திருஓணகாந்தன்தளி (காஞ்சிபுரம்)
இறைவன் பெயர்
ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர், சலேந்தரேஸ்வரர்
இறைவி பெயர்
காமாட்சி
தேவாரப் பாடல்கள்
சுந்தரர்
நெய்யும் பாலுந் தயிருங்
எப்படிப் போவது
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு மேற்கேயுள்ள சர்வதீர்த்தத்துக்கு வடமேற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் பஞ்சுப்பேட்டை என்ற பகுதியில் உள்ள துணை நிலையத்திற்கு எதிரில் கோவில் உள்ளது. சாலையோரத்திலேயே கோவிலும் மின் நிலையமும் உள்ளன.
ஆலய முகவரி
அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோவில்,
பஞ்சுப்பேட்டை (துணை மினநிலையம் அருகில்),
பெரிய காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம்.
PIN – 631502.
தொடர்பு:
98944 43108
தல வரலாறு
வாணாசுரனுடைய சேனாதிபதிகளான ஓணன், காந்தன் என்னும் இருவர் வழிபட்ட தலம்; ஆதலின் இது ஓணகாந்தன்தளி என்று பெயர் பெற்றது.
இவ்விருவரும் வழிபட்ட ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர் ஆகிய இரு சிவலிங்கத் திருமேனிகளும் கோயிலில் அடுத்தடுத்து தனிச் சந்நிதிகளாக உள்ளன.
சலந்தரன் வழிபட்டதாக சொல்லப்படும் சலேந்தரேஸ்வரர் சிவலிங்கத் திருமேனி தனியே உள்ளது; இக்கோயிலுக்கு வெளியேயிருந்த, சலந்தரன் வழிபட்ட சிவலிங்கத் திருமேனியை எடுத்துவந்து இங்கு தனிக்கோயிலாக ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவே சலந்தரேசம் எனப்படுகிறது; இது பிற்கால பிரதிஷ்டையாகும்.
இங்கு வந்த சுந்தரர், இறைவனிடம் அடிமைத் திறம் பேசி, 'நெய்யும் பாலும் தயிரும் கொண்டு' என்று தொடங்கும் பதிகம் பாடி பொன் பெற்றார் என்பது வரலாறு.
மேற்படி பதிகத்துள் சுந்தரர் குறித்துள்ளதற்கேற்ப இக்கோயிலில் 'வயிறுதாரிப் பிள்ளையார் ' சந்நிதி உள்ளது.
மேற்படி பதிகத்தில் ஐந்தாவது பாடலைத் தொடங்கிப் பாடும்போது, இறைவன் பக்கத்தில் உள்ள புளிய மரத்தில் சென்று ஒளிந்து கொண்டதாகவும்; அஃதறிந்த சுந்தரர் அங்குச் சென்று பதிகத்தை தொடரவே, இறைவன் அப்புளிய மரத்துக் காய்களையே பொன் காய்களாக விழுமாறு உதிர்க்க, சுந்தரர் அவற்றைப் பெற்றார் என்பதாக இப்பகுதியில் செவிவழிச் செய்தியாகச் சொல்லப்படுகிறது.
இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
வாணாசுரன் என்ற அரசனுடைய சேனாதிபதிகளான ஓணன், காந்தன் என்னும் அசுரர்கள் வழிபட்டுப் பேறுபெற்ற காரணத்தால் இத்தலம் ஓணகாந்தன்தளி என்று பெயர் பெற்றது. 3 நிலை இராஜ கோபுரத்துடன் இவ்வாலயம் காட்சி தருகிறது. ஆலயத்தினுள் மூன்று கருவறைகளும், மூன்று சிவலிங்கங்களும் உள்ள சிறப்பு மிக்க ஆலயம் இதுவாகும். கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் நேரே பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. ஓணன், காந்தன் இவ்விருவரும் வழிபட்ட ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர் ஆகிய இரு சிவலிங்கத் திருமேனிகளும் கோயிலில் அடுத்தடுத்து தனிச் சந்நிதிகளாக உள்ளன. முதல் சந்நிதியில் ஓணேஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். மூலவரின் பின்புறம் கருவறைச் சுற்றில் சிவன் உமையம்மையின் திருமணக் கோலத்தைக் காணலாம். ஓணேஸ்வரர் சந்நிதி அர்த்த மண்டபத்தில் சுந்தரர் மற்றும் இறைவனின் திருப்பாத தரிசனம் காணலாம். அடுத்து 2-வது சந்நிதியில் காந்தேஸ்வரர் தரிசனம் தருகிறார். 3-வது கருவறையில் சலந்தரன் வழிபட்டதாகச் சொல்லப்படும் சலேந்தரேஸ்வரர் சிவலிங்கத் திருமேனி தனியே சிறு கோவிலாக உள்ளது. இது பிற்காலப் பிரதிஷ்டையாகும். இத்தலத்திலுள்ள வயிறுதாரிப் பிள்ளையார் சந்நிதியை சம்பந்தர் தனது பதிகத்தின் 2-வது பாடலில் குறிப்பிடுகிறார். இது தவிர மற்றொரு விநாகயரான ஓங்கார கணபதியும் காந்தேஸ்வரர் சந்நிதியில் வெளியே காணப்படுகிறார். இவரின் சிலையில் பக்தியுடன் காது வைத்துக் கேட்டால் ஓம் என்ற ஒலி மெல்லிய அளவில் கேட்பதாக சொல்லப்படுகிறது. இத்தலத்தில் தட்சினாமூர்த்தி சனகாதி முனிவர்கள் உடன் இருக்க வலது காலை முயலகன் மீது வைத்தபடி காட்சி தருகிறார். முருகர் தனது மயில் வாகனத்தில் அமர்ந்தபடி தனது இரு தேவியர் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார்.
காஞ்சீபுரத்தில் காமாட்சி அம்மனே பிரதான அம்பாளாக வீற்றிருப்பதால் இத்தலத்திலுள்ள சிவன் ஆலயங்களில் அம்பாளுக்கு என்று தனி சந்நிதியில்லை. திருஓணகாந்தன்தளி ஆலயத்திலும் அம்பாள் சந்நிதி தனியாக இல்லை. கோவிலுக்கு வெளியே தான்தோன்றி தீர்த்தம் உள்ளது. வன்னி மரமும், புளிய மரமும் இத்தலத்தின் தல விருட்சங்களாகும்.
சுந்தரர் பாடிய இத்தலத்திற்கான இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இங்கு வந்த சுந்தரர், இறைவனிடம் அடிமைத் திறம் பேசி, நெய்யும் பாலும் தயிரும் கொண்டு என்று தொடங்கும் பதிகம் பாடிப் பொன் பெற்றார் என்பது வரலாறு. இப்பதிகத்தில் ஐந்தாவது பாடலைத் தொடங்கிப் பாடும் போது, இறைவன் பக்கத்தில் உள்ள புளிய மரத்தில் சென்று ஒளிந்து கொண்டதாகவும், அதையறிந்த சுந்தரர் அங்குச் சென்று பதிகத்தை தொடரவே, இறைவன் அப்புளிய மரத்துக் காய்களையே பொன் காய்களாக விழுமாறு உதிர்க்க, சுந்தரர் அவற்றைப் பெற்றார் என்பதாக ஒரு செய்தி இப்பகுதியில் செவிவழிச் செய்தியாகச் சொல்லப்படுகின்றது.
சிறப்புகள்
காஞ்சிபுரத்திலுள்ள பாடல் பெற்ற திருக்கோயில்கள் ஐந்தினுள் இத்திருக்கோயிலும் ஒன்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக