Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 30 ஜூன், 2020

இராவணனின் கோபம்!...

மகோதரன் இராவணனை பார்த்து, அரசே! தாங்கள் சீதையிடம் கோபம் கொள்ள வேண்டாம். சீதையின் தந்தையாகிய ஜனகன் கூறினால் நிச்சயம் அவள் கேட்பாள். 

பிறகு மாய ஜனகன் சீதையை பார்த்து, மகளே! என் செல்லமே! நீ அழாதே. நீ இந்த இராவணனை அடைந்தால், நிச்சயம் உன் துன்பம் தீரும். உன்னால் பிற உயிர்கள் அழிவது நல்ல செயலா? உன்னால் நான் இன்று இறக்கும் தருவாயில் உள்ளேன். 

ஆதலால் நீ இராவணனை ஏற்றுக் கொள். இதனால் உன் துன்பமும் நீங்கும். எங்கள் துன்பமும் நீங்கும் என்றான். இதைக் கேட்ட சீதை பெரும் கோபம் கொண்டாள். 

இப்படி பேசுகின்ற நீ என் தந்தையா? இது மிதிலையின் அரசன் ஜனகர் பேசும் வார்த்தையா? தண்ணீர் பனிக்கட்டியாக மாறினாலும், மேருமலை கடலில் மிதந்தாலும், சீதை ஒரு போதும் இந்த இராவணனை ஏற்க மாட்டாள். விஷம் போன்ற இந்த வார்த்தைகளை பேசி தாங்கள் உங்கள் பெருமையை இழந்து விடாதீர்கள் என்றாள் சீற்றத்துடன்.

அப்பொழுது இராவணனின் தூதன் ஒருவன் அங்கு வந்து, இராவணனின் காதில் போரில் உன் தம்பி கும்பகர்ணன் மாண்டு விட்டான் என்றும். இதனால் தேவர்களும், வானரங்களும் அங்கு பெரும் ஆரவாரம் செய்து கொண்டு இருக்கின்றனர் என்றும் கூறினான். 

கும்பகர்ணன் போரில் இறந்துவிட்ட செய்தியை அறிந்த இராவணன், மயங்கி விழுந்தான். மயக்கம் தெளிந்த அவன் இந்திரனை வென்ற என் அருமை தம்பியே! ஆயிரம் யானைகள் வந்தாலும் எதிர்த்து நிற்கும் வலிமை உடையவனே! உன் பிரிவை நான் எவ்வாறு தாங்குவேன். 

உன்னை நம்பி இருந்த என்னை இப்படி நட்டாற்றில் விட்டு சென்று விட்டாயே! அந்த இராமன் இறந்து விட்டான் என்னும் செய்தியை கேட்டு மகிழ வேண்டிய நான், நீ இறந்து விட்டாய் என்னும் செய்தியை கேட்கும் நிலைமை வந்துவிட்டதே! பொன்னையும், பொருளையும் இழந்தால் மீட்டு விடலாம். உன்னை எப்படி மீட்பது?

இனி அந்த வானரங்கள் உயிர் வாழ்வார்களே. என் தம்பியை கொன்ற அந்த இராமனையும் அவனுடன் இருக்கும் அந்த வானரங்களையும் உயிருடன் விடமாட்டேன் எனக் கூறி கோபங்கொண்டான். 

அப்போது அங்கு வந்த அமைச்சர்கள் இராவணனை அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். சீதை கும்பகர்ணன் மாண்டச் செய்தியை அறிந்து மகிழ்ந்தாள். போகும் போது மகோதரன், மாய ஜனகனை பார்த்து இவனை சிறையில் அடையுங்கள் என்றான். அப்போது சீதை தந்தையை பார்த்த வண்ணம் வருந்திக் கொண்டு இருந்தாள். 

அப்போது திரிசடை சீதையிடம், தாயே நீ வருந்த வேண்டாம். இங்கு உன் தந்தை போல் வந்தது, மாய வேலையில் வல்லவனான மருத்தன். நீ இதனை நினைத்து கவலைப்பட வேண்டாம் என ஆறுதல் கூறினாள். இராவணன் கோபத்துடன் ஆலோசனை மண்டபத்தை அடைந்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக