சிவபெருமான் லிங்க திருமேனியாக காட்சிதந்து அருளாசி வழங்கும் ஆலயங்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக உள்ளன. அவை ஒவ்வொன்றும் மூர்த்தி மகிமையாலும், தலம், தீர்த்தம் சிறப்பாலும் மேன்மையுற்று விளங்குகின்றன.
மூலவர் : ஸ்ரீநந்தீஸ்வரர்.
அம்மன் : ஸ்ரீஆவுடைநாயகி.
தல விருட்சம் : நாகலிங்கம்.
பழமை : 2 ஆயிரம் ஆண்டுகள்.
ஊர் : ஆலந்தூர்.
மாவட்டம் : காஞ்சிபுரம்.
தல வரலாறு :
பிருங்கி முனிவருக்கு சிவபெருமான் நந்தி உருவத்தில் காட்சித் தந்ததால் அவ்வாறு அழைக்கப்படுகிறார். இங்குள்ள மலையில் இந்த பிருங்கி முனிவர் தவமிருந்து வந்ததாகவும் வரலாறு கூறுகிறது. அதனாலேயே இந்த பகுதி 'பிருங்கிமலை" என்று அழைக்கப்பட்டு, அதுவே நாளடைவில் இன்றைய 'பரங்கிமலையாக" மாறிவிட்டது. இந்த பகுதி ஆதம்பாக்கம் என்று அழைக்கப்படுவதற்கும் காரணம் சொல்கிறார்கள்.
ஆதம்பாக்கம் நந்தீஸ்வரர் கோவிலை கட்டிய சோழ மன்னர்களில் ஒருவனான 'ஆதணி" என்பவனின் பெயராலேயே இந்த ஊர் 'ஆதணி" என்று அழைக்கப்பட்டது. அதுவே, நாளடைவில் இன்றைய 'ஆதம்பாக்கமாக" மாறிவிட்டது என்கிறார்கள்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீநந்தீஸ்வரர். கிழக்கு பார்த்த சந்நிதி. தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் ஆவுடைநாயகி எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள். கோமதி என வடமொழியில் அழைப்பர். நுழை வாசலில் நாகலிங்கம் தரிசிக்கலாம்.
சுந்தர விநாயகர், நாகதேவதை, விஷ்ணு, பைரவர், சந்திரன், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை, சண்டிகேசுவரர், நவக்கிரகங்கள் ஆகிய தெய்வங்களும் இங்கு தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.
இந்த கோவிலுக்கும், புகழ்பெற்ற திருவொற்றிர் வடிவுடையம்மன் கோவிலுக்கும் பண்டைய காலத்தில் நெருங்கியத் தொடர்பு இருந்துள்ளது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு, திருவொற்றிர் ஆலய நித்திய பூஜைக்கு தேவையான புஷ்பங்களை பெறவும், அதற்காக பூச்செடிகள் சாகுபடி செய்யவும் ஆதம்பாக்கம் நந்தீஸ்வரர் கோவில் சார்பில் மானியமாக நிலம் கொடுக்கப்பட்ட தகவல் கல்வெட்டு வாயிலாக தெரிய வருகிறது.
பிரார்த்தனை :
திருமணத்தடை உள்ளவர்கள் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுயம்வர பார்வதி ஹோமம், பூர்வஜென்ம பாவம் நீங்க ஹோமம், தன்வந்திரி ஹோமம் போன்றவை நடைபெற்று பூர்ணாகுதி நடைபெறும்.
பின்னர் அவரவர் பெயர் நட்சத்திரத்திற்கு சுவாமிக்கு அர்ச்சனை செய்து அபிஷேகம் நடைபெறும். பின்னர் அவர்கள் கையில் கங்கணம் (ரட்சா பந்தனம்) கட்டப்படுகிறது. இவ்வாறு செய்வதால் அவர்கள் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
மேலும் கல்வி, திறமைக்கு ஏற்ற வேலை உள்ளிட்ட பக்தர்களின் எல்லா வேண்டுதல்களும் இங்கே வந்து வழிபடுவதன் மூலம் நிறைவேறுகின்றன. வள்ளி-தெய்வானையுடன் இங்கு எழுந்தருளியுள்ள முருகப்பெருமானை வழிபட்டால், குழந்தை பாக்கியம் தாமதமாகும் தம்பதியருக்கு அந்த பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.
சிவபெருமானுக்கு உரிய எல்லா விசேஷ தினங்களும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. கோவிலுக்கு வந்து செல்ல சென்னையின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் போக்குவரத்து வசதி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக