Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 16 ஜூன், 2020

சிவபுராணம் - பாகம்‌2 பகுதி 044

கண்ணப்ப நாயனார்...!!

அழகிய மலர் சோலைகள் மற்றும் மலைவளம் சூழ்ந்த பொத்தப்பி நாட்டிலுள்ள ஒரு சிற்றூர்தான் உடுப்பூர். விண்ணைத்தொடும் அளவில் பெரிய, உயர்ந்த மரங்கள் சூழ்ந்த பகுதியாகும். வேடர்களின் தனி நாடாகவும் திகழ்ந்தது.

வேட்டுவ குலத்தில் பிறந்தவர்கள் வேட்டையாடுவதில் வல்லவர்களாக திகழ்ந்தனர். வனத்தில் இருக்கும் விலங்குகளை வேட்டையாடி அவற்றின் தோலை உரித்து, ஆடைகளாக அணிந்து வாழ்ந்து வந்தனர். இவ்வேடர் குலத்திற்கு தலைவனாக இருந்தவர்தான் நாகன். இவரது மனைவி தத்தை என்பவள். உடல் வலிமையிலும், வேட்டையாடுவதிலும் திறமை கொண்டவராக திகழ்ந்து வந்தார் நாகன். அம்மறக்குடி மங்கையும் கணவனைப் போல் வீரமும், வலிமையும் கொண்டு பெண் சிங்கம் போல் இருந்தாள்.

இருவரும் பல வகை வளங்களோடும், சிறப்புகளோடும் வாழ்ந்து வந்தார்களே தவிர, அவர்களுக்கு மனதில் நிம்மதியும், அமைதியும் இல்லாமல் தவித்து வந்தார்கள். ஏனெனில் நாகனுக்கும், தத்தைக்கும் திருமணமாகி பல காலமாகியும் அவ்விருவருக்கும் குழந்தைப்பேறு இல்லாமல் தவித்து வந்தனர். தங்கள் மனதில் இருக்கும் கவலைகளை போக்கும் பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் முருகக்கடவுளை பல வழிகளில் வழிபட்டு வந்தனர். இவர்களின் பக்திக்கும், அன்பிற்கும் மனம் மகிழ்ந்த முருகப்பெருமான் நாகனுக்கும், தத்தைக்கும் குழந்தைச் செல்வத்தை அருளினார்.

சுந்தர கடவுளின் அருளால் தத்தை ஒரு ஆண்மகனை ஈன்றெடுத்தாள். தனக்கு மகன் பிறந்த செய்தியை அறிந்ததும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார் நாகன். பிறக்கும் போதே குழந்தையைக் கரங்களில் தூக்க முடியாத அளவிற்கு திண்ணமாய் இருந்ததால் அவர்கள் அக்குழந்தைக்கு திண்ணன் என்று பெயரிட்டு அழைத்து வந்தனர். நாகன், தத்தை தம்பதிகளுக்கு ஆண்மகன் பிறந்த செய்தியை அறிந்த வேடர்கள் அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி ஆரவாரம் கொண்டனர்.

திண்ணன் வளர்பிறை போல் நாளொரு மேனியும், பொழுதொரு மேனியுமாக வளர்ந்த வண்ணமாக இருந்து வந்தார். வேடர் குலத்திற்கு ஏற்ப வேட்டையாடுவதில் வல்லவரான தன் தந்தையை போல் சிறந்து விளங்கினார். காலம் கடக்க திண்ணன் வளர்ந்து வர நாகன் முதுமை நிலையை அடைந்து வந்தார். தன் மகனை தம் மக்களை காக்கும் தலைமைப் பதவிக்கு அமர்த்த தாம் விரும்புவதாக தமது எண்ணத்தை சக வேடர்களிடம் கூறினார்.

pண்ணரின் செயல்பாடுகள் மற்றும் அவரின் எண்ணங்களை அறிந்து கொண்ட வேடர்களும் நாகனாருடைய விருப்பத்தினை ஏற்றுக்கொண்டனர். பின்பு அவர்களின் குலவழக்கப்படி ஒரு சுப யோக தினத்தில் திண்ணரை தலைவர் பதவியில் அமர்த்தினார்கள். திண்ணரும் அவர்களின் நம்பிக்கைக்குரிய விதமாக செயல்பட்டு வேடர்களின் குழுவில் இருந்துவந்த ஈடு, இணையற்ற வீரத்தலைவர்களுள் ஒருவராகவும், அவர்களை விடவும் சிறந்து விளங்கினார்.

திண்ணருடைய செயல்பாடுகளின் மூலம் வேடர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்கள். எட்டு திக்கிலும் திண்ணரின் செல்வாக்கு மேம்பட துவங்கியது. இதனால் மிகவும் மனம் மகிழ்ந்த திண்ணரின் தந்தையான நாகன் அவர்களை காக்கும் தேவதைகளுக்கு குலவழக்கத்திற்கு ஏற்ப பூஜை செய்யும் தேவராட்டியை வரவழைத்து தேவதைகளுக்கு பூஜை செய்யுமாறு ஆணையிட்டார். தேவராட்டி வழிபாடு செய்து திண்ணர், தந்தையினும் மேம்பட்டவனாய் விளங்குவான் என்று ஆசி கூறினாள்.

ஒருநாள் அவரவர்களின் குலவழக்கப்படி வேட்டைக்கு புறப்பட எண்ணினார் திண்ணர். மனதார இறைவனை வழிபட்டு அனைவருடனும் இணைந்து வேட்டைக்குப் புறப்பட்டார். குகைகளில் இருந்து வேட்டைக்கு புறப்படும் புலியை போல வேட்டைக்கு புறப்படத் தொடங்கினார்கள். வேடர்கள் குல பெண்கள் சத்தம் எழுப்ப மகிழ்ச்சியுடன் சென்றனர்.

வேடர் குல பெண்கள் எழுப்பிய சத்தத்தில் வனமே அதிர்ந்தது. சிங்கங்கள் கர்ஜித்து வந்து வேடர்கள் கொண்டுவந்த ஈட்டிகளுக்குப் பலியாயின. வேகமாக பாய்ந்து வந்த புலிகள் வேடர்களின் குறிகள் கொண்ட அம்புகளுக்கு மாய்ந்தன. துள்ளி குதித்து விளையாடிய அழகிய மான்கள் பல மடிந்து வீழ்ந்தன. பல வனவிலங்குகளும் வேடர்களின் வில்களுக்கும், கணைகளுக்கும் பலியாயின. அந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத நிகழ்வு ஒன்று நிகழ துவங்கியது. அதாவது, அவர்கள் பிடித்து வைத்திருந்த விலங்குகளில் பெரிய பன்றி ஒன்று வலையை அறுத்துக்கொண்டு அவ்விடத்தில் இருந்த வேட்டை நாய்களிடத்தில் அகப்படாமல் தப்பித்து ஓடத் துவங்கியது. வேடர்கள் தொடுத்த கணைகளுக்கு அகப்படாமல் பன்றி தப்பி அதிவேகமாக ஓடத் தொடங்கியது.

வேடர்கள் பன்றியைத் துரத்திக் கொண்டு ஓடி பல வழிகளில் முயற்சி செய்தும் பன்றி அவர்களின் பிடிகளுக்கு அகப்படவில்லை. பன்றியின் பின்னால் சென்ற அனைவருக்கும் களைப்பு மேலிட துவங்கியது. ஆனால் திண்ணர் மட்டும் மனஉறுதியோடு பன்றியைப் பின்தொடர்ந்து சென்று பாதைகளில் இருந்துவந்த பல தடைகளை கடந்து பன்றியைப் பிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். திண்ணர் பன்றியை துரத்திய வண்ணம் சென்று கொண்டிருந்த அவரை தொடர்ந்து நாணன், காடன் ஓடினர்.

அனைவரின் பிடியில் இருந்து தப்பி ஓடிய பன்றியை மிகவும் வேகமாக விரைந்து சென்று பிடித்தார் திண்ணர். தன்னிடம் இருக்கும் உடைவாளால் பன்றியை வெட்டி துண்டாக்கினார். திண்ணரை பின் தொடர்ந்து வந்த நாணனும், காடனும் தங்களது தலைவரின் ஆற்றலைக் கண்டு வியந்தனர். அவருடைய வீரத்திற்கு தலைவணங்கிய அவ்விருவரும் அவர் கால்களில் வீழ்ந்து வணங்கினர்.

பன்றியை வெகுதூரம் துரத்தி வந்தமையால் அவர்களுக்கு பசி எடுத்தது. பன்றியை நெருப்பில் சுட்டு தின்று தண்ணீர் அருந்திச் செல்ல தீர்மானித்தனர். திண்ணனார் தண்ணீர் எங்கே கிடைக்கும் என்று அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். இதற்கு முன் இவ்விடத்திற்கு பலமுறை வேட்டைக்கு வந்த நாணன் திண்ணரிடம் சிறிது தூர தொலைவில் இருக்கும் தேக்குமரத் தோப்பினைக் கடந்து சென்றால் குன்றுகளின் அருகாமையில் பொன்முகலி என்னும் ஆறு ஓடிக்கொண்டு இருக்கின்றது.

தங்களுக்கு வேண்டும் அளவு நீரை பருகி கொள்ளலாம் என்று கூறினார். நாணனின் பேச்சைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த திண்ணனார் சரி... நாம் இந்த பன்றியை அவ்விடத்திற்கு தூக்கிச் செல்வோம் என்று உரைத்து முன்னால் புறப்பட நாணனும், காடனும் திண்ணரை பின் தொடர்ந்த வண்ணம் பன்றியைத் தூக்கிக் கொண்டு சென்றனர்.

அவ்வாறு செல்லும் வழியில் திண்ணனார் காளத்தி மலையைக் கண்டார். அம்மலையை கண்ட மாத்திரத்தில் சில வினாடி பொழுதுகள் அசைவற்று நின்றார். அம்மலையை பார்க்க பார்க்க அவர் உடலில் ஒருவிதமான புத்துணர்ச்சி ஏற்பட துவங்கியது. அந்த புத்துணர்ச்சி காரணமாக அவரின் உடலில் ஒரு புதுசக்தி பிறந்தது. அந்த மலையின் மீது ஏதோ பிரகாசமான ஒளிப்பிளம்பு தெரிவது போன்ற மாயை அவரை அவ்விடத்தை விட்டு நகராமல் சற்று நேரம் மெய்மறக்கச் செய்தது.

அம்மலையின் மீது அமைந்திருந்த வனங்கள் என்றும் இல்லாத வகையில் தனிப்பட்ட அழகுடன் காட்சி அளிப்பதாக தோன்றியது. மலையின்மீது தேவ துந்துபிகள் கடல் ஒலிபோல் முழக்கம் செய்தன. நாணன் செவிகளுக்கோ அந்த ஒலிகள் கேட்காமல் தேனீக்கள் தேனடையைச் சூழ்ந்து கொண்டு எழுப்பும் ஓசைதான் ஒலித்தது.

அம்மலையே மனதில் பதிந்து போனது போல திண்ணனார் நாணனை நோக்கி அக்குன்றுக்குச் செல்வோமா என்று மிகவும் மனம் மகிழ்ந்த நிலையில் உணர்ச்சி பொங்கிட கேட்டார். தங்களுக்கு அதுதான் விருப்பம் என்றால் அவ்விடத்திற்கு செல்வோம். அம்மலையின் மீது பல அழகிய எழில் மிகுந்த காட்சிகள் பலவற்றைக் காணலாம். அதோடு மட்டுமல்லாமல் அம்மலையிலுள்ள குடுமித்தேவர் கோவிலுக்குச் சென்று, அவரையும் கும்பிட்டு வரலாம் என்று நாணன் கூறினான்.

நாணன் கூறியதைக் கேட்டு திண்ணனார் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவரின் உடம்பில் இருந்து ஒரு பேரின்ப சக்தி பிறந்தது. தன் மனம் அடைந்த மகிழ்ச்சியை எவ்விதத்தில் வெளிப்படுத்துவது என்று தெரியாமல் ஆனந்தம் கொண்டார். காளத்தி மலையை பார்க்க பார்க்க திண்ணனாரின் மனம் கொண்ட ஒரு பெரிய பாரமானது குறைந்து புத்துணர்ச்சி ஏற்படத் துவங்கியது. குடுமித்தேவரைக் காண வேண்டும் என்ற ஆவல் சூரியனை கண்டு மலரும் தாமரை போல் மிகவும் பிரகாசமாக இருக்க துவங்கியது.

குடுமித்தேவரை வணங்க வேண்டுமென்ற எண்ணமானது அவரை உந்தி தள்ள விரைந்து சென்றார். நாணனும், காடனும் அவரை பின் தொடர்ந்த வண்ணம் சென்று கொண்டிருக்க சிறிது நேரத்தில் மூவரும் பொன்முகலி ஆற்றின் கரையை அடைந்தனர். பின்பு தாம் கொண்டு வந்த இறைச்சியை சமைப்பதற்காக இடத்தினை தேர்வு செய்து காடனை நோக்கி இப்பன்றியை பக்குவமாக சுட்டு சாப்பிடுவதற்கு உகந்த மாதிரி தயார் நிலையில் வை என்றும், அதற்குள் நானும், நாணனும் மலைக்குப் போய் வருகிறோம் என்றும் கூறினார்.

பொழுதும் மாலை பொழுதாக... கதிரவனும் தம் பணியை முடித்த வண்ணம்... தன்னுடைய இருப்பிடம் நோக்கி சென்று கொண்டிருக்க கதிரவனின் மஞ்சள் வெயில் திருக்காளத்தி மலையைப் பொன்மயமாக்கியது. வெளிச்சம் குறையவே நாணன், திண்ணனாருக்கு பாதை காட்டும் பொருட்டு முன்னால் நடந்து சென்று கொண்டிருந்தான். திண்ணனாரும் நாணனை பின் தொடர்ந்த வண்ணம் சென்று கொண்டிருந்தார். மலையின் மீது ஏறிய திண்ணனார் அங்கு எழுந்தருளியிருக்கும் குடுமித்தேவரை கண்டதும், அவர் விழிகளில் அவரையும் அறியாமல் ஆனந்தக் கண்ணீரானது உருவாக துவங்கியது. திண்ணனார் முகத்தில் என்றுமில்லாத பிரகாசம் ஒன்று ஏற்பட்டது.

குடுமித்தேவரின் மீது கொண்ட அன்பினால் அருள் வடிவமாக காட்சி அளிக்கும் எம்பெருமானை கட்டி தழுவி முத்தமாரி பொழிந்து பலமுறை தரையில் வீழ்ந்து வணங்கி எழுந்தார். அவரின் விழிகள் அருவி போல் ஆனந்த நீரைச் சிந்தின. மதுவுண்ட வண்டு என்ன செய்வது? என்று தெரியாமல் இருப்பது போல் திண்ணனாரின் மொழியானது குளற துவங்கியது. உடலானது மகிழ்ச்சியால் குளிர்ந்தது. சர்வ உலகங்களையும் மறந்து அவ்விடத்தில் சிலை போல் நின்றார்.

சிறிது நேரத்தில் சுய நினைவிற்கு திரும்பியதும் எம்பெருமானை சுற்றி வலம் வந்து நிலத்தில் வீழ்ந்து சிவலிங்கத்தை வணங்கினார். எம்பெருமானை வணங்கி முடித்ததும் திண்ணனார் மனதில் ஒருவிதமான கலக்கம் ஏற்பட துவங்கியது. அதாவது, கொடிய மிருகங்கள் பல சுற்றித்திரியும் இந்த வனத்தில் நான் அன்பு கொண்ட எம்பெருமானுக்கு ஏதாவது ஆபத்து நேரிடுமோ? என்ற எண்ணம் தோன்றவே அவரையும் அறியாமல் அவரிடம் இருந்த மகிழ்ச்சியானது குறைந்து அவர் அழத் தொடங்க... அவரது கரங்களில் இருந்த வில்லானது தானாக நழுவி நிலத்தில் விழுந்தது. கீழே விழுந்த வில்லை எடுப்பதற்காக அவர் விரைந்தபோது எம்பெருமானின் மீது ஒரு காட்சியை கண்டார்.

கீழே விழுந்த வில்லை எடுப்பதற்காக திண்ணனார் விரைந்தபோது எம்பெருமானின் மீது பச்சிலையும், நீரும் இருப்பதை பார்த்து எம்பெருமானை யார் இவ்வாறாக செய்திருப்பார்கள்? என்று மனதில் எண்ணினார். அதை அறியும் பொருட்டு நாணனிடம் இக்கேள்வியைக் கேட்டார். நாணன் திண்ணனாரை நோக்கி இந்த வேலையை யார் செய்திருப்பார்? என்று நான் அறிவேன் என்றார். அதாவது, நான் உங்கள் தந்தையுடன் இவ்விடத்திற்கு வரும்பொழுது இவ்விடத்திற்கு அருகில் வாழ்ந்து வரும் அந்தணர் ஒருவர் எம்பெருமானை வணங்கி பச்சிலையும், நீரும் வார்த்து சென்றிருப்பார் என தலைவரிடம் எடுத்துக்கூறினார்.

நாணன் கூறியதை கேட்டதும் குடுமித்தேவருக்கு இவ்விதம் செய்வதுதான் மகிழ்ச்சி அளிக்கும் என்பதை உணர்ந்ததும் தாமும் அதை கடைபிடித்து அவ்வழி செல்ல முடிவு செய்தார். நாணனை நோக்கி நாம் அன்புடன் எதை கொடுத்தாலும் குடுமித்தேவர் ஏற்றுக்கொள்வாரா? என்று ஏதும் தெரியாத குழந்தை போல் கேட்டார். அவ்விதம் எண்ணி கொண்டிருந்த பொழுது திடீரென்று திண்ணனார் மனதில் இறைவனுக்கு உணவு படைக்க மறந்துவிட்டோமே? என்றும், இறைவன் பட்டினியால் வாடிக்கொண்டு இருப்பாரோ? என்ற ஐயமும் எழத் துவங்கியது.

சிறிது நேரத்திற்குள் இறைவன் உணவினை உண்ணாமல் அவர் பசியுடன்தான் இருப்பார் என்ற முடிவுக்கே வந்துவிட்டார். குடுமித்தேவரை நோக்கி உமக்கு பசி ஏற்படும் பொழுது இறைச்சி, குளிர்ந்த நீரை கொடுக்க இவ்விடத்தில் யாரும் இல்லையே...! என்று புலம்பத் துவங்கினார். இதோ நான் சென்று விரைந்து எடுத்து வருகிறேன் என்று இறைவனை விடுத்து இரண்டடி முன்வைத்தார். அந்த நொடிப்பொழுதில் அவர் மனதில் என்ன எண்ணம் தோன்றியதோ தெரியவில்லை... எடுத்து வைத்த இரண்டு அடிகளையும் திருப்பி இறைவனை நோக்கி எடுத்து வைத்து இறைவனை மிகவும் தழுவிக்கொண்டார்.

ஒரு நொடிக்கூட இவ்விடத்தைவிட்டு எங்கும் என்னால் செல்ல முடியாது என்று தயங்கி நின்றார். ஒரு அடிக்கூட ஐயனை விட்டு என்னால் பிரிந்திருக்க முடியாது என்று கூறிய வண்ணம் குடுமித்தேவரை அணைத்தவாறு இருந்தார். சிறிது நேரம் சென்ற பின்பு அவர் பசியுடன் இருப்பதை உணர்ந்து ஒரு அடி எடுத்து வைப்பார், திரும்பவும் இறைவனின் திருமேனியை இறுக கட்டிப்பிடித்துக் கொள்வார். இவ்வாறாகவே சிறிது நேரம் செல்ல தொடங்கியது.

பின்பு தனது மனதை தேற்றிக்கொண்டு வில்லைக் கையில் எடுத்துக் கொண்டு குடுமித்தேவரை திரும்பித் திரும்பி பார்த்த வண்ணம் அவருக்கு வேண்டிய இறைச்சியையும், நீரையும் கொண்டு வர செல்லத் துவங்கினார். திண்ணனாரின் செயலை கண்டு என்ன செய்வது? இவருக்கு என்னவாயிற்று? என்று புரியாமல் அவரை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார் நாணன்.

திண்ணனாரின் உடல் மட்டுமே குடுமித்தேவரின் இடத்தைவிட்டு நகர்ந்து கொண்டிருந்ததே தவிர, அவரது மனமும், எண்ணமும் காளத்தி மலையில் குடிக்கொண்டிருக்கும் குடுமித்தேவரிடமே இருந்தது. பொன்முகலி ஆற்றை கடந்து சென்றதும் தனது தலைவனை கண்ட மகிழ்ச்சியில் எதிரில் வந்து தம் தலைவரை தொழுதார் காடன். ஆனால் திண்ணனாரோ எவ்விதமான செய்கையும் செய்யாமல் அமைதியாகவே இருந்தார். சிறிது ஐயத்துடன் நம் தலைவருக்கு என்னவாயிற்று? என்று நாணனிடம் கேட்டார்.

அங்கு நிகழ்ந்தவற்றை எல்லாம் காடனிடம் எடுத்துரைக்க துவங்கினான் நாணன். அதாவது குடுமித்தேவர், நமது தலைவரை நன்றாக பற்றிக் கொண்டுள்ளார். அவரிடம் இருந்து பிரிந்து செல்ல முடியாத வகையில் மிகுந்த பற்றுள்ள நிலைமைக்கு நமது தலைவரும் சென்றுவிட்டார். இப்பொழுதுகூட தலைவர் நம்முடன் நம்முடைய இருப்பிடத்திற்கு வருவதற்காக இவ்விடம் வரவில்லை, மாறாக குடுமித்தேவருக்கு பசியெடுக்குமே என்றும், அவருக்கு நீர் வேண்டுமே என எண்ணினார். அதனால் அவரின் பசியை போக்குவதற்காகவும், அவர் தாகத்தை தீர்ப்பதற்காகவும், பொன்முகலி ஆற்றில் இருந்து நீரை எடுத்து செல்வதற்காக வந்துள்ளார்.

குடுமித்தேவர் மயக்கம் நம் தலைவருக்கு தலைக்கேறியது. இனி நாம் என்ன செய்வோம்? என்று தெரியவில்லையே என்று புலம்பத் தொடங்கினார் நாணன். நாணன் கூறியதைக் கேட்டதும் என்ன செய்வது? என்று புரியாமல் காடனும் நிலைகுலைந்து நின்று கொண்டிருந்தார். நமது தலைவர் ஏன் இப்படி மாறிவிட்டார்? எதனால் இந்த மாற்றம் என்று தமக்குள்ளே மிகவும் வேதனையோடு கேட்டுக்கொண்டிருந்தான். இருப்பினும் நாம் நம் தலைவரை அழைத்து செல்ல வேண்டியது நம் கடமையாகும் என்று எண்ணி நாணனும், காடனும் அவரிடம் நமது இருப்பிடத்திற்கு புறப்படுவோம், பொழுது சாய்ந்துவிட்டது என்று பல தடவைகள் எடுத்துரைத்தனர்.

திண்ணனார் எவ்விதமான பதிலும் உரைக்காமல் அமைதி காத்துக்கொண்டே இருந்தார். அவர் எவ்விதம் பதிலுரைக்க இயலும்?... அவர்தான் இவ்வுலகிலேயே இல்லையே... எம்பெருமானின் அருளால் இவ்வுலகத்தை விடுத்து அவர் எம்பெருமானின் கருணையை நினைத்து கொண்டிருக்கின்றார்.

திண்ணனாரின் செயல்கள் யாவும்

இறைவனுக்கு தேவையான உணவை பக்குவமாக சமைப்பதில் கண்ணும், கருத்துமாக இருந்தது.

செவிகள் இருந்தும் கேட்க இயலாத நிலையிலும்...

கண்கள் இருந்தும் குருடனாய் காணப்பட்டார்.

அம்பினால் பன்றி இறைச்சியை கிழித்து சிறு சிறு துண்டாக வெட்டினார். பின்பு அவற்றை எல்லாம் அம்பிலேயே நெருக்கமாக கோர்த்து நெருப்பில் நன்றாகக் காய்ச்சி தக்கபடி பக்குவமாகச் சமைத்தார். சமைத்து முடித்த பின்பு அவற்றை வாயில் இட்டுச் சுவைத்து பார்த்தார். வாய்க்கு சுவையாக இருக்கும் நல்ல இறைச்சித் துண்டுகளை எல்லாம் தேக்கிலையால் செய்த தொன்னையிலே எடுத்துக் கொண்டார்.

திண்ணனாரின் செயல்பாடுகளை கண்டு கொண்டிருந்த காடனும், நாணனும் இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்பதை புரிந்து கொள்ள இயலவில்லை. நம் தலைவர் தலைவராகவே இல்லை என்பது மட்டும் புரிகின்றது. இனியும் பொறுத்துக் கொண்டு இருந்தால் வேலைக்கு ஆகாது என்பதை உணர்ந்த இருவரும் திண்ணனாரின் தகப்பனாரையும், தேவராட்டியையும் அழைத்து வந்து இதற்கு ஒரு தீர்வு காணலாம் என்ற எண்ணம் கொண்டு திண்ணனாரிடம் கூட உரைக்காமல் அவ்விடத்தை விட்டு புறப்பட்டு சென்றனர்.

அவர்கள் சென்றது கூட அறியாமல் எம்பெருமானுக்கு தேவையான உணவினை நிரப்பிக்கொண்டு இருப்பதிலேயே தனது கவனம் முழுவதையும் செலுத்தினார் திண்ணனார். இறைவனுக்கு தேவையான உணவினை எடுத்துக் கொண்டு பொன்முகலி ஆற்றில் அவரை நீராட்டுவதற்காக தேவையான நீரினை வாயில் எடுத்துக் கொண்டு, அவருக்கு பூஜை செய்வதற்காக வனத்தில் கிடைத்த மணம் நிறைந்த மலர்களை கால்களினால் பறித்துக் கொண்டும் அதைத் தம் தலையின் மீது ஏந்திக் கொண்டார்.

ஒரு கரத்தில் வில்லும், மற்றொரு கரத்தில் எம்பெருமானுக்கு தேவையான உணவும், வாயில் எம்பெருமானை நீராட்டுவதற்கான நீரும், சிரத்தில் அவருக்கு பூஜை செய்வதற்கான பூவையும், இதயத்தில் குடுமித்தேவர் பற்றிய எண்ணத்தோடு காளத்தி மலையை நோக்கி வேகமாக ஓடினார். ஒருவழியாக எம்பெருமான் வீற்றிருக்கும் இடத்தையும் அடைந்து பேரின்பம் கொண்டார்.

அவ்விடத்தை அடைந்ததும் முதல் பணியாக எம்பெருமானின் மீது இருந்த மலர்களையும், பச்சை இலைகளையும் செருப்பு காலால் அகற்றினார். பின்பு பொன்முகலி ஆற்றில் இருந்து வாயில் எடுத்து வந்த நீரை எம்பெருமானின் மீது உமிழ்ந்தார். இதயம் முழுவதும் குடுமித்தேவர் எண்ணத்தோடு அவருக்காக பறித்து வந்த மலரை தனது சிரத்திலிருந்து எடுத்து அவர்மீது பொழிந்தார். கரங்களில் இருந்த ஊன் நிறைந்த தொன்னையை எம்பெருமானின் முன்பு வைத்து இறைச்சியை திருவமுது செய்ய எண்ணம் கொண்டார் திண்ணனார்.

ஐயனே...! தாங்கள் எதற்கும் கவலை கொள்ள வேண்டாம். இறைச்சி நன்றாக உள்ளதா? இல்லையா? என்பதை நான் சுவைத்து பார்த்துதான் உங்களுக்கு கொண்டு வந்துள்ளேன். இந்த ஏழை பக்தனின் ஆசையை நிறைவேற்றும் விதமாக தாங்கள் திருவமுது செய்ய வேண்டும் என்று மொழிந்த வண்ணம் தான் கொண்டு வந்திருந்த ஊனை இறைவனுக்கு அன்போடும், பக்தியோடும் ஊட்டத் தொடங்கினார்.

தான் கொண்டு வந்திருந்த ஊனை இறைவனுக்கு அன்போடும், பக்தியோடும் ஊட்டத் தொடங்கிய சிறிது நேரத்தில் திண்ணனார் மனதில் மீண்டும் பயம் ஏற்படத் துவங்கியது. தன்னைப் பற்றிய பயம் அவருக்கு எள்ளளவும் இல்லை. தன்னுடைய இறைவனுக்கு இரவில் ஏதாவது வனவிலங்கு மூலம் ஆபத்து ஏற்படுமோ என்ற பயத்தால் கண்கலங்கினார். பின்பு அவரைவிட்டு எங்கும் விலகாமல் அவரின் அருகாமையிலேயே இரவெல்லாம் கண்விழித்து, கரங்களில் வில்லேந்தி காவல் காத்துக் கொண்டிருந்தார்.

வனத்தில் இருந்த விலங்குகள் சப்தம் எழுப்பியும் எதற்கும் அஞ்சாமல் இறைவனோடு துணையாக நின்று கொண்டிருந்தார். இருளானது மறைந்து விடியத் தொடங்கியது. கதிரவன் தனது செம்மையான கதிர்கள் மூலம் உலகை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்து கொண்டிருந்தார். அதில் சில கதிர்கள் திண்ணனார் மீது விழுந்தன. இரவு முழுவதும் உறங்காமல் எம்பெருமான் பற்றிய சிந்தனையோடு அவருக்கு துணையாக இருந்து கொண்டு பொழுது விடிந்ததும் எம்பெருமானை கண்டதும் மிகவும் மகிழ்ச்சி கொண்டார்.

அப்போது இறைவனுக்கு மீண்டும் பசி எடுக்குமே... அவருக்கு உண்ண உணவு விரைந்து எடுத்து வரவேண்டுமே... என்ற எண்ணத்தோடு வேகமாக புறப்பட்டார் திண்ணனார். அவ்விடத்தை விட்டு புறப்பட்ட சிறிது நேரத்திற்குள் எப்பொழுதும் போல் பூஜை செய்யும் அந்தணர் மலர், நீர் மற்றும் நறுமண பொருட்களோடு அவ்விடத்திற்கு வந்தார்.

அவ்விடத்திற்கு வந்ததும் இறைவனின் முன் இறைச்சி, எலும்புகள் சிதறி கிடப்பதை கண்டு மனம் பதறினார். இத்தகைய பாவச்செயலை எவர் செய்திருப்பார்? என்று நிலத்தில் விழுந்து அலறினார். என்ன செய்வதென்று புரியாமல் கலங்கி கொண்டிருந்தார். பின்பு வேறு யாரு செய்திருப்பார்?... இந்த வேடர் குலத்தவர்கள்தான் இத்தகைய கொடிய செயலை செய்திருக்க முடியும் என்று தனது மனதில் எண்ணியவாறு அந்த இடத்தை சுத்தம் செய்யத் துவங்கினார்.

அவ்விடத்தை சுத்தம் செய்த பின்பு பொன்முகலி ஆற்றுக்கு வந்து நீராடிவிட்டு என்றும் போல சைவ ஆகம முறைப்படி இறைவனை நீராட்டி, மலரிட்டு நறுமணப் புகை பொருட்களினால் புகை எழுப்பி அவரை வழிபட்டார். பின்பு தாம் வரும் போது கண்ட காட்சிகளை எண்ணி மனவேதனையோடு தமது இருப்பிடத்தை நோக்கி புறப்பட்டார். காளத்தி மலையை விட்டுப் புறப்பட்ட திண்ணனார் எம்பெருமானுக்கு பலவகை விலங்குகளின் மாமிசத்தை சமைத்து அமுதூட்ட எண்ணினார். அதற்காக மான், பன்றி, காட்டுமான் முதலியவற்றை வேட்டையாடினார்.

திண்ணனார், தான் வேட்டையாடிய விலங்குகளின் மாமிசத்தை அம்பில் கோர்த்து, தீயிலிட்டு வேக வைக்க துவங்கினார். பின்பு அதில் சுவையான மாமிசத் துண்டுகளை மட்டும் எம்பெருமானுக்கு படைக்கும் பொருட்டு, நேற்றைய பொழுது போலவே அவற்றையெல்லாம் அம்பில் கோர்த்தும், தலையில் எம்பெருமானை பூஜை செய்வதற்கு தேவையான மலரையும், வாயில் நீரையும் எடுத்துக் கொண்டு காளத்தியப்பரின் பசியைப் போக்க அவரின் இருப்பிடம் நோக்கி புறப்பட்டார்.

எம்பெருமான் இருக்கும் இடத்தை அடைந்ததும் அவ்விடத்தில் பச்சை இலையும் தண்ணீரும் இருப்பதை கண்டு திகைத்து நின்றார். பின்பு எப்போதும் போலவே செருப்பணிந்த கால்களினால் அவ்விடத்தை சுத்தம் செய்தார். ஆற்றில் இருந்து வாயில் எடுத்து வரப்பட்ட நீரை எம்பெருமானின் மீது உமிழ்ந்து இறைவனுக்கு திருமஞ்சன நீராட்டினார். இறைவனுக்காக கொண்டு வரப்பட்ட மலர்களை தமது தலையில் இருந்து எடுத்து, அதை உதிர்த்து, அர்ச்சனை செய்தும்... அன்போடு தாம் சமைத்து கொண்டு வந்திருந்த மாமிச உணவை இறைவனுக்கு அமுதூட்டியும் மனம் மகிழ்ந்தார்.

இவ்வாறாக தினந்தோறும் எம்பெருமானுக்கு சிவ ஆகம முறைப்படி வழிபாடு திண்ணனாரின் அன்பினால் ஊன் நிறைந்த உணவும் இடைவிடாமல் இறைவனுக்குப் படைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நாணனும், காடனும் திண்ணனாரின் இருப்பிடத்திற்கு சென்று அவருடைய தந்தையான நாகனை நேரில் கண்டு நிகழ்ந்தவற்றை அவரிடம் எடுத்துரைத்தனர். அவர்கள் உரைத்ததை கேட்டதும் திண்ணனாரின் தந்தையான நாகன் தனது மகனின் நிலையை நினைத்து மிகவும் மனம் வருந்தி கொண்டிருந்தார். தம் மகனுக்கு ஏதோ ஆபத்து நேர்ந்து விடுமோ? என்று அஞ்சிய நாகன், தேவராட்டியையும், தத்தையையும் அழைத்துக்கொண்டு திண்ணனாரை காண்பதற்காக காளத்தி மலைக்குப் புறப்பட்டார்.

ஒருவழியாக நாகனும், தேவராட்டியும் குடுமித்தேவர் இருக்கும் இடத்தை அடைந்தனர். அவர்கள் அங்கு அடைந்த பொழுதில் திண்ணனார் குடுமித்தேவரை இறுக அணைத்த வண்ணமாக இருந்தார். அவ்விடத்தில் தமது மகனின் நிலையை நேரில் கண்டதும் மிகவும் மனம் பதறி நின்று கொண்டிருந்தார் நாகன். தன் மகனிடம் பலவாறாக பேசியும் அவரிடம் கனிவாக நடந்தும் குடுமித்தேவர் மீது கொண்டிருந்த அபரிவிதமான அன்பினால் அவ்விடத்தை விட்டு அவரால் வரமுடியாத நிலையையும், பலவிதங்களில் முயற்சி செய்தும் அவரால் குணப்படுத்த முடியவில்லை. தேவராட்டியும் பலவிதங்களில் முயற்சி செய்தும் எந்த முயற்சியும் அவர்களுக்கு கைகொடுக்க இயலவில்லை. நாகனும், தத்தையும் தங்களது மகனின் நிலையைக் கண்டு மிகவும் வருந்தினர்.

திண்ணனாரை பிரித்து செல்வது இயலாத காரியம் என்பதை அவர்கள் திடமாக உணர்ந்திருந்தனர். இறைவனின் அன்பினால் இவ்வுலகில் நிகழும் அனைத்தையும் மறந்த வண்ணமாக இருந்து வந்தார் திண்ணனார். தன் மகனை அவ்விடத்தில் விட்டுவிட்டு மிகுந்த மனவேதனையுடன் தன் மகனின் நினைவுகளோடு வந்த வழியை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள்.

பின்பு எப்போதும் போலவே குடுமித்தேவருக்கு வேடரின் வழிபாடும், வேதியர் வழிபாடும் நான்கு நாட்களாக எவ்விதமான தடையுமின்றி நடைபெற்று கொண்டிருந்தன. ஐந்தாம் நாளும் வந்தது. எப்போதும் போலவே திண்ணனார் இறைவனுக்கு படைப்பதற்காக விலங்குகளை வேட்டையாட சென்றிருந்தார். அவர் சென்ற சிறிது நேரத்திற்குள் அந்தணர் எம்பெருமானை வழிபட வந்தார். கடந்த நான்கு நாட்களாக இறைவன் முன்னிலையில் இறைச்சி சிதறிக் கிடந்ததை எண்ணி மிகுந்த மனவேதனையுடன் இக்காரியம் செய்வோரை தடுத்து அருள வேண்டும் என்று இறைவனிடம் இறைஞ்சினார்.

அந்தணரின் மனவேதனையை நீக்கும் பொருட்டு எம்பெருமான் அன்றிரவு அவரின் கனவில் தோன்றினார். என் முன்னால் இருக்கும் இறைச்சிகள், எலும்புத்துண்டுகள் யாவும் என்னை இழிவு படுத்துவதற்காக வேண்டுமென்றே செய்யப்பட்டதாக நீர் எண்ணிவிடாதே? என்றும், அங்கு இருப்பவன் என்மீது மிகுந்த அன்பு கொண்டவன் என்றும், என்மீது அன்பு செலுத்துவது மட்டுமே அவனது கடமையாக கொண்டுள்ளான் என்றும், என்னைப் பற்றி அறிவதே அவனுடைய உணர்வும், அறிவாகும் என்றும் கூறினார்.

மேலும் அவனுடைய ஒவ்வொரு செயலும் எமக்கு இனிமை பயக்கக்கூடியதாக இருக்கின்றது. அதாவது,

அவன் செருப்பணிந்த கால்களினால் என்மீது உள்ள இலைகளை சுத்தப்படுத்தும் பொழுது ஒரு குழந்தையின் திருவடிகள் என்மீது பட்டு தடவிச் செல்வது போன்று மகிழ்ச்சி கொள்கின்றோம்...

கங்கை, காவிரி என பல புண்ணியங்களை அளிக்கக்கூடிய நதிகள் இவ்விடத்தில் இருந்தாலும் அவன் எனக்காக அவனது வாயில் எடுத்து வந்து என்மீது உமிழ்கின்ற திருமஞ்சன நீரும்... அவன் சூடி வந்து எனக்கு சூடும் நறுமண மலர்களும் தேவாதி தேவர்களும் எனக்கு சூடும் மலர்களைக்காட்டிலும் மிகுந்த உயர்ந்த ஒன்றாகும்....

அவன் எனக்காக வேட்டையாடி அவற்றை நன்முறையில் சமைத்து எமக்கு ஊட்டுவது அமிர்தத்தை விட உயர்ந்த உணவாகும். முனிவர்களும், ரிஷிகளும் ஓதும் நாம மந்திரங்களை விட, அவனுக்கு தெரிந்த மொழியில் அவன் மனம் குளிர கூறும் மொழிகளே எமக்கு மிகவும் இன்பம் தரக்கூடியதாக இருக்கின்றது.

என்றும் கூறினார். இத்தகைய செயல்களை யார் செய்கிறார் என்பதை உமக்கு யாம் காட்டுகின்றோம். இதற்காக மனம் கலங்காதே... அவனின் அன்பு வழிபாட்டை நாளை மரத்தின் மறைவில் நின்று பார்ப்பாயாக... என்று திருவாய் மலர்ந்து சொப்பனத்தில் இருந்து மறைந்தார் எம்பெருமான்.

எம்பெருமான் சொப்பனத்தில் இருந்து சென்றதும் அந்தணர், எம்பெருமானே...! என்று உரைத்த வண்ணம் சொப்பனம் கலைந்து துயிலில் இருந்து விழித்தெழுந்தார். எம்பெருமானின் அருள் கருணையை எண்ணி போற்றி நிலத்தில் வீழ்ந்து வணங்கினார் அந்தணர். அவருடைய விழிகளில் இருந்து கண்ணீர் பெருக துவங்கியது. இவ்வளவும் நிகழ்ந்த பின்பு அவரால் நித்திரை கொள்ள முடியாமல் கதிரவனின் வருகைக்காக எம்பெருமானின் சிந்தனைகளோடு விழித்திருந்தார்.

எப்பொழுதும் போலவே அந்தணர் குடுமித்தேவரை வழிபட அவரை எண்ணிய வண்ணம் அவர் இருக்கும் இடத்தினை நோக்கி சென்று கொண்டிருந்தார். திண்ணனார் ஐந்து நாட்கள் கடந்து ஆறாம் நாளில் எம்பெருமானுக்கு தேவையான உணவினை படைப்பதற்காக வேட்டையாட சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்திற்குள் அந்தணர் மன மகிழ்ச்சியோடு எம்பெருமானின் இடத்திற்கு வந்தார். எப்போதும் போல் வேத ஆகம முறைப்படி வழிபாடுகளைச் செய்தார்.

அதன் பிறகு எம்பெருமான் சொப்பனத்தில் எழுந்தருளி உரைத்ததற்கு ஏற்ப மரத்தின் பின்புறமாக யாருக்கும் தெரியாத வண்ணமாக ஓரிடத்தில் மறைந்து கொண்டார். திண்ணனார் எம்பெருமானுக்கு தேவையான உணவினை தயார் செய்து, அதில் சுவையான உணவினை தொன்னையில் எடுத்துக் கொண்டும், சிரத்தில் மலரும், வாயில் பொன்முகலி ஆற்று நீரையும் எடுத்துக் கொண்டு எம்பெருமானின் இடத்திற்கு வந்தார். திண்ணனாரின் அன்பையும், பக்தியையும் உலகோர் புரியும் பொருட்டு எப்போதும் போல் தமது திருவிளையாடலை துவங்கினார். அதாவது, சிவலிங்கத் திருமேனியின் வலக்கண்ணில் இருந்து இரத்தம் வடிவது போல் தமது திருவிளையாடலை ஆரம்பித்தார் எம்பெருமான்.

சிவலிங்கத்தில் இருந்து இரத்தம் வெளிப்படுவதை கண்டதும் அந்த நொடியில் என்ன செய்வதென்று புரியாமல் பதற்றத்துடன் காணப்பட்டார் திண்ணனார். இந்த வையகமே இருண்டது போல் தனது கரங்கள் மற்றும் சிரத்தில் இருந்தவற்றை எதையும் நினைவில் கொள்ளாமல் எம்பெருமானின் அருகில் விரைந்து சென்றார். எம்பெருமானே...! தங்களுடைய இந்த நிலைக்கு யார் காரணம்? எவராயினும் அவரை இக்கணமே தண்டித்து விடுகின்றேன் என்று உரைத்து கீழே விழுந்த அம்பையும், வில்லையும் எடுத்து எம்பெருமான் இருக்கும் இடத்தை சுற்றி நான்கு புறங்களிலும் தேடினார். ஏதாவது விலங்குகளினால் எம்பெருமானுக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்குமோ? என்றும், அந்த விலங்கின் கால்தடங்கள் கிடைக்கின்றதா? என்றும் தேடினார்.

வனத்தில் எந்தவொரு விலங்கின் நடமாட்டமும், மனிதர்களின் நடமாட்டமும் இல்லாததை கண்டார். ஆயினும் எம்பெருமானின் வலது கண்ணிலிருந்து இரத்தம் வெளிப்படுதல் மட்டும் நின்றபாடில்லை. அதை காண காண என்ன செய்வது? என்று புரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தார் திண்ணனார். அவருக்கு அருகில் சென்று அவரை இறுக அணைத்துக் கொண்டார். அந்த நொடியில் தனக்கு உடல்நிலை சரியில்லாத பட்சத்தில் சில பச்சை இலைகளைக் கொண்டு வந்து தமது உடல்நிலையை சரி செய்தது நினைவிற்கு வர... எம்பெருமானின் நிலையை சரி செய்வதற்கு ஏதாவது மூலிகைகள் இருக்கின்றனவா? என்று தேடினார். பின் தனக்கு தெரிந்த மூலிகைகளை பறித்து வர காளத்தி மலையின் அடிவாரத்திற்கு விரைந்து சென்றார்.

அவ்விடத்தில் தமக்கு தெரிந்த சில மூலிகைகளை பறித்துக் கொண்டு அவருக்கு ஏற்பட்டிருந்த காயத்தை ஆற்றுவதற்காக மிகுந்த வேகத்துடன் அவர் இருக்கும் இடத்தை நோக்கி சென்றார். பச்சை இலைகளை பிழிந்து சாறு எடுத்து இறைவனின் திருவிழிகளில் பிழிந்தார். மூலிகை சாற்றினை பிழிந்ததும் எம்பெருமானின் விழிகளில் இருந்து இரத்தம் வருவது நிற்கவில்லை. அச்சமயத்தில் 'ஊனுக்கு ஊனிடல் வேண்டும்" என்ற அவர்கள் குழுவில் இருந்த பெரியோர்கள் கூறிய சித்தாந்த மொழியானது திண்ணனாரின் நினைவிற்கு வந்தது. பின் தம்முடைய இரண்டு விழிகளில் இருந்து ஒரு விழியினை எடுத்து குருதி வரும் விழிகளின்மீது வைக்கலாம் என்ற எண்ணம் கொண்டு சற்றும் யோசிக்காமல் தமது கரங்களில் இருந்த கூரிய அம்பினால் தமது வலக்கண்னைத் தோண்டி எடுத்து குடுமித்தேவரின் வலது கண்ணில் வைத்தார்.

சிறிது நேரத்திற்குள் எம்பெருமானின் வலது கண்ணில் இருந்து இரத்தம் வருவது நின்றது. தமது விழிகளில் இருந்து இரத்தம் பெருக்கெடுத்து ஓடுவது பற்றியோ, அதனால் ஏற்பட்ட வலியை பற்றியோ, சிறிதும் சிந்திக்காமல் தம்மால் எம்பெருமானின் கண்கள் குணமடைந்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடினார். திண்ணனார் கொண்ட மகிழ்ச்சியானது சிறிது நேரத்திற்கு கூட நிலைக்கவில்லை. ஏனெனில் எம்பெருமான் தனது அடுத்த திருவிளையாடலை துவங்கினார். பக்தர்களை சோதித்தாலும் அவர்களை எந்த நிலையிலும் கைவிடாமல் அவர்களின் அன்பினை உலகறியச் செய்யும் விளையாடல் அல்லவா. அவ்வளவு எளிதில் முடியுமா?

இப்பொழுது எம்பெருமானின் இடது கண்ணிலிருந்து குருதியானது வெளிப்படத் தொடங்கியது. மகிழ்ச்சி நிலையில் நின்று கொண்டிருந்த திண்ணனார் இறைவனது இடது கண்ணில் இரத்தம் பெருகுவதைக் கண்டு என்ன செய்வது? என்று புரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தார்.

திண்ணனார் திகைத்துக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று அவரது மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. அதாவது, நம்மிடம்தான் இதற்கு மருந்து இருக்கின்றதே, இனி ஏன் மூலிகைகளைத் தேடி அலைய வேண்டும்? என்று எண்ணி தன்னுடைய இடது கண்ணைத் தோண்டி எடுத்து இறைவனுக்கு வைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.

தம்மிடம் இருக்கும் இந்த ஒரு விழியையும் எடுத்துவிட்டால் தமக்கு இறைவனின் விழி இருக்கும் இடம் தெரியாமல் சென்றுவிடுமே என்று எண்ணினார். அதனால் அவரது இடது கண்ணின் அருகிலேயே தனது காலை ஊன்றிக் கொண்டார். அம்பை எடுத்து தனது விழிகளை தோண்டி எடுப்பதற்குள் தன்னுடைய இந்த விழிகளின் மூலம் இறைவனை கண்டு மனம் மகிழ்ந்தார். இனி இறைவனை தம்முடைய ஞானக்கண்களால் கண்டுகளிக்கப் போகிறோம் என்று எண்ணி மகிழ்வோடு அம்பை கொண்டு தன் விழிகளை தோண்டி எடுக்க முற்பட்டார்.

இனியும் தமது அடியாரை துன்புறுத்த எண்ணாத எம்பெருமான் அவரை தடுத்து ஆட்கொண்டார். எம்பெருமான் தமது திருக்கையால் திண்ணனாரின் கரத்தைப் பற்றி

கண்ணப்பா நில்... என்று திருவாய் மலர்ந்து அருளினார்.

தேவர்கள் யாவரும் மலர்மாரி பொழிந்தனர்.

திருத்தலங்கள் எங்கும் புதியதோர் ஒளி பிறந்தது.

வேதங்கள் முழங்கிட திண்ணனார் இறைவனின் அருகிலேயே அன்பு மிகுதியோடு நின்று கொண்டிருந்தார்.

இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் மறைந்திருந்து கண்டு கொண்டிருந்த அந்தணர், திண்ணனார் எம்பெருமானின் மீது கொண்ட பக்திக்கும், அன்பிற்கும் தலை வணங்கினார்.

திண்ணனார் எம்பெருமானின் கருணையால் இழந்த விழிகளை பெற்றதோடு மட்டுமல்லாமல் அவர் கூறியபடியே கண்ணப்பர் என்ற திருநாமத்தோடு அழைக்கப்பெற்றார். கண்ணப்பரின் உண்மையான அன்பையும், எம்பெருமானின் மீது கொண்டிருந்த பக்தியையும், எண்ணிப்பார்த்த அந்தணர் எம்பெருமானின் மீது அன்பில்லாமல் ஆயுள் முழுக்க அவரை வழிபட்டாலும் அவரது அருளைப் பெற இயலாது என்பதையும், அன்போடு நாம் குறைந்த நாட்களில் அதாவது ஆறு நாட்களில் அன்போடு வழிபட்டாலும் இம்மையில் முக்தி பெற இயலும் என்பதை உணர்ந்தார்.

'அன்பே சிவமாகும்" என்பதை நன்கு உணர்ந்து கொண்ட அந்தணர் இனி காளத்தியப்பரோடு, கண்ணப்பரையும் சேர்ந்து வழிபடுவது என்று மனதில் உறுதி கொண்டு நிலத்தில் வீழ்ந்து வணங்கினார். பல காலம் தவம் இருந்தும் கிடைக்காத பரம்பொருளாகிய எம்பெருமான் திருவாய் மலர்ந்து கண்ணப்பரை நோக்கி நீ எப்போதும் எமது வலப்பக்கத்திலே நிற்பாயாக! என்று திருவருள் புரிந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக