வியாழன், 25 ஜூன், 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி049

புகழ்த்துணை நாயனார்...!

சோழ நாட்டிலுள்ள செருவிலிபுத்தூரில் சிவவேதியர் குலத்தில் தோன்றியவர் புகழ்த்துணையார். இவர் செருவல்லிப்புத்தூரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை ஐந்தெழுத்து மந்திரத்தை இடைவிடாமல் எண்ணி சிவாகம முறைப்படி வழிபட்டு வந்தார். அவர் பரமசிவனை அர்ச்சனை செய்து வந்தார். சில வருடங்களுக்கு பிறகு நாடு முழுவதும் பஞ்சம் ஏற்பட்டது. மக்களுக்கு உண்ண உணவு இல்லாததால் கோவிலுக்கு செல்வதை விடுத்து உணவு எங்கு கிடைக்குமோ அவ்விடத்தை தேடி செல்லத் துவங்கினார்கள்.

பஞ்சம் தோன்றி உணவுக்கு வழி இல்லாத காலத்திலும் சிவபெருமானின் மீது கொண்ட அன்பு மற்றும் பக்தியால் அவரை விடாது எப்பொழுதும் போல் சிவாகம முறைப்படி வழிபட்டு பூஜை செய்து வந்தார். இரவும், பகலும் உணவினை விடுத்து கிடைக்கும் நீரினை பருகி வாழ்ந்து வந்தார் புகழ்த்துணையார்.

நாட்கள் செல்ல செல்ல உடலில் வலுவும் குறைய துவங்கியது. ஒருநாள் பசியால் உடல் சோர்ந்து இறைவனை திருமஞ்சனமாட்டும் பொழுது திருமஞ்சனக்குடத்தைத் தாங்கி பிடிக்க முடியாமையினால் கைத்தவறி குடத்தினை இறைவன் திருமுடிமேல் வைத்துவிட்டு நடுங்கி வீழ்ந்தார்.

அவ்வாறு விழுகையில் சிவலிங்கத்தின் மீது புகழ்த்துணையார் சிரமானது மோதியதால் வலி தாங்காமல் மயக்கமுற்றார். புகழ்த்துணையார் கொண்ட பக்தியால் மனம் மகிழ்ந்த எம்பெருமான் அவருடைய மயக்க நிலையை உறக்க நிலையாக்கி அருள்புரிந்தார். காண கிடைக்காத பல அரிய காட்சிகள் நிகழத் துவங்கின.

அதாவது, எம்பெருமான் துயில் கொண்ட புகழ்த்துணையாரின் சொப்பனத்தில் எழுந்தருளினார். பஞ்சத்தால் மக்கள் நாடு நகரம் மறந்து சென்ற போதும் நீ மட்டும் எம்மைவிட்டும், இவ்விடத்தை விட்டும் அகலாது அணைந்து எம்மை வழிபாடு செய்து வந்துள்ளாய். யாம் உமக்கு உணவுப்பொருள் மங்கிய காலம் முழுவதும் எமது பீடத்தில் உமக்காக ஒரு காசு அருள்கின்றோம் என்று திருவாய் மலர்ந்து அருளினார்.

புகழ்த்துணையார் துயிலுணர்ந்து எழுந்து பீடத்தின் கீழ் பொற்காசு இருப்பதைக் கண்டு அதை கைக்கொண்டு மிகவும் மனம் மகிழ்ச்சி கொண்டு எம்பெருமானின் திருவருளை எண்ணி அகம் மகிழ்ந்தார். அவ்வாறு பஞ்சம் நீங்கும் காலம் வரை இறைவர் நாள்தோறும் அளித்த காசு கொண்டு துன்பம் நீங்கி இறைவனது வழிபாட்டில் சற்றும் வழுவாமல் வாழ்ந்திருந்து பின் எம்பெருமானின் திருவடியைச் சேர்ந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்