Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 15 ஜூன், 2020

கொரோனாவில் இருந்து மீண்ட முதியவருக்கு அதிர்ச்சி... 8.35 கோடி ரூபாய் மருத்துவக் கட்டணம்!!

உலக அளவில் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுநாள்வரை 21 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 8.5 லட்சம் பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா நோய்த்தொற்றுக்கான ஆளான, சியாட்டல் மாகாணத்தைச் சேர்ந்த மைக்கேல் ஃப்ளோர் என்ற 70 வயது முதியவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் இரண்டு மாதங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். 62 நாட்கள் மரண போராட்டத்துக்கு பிறகு, தற்போது அவர் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்துள்ளார்.

கிட்டத்தட்ட தான் மறுபிறவி எடுத்துள்ளதாக எண்ணி அந்த முதியவர் மகிழ்ந்து வந்த நிலையில், கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு விதித்துள்ள மருத்துவ கட்டணம் அவரையும், அவரது குடும்பத்தினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மொத்தம் 8.35 கோடி ரூபாய் (1.1 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) அவருக்கு மருத்துவ கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவருக்கு 181 பக்கங்கள் கொண்ட கட்டண ரசீது (பில்) அளிக்கப்பட்டுள்ளது.

அதில், 29 நாட்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது; இதற்கான கட்டணம் நாள் ஒன்றுக்கு 9.7 ஆயிரம் டாலர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று, தொடர்ந்து 42 நாட்கள் அவருக்கு தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்றுள்ளார். இதற்கான மருத்துவ கட்டணம் மொத்தம் 4.08 லட்சம் டாலர்களாகும்.

நாள் ஒன்றுக்கு 2, 835 டாலர்கள் வீதம் 29 நாட்களுக்கு மொத்தம் 82,215 அமெரிக்க டாலர்கள் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 3,000-க்கும் மேற்பட்ட மருத்துவ உபகரணங்களுக்கான கட்டணங்களும் அந்த கட்டண ரசீதில் இடம் பெற்றுள்ளன.

மைக்கேல் ஃப்ளோருக்கு மருத்துவ கட்டணமாக 8.35 கோடி ரூபாய் விதிக்கப்பட்டிருந்தாலும், அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அவர் இணைந்துள்ளதால், மருத்துவ கட்டணத்தில் ஒரு ரூபாய் கூட அவர் தமது வங்கிக் கணக்கில் இருந்து தர வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக