Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 2 ஜூன், 2020

முதல் நாள் போர்!...

இராமர் என்னிடம், போருக்கு பயந்து அரண்மனையில் பதுங்கி கொண்டிருக்கும் உன்னிடம், அன்னை சீதையை இராமரிடம் ஒப்படைத்து விடு அப்படி இல்லையென்றால் போரில் அழிவது நிச்சயம் என இராமர் உன்னிடம் அன்பு காட்டும் பொருட்டு கூறினார் என்றான். மேலும் அங்கதன், உலகின் எட்டு திசைகளையும் போரில் வென்ற பெரு வீரன் என்ற பெயர் பெற்ற நீ, உன் நகரத்தை மாற்றார் சேனை வளைத்துக் கொண்டபோது போருக்குச் செல்லாமல், பயந்துகொண்டு உன் அரண்மனைக்குள் புகுந்து கொண்டால் உனக்கு பழியைத் தவிர வேறு என்ன கிடைக்கும் என்றான். இராவணனே, பெண்ணாசையால் அழிந்தவர் பலர். ஆசைக்கு அடிமையாகாதே. உன்னால் அரக்கர் குலம் அழிய போகிறது என்பதை மறந்து விடாதே. நீ இந்த இரண்டில் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றான். அங்கதன் கூறியதைக் கேட்ட இராவணன், பெரும் கோபங்கொண்டான். கோபத்தால் அவன் கண்கள் சிவந்தன.

 உடனே இராவணன், இவனை பிடித்து கொல்லுங்கள் என கட்டளையிட்டான். அங்கதனை கொல்ல அரக்கர்கள் பாய்ந்தனர். அங்கதன் அந்த அரக்கர்களை தூக்கிக் கொண்டு வான் வெளியில் பறந்தான். அங்கதன் வான்வெளியில் போகும்போது அந்த அரக்கர்களை அடித்து கொன்று வீசினான். பிறகு அங்கதன் இலங்கை மக்களிடம், இராமர் போருக்கு வந்து விட்டார் என அறிவித்துவிட்டு அங்கிருந்து இராமர் இருப்பிடத்தை அடைந்தான். அங்கதன் இராமரின் திருவடியில் விழுந்து வணங்கினான். இராமர் அங்கதனிடம், இராவணனைப் பார்த்துப் பேசினாயா? அவன் அதற்கு என்ன சொன்னான் என்று கேட்டார். அங்கதன், அங்கு நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் இராமரிடம் கூறினான். பிறகு அங்கதன் இராமரிடம், இவ்வளவு நடந்த போதிலும் அவன் தன் ஆசையை விட்டபாடில்லை என்றான்.


அங்கதன் சொன்னதை கேட்ட அனைவரும், இனி நடக்கப் போவது பெரும் போர் தான், சமாதானம் அல்ல என்பதை அறிந்துக் கொண்டனர். முதல் நாள் போர் தொடங்கியது. வானர சேனைகள் போருக்கு புறப்பட்டன. இராமர், இலங்கை நகரைச் சுற்றியுள்ள அகழிகள் (பாதுகாப்புக்காக அரண்மனை அல்லது கோட்டையைச் சுற்றி அமைக்கப்படும், நீர் நிரம்பிய கொடும்பள்ளம்), முன்பு கடலில் அணைக் கட்டியது போல, மரங்களையும், பாறைகளையும் கொண்டு வந்து போட்டு இந்த அகழியை மூடிவிடுங்கள் என்று வானரப் படைக்கு ஆணையிட்டார். இராமரின் ஆணைப்படி வானர வீரர்கள் இலங்கை நகரத்தின் நான்கு புறத்திலுமுள்ள அகழிகளைத் தூர்த்தனர். வானரப் படைகள் அகழியைத் தூர்த்தபின், கோட்டை மதிலின் உச்சிக்கு ஏறிச்சென்று போருக்கு ஆரவாரம் செய்தனர். வானர வீரர்கள் செய்த ஆர்ப்பாட்டத்தினால் கோட்டை மதிற்சுவர்கள் தரையில் அழுந்தின.

அப்பொழுது இலங்கை நகரத்துக்குள் அரக்கர் படையும் போருக்கு எழுந்தன. முரசுகள் முழங்கின. இரு படைகளும் ஒன்றுக்கொன்று நேரெதிராக நின்று மோதத் தொடங்கின. வானரப் படைவீரர்கள் மரங்களையும், கற்களையும், தத்தம் பற்களையும் ஆயுதமாகக் கொண்டு போர் புரிந்தனர். அரக்கர்கள் வில், அம்பு, வேல் கொண்டு போர் செய்தனர். போர் இரண்டு புறத்திலும் மிகக் கடுமையாக நடந்தது. வானர வீரர்கள் வீசிய கற்களையும், மரங்களையும் அரக்கர்கள் தங்கள் ஆயுதங்களை கொண்டு பொடி பொடியாக்கினர். போர் நடந்த இடம் இரத்த வெள்ளமாகக் காட்சி அளித்தது. வானர வீரர்கள் அவர்களது பற்களாலும், கைகளாலும் அடித்து அரக்கர்களைக் கொன்றனர். அரக்கர்கள் வீசிய அம்புகளாலும், வேலாலும், வில்லாலும் பல்லாயிர வானர வீரர்கள் மாண்டு போயினர். இலங்கை நகரத்தின் மதில்கள் இரத்தத்தால் சிவந்து காணப்பட்டன.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக