Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 2 ஜூன், 2020

அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில்,திருவண்ணாமலை,


சிவஸ்தலம் பெயர்

திருவண்ணாமலை

இறைவன் பெயர்

அருணாசலேஸ்வரர், அண்ணாமலையார்

இறைவி பெயர்

உண்ணாமலை அம்மை

தேவாரப் பாடல்கள்

சம்பந்தர்

1. உண்ணாமுலை உமையாளொடும்

ஷ2. பூவார்மலர்கொண்டடியார்

அப்பர்

1. ஓதிமா மலர்கள் தூவி
2. வட்ட னைமதி சூடியை
3. பட்டி ஏறுகந் தேறிப்

எப்படிப் போவது

சென்னையில் இருந்து சுமார் 190 Km தொலைவில் திருவண்ணாமலை சிவஸ்தலம் உள்ளது. தமிழ்நாட்டின் பல முக்கிய நகரங்களில் இருந்து பேருந்து வசதிகள் திருவண்ணாமலைக்கு உண்டு. விழுப்புரம் - காட்பாடி ரயில் பாதையில் திருவண்ணாமலை ரயில் நிலையம் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில்,
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம்.
PIN – 606601.

தொடர்பு

04175-252438

தல வரலாறு

பஞ்சபூத தலங்களுள் நெருப்புக்குரிய தலம்.

இங்கு மலையே இறைவனின் சொரூபம்.

வல்லாள மன்னனுக்கு மகனாக வந்தவதரித்து இறைவன் அருள் செய்த பதி இதுவே.

காசியில் இறக்க முக்தி, திருவாரூரில் பிறக்க முக்தி, சிதம்பரத்தைத் தரிசித்தால் முக்தி. ஆனால் நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. காசியில் இறப்பது எல்லோருக்கும் வாய்க்காது. திருவாரூரில் பிறப்பது நம் செயல் அன்று. சிதம்பரத்திற்கு நேரில் சென்று தரிசிப்பது என்பது எல்லோராலும் இயலாது. ஆனால் திருவண்ணாமலையை ஒரு முறையேனும் நினைப்பது யாவருக்கும் எளிதான செயலே. அவ்வாறு ஒரு முறை நினைத்தாலும் முக்தி எளிதில் வாய்க்கும் என்ற சிறப்பை உடையது திருவண்ணாமலை தலம்.

தல வரலாறு: ஒரு முறை படைப்புக் கடவுளான பிரம்மாவிற்கும், காக்கும் கடவுளான மஹாவிஷ்னுவிற்கும் அவர்கள் இருவரில் யார் உயர்ந்தவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களின் அறியாமையை அகற்றிட சிவபெருமான் அவர்கள் முன் சோதி வடிவம் கொண்டு ஓங்கி உயர்ந்து நின்றார். வராக அவதாரம் எடுத்த திருமால் பூமியைக் குடைந்து சென்றார். பிரம்மா அன்னப் பறவை உருவெடுத்து உயரப் பறந்து சென்றார். இருவராலும் சோதியின் அடி முடியைக் காண இயலவில்லை. சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்பதைப் புரிந்து கொண்ட இருவரும் அவரை வணங்கினர். சிவபெருமானும் அவர்களுக்கு சோதி வடிவிலிருந்து ஓர் மலையாக மாறி காட்சி கொடுத்தார். அதுவே இத்தலமான அண்ணாமலை. பின்பு தன்னை வழிபாடு செய்வதறகு ஏதுவாக லிங்கோத்பவராக காட்சி கொடுத்து அருளினார்.

ஆலயச் சிறப்பு: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயம் தமிழ்நாட்டில் உள்ள பெரிய கோவில்களில் ஒன்றாகும். ஆறு பிரகாரங்களும், 9கோபுரங்களும், பல மண்டபங்களும், பல சந்நிதிகளும் கொண்ட இந்த ஆலயம் எல்லோராலும் தரிசிக்க வேண்டிய புண்ணியத் தலங்களில் முதண்மையானதாகும். இறைவன் இத்தலத்தில் சுயம்பு லிங்கத் திருமேனியாக நாகக் கிரீடம் அணிந்து தூய வெண்ணிற ஆடையுடன் அருணாசலேஸ்வரர் என்ற திருநாமத்துடன் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். கருவறை கோஷ்டத்தில் ஈசனின் பின்புறம் லிங்கோத்பவர் எழுந்தருளியிருக்கிறார். லிங்கோத்பவராக சிவபெருமான் முதன்முதலாக காட்சி கொடுத்தது இத்தலத்தில் என்பதால் மற்ற ஆலயங்களில் இல்லாத அளவிற்கு தனி அலங்காரத்துடன் இவர் காட்சி தருகிறார்.இறைவன் சந்நிதியை அடுத்து உண்ணாமலை அம்மை தனிக் கோவிலில் கருவறையில் சிறிய உருவில் அருட்காட்சி தருகிறாள்.

வெளிச்சுற்று மதிலில் திசைக்கு ஒன்றாக அமைந்துள்ள நான்கு கோபுரங்கள் பிரதான கோபுரங்களாகும். 5-ம் பிரகாரத்தில் இருந்து 4-ம் பிரகாரத்துக்குச் செல்லும் வகையில் திசைக்கு ஒன்றாக 4 கோபுரங்கள், 4-ம் பிரகாரத்தில் இருந்து 3-ம் பிரகாரத்துக்குச் செல்லும் வகையில் கிழக்கில் கிளி கோபுரம் என்று அழைக்கப்படும் கோபுரம் ஒன்று ஆக மொத்தம் 9 கோபுரங்களுடன் இவ்வாலயம் திகழ்கிறது. இவற்றில் கிழக்கு திசையிலுள்ள இராஜகோபுரம் தமிழகத்தின் 2வது பெரிய கோபுரமாகும். இது 11 நிலைகளுடன் 217 அடி உயரம் கொண்டது. தெற்கு திசை கோபுரத்திற்கு திருமஞ்சன கோபுரம் என்றும், மேற்கு திசை கோபுரத்திற்கு பேய் கோபுரம் என்றும், வடக்கு திசை கோபுரத்திற்கு அம்மணி அம்மாள் கோபுரம் என்றும் பெயர்.

மணிபூரகத்தலம்: ஆறு ஆதாலத் தலங்களில் திருவண்ணாமலை மணிபூரகத் தலமாக விளங்குகிறது. மனித உடலைப் பொறுத்த வரை மணிபூரகம் என்பது வயிற்றைக் குறிக்கும். வயிற்றுக்காகத்தான் இந்த உலகமே இயங்குகிறது. எனவே ஒட்டு மொத்த உலக இயக்கமும் அண்ணாமலையாருக்குள் அடக்கம் என்று சொல்லகப்படுகிறது.

சிறப்புகள்

கார்த்திகை தீப பெருவிழா, இத்தலத்தில் மிகவும் சிறப்புடையது.

உயர்ந்தோங்கிய அருணாசலத்தின் - அண்ணாமலையின் அடிவாரத்தில் கோயில் உள்ளது.

நினைக்க முத்தியருளும் நெடும் பதி.

அருணகிரி நாதரின் வாழ்வில் அருள் திருப்பம் ஏற்படக் காரணமாக இருந்த பதி.

ரமண மகரிஷி தவம் இருந்து அருள் பெற்ற தலம். (ரமணர் ஆசிரமம் இத்தலத்தில் உள்ளது.)

இத்திருக்கோயிலின் கிழக்குக் கோபுரம்217 அடி உயரம் - தமிழகத்திலேயே உயர்ந்து விளங்குகிறது. தெற்கு கோபுரம் - திருமஞ்சன கோபுரம், மேலக்கோபுரம் - பேய்க் கோபுரம், வடக்குக் கோபுரம் - அம்மணியம்மாள் கோபுரம் என்றழைக்கப்படுகிறது.

யாத்ரிகர்களுக்குரிய சத்திரங்கள், திருக்கோயில் விடுதிகள் முதலியவை உள்ளன.

மலைவலம் (கிரிவலம்) இங்குச் சிறப்புடையது.

கிழக்கு கோபுரத்தில் நடனக் கலையும் பிறவுமாகிய சிற்பங்கள் ஏராளமாக உள்ளன.

கோயிலுள் நுழைந்தவுடனே சர்வசித்தி விநாயகருக்கு வலப்பால் உள்ள பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதி - ரமணர் தவம் செய்த இடம்; தரிசிக்கத் தக்கது.

உள்ளே சென்றால் கம்பத்திளையனார் சந்நிதியும், ஞானப்பால் மண்டபமும் உள்ளன; 'அதலசேடனாராட' என்னும் திருப்புகழுக்கு முருகன் கம்பத்தில் வெளிப்பட்டு அருள் செய்த சந்நிதி.

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முருகப்பெருமானுக்குச் சார்த்திய வேல் இன்றுமுள்ளது.

சுப்பிரமணிய சந்நிதியில் பாம்பன் சுவாமிகளின் குமாரஸ்தவக் கல்வெட்டுள்ளது; அருகிலேயே அருணகிரிநாதரின்'திருவெழுகூற்றிருக்கை' வண்ணத்தில் சலவைக் கல்லில் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளது.

அம்பாள் சந்நிதியில் சம்பந்தர் பதிகம், பாவை, அம்மானைப் படல்களின் கல்வெட்டுக்கள் உள்ளன.

விசுவாமித்திரர், பதஞ்சலி, வியாக்ரபாதர்,அகத்தியர், சனந்தனர் முதலானோர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.

சாதாரணமாக கோயில்களில் அஷ்டபந்தன மருந்து சாத்தி பிரதிஷ்டை செய்வது போலன்றி, இக்கோயிலில் அண்ணாமலையார் ஸ்வர்ணபந்தனம்(சுத்தமான தங்கத்தால் பந்தனம்) செய்யப் பெற்றுள்ளார்.

மூவர் - அருணாசலப் பெருமான், தங்கக் கவச நாகாபரணத்துடன் வைர விபூதி நெற்றிப்பட்டம் ஜொலிக்க காட்சித் தருகிறார்.

25 ஏக்கர் நிலப்பரப்பில் ஏழு பிரகாரங்களுடன் அமைந்துள்ள இத்திருக்கோயில் (திருவாசகத்தில்) திருவெம்பாவை பாடப்பட்ட சிறப்பினை உடையது.

நாடொறும் ஆறுகால வழிபாடுகள் நடைபெறுகின்றன.

திருவாசகத்துள் திருவெம்பாவை என்ற பனுவல், இத்தலத்துப் பெண்கள் ஒருவரை ஒருவர் வழிபாட்டுக்கு எழுப்பிச் சென்றதை அடிப்டையாகக் கொண்டது.

தலபுராணம் - அருணாசல புராணம், அருணைக் கலம்பகம், சைவ எல்லப்ப நாவலர் பாடியுள்ளார்.

'அண்ணாமலை வெண்பா ' குருநமசிவாயர் பாடியது.

குருநாமசிவாயர், குகைநமசிவாயர்,அருணகிரியார், விருபாக்ஷதேவர்,ஈசான்ய ஞானதேசிகர், தெய்வசிகாமணி தேசிகர் முதலியோர் இப்பதியில் வாழ்ந்த அருளாளர்கள்; இவர்களுள் பெரும் யோகியாகத் திகழ்ந்த தெய்வசிகாமணி தேசிகரின் வழியில் வந்த நாகலிங்க தேசிகர் என்பர் இராமேஸ்வரத்திற்கு யாத்திரையாகச் சென்றபோது, இராமநாதபுர ராஜா சேதுபதி அவர்களின் வேண்டுகோளையேற்று, இராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த ஐந்து கோயில்களின் நிர்வாகத்தைக் தாம் மேற்கொண்டதோடு குன்றக்குடியில் திருவண்ணாமலை ஆதீனம் என்ற பெயரில் ஓர் ஆதீனத்தையும் ஏற்படுத்தினார்; அதுவே 'குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்' என்று வழங்கப்பட்டுவருகின்றது.

நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் இத்தலத்தில் படியெடுக்கப்பட்டுள்ளன. இவை தமிழ், சம்ஸ்கிருதம், கன்னட மொழிகளில் உள்ளன. (கல்வெட்டுக்களின் விவரத்தை ஆலயத்தலவரலாற்று நூலில் விரிவாகக் காணலாம்.)

இக்கோயிலின் சிறப்பைப் பற்றிப் பாடியோரும் நூல்களும் :- நமசிவாய சுவாமிகள் - சார பிரபந்தம், திருச்சிற்றம்பல நாவலர் - அண்ணாமலையார் சதகம், (காஞ்சிபுரம்) பல்லாவரம் சோணாசல பாரதியார் - அண்ணாமலை கார்த்திகை தீப வெண்பா, சோணாசல வெண்பா, திருவருணைக் கலிவெண்பா, சோணாசல சதகம், வடலூர் இராமலிங்கசுவாமிகள் - திருவண்ணாமலை திருவருட் பதிகம்,புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார் - அருணாசலேஸ்வரர் பதிகம், காஞ்சிபுரம் சபாபதி முதலியார்-அருணாசல பதிகம், யாழ்ப்பாணம் - நல்லூர் தியாகராஜப் பிள்ளை - அண்ணாமலையார் வண்ணம். இவையன்றி; உண்ணாமுலையம்மன் பதிகம், உண்ணாமுலையம்மன் சதகம், அருணாசலேஸ்வரர் அக்ஷரமாலை, அண்ணாமலை பஞ்சரத்னம் அருணாசல நவமணி மாலை, அருணாசல அஷ்டகம், அருணைக் கலம்பகம், திருவருணை வெண்பா முதலிய நூல்களும் உள்ளன.

வள்ளல் பச்சையப்பர் இக்கோயிலில் அர்த்த சாமக்கட்டளைக்கு ஒரு லட்சம் வராகன் வைத்துள்ள செய்தியைத் தெரிவிக்கும் கல்வெட்டொன்று கோயிலில் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக