செவ்வாய், 2 ஜூன், 2020

பதினெட்டாம் நாள் போர்..! துரியோதனனின் வீழ்ச்சி.!

பதினெட்டாம் நாள் போரில் சூரியன் மறையும் நேரம் நெருங்கியதும் கிருஷ்ணர் துரியோதனனின் விதியை அவனே தீர்மானித்துக் கொள்ளட்டும் என்று கூறி பாண்டவர்களையும், விதுரரையும் அழைத்துக் கொண்டு சென்றார். அனைவரும் சமந்த பஞ்சக மலைத் தோட்டத்திலிருந்து கிளம்பினர். ஆனால் துரியோதனனை மட்டும் கவனிக்க யாரும் இல்லாமல் வீழ்ந்து கிடந்தான். மலையிலிருந்து புறப்பட்ட பாண்டவர்கள் நேராக குருக்ஷேத்திரத்திலுள்ள தங்கள் பாசறையில் தங்கவேண்டுமென்றார்கள். ஆனால் கிருஷ்ணர் இன்றிரவு பாசறையில் தங்கக்கூடாது என்று கூறினார். வெற்றிபெற்ற அரசர்கள் தோல்வியுற்றவர்களின் படைகளுக்கு அருகில் தங்குவது பலவிதத்தில் ஆபத்தைத் தரக்கூடியது.
 நம்முடைய படை வீரர்கள் வேண்டுமானால் பாசறையிலேயே தங்கட்டும். நாம் அனைவரும் பக்கத்தில் உள்ள ஒரு காட்டில் தங்கி இன்று இரவுப் பொழுதை கழிப்போம் என்று கூறி அவர்களை ஒரு காட்டிற்கு அழைத்துச் சென்றார் கிருஷ்ணர். துரியோதனன் சமந்த பஞ்சக மலையிலுள்ள பூஞ்சோலையில் அடிபட்டு இருக்கும் செய்தி அசுவத்தாமன் முதலிய கௌரவப்படை வீரர்களுக்கு தெரிந்தது. கௌரவ படைத் தலைவர்களும், மற்ற வீரர்களும் இந்த செய்தியை கேட்டவுடன் மறுகணமே சமந்த பஞ்சக மலைக்கு சென்றனர். அங்கே சென்றதும் அசுவத்தாமன் இரத்த வெள்ளத்தில் இருக்கும் துரியோதனனை தாங்கிக் கொண்டு கதறியழுதான்.

 மன்னனாக வாழ வேண்டிய நீ இவ்வாறு மண்ணில் வீழ்ந்து விட்டாயே! பாண்டவர்களை நாளையே தோற்று ஓடச் செய்து இந்த மண்ணுலகத்தின் ஏக சக்ராதிபதியாக உன்னை ஆக்கவேண்டுமென்று கனவு கண்டு கொண்டிருந்தேனே? அந்த கனவு எல்லாம் வீணாகிவிட்டதே! என்று புலம்பினான். துரியோதனனிடம், உன்னை இக்கதிக்கு ஆளாக்கிய பீமனையும், அவனுடைய சகோதரர்களையும் கொன்று குவிக்கிறேன் என்று வாக்குறுதி அளித்தான். உன் உயிர் பிரிவதற்குள் உன் கண்கள் காணும்படியாகவும், காதுகள் கேட்கும்படியாகவும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிக் காட்டுகிறேன். அதன் பிறகு நீ மாண்டு போகலாம் என்று சபதம் செய்தான்.

 அசுவத்தாமனிடம், தேவாதி தேவர்களின் கிருபையால் தவம் செய்து பெற்ற பல அஸ்திரங்கள் உள்ளது. என் அஸ்திரங்கள் அனைத்தையும் இன்று பாண்டவர்கள் மேல் தொடுக்கப்போகிறேன் என்று அசுவத்தாமன் வீர உரை பேசினான். அதற்கு துரியோதனனும் உன்னால் இதைச் செய்ய முடிந்தால் எனக்கு மகிழ்ச்சிதான் என்று கூறி அன்புக்கும், நன்றிக்கும் அடையாளமாக கீழே உருண்டு கிடந்த தன் கிரீடத்தில் இருந்து ஒரு மணியை எடுத்து அசுவத்தாமனிடம் கொடுத்தான். அசுவத்தாமனும் பயபக்தியோடு அதைப் பெற்றுக் கொண்டான். துரியோதனன் அளித்த மணியைப் பெற்றுக் கொண்டபின்பு அசுவத்தாமன் முதலியோர் விடைபெற்றுக் கொண்டு சமந்த பஞ்சக மலையிலிருந்து புறப்பட்டுத் தங்களுடைய பாசறைக்கு சென்றனர்.

 அங்கு கிருதவர்மன், கிருபாச்சாரியன் ஆகிய இருவரோடும் கலந்து ஆலோசித்த பின்னர் பாண்டவர்களை தாக்குவதற்கு அசுவத்தாமன் திட்டமிட்டான். பாண்டவர்களை தாக்குவதற்காக அவர்கள் திட்டமிட்டு கொண்டிருந்தபோது ஒரு நல்ல சகுனம் தென்பட்டது. பாசறையின் அருகே இருந்த ஆலமரம் ஒன்றில் ஓர் ஆந்தை காக்கைகளை எதிர்த்துப் பூசல் செய்து கொண்டிருந்தது. அசுவத்தாமனும் பகலில் நம்மை வென்ற பாண்டவர்களை நாம் இந்த இரவில் தான் வெல்லவேண்டும். இதற்கு இந்த ஆந்தையின் செயல் ஒரு நல்ல சகுனம் என்று எண்ணிக் களிப்படைந்தான்.

 பிறகு இரவோடு இரவாகப் பாண்டவர்களின் பாசறையில் திருட்டுத்தனமாக நுழைந்து அவர்கள் ஐந்து பேரையும் கொலை செய்து விடுவதாக திட்டம் போட்டனர். ஆனால் பாண்டவர்கள் பாசறையில் தங்கியிருக்கிறார்களா! என்பது பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை. உடனே அசுவத்தாமன், கிருதவர்மன், கிருபாச்சாரியன் ஆகிய மூவரும் ஆயுதத்துடன் இருளில் பதுங்கிப் பதுங்கி பாண்டவர்கள் பாசறை வாசலை அடைந்தனர். ஆனால் பாசறையில் இதுபோல ஆபத்துகள் வரும் என்பதை முன்பே எதிர்பார்த்திருந்த கிருஷ்ணர் மாயையினால் உருவாக்கப்பட்ட பயங்கரமான பூதம் ஒன்றைப் பாசறை வாயிலில் காவலாக நிறுத்தி வைத்திருந்தார். அவர்கள் மூவரும் பாசறை வாயிலை அடைந்தபோது பூதம் பாய்ந்து அவர்களை பிடித்துக்கொண்டது. கிருதவன்மாவும், கிருபாச்சாரியனும், பூதத்தினிடமிருந்து தப்பித்தால்போதும் என்று திரும்பிப் பார்க்காமல் ஓடிவிட்டனர்.

ஆனால் அசுவத்தாமன் பூதத்தை எதிர்க்க முயன்றான். ஆனால் அவனும் பூதத்தை சமாளிக்க முடியாமல் பாண்டவர்களின் பாசறையில் இருந்து தப்பி ஓடினான். பிறகு ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு பாண்டவர்கள் ஐவரையும் கொன்று அவர்கள் தலைகளைச் சமந்த பஞ்சக மலைக்குக் கொண்டுவந்து காட்டுவதாகத் துரியோதனனுக்கு வாக்குறுதி அளித்தேன். அந்த வாக்குறுதியை எப்படியாவது நிறைவேற்றித் தீரவேண்டும். நிறைவேற்றத் தவறிவிட்டால் என் வாழ்வே பயனற்றதாகிவிடும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தான். பிறகு இறைவன் தன்னை கைவிடமாட்டார் என்று எண்ணி பாண்டவர்களை அழிக்கும் வலிமை வாய்ந்த அஸ்திரத்தைக் கொடுக்குமாறு இறைவனிடம் தவம் செய்யலாம் என்று தீர்மானித்தான். அதற்காக அவன் இருந்த ஆலமரத்தடியில் அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி இறைவனை எண்ணித் தவம் செய்ய தொடங்கினான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்