லண்டனில் தலைமறைவாய் இருந்த தொழிலதிபர் விஜய் மல்லையா கைது செய்து இந்தியா
கொண்டுவரப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று அதை திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி விட்டதாக தொழிலதிபர் விஜய் மல்லையா மீது வழக்கு உள்ளது. இதை தொடர்ந்து லண்டனில் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையாவை லண்டன் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. விஜய் மல்லையாவை திரும்ப இந்தியாவுக்கு கொண்டு வர இந்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ள நிலையில் இந்தியாவுக்கு திரும்பாமல் இருக்க மல்லையா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் மல்லையா நேற்று நள்ளிரவு இந்தியா கொண்டு வரப்பட்டதாகவும், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் லண்டன் தரப்பிலும், மல்லையா தரப்பிலும் அவர் இந்தியா கொண்டுவரப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடைசியாக மே 14 அன்று லண்டன் நீதிமன்றத்தில் ஆஜரான மல்லையாவின் வாதங்கள் தோல்வியடைந்ததை தொடர்ந்து அவர் 28 நாட்களில் முறையீடு செய்ய கெடு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மல்லையாவை இந்தியா கொண்டு வருவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகலாம் என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக