கி வருவதற்குள் பொழுதும் விடிந்துவிடும் என்பதை உணர்ந்தார் நமிநந்தியடிகள். பின்பு கோவிலுக்கு அருகில் உள்ள வீட்டிற்கு சென்று எம்பெருமான் வீற்றிருக்கும் கோவிலில் விளக்கு ஏற்றுவதற்கு கொஞ்சம் நெய் வேண்டும் என்று பணிவன்புடன் வேண்டினார்.

திருவாரூரில் சமணர்களின் குடி சற்று அதிகமாகவே இருந்தது. நமிநந்தியடிகள் கோவிலில் விளக்கு ஏற்றுவதற்கு கொஞ்சம் நெய் வேண்டும் என்று கேட்ட இல்லத்தில் இருந்தவர்களும் சமணர்கள் ஆவார்கள். அச்சமணர்கள் அடிகளாரைப் பார்த்து நகைத்தும், அவர் உள்ளம் புண்படும்படியும் பேசி எள்ளி நகையாடிக் கொண்டு இருந்தார்கள்.

அதாவது, கரங்களில் கனல் ஏந்தி ஆனந்தத் தாண்டவம் ஆடும் உங்கள் பெருமானுக்கு விளக்கு ஏற்றுவதற்கு நெய் வேண்டுமா? ஏன் அந்த கனல் தரும் ஒளி உங்கள் பெருமானுக்கு போதவில்லையா? எங்களிடத்தில் நெய் இல்லை. உங்கள் பெருமானுக்கு அந்த ஒளியும் போதவில்லை என்று நீ எண்ணினால் உங்கள் பெருமானுக்கு எதிரில் உள்ள குளத்து நீரை கொண்டு விளக்கு ஏற்றிக்கொள்... என்று சொல்லி எள்ளி நகையாடினர்.

சமணர்கள் இவ்விதம் பேசியதைக் கேட்ட நமிநந்தியடிகளின் மனதில் கவலைகள் மேலிட நேராக எவரிடத்திலும் விளக்கு ஏற்றுவதற்கு நெய் கேட்காமல் நேராக எம்பெருமான் வீற்றிருக்கும் கோவிலுக்குள் வந்து இறைவனை பணிந்து அறநெறியப்பரே! எந்தாயே! எம்பெருமானே! அறம் எதுவென்று உணராத சமணர்களால் ஐயனுக்கு இழிமொழிகள் ஏற்பட்டுவிட்டதே? இவற்றை எல்லாம் கேட்க அடியேன் என்ன பாவம் புரிந்தேனோ? என்று மனதில் கவலை கொண்ட நமிநந்தியடிகள் அறநெறிப்பெருமான் முன் சென்று வருந்தி அழுது வணங்கினார்.

தமது அடியேன் கொண்ட கவலையை நீக்கும் பொருட்டு எம்பெருமான் அவருடைய கவலையை களைய அருள்புரிந்தார். அப்பொழுது ஆகாயத்தில் இருந்து ஒரு அசரீரி வாக்கு உதயமானது. அசரீரி!...

நமிநந்தியே...

உன் மனதில் கொண்டுள்ள கவலையை களைவாயாக...

இக்கோவிலின் அருகில் உள்ள குளத்தில் இருந்து...

நீரை கொண்டு வந்து விளக்கேற்றுவாயாக... என்று கூறியது.

அசரீரி கூறியதை கேட்டதும் மிகவும் மனம் மகிழ்ந்த நமிநந்தியடிகள் எம்பெருமானின் சித்தம் இதுவென என்று ஆனந்த கூத்தாடினார். பின்பு திருக்கோவிலின் அருகில் உள்ள சங்கு தீர்த்தம் என்னும் நாமம் கொண்ட திருக்குளத்தை நோக்கி ஓடினார். சங்கு தீர்த்தம் நிரம்பிய குளத்தின் நடுவே சென்ற நமிநந்தியடிகள் கயிலைநாதனின் நாமமாகிய திருவைந்தெழுத்தோதி மனதில் எண்ணிய வண்ணம் நீரை எடுத்துக்கொண்டு கரையேறி கோவிலை அடைந்தார். குளத்தில் இருந்து கொண்டு வந்திருந்த நீரினை அகழியில் ஊற்றி திரியை வைத்து விளக்கேற்ற துவங்கினார்.

எம்பெருமானின் கருணையை என்னவென்று உரைப்பது? தண்ணீர் ஊற்றிய விளக்கில் இருந்து வெளிப்பட்ட ஒளியானது, நெய் தீபத்திலிருந்து வெளிப்படும் ஒளியைக் காட்டிலும் மிகுந்த பிரகாசமாக இருந்தது. இதை கண்டு மனம் மகிழ்ந்த நமிநந்தியடிகள் திருத்தலம் முழுவதும் அகழியில் நீர் ஊற்றி விளக்கேற்ற தொடங்கினார்.

விளக்கில் இருந்து வெளிப்பட்ட ஒளியினால் கோவிலானது மிகவும் பிரகாசமாக இருந்ததை கண்டு திகைத்து நின்றார். திருத்தலத்தில் ஏற்றிய விளக்குகள் பொழுது விடிகின்ற வரை எரியும் அளவு நீரை கொண்டு விளக்கேற்றினார். இவ்விதமாக ஆரூர் அறநெறியப்பருக்கு தினந்தோறும் இரவில் எம்பெருமானின் அருளால் குளத்தில் இருந்து கொண்டு வந்திருந்த நீரால் திருவிளக்குகளை ஏற்றிய பின்பு தம்முடைய ஊராகிய ஏமப்பேறூருக்குச் சென்று சிவபூஜை முடித்து, திருவமுது செய்து துயில் கொள்வதை பழக்கமாக கொண்டு இருந்தார்.

காலம் கழிய கழிய திருவாரூரில் சமணர்களின் ஆதிக்கமும் ஒரு முடிவுக்கு வரத் துவங்கியது. ஒரு நிலையில் சமணம் அழிந்து சைவ நெறியானது மீண்டும் புத்துணர்ச்சியுடன் வளரத் துவங்கியது. அவ்வேளையில் சோழ நாட்டை ஆண்டு வந்த மன்னன் நமிநந்தியடிகளாரின் பக்தியையும், எம்பெருமானின் மீது கொண்டிருந்த அளப்பறியா அன்பையும் கோவில் மற்றும் அடிகளாருக்கு அவர் ஆற்றி வந்த திருத்தொண்டினையும் அறிந்து கொண்ட மன்னர் கோவிலுக்கு நமிநந்தியடிகளையே தலைவராக்கினார்.

நமிநந்தியடிகளாரை தலைவராக்கியதோடு மட்டுமல்லாமல் எம்பெருமானுக்கு செய்துவரும் பூஜைகளில் எவ்விதமான தடைகளும் ஏற்படாத வகையில் திருக்கோவிலுக்கு தேவையான பொன்னும், பொருளும் கொடுத்து உதவினார். நமிநந்தியடிகள் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து எம்பெருமானுக்கு பெருவிழாக்கள் பல நடத்தி பேரின்பம் கொண்டிருந்தார். ஆண்டுதோறும் வருகின்ற பங்குனி உத்திரத் திருவிழாவை மிகுந்த சீரோடும், சிறப்போடும் எவ்வித குறைபாடுகளும் இல்லாமல் அடிகளார் முன் நின்று சிறப்பாக நடத்தி கொண்டிருந்தார்.

அச்சமயத்தில் ஏமப்பேறூரை அடுத்துள்ள மணலி என்ற ஊரில் ஆண்டுக்கு ஒரு முறை திருவாரூர் தியாகேசப் பெருமான் எழுந்தருளி அடியார்கள் மற்றும் பக்தர்களுக்கு காட்சி தருவது வழக்கம் ஆகும். அதை கேள்விப்பட்ட நமிநந்தியடிகள் தாமும் அதில் கலந்துகொள்ள வேண்டி மணலிக்கு சென்றார். அவ்விடத்தில் நடைபெற்ற தியாகேசப் பெருமான் விழாவிற்கு எல்லா குலத்து மக்களும் சாதி, மத, பேதமின்றி கலந்து கொண்டு இறைவனை தரிசித்துச் சென்றனர்.

நாயனார் வீட்டிற்குள் வராமல் வெளியே படுத்திருந்த சமயத்தில் இல்லத்தின் உள்ளிருந்து வெளியே வந்த அம்மையார் தம் கணவன் வெளியே படுத்திருந்ததை கண்டு திகைத்து நின்றாள். பின்பு அவரிடம் என்ன நடந்தது? என்று வினவினாள். அப்பொழுது நாயனார் தம் துணைவியிடம் தியாகேசப் பெருமானின் விழாவிற்கு சென்று இருந்ததாகவும், அவ்விடத்தில் குல வேறுபாடு இன்றி அனைத்து மக்களுடன் கலந்து செயல்பட்டமையால் தூய்மை கெட்டுவிட்டது. இந்த நிலையில் என்னால் எவ்விதம் இல்லத்திற்குள் வர இயலும்? சரி... நீ சென்று சுடு தண்ணீர் எடுத்து வா...!! நான் குளித்துவிட்டு வருகிறேன் என்று கூறினார். அவரது துணைவியாரும் சுடு தண்ணீர் வைப்பதற்காக உள்ளே சென்றார்.

அதற்குள் பயண களைப்பின் காரணமாக ஏற்பட்ட சோர்வினால் திண்ணையில் படுத்திருந்த அவர் கண் அயர்ந்து உறங்கிவிட்டார். அப்போது பே‌ரொளி பிழம்பான எம்பெருமான் சொப்பனத்தில் எழுந்தருளினார். திருவாரூரில் பிறந்தவர்கள் அனைவருமே எனது கணங்கள்தான். அப்படியிருக்க உமக்கு மட்டும் ஏன் அவர்கள் இடையே இவ்வளவு வேற்றுமை உண்டாகியது?. இவ்வுண்மையை அறிந்துகொள்ள நாளை திருவாரூர் வந்து காண்பீராக... என்று திருவாய் மலர்ந்து அருளினார்.

அதன்பின் நாயனார் துயிலில் இருந்து விழித்து எழுந்தார். அடியார்களிடையே குலவேறுபாடு நினைத்தது தவறு என்று உணர்ந்து தாம் செய்த தவறை பொறுத்து அருளுமாறு எம்பெருமானிடம் வேண்டினார். அதற்குள் அம்மையார் தம் கணவரை குளிப்பதற்கு வருமாறு அழைத்தாள். நான் இப்போது குளிக்க விரும்பவில்லை என்றும், எம்பெருமான் கனவில் தோன்றி மொழிந்‌ததையும் கூறினார். பின்பு குளிக்காமலேயே வீட்டிற்குள் சென்று துயில் கொண்டார்.

பொழுது விடிந்தபின் தூய நீராடி திருவெண்ணீறு திருமேனி எங்கும் பிரகாசிக்க திருவாரூருக்குச் சென்றார். அப்பொழுது அந்த நகரில் பிறந்தவர்கள் அனைவரும் சிவசொரூபம் பெற்றவர்களாகத் திருவெண்ணீறு மேனி‌‌யோடு திகழும் காட்சியைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி கொண்டார். அடியேன் செய்த பிழையை பொறுத்தருள வேண்டும் என்று எண்ணிய வண்ணம் நிலத்தில் வீழ்ந்து ஆரூயிர்ப்பெருமானை போற்றினார். உடனே அங்கு இருந்த அனைவரும் சிவசொரூபம் தோற்றம் நீங்கி பழைய படி அவரவர்களின் உருவத்துடனே திகழ்ந்தனர்.

இந்த நிகழ்விற்கு பின்னர் அடிகளார் திருவாரூரை விட்டுச் செல்ல மனம் இல்லாமல் தியாகேசப் பெருமானின் திருவடிகளில் இருந்து கொண்டே காலத்தை கடக்க வேண்டும் என்று எண்ணினார். பின்பு தம் மனைவியுடன் ஏமப்பேறூரை விடுத்து திருவாரூரில் தமது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டு தியாகேசப் பெருமானுக்கு திருத்தொண்டு பலசெய்து இறுதியில் எம்பெருமானின் திருவடி நிழலை அடைந்து பேரின்பம் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்