புதன், 17 ஜூன், 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 045

காரைக்கால் அம்மையார்...!

முற்காலத்தில் சோழமண்டலத்தில் காரைவனம் எனப்பட்ட மாநகரம் ஒன்று இருந்தது. அந்த மாநகரம் தற்போது காரைக்கால் என்று அழைக்கப்படுகின்றது. வணிக வளமும், அழகும் நிரம்பி இருந்த அம்மாபெரும் நகரில் பல வியாபாரம் செய்யும் வைசியர் குலத்தினர் வாழ்ந்து வந்தனர். பெருமையும், வாய்மையும் நிறைந்திருந்த அந்த வைசியர் குலத்தில் தனதத்தன் என்பவர் வாழ்ந்து வந்தார். தனதத்தன் தர்மவதியை திருமணம் செய்து இல்வாழ்க்கையில் ஈடுபட்டு மகிழ்வோடு வாழ்ந்து வந்தார்.

தம்பதியர்கள் செய்த நற்பயனின் விளைவாக அவர்களுக்கு பேரழகும், தெய்வீக அம்சமும் கொண்ட பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு தம்பதியர்கள் இணைந்து 'புனிதவதி" என்று பெயரிட்டு அழைத்து வந்தனர். புனிதவதியார் பேசத்தொடங்கிய மழலை பருவத்தில் இருந்தே சிவபெருமானின் மீது எல்லையற்ற பேரன்பு கொண்டு அவர் பற்றிய தகவல்களையும், பாடல்களையும் பேசத் துவங்கினார். புனிதவதியாரின் இளமைப்பருவம் முதல் இறை உணர்வுடன் எம்பெருமானின் மீது அன்பு கொண்டு அவரை வழிபட்டு வாழ்வதே வாழ்க்கையாகும் என்று வாழ்ந்து வந்தார்.

சிறுவயதிலிருந்தே சிவபெருமானின் மீது பக்தி கொண்டவராக இருந்தார். சிறு வயது முதலே எம்பெருமானை வழிபடும் அடியார்களுக்கு தேவையான உதவிகளை தங்களிடம் இருக்கும் பொருட்களை கொண்டு செய்து வந்தார். தனதத்தனாரும் தம் மகள் செய்யும் செயல்களை கண்டு மனம் மகிழ்ச்சி அடைந்தாரே தவிர, அவர்கள் மேற்கொள்ளும் செயலுக்கு எவ்விதமான தடையையும் கூறவில்லை. குழந்தை பருவத்தில் இருந்து வளர்ந்து பேரழகு கொண்ட மங்கை பருவமான திருமண வயதை அடைந்ததும் தனது மகளுக்கு தேவையான வரனை தேடத் துவங்கினார்.

கடல் சூழ்ந்து வெளிநாட்டு வாணிபம் செய்து சிறந்து விளங்கி கொண்டிருந்த ஊர்தான் நாகப்பட்டினம். அங்கு வாழ்ந்து வந்த நீதிபதி என்னும் பெருங்குடி வணிகருடைய மகனான பரமதத்தன் என்பவருக்கு புனிதவதியை திருமணம் செய்து வைக்க எண்ணி குடும்ப பெரியோர்கள் சூழ தனதத்தனார் இல்லத்திற்கு சென்றனர். அவர்களின் கருத்துக்கள், விருப்பங்கள் மட்டுமல்லாமல் அவர்களை பற்றியும் வணிக குலத்தில் அறிந்து இருந்தமையால் தமது மகளை அவர்களின் புதல்வனுக்கு திருமணம் செய்து வைக்க இசைந்தார். பின்பு சுபமுகூர்த்தம் கூடிய ஒரு நன்னாளில் தனது புதல்வியை திருமணம் செய்து வைத்தார் தனதத்தனார்.

தனதத்தனுக்கு தன் மகளை திருமணம் செய்து நாகைக்கு அனுப்ப மனம் ஒப்பவில்லை. ஏனென்றால் புனிதவதி அவருக்கு ஒரே மகள். ஆகையால் அவளை பிரிய மனமில்லாமல் பின்பு தமது சொத்துக்கள் அனைத்தையும் அவர்களிடம் கொடுத்து தனதத்தன் தனது மகளையும், மருமகனையும் காரைக்காலில் தனியாக தம்முடைய இல்லத்திற்கு அருகில் வேறொரு இல்லத்தில் வாழ வைத்தார். காரைக்காலிலேயே தனிக்குடித்தனம் வைக்கப்பட்ட இந்த தம்பதிகள் இல்லறத்தில் மகிழ்வுடன் வாழ்ந்து வந்தனர்.

பின்பு தனதத்தனுக்கு சொந்தமான தொழிலான வணிகத் தொழிலைப் பண்போடும், நேர்மையோடும் நடத்தி வந்தார் பரமதத்தன். இல்லறத்தில் இருந்து வந்தாலும் புனிதவதி இறைவனிடம் கொண்டுள்ள பக்தியானது நாளுக்கு நாள் வளர்ந்த வண்ணமாக இருந்தது. எம்பெருமானின் திருநாமத்தை உரைத்து தம் இல்லத்திற்கு வருகை தரும் சிவனடியாருக்கு திருவமுது செய்வித்து அவரவர்களின் மனதில் இருக்கும் எண்ணங்களை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் பொன், ரத்தினம், வஸ்திரம் முதலான பொருட்களை அளித்தும், அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் செய்து வந்தார்.

இவ்விதமாக நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில் பரமதத்தன் தனது கடையிலிருந்தபோது ஒரு சில செயல்களை முடித்து தர வேண்டி மாங்கனி வியாபாரி ஒருவர் வந்தார். அவருக்கு வேண்டிய செயல்களையும் இவர் செய்து முடித்தார். அதனால் மகிழ்ச்சி அடைந்த வியாபாரி தனது வீட்டுத்தோட்டத்தில் காய்த்த இரண்டு மாங்கனிகளைக் கொண்டு வந்து பரமத்தத்தரிடம் கொடுத்தார். அக்கனிகளை பெற்ற பரமதத்தர் தங்களிடம் பணிபுரிந்து வந்த ஏவலரிடம் இக்கனிகளை கொடுத்து அதனை தன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். புனிதவதி அந்த இரண்டு மாங்கனிகளையும் வாங்கி வைத்துக் கொண்‌டாள்.

பிற்பகல் உணவிற்கு தேவையான பணிகளை செய்து கொண்டு இருந்தாள் புனிதவதி. அதுசமயம் சிவனடியார் ஒருவர் பசியினால் வருந்த, அவர் திருமனை வாயிற்புறமிருந்து சிவாய நம என்று கூறிய வண்ணம் நின்று கொண்டிருந்தார். அக்குரலை கேட்டதும் வாயிற் பக்கம் விரைந்து வந்தாள் புனிதவதி. பின்பு அவரை அன்போடு வரவேற்றாள். அவ்வேளையில் அடியாரின் எண்ணத்தை அறிந்து கொண்டார். அதாவது, அவர் மிகுந்த பசியுடன் இருப்பதை அடியாரின் முகத்தோற்றத்தைக் கண்டு புரிந்து கொண்டதும் அவருடைய பசியைப் போக்கும் எண்ணம் கொண்டு சிறிது நேரத்தில் உணவு தயாராகிவிடும் என்று உரைத்து அவரிடம் அனுமதி பெற்று விரைவில் சாப்பாடும் செய்தாள்.

உணவு தயார் செய்யப்பட்டதும் புனிதவதி அடியாரின் திருப்பாதம் கழுவ நீர் தந்து உண்கலம் இட்டார். அடியாரும் திருவமுது செய்ய அமர்ந்தார். அவ்வேளையில் கறியமுது செய்யப்படவில்லை. திருவமுது மட்டும் செய்யப்பட்டு இருந்தது. பின்பு தாம் செய்த உணவினை பக்குவமாக இலையில் பரிமாறினார்.

அந்நேரத்தில் கறியமுது பாகம் செய்யாமல் இருந்தமையால் 'சிவனடியவரே பெறுவதற்கு அரிய விருந்தினராய் வந்துள்ளார். ஆனால், இதை கூட என்னால் செய்ய முடியவில்லையே" என்று நினைத்து தம்முடைய கணவன் அனுப்பிய மாம்பழங்கள் இரண்டினுள் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து கறியமுதிற்கு பதிலாக அரிந்து இட்டாள்.

வயது முதிர்ச்சியால் தள்ளாடி வந்த அடியவர் சோற்றை மாங்கனியோடு உண்டு, புனிதவதியாருடைய செய்கையை வாயார வாழ்த்தி பசியாறி சென்றார். அடியார் சென்ற சிறிது நேரத்திற்குப் பின்பு மதிய உணவிற்காக வீட்டிற்கு வருகை புரிந்தார் பரமதத்தன். எப்போதும் போல் கை, கால்களை அலம்பிவிட்டு மதிய உணவு உண்ண அமர்ந்தார்.

புனிதவதி தனது கணவருக்கு முறையோடு அமுது படைத்தார். பிறகு மீதி இருந்த ஒரு மாங்கனியை அரிந்து தன் கணவர் உண்ண எடுத்து வைத்தாள். பரமதத்தன் சுவைமிகுந்த அம்மாங்கனியை உண்டதும் அதன் சுவையை எண்ணி மகிழ்ந்து இன்னொரு கனி இருக்கும் அல்லவா? அதை எடுத்து அரிந்து கொண்டு வா... என்று கூறினார்.

கணவரின் விருப்பம் அறிந்து புனிதவதிக்கு என்ன செய்வது? என்று புரியவில்லை. ஏனெனில் தன் கணவர் கொடுத்த இரு கனிகளில் ஒரு கனியை சிவனடியாருக்கு பரிமாறினாள்.

இனி என்ன செய்ய இயலும்?

என்ன பாவம் செய்தேனோ? தெரியவில்லையே...

என் கணவனின் விருப்பத்தைக்கூட தன்னால் நிறைவேற்ற முடியவில்லையே...

என்று எண்ணியபடியே மாங்கனி இருப்பது போலவே உள்ளே சென்று, தமது மனதில் பலவிதமான எண்ணங்களுடன் மனம் கலங்கி கொண்டிருந்தாள்.

புனிதவதியார் தமது மனதில் பலவிதமான எண்ணங்களுடன் மனம் கலங்கி கொண்டிருந்தாள். பின் இறுதியில் எவ்வழியும் தோன்றாததால் எம்பெருமானை வேண்டி நின்று கொண்டிருந்தாள். அவ்வேளையில் எம்பெருமானின் திருவருளால் அதிமதுரக்கனி ஒன்று அம்மையாரின் திருவடிகளில் தோன்றியது. அதை கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார் புனிதவதியார். தம்முடைய எண்ணத்தை அறிந்து தனக்காக அருள்புரிந்த எம்பெருமானை மனதில் எண்ணி தியானித்த வண்ணம் தம் கணவரின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல திருவருளால் கிடைத்த கனியை அரிந்து தன் கணவருக்கு இலையில் பரிமாறினாள்.

மனைவி பரிமாறிய இக்கனியை உண்டதும் அதன் சுவையானது முன்பு உண்ட கனியை விட பலமடங்கு அதிகமாக இருந்தது. தாம் உண்ட இக்கனியின் சுவையானது தேவர்களுக்கும், ஏன் மூவுலகிலும் கிடைக்காத ஒரு கனி போல் இருப்பதாக எண்ணினார். இந்த கனியானது நான் அளித்த கனி அல்ல என்பதை உணர்ந்து கொண்டார் பரமதத்தன். பின்பு மனைவியை நோக்கி இக்கனியை எவ்விடத்தில் இருந்து பெற்றாய் என்று வினவினார்.

எம்பெருமானின் திருவருளால் இக்கனியை பெற்றேன் என்று எவ்விதத்தில் உரைப்பேன்? என்று எண்ணிய வண்ணம் செய்வது அறியாமல் திகைத்துக் கொண்டிருந்தாள் புனிதவதி. எனினும் கணவரிடம் உண்மையை மறைப்பது என்பது முறையல்ல என்பதை உணர்ந்து எம்பெருமானின் திருவடிகளை மனதில் எண்ணிய வண்ணம் தம் கணவரிடம் நிகழ்ந்தவற்றை எடுத்துரைக்க துவங்கினாள்.

அம்மையார் சிவனடியார் வந்ததையும் அவருக்கு அமுது படைக்கும்போது தாங்கள் அனுப்பிய மாங்கனிகளில் இருந்து ஒரு மாம்பழத்தை அவருக்கு வைத்ததாக கூறினார். அப்படியே ஆயினும் ஒரு மாங்கனியை ஏற்கனவே சிவனடியாருக்கு அளித்துவிட்டாய்... இன்னொரு கனியை எனக்கு முன்னரே அரிந்து கொடுத்துவிட்டாய். அப்பொழுது நீர் இறுதியாக கொண்டு வந்த இக்கனியை எங்கிருந்து எவ்விடத்தில் இருந்து பெற்றாய்? என்று வினாவினார்.

புனிதவதி அம்மையாரோ இறுதியாக யாம் கொண்டு வந்த கனியானது எம்பெருமானின் அருளால் தமக்கு கிடைத்த கனியாகும் என்ற உண்மையை தன் கணவனிடம் கூறினாள். புனிதவதி உரைத்தவற்றில் எதிலும் நம்பிக்கை கொள்ளாமல் நீர் கூறுவது உண்மையாயின் இதேபோல் இன்னும் ஓர் சுவையான மாங்கனியை பெற்றுத் தருக... என்று கேட்டார் பரமதத்தன்.

கணவர் கூறியதை கேட்டதும் என்ன செய்வது? என்று அறியாமல் திகைத்து நின்றாள். பின் புனிதவதி மீண்டும் உள்ளே சென்று எம்பெருமானிடம் தன்னை இந்த சோதனையில் இருந்து விடுவிக்கும் சக்தியானது தங்களிடம் மட்டுமே உள்ளது என்றும், யான் உரைத்தது மெய் என்று நிரூபிக்கும் வகையில் தாங்கள் மீண்டும் ஒரு கனியை இட வேண்டும் என்று வேண்டினாள்.

இனியும் தன்னுடைய பக்தையை சோதிக்க விருப்பம் கொள்ளாத எம்பெருமான் மீண்டும் ஒரு கனியை புனிதவதியாருக்கு அருளினார். தன்னுடைய கரங்களில் இருக்கும் கனியை கண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார். பின்பு அக்கனியை எடுத்துச்சென்று கணவனின் கரங்களில் கொடுத்து, நான் உரைத்தது மெய் என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் என்று கூறினாள். தனது மனைவியின் செயலை அறிந்து வியப்பு கொள்வதற்குள் கரங்களில் இருந்த மாங்கனியானது மறைந்தது.

கனியானது மறைந்ததை கண்டதும் பரமதத்தன் மனதில் அச்சமும், ஒருவிதமான பயமும் கொண்டார். தன்னுடைய மனைவியான புனிதவதி சாதாரண மனிதப் பிறவி அல்ல... அவள் தெய்வீகத்தன்மை கொண்டவள் என்பதை உணர்ந்தார். சிந்தையில் ஒருவிதமான மயக்கம் கொண்டு செயலிழந்தார் பரமதத்தன். அக்கணம் முதல் தன் மனைவியைத் தாரமாக எண்ணாமல் போற்றுதலுக்கு உரிய பெண் ஆவாள் என்று மனதளவில் எண்ணத் துவங்கினார் பரமதத்தன். அந்த எண்ணத்தை எவரிடமும் உரைக்காமல் கணவன், மனைவி என்ற தொடர்பு இல்லாமல் இருவரும் வாழ்ந்து வந்தனர்.

புனிதவதியை பிரிந்து செல்வதற்கான செயல்களை மேற்கொள்ள துவங்கினார் பரமதத்தர். அக்காலத்தில் வணிகர்கள் கடல் கடந்து வாணிபம் செய்து பொருள் சேர்த்து வருவது என்பது ஒரு வழக்கமாக இருந்தது. அந்த வழக்கத்தை பயன்படுத்தி தானும் வெளியூர் சென்று பொருள் சேர்க்கப் போவதாகக் கூறினார். பின்பு உறவினர்களும் அவருடைய மு‌யற்சிக்கு முழு ஆதரவு கொடுத்தனர்.

பரமதத்தன் விரைவிலேயே ஒரு நன்னாளில் வாணிபம் செய்வதற்கு தேவையான பொருட்களோடு மனைவியிடமும், மாமனிடமும் விடைபெற்று கொண்டு புறப்பட்டார். கடல் அன்னையை மனதார வழிபட்டு கப்பலேறி தனது பயணத்தை துவங்கினார். வாணிபத்தில் தனக்கு இருந்த தனித்திறமையால் சில வாரங்களிலேயே தான் கொண்டு சென்ற அனைத்து பொருட்களையும் விற்று செல்வம் ‌சேர்த்துக் கொண்டு மீண்டும் காரைக்காலுக்கு செல்ல விரும்பாததால் பாண்டிய நாட்டிலுள்ள வேறு ஒரு பட்டினத்திற்கு சென்று அயல்நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட பொருட்களை எல்லாம் கொண்டு வந்து தனது வாணிபத்தை தொடங்கினார்.

அப்பொருட்களை எல்லாம் விற்று அவ்வூரில் ஒரு செல்வந்தராகவும் வளரத் துவங்கினார் பரமதத்தன். அவருடைய செல்வச் சிறப்பையும், அவரின் தோற்றப் பொலிவையும், மற்றவர்களிடம் பழகும் பண்பையும் அறிந்துகொண்ட அவ்வூரில் இருந்த ஒரு வணிகர் தமது மகளை அவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்.

புனிதவதியாரை திருமணம் செய்திருந்த பரமதத்தன் அச்செய்தியை எவ்விதத்திலும் வெளிப்படுத்தாமல் மறுமணம் செய்து கொண்டார். மேலும் அந்த பெண்ணுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருந்தார். இவ்விதமாக வாழ்ந்து வந்த பரமதத்தனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் விதமாக அவருடைய மனைவி கருவுற்று இருந்தாள்.

கருவுற்றிருந்த அவரது மனைவி ஒரு அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். பரமதத்தன் மனதில் தெய்வமாக கருதி வழிபடுபவரான புனிதவதியாரின் திருநாமத்தை தன் குழந்தைக்கு சூட்டி மனம் மகிழ்ந்தார். இவ்விதமாக இவர் வாழ்ந்து தம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். ஆனால் அம்மையாரோ வெளியூர் சென்ற தம் கணவர் திரும்பி வர இறைவனை வழிபட்டும், அறவழி நின்று அடியார்களை வழிபடுவதுமாக வாழ்ந்து வந்தார்.

இவ்விதமாக சென்று கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்பட துவங்கியது. பரமதத்தன் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தியானது எப்படியோ சுற்றத்தார்களின் மூலம் புனிதவதிக்குத் தெரிய வந்தது. இந்த தகவலை அறிந்ததும் புனிதவதியை எப்படியும் பரமதத்தனோடு இணைத்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டனர் அவரது உறவினர்கள். பின்பு அவர் இருக்கும் இடத்தை அறிந்து ஒரு பல்லக்கில் புனிதவதியாரை ஏற்றி உறவினர்களும், தோழியர்களும் சூழ ஊர்கள், காடுகள், மேடுகள் என பலவற்றை கடந்து பரமதத்தன் வாழும் பாண்டிய நாட்டை அடைந்தனர்.

பாண்டிய நாட்டில் உள்ள ஒரு சோலையில் வந்திருந்த அனைவரும் தங்கியிருந்து புனிதவதி வந்திருக்கும் செய்தியை பரமதத்தனுக்கு ஆள் மூலம் சொல்லி அனுப்பினர். சற்றும் எதிர்பாராத இந்த செய்தியினால் மனதில் ஒருவிதமான பயம் கொண்டார் பரமதத்தன். மனதை திடப்படுத்தி கொண்டு அவர்கள் இவ்விடம் வரும் முன்பு நாமே அவ்விடத்திற்கு செல்வோம் என்று எண்ணம் கொண்டார். பின்பு மறுமணம் செய்து கொண்ட மனைவியுடனும், குழந்தையான புனிதவதியுடனும் தனது முன்னாள் மனைவி புனிதவதி தங்கியுள்ள இடத்திற்குப் புறப்பட்டார் பரமதத்தன்.

மனைவியோடும், தளர்நடை நடந்த குழந்தையோடும் சென்ற பரமதத்தன் புனிதவதியார் இருக்கும் இடத்தை அடைந்ததும் விரைந்து வந்து மனைவி மற்றும் மகளுடன் புனிதவதியார் பாதங்களில், வீழ்ந்து வணங்கி எழுந்தார். அடி‌யேன் உமது திருவருளால் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். என் குழந்தைக்கு உன்னுடைய திருநாமத்தையே சூட்டியிருக்கிறேன் என்றும், தாங்கள் அருள்புரிய வேண்டும் என்றும் கூறினார். சற்றும் எதிர்பாராத இந்த செய்கையினால் தம் கணவரான பரமதத்தனை கண்டு புனிதவதி அஞ்சி ஒதுங்கி நின்றாள்.

பரமதத்தனின் செயல்களைக் கண்டு திகைத்துப்போன உறவினர்கள் மனைவியின் காலடியில் விழ காரணம் ‌என்னவென்று பரமதத்தனிடம் கேட்டனர். உறவினர்களே... இவர் எனக்கு மனைவியாக இருக்கலாம். ஆனால் இவர் மானிடப்பிறவியே இல்லை. அம்மையார் தொழுவதற்குரிய தெய்வம் ஆவார். அதனால்தான் நான் இவர்களை விட்டு விலகி நின்றேன். நீங்களும் இவரை போற்றி வணங்குங்கள் என்று கூறினார். பரமதத்தன் உரைத்ததை கேட்டதும் அனைவரும் திகைத்து நின்றனர்.

கணவரின் இந்த முடிவுகளை அறிந்ததும் புனிதவதியாருக்கு மனதில் பெரும் வேதனை உண்டானது. அக்கணத்தில் இருந்து இளமையுடனும், எழிலுடனும் இருக்கும் இந்த உருவத்தை வெறுத்து ஒதுக்கினார். கணவருக்காக மட்டும் இந்த அழகிய உடலை கொண்டு என்றும் இளமையோடு வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தேன். ஆனால் தன் கணவர் விரும்பாத இந்த இளமை உடல் எனக்கு எதற்கு என்று எண்ணி புனிதவதி அக்கணமே இறைவனிடம் இந்த எழில் உடம்பு எனக்கு தேவையில்லை. இவ்வுடலுக்கு பேய் வடிவம் தந்து அருள வேண்டும் என்று வேண்டினார்;.

எம்பெருமானும் அம்மையாரின் விருப்பத்திற்கு ஏற்ப பேய் வடிவத்தை கொடுத்து அருளினார். புனிதவதியின் வனப்பு மிகுந்த தசைகள் யாவும் மாயமாக மறைய துவங்கின. உடலில் உள்ள தோலானது எலும்பை மூடிய போர்வையாக அமைந்த வண்ணம் காட்சியளித்தார். தேவர்களும், மானிடர்களும் வியக்கும் பேய் வடிவத்தை புனிதவதி விரும்பி பெற்றார். பெண்ணாக நின்றவர் அவ்விடத்தில் பேயாக மாறினார்.

அனைவரும் போற்றுதலுக்கு உரிய புனிதவதியாரிடம் சுற்றத்தினர்கள் நிற்பதற்கே அஞ்சினர். அம்மையார் பேய் உருவத்தை கொண்டதோடு மட்டுமல்லாமல் நல்ல தமிழ் புலமையும் பெற்றார். மேலும், கைலாய மலையில் வீற்றிருக்கும் சிவபெருமானை தரிசிக்க வேண்டும் என எண்ணினார்.

கயிலை மலையில் வீற்றிருக்கும் எம்பெருமானை தரிசிக்க வேண்டும் என எண்ணம் கொண்ட அம்மையார், எம்பெருமானின் நாமத்தை சிந்தையில் கொண்டு நடைபயணமாக கயிலையை அடைய துவங்கினார். திருக்கயிலாயத்தை அடைந்ததும் அம்மலையை எம்பெருமானாக எண்ணி மிதித்து நடந்து செல்வதற்கு அஞ்சினார் அம்மையார். அதனால் தலையால் நடந்து செல்வதை மனமகிழ்ச்சியுடன் ஏற்று கயிலை மலையின்மீது ஏறிச் சென்று கொண்டிருந்தார்.

அச்சமயத்தில் நிகழ்ந்து கொண்டு இருப்பதை பார்த்துக் கொண்டிருந்த உமையவள் உலக நாயகனிடம் இங்கே தலையினால் நடந்து ஏறிவருகின்ற எற்புடம்பை யுடையவரது அன்பின் மகிமை என்னவென்று உரைப்பது? என்று கூறினாள்.

உமையாளின் மொழியை கேட்டு இறைவன்...

இங்கே வருகின்றவள் நம்மைத் துதிக்கின்ற அம்மை என்றும்,

எவரும் விரும்பாத இந்த பெருமை பொருந்திய வடிவத்தையும் வேண்டி பெற்றாள் என்றும் கூறினார்.

பின் புனிதவதியார் எம்பெருமானிடம் வந்தவுடனே உலகமெல்லாம் அருள்புரியும் உலக நாயகன் புனிதவதியாரை நோக்கி 'அம்மையே" என்று அழைத்தார்.

அதைக்கேட்ட புனிதவதியார் 'அப்பா" என்று சொல்லிக்கொண்டு அவருடைய திருவடிகளிலேயே விழுந்து நமஸ்கரித்து எழுந்தார்.

எம்பெருமான் அம்மையிடம் உமக்கு யாது வரம் வேண்டும்? என்று திருவாய் மலர்ந்தார். அம்மையோ... எம்பெருமானின் மீது கொண்ட பக்திப்பெருக்கோடு... ஐயனே...!!

அடியவளுக்கு இறவாத பேரின்பமயமாகிய அன்பு வேண்டும்.

இனி பிறவாமை வேண்டும்.

ஒருவேளை பிறப்பு, இறப்பு இருக்கின்ற மானிட பிறவி எடுக்க நேரிட்டாலும்... ஐயனை மறவாதிருக்க அருள்புரிய வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் தாங்கள் ஆனந்தத் தாண்டவம் ஆடும்போது தங்களின் திருவடிக்கீழ் இருந்து ஆனந்தமாகப் பாடிக்களிக்க வேண்டும்...

அதனால் யாம் மகிழ்ந்து பேரின்பம் கௌ;ள திருவருள் புரிய வேண்டும் என்று வணங்கி நின்றார்.

எம்பெருமானும் புனிதவதியாரின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு

தென்னாட்டில் உள்ள திருவாலங்காட்டில் யாம் நடனம் ஆடும்போது நீ எமது திருவடிகீழ் அமர்ந்து... கண்டு... பாடி மகிழ்வாயாக... என்று அருள்புரிந்தார். அக்கணத்தில் அம்மையார் அடைந்த மகிழ்ச்சி என்பது எல்லை இல்லாததாகும்.

காரைக்கால் அம்மையார் சுவாமியை நமஸ்கரித்து அனுமதி பெற்று கொண்டு, திருவாலங்காட்டிற்கு தலையினால் நடந்து சென்று, சுவாமியுடைய திருநடனத்தை தரிசித்து, 'கொங்கை திரங்கி" என்னும் மூத்த திருப்பதிகத்தையும், 'எட்டியிலவமீகை" என்னும் திருப்பதிகத்தையும் பாடினார். அவர் சுவாமியுடைய தூக்கிய திருவடியின் கீழே சிவானந்தத்தை அனுபவித்துக் கொண்டு எக்காலமும் இருக்கின்றார். இறைவனின் மீது 11 பாடல்கள் கொண்ட திருப்பதிகம் பாடினார்.

கைகளால் கயிலாயம் நடந்து வந்தவரை சிவபெருமான் 'அம்மையே" என்று அழைத்ததால் இவர் பிறந்த ஊரின் பெயரையும் சேர்த்து 'காரைக்கால் அம்மையார்" என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.

இவர் இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாகப் பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார். தேவார காலத்திற்கு முன்பே இசைத்தமிழால் சிவபெருமானை பாடியவர் என்பதால் இசைத்தமிழின் அன்னை என்று அறியப்படுகிறார்.

அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை போன்ற நூல்களைத் தந்து சைவத்தமிழுக்குப் பெரும் தொண்டாற்றியுள்ளார். இவருடைய பதிக முறைகளைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் இயற்றப்பட்டன. காரைக்கால் அம்மையார் இறைவனின் மீது பாடிய திருவாலங்காட்டு திருப்பதிகங்கள் தேவார மூத்த திருப்பதிகங்களுக்கு எல்லாம் முன்னோடி என்று சொல்லலாம். பதிக முறையில் பாடியதால் இவை திருப்பதிகம் என்று அழைக்கப்பட்டது. முதன் முதலில் தோன்றிய மூத்த திருப்பதிகங்கள் இவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்