கொரோனா வைரஸ் பொது முடக்கநிலை காலத்தில், சுமார் 56 சதவீத மாணவர்களிடம் இணைய வழி கற்றலுக்குத் தேவைப்படும் ஸ்மார்ட்போன் தொழில்நுட்ப அணுகல் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. நாட்டின் வெவ்வேறு பள்ளிகளில்பயிலும் 42,831 மாணவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியள்ளது.
தொழில்நுட்பத்திற்கான அணுகலை பகுப்பாய்வு செய்யும் நோக்கில், குழந்தை உரிமைகள் தன்னார்வ தொண்டு நிறுவனமான ஸ்மைல் அறக்கட்டளை ‘கோவிட்-19 தொடர்பான கள நிலைமைகளும், சாத்தியமான தீர்வுகளும்’ என்ற பெயரில் இந்த ஆய்வை மேற்கொண்டது.
கணக்கெடுக்கப்பட்ட குழந்தைகளில் 43.99 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன் தொழில் நுட்பத்தை அணுகுவதாகவும், 43.99 சதவீத மாணவர்கள் சாதாரண தொலைபேசிகள் அல்லது சாதாரண கைபேசிகள் அனுகுவதாகவும்,12.02 சதவீத மாணவர்கள் எந்தவித தொலைபேசியையும் பயன்படுத்தவில்லை என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தாத மாணவர்களின் எண்ணிக்கை 56.01 சதவீதமாக உள்ளது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தொலைக்காட்சியைப் பொறுத்தவரை, தொலைக்காட்சியை அணுகும் மாணவர்களின் எண்ணிக்கை 68.99 சதவிகிதமாக உள்ளது, 31.01 சதவிகித என்ற அதிக எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு தொலைக்காட்சி அணுகல் இல்லை. எனவே கற்றல் விளைவுகளை மேம்படுத்த ஸ்மார்ட்போன் தலையீடுகளைப் பயன்படுத்துவது ஒரே தீர்வாகாது,”என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
1 முதல் 5 வகுப்பு வரையிலான 19,576 முதன்மை கல்வி மாணவர்களும் ; 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான 12,277 மாணவர்களும்; 9 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான 5,537 உயர்நிலைப் பள்ளி மாணவர்களும்; 11 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான 3,216 மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் இந்த ஆய்வில் கணக்கெடுக்கப்பட்டனர்.
டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், ஆந்திரா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட 23 மாநிலங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
மார்ச் மாதத்தில் நாடு தழுவிய கொரோனா பொது முடக்கநிலையை மத்திய அரசு அமல்படுத்திய பிறகு , பள்ளிகளும், கல்லூரிகளும் இணைய வழிக் கல்வியை முதன்மை படுத்தின. இருப்பினும், நாட்டில் நிலவும் டிஜிட்டல் டிவைட் சூழலில், முழுமையான இணைய வழிக் கல்வி என்பது நிறைவேறாத கனவாக உள்ளது என்று பல நிபுணர்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்தினர்.
நாட்டில் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 35 கோடிக்கும் அதிகம் என்று அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. இருப்பினும், அவர்களில் எத்தனை பேரிடம் இணைய வழிக் கல்வியை உறுதி செய்யும் தொழில் நுட்பங்கள் உள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஸ்மைல் அறக்கட்டளையின் இணை நிறுவனர் சந்தானு மிஸ்ரா கூறுகையில், டிஜிட்டல் டிவைட் (ஏற்றத்தாழ்வுகள்) உண்மையான சவால் என்பதை ஆய்வுகள் தெளிவாகக் காட்டுகின்றன. மேலும், அனைத்து பிரிவு மாணவர்கள் கல்வி பயில வேண்டுமெனில், நமது அணுமுறைகள் பல மட்டங்களில் செயல்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
” கொரோனா பொது முடக்கத்தால் பள்ளி காலவரையின்றி மூடப்பட்டது. குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்கப்படுவதை எவ்வாறு உறுதிப்படுத்துவது? என்ற கேள்வி முன்னெப்போதையும் விட தற்போது முக்கியதத்துவம் பெறுகிறது. இதன் மூலம், தொழில் நுட்பத்தை மாணவர்கள் அணுகிப் பயன்படுவத்துவது என்பது ஒரே நிலையில் இல்லாமல் வேறுபட்டு இருக்கும் என்ற யதார்த்த நிலையும் உருவாகும்” என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக