கருஞ்சீரக விதையில் இருக்கும் தைமோகுயினன் என்னும் நோ எதிர்ப்பு சக்தி தரும் வேதிப்பொருள் வேறு எதிலும் இல்லை. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் கருஞ்சீரகத்தை கொண்டு அதை கட்டுப்படுத்தலாம். இவை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதோடு கணையத்தில் இன்சுலின் சுரப்பையும் மேம்படுத்துகிறது.
கருஞ்சீரகத்தை இலேசாக வாசம் போக அரைத்து வைத்துகொண்டு, அதை வெதுவெதுப்பான நீரில் கால் டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் கட்டுப்படாத ரத்த சர்க்கரை அளவு பெருமளவு குறையும். இதை எடுத்துகொள்வதற்கு முன்பு ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை செய்வது அவசியம்.
பிறகும் இதை தொடர்ந்து சாப்பிடாமல் மூன்று நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டு ஒரு மாத இடைவெளியில் மீண்டும் சர்க்கரை பரிசோதனை செய்யவேண்டும். தொடர்ந்து ரத்த சர்க்கரை கட்டுக்குள் இல்லாமல் இருந்தால் அவர்கள் கருஞ்சீரக பொடியை சாப்பிட்டதும் பிறகு பரிசோதனை செய்து அதற்கேற்ப இடைவெளிவிட்டு எடுத்துகொள்ளலாம். சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பவர்கள் கருஞ்சீரகத்தை தொடர்ந்து எடுத்துகொண்டால் திடீரென்று ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்துவிடவும் வாய்ப்புண்டு என்பதால் கவனம் தேவை.
வெந்தயப்பொடி - சர்க்கரை கட்டுக்குள் இருக்க
வெந்தயம் கசப்பு சுவை மிக்க சத்துக்கள் நிறைந்த பொருள். கரையும் கரையாத நார்ச்சத்து கொண்டிருக்கும் வெந்தயத்தை வீட்டு வைத்தியம் முதல் சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம், ஆயுர்வேதம் என்று அனைத்திலும் பயன்படுத்துகிறார்கள். ஆரம்பகட்டம் முதலே வெந்தயத்தை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோய் வராமலே தவிர்க்க முடியும்.
வெந்தயம் கணையத்தில் இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. குடலானது ரத்தத்தில் சர்க்கரை அளவை உறிஞ்சுவதையும் குறைக்க செய்கிறது. அதனால் தான் நீரிழிவு வருவதற்கான அறிகுறி பரிசோதனையில் தெரிந்தால் சர்க்கரை நோய் வராமல் தவிர்க்க இந்த வெந்தயம் உதவும் என்கிறது இயற்கை மருத்துவம்.
வெந்தயத்தை இலேசாக வறுத்து பொடித்து வைத்து தினமும் காலையில் வெந்தய டீயாக குடித்துவரலாம். கசப்பு சுவை இருக்கும் என்றாலும் தினமும் ஒரு கப் அளவு குடித்துவந்தால் போதுமானது. வெந்தயத்தை முளைகட்டியும் தினம் ஒரு டீஸ்பூன் வீதம் எடுத்துகொள்ளலாம். வெந்தயம் சாப்பிடும் போதும் பரிசோதனை அவசியம். சர்க்கரையை விரைவில் கட்டுக்குள் கொண்டுவர உதவும் வெந்தயம் சர்க்கரையின் அளவை குறைத்துவிடவும் கூடும் என்பதால் அவ்வபோது பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
பாகற்காய் பொடி - சர்க்கரை கட்டுக்குள் இருக்க
சர்க்கரை நோய் இருப்பவர்கள் வாரத்துக்கு மூன்று அல்லது இரண்டு முறையாவது பாகற்காய் எடுத்துகொள்ள வேண்டும். பாகற்காயில் இருக்கும் இன்சுலின் ப் பாலிபெப்டுடைட் என்னும் வேதிப்பொருள் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பார்த்துகொள்கிறது. அதனால் தான் உணவில் அவ்வபோது பாகற்காய் பொரியல், பாகற்காய் குழம்பு, பாகற்காய் சூப் போன்றவற்றை சேர்க்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
பாகற்காயை வட்டவடிவில் நறுக்கி நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துகொண்டு அதை சூப் செய்ய பயன்படுத்தலாம். இதை மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடித்துவந்தால் போதும். சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.
நாவல் பழக்கொட்டையின் பொடி - சர்க்கரை கட்டுக்குள் இருக்க
டயபட்டீஸைகட்டுப்படுத்த மாத்திரைக்கு பதிலாக இந்த கொட்டையே போதும் என்று சொல்லக்கூடிய அளவுக்கு மருத்துவ குணங்களை கொண்டது நாவல் பழக்கொட்டை. இதிலிருக்கும் குளுக்கோசைடு ஸ்டார்ச் சர்க்கரையாக மாறுவதை தடுக்கிறது. நாவல் பழங்களே நன்மை செய்யும் போது இதன் கொட்டைகள் மேலும் பல நன்மைகளை செய்கிறது.
நாவல் பழத்தின் கொட்டையை எடுத்து நிழலில் உலர்த்தி நன்றாக பொடித்து வைத்து கொள்ளவும். தினமும் ஒரு கிராம் அளவு இந்த பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு கணிசமாக குறைந்திருப்பதை பரிசோதனையில் அறியலாம். வெறும் வயிற்றில் சாப்பிடாமல் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பிறகு இதை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
மூலிகை பொடி - சர்க்கரை கட்டுக்குள் இருக்க
இது மூலிகைகளை சேர்த்து தயாரிக்கும் பொடி. கருந்துளசி ஆன்டி ஆக்ஸிடண்ட் நிறைந்தவை. இவை சர்க்கரை நோயாளிகளுக்கு உண்டாகும் உடல் உபாதைகளை தடுக்க உதவுகிறது.
முருங்கை இலைகள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மாமர இலையில் இருக்க கூடிய மாந்தளிர். இந்த மூன்றையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடித்து வைக்கவும். பிறகு தினமும் காலையில் அரை டீஸ்பூன் அளவு பொடியை ஒரு டம்ளர் நீரில் சேர்த்து அவை பாதியாக வரும் வரை சுண்ட வைத்து பொறுமையாக குடிக்க வேண்டும். தினமும் இதை குடித்துவந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரக்கூடும்.
மேற்கண்ட பொடிவகைகள் எல்லாமே சர்க்கரை நோயை கட்டுபடுத்த கூடியவையே. ஆனால் எல்லாவற்றையும் எடுக்காமல் உங்களுக்கு எளிதான ஒன்றை தேர்வு செய்து கொள்ளுங்கள். அதே போல் உங்கள் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருந்தால் உணவு முறையிலேயே கட்டுக்குள் வைக்க முயற்சி செய்தாலே போதும். இந்த பொடி வகைகளை அவ்வபோது சேர்த்து வந்தாலே போதும். ஆனால் கட்டுக்குள் இருப்பவர்கள் இதை தொடர்ந்து சாப்பிடும் போது அவை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்துவிடும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக